Thursday, September 15, 2011

"வட சொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 4

இந்தப் பதிவில் "திசைச் சொல்" என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


ஏன் என்றால் ... "திசைச் சொல்" என்பதும் தமிழ்ச் செய்யுள் செய்யப் பயன்படும் ஒரு வகைச் சொல்.

நினைவில் வைக்கவேண்டுவது, தொல்காப்பியர் சொன்னது:

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

அதாவது ... "இயற்சொல்" "திரிசொல்" "திசைச்சொல்" "வடசொல்" என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே ... தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் சொற்கள்.

****************************************
திசைச்சொல் 
--------------------

தொல்காப்பியர் சொல்வது:

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி

இளம்பூரணர் சொல்கிறார்:

செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார் தம் குறிப்பினையே இலக்கணமாக உடைய ... திசைச் சொற்கள் கிளவிகள்.

அதாவது: "செந்தமிழ் நிலம்"-னு முன்னே ஒரு நூற்பாவுலெ சொல்லியிருக்கே, அந்த நெலத்தைச் சுத்தி இருக்கும் 12 நிலத்துலெ இருக்றவங்க ... அவுங்கவுங்க ஊர்லெ மட்டும் வழங்குற மாதிரிச் சில சொற்களெப் பயன்படுத்துவாங்க. (அந்த மாதிரிச் சொல் மத்த எல்லாருக்கும்  சட்டுனு புரியாமல் போகலாம்) அதெல்லாந்தான் "திசைச்சொல்."

ஆ? அப்படியா? இந்தக் காலத்துலெ "பூடகமா"ப் பேசுறாங்க-னு சொல்றோமே அதுவா இந்தத் தொல்காப்பியர் சொன்ன திசைச்சொல்? அதுதானா? 

இல்லெ, இல்லெ. தொல்காப்பியர் சொன்ன "திசைச் சொல்" முழுக்க முழுக்க நில வரையறையை ஒட்டியது. அதாவது இந்தக் கால ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... words based on geographical boundaries. 

அது கிடக்க.

இன்றைக்கு, நமக்கு ... தொல்காப்பியர் சொன்ன "திசைச் சொல்"-னா என்ன-னு புரியணும்-னா அந்தக் காலத்துச் "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்"-னா என்ன-னு தெரியணும், இல்லெ? 

இளம்பூரணர் சொல்கிறார் ... செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன: 

1. பொதுங்கர் நாடு
2. தென் பாண்டி நாடு
3. ஒளி நாடு
4. குட்ட நாடு
5. பன்றி நாடு
6. கற்கா நாடு
7. சீத நாடு
8. பூழி நாடு
9. மலை நாடு
10. அருவா நாடு
11. அருவா வட தலை நாடு
12. குட நாடு

... என இவை.

இளம்பூரணர் மேற்கொண்டு சொல்கிறார்: " 'தம் குறிப்பினவே' என்றது ... அவை ஒருவாய்பாட்டவேயல்ல, தத்தம் மரபினும் பின் வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும் அவர் எவ்வாறு குறித்து வழங்கினாரோ அஃதே அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும் என்பது."

தலை சுற்றுகிறதா? இங்கே மிக எளிமையான அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொண்டால் போதும்.

அதாவது: அந்தக் காலத்தில் ... முதலில் , தொல்காப்பியர் சொன்ன அந்தச் செந்தமிழ் சேர்ந்த 12 நிலங்கள் எவை எவை என்று இன்றைக்கு நமக்குத் திட்டவட்டமாகத் தெரியுமா? எனக்குத் தெரியாது. தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னால் வந்த இளம்பூரணர் ஒரு பட்டியலைக் கொடுக்கிறார்; அது அவர் (இளம்பூரணர்? தொல்காப்பியர்?) காலத்து மக்கள் "செந்தமிழ் சேர்ந்த 12 நிலம்" என்பதை எப்படிப் புரிந்துகொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

சரி. இளம்பூரணர் சொன்ன இந்த நாடெல்லாம் ("பொதுங்கர் நாடு" ... போன்றவை) எந்தக் காலத்தில் ... எங்கே எங்கே இருந்தன? இன்றைக்கு அவை எங்கே இருக்கின்றன? என்று யாருக்காவது அறிவியல் முறையில் / நில இயல் முறையில் திட்டமாகச் சொல்ல முடியுமா? முடிந்தால் மிகவும் நல்லது!!

சரி,  அது முடியவில்லை அல்லது முடியும்வரை ... அந்த மாதிரிப் பெயர்கள் இருந்த/இருக்கும் நாடுகளைப் பற்றி இப்போது நாம் ஏன் கவலைப்படவேண்டும்?

நல்ல கேள்வி! 

"திசைச் சொல்" என்பது பற்றித் தெரிந்துகொள்ளப் பார்க்கிறோமே ... அதனால்தான். 

பழைய தமிழ் இலக்கணங்களைப் படிக்கும், ஆராயும், சிலர் திசைச்சொல் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆராய்ச்சிக் கட்டுரையொன்று, நான் மிகவும் மதிப்பது, நண்பர் ழான் அவர்கள் எழுதியது ("The concept of ticai-c-col in Tamil grammatical literature and the regional diversity of Tamil classical literature"; published in "Streams of Language: Dialects in Tamil, Kannan, M. (Ed.) (2008) 21-50"). 

சரி. எடுத்துக்காட்டுக்கு வருவோம். எடுத்துக்காட்டு இல்லாமல் தமிழ் இலக்கணம் எப்படிப் புரியும்?

திசைச்சொல்லுக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு

"தாயைத் தள்ளை என்ப குட நாட்டார்.
நாயை ஞமலி என்ப பூழி நாட்டார். பிறவும் அன்ன."

அட, இவ்வளவுதானா? 

ஒங்க ஊர்லெ தாய்-னு சொல்லுவீங்க, அவங்களெயே நாங்க தள்ளை-னு சொல்வோம். ரெண்டு சொல்லும் ஒரே ஆளெத் தான் குறிக்கும்.

ஒங்க ஊர்லெ நாய்-னு சொல்லுவீங்க, நாங்க அதெயே ஞமலி-னு சொல்வோம். ரெண்டும் ஒரே விலங்கைத்தான் குறிக்கும்.

இதேபோல வேற சொற்களும் அந்தந்த எடத்துக்கு ஏத்த மாதிரிப் புழங்கும். 

இந்தக் காலத்துலெ ... ஒங்க ஊர்லெ "தபா"-னு சொல்லுவீங்க; இன்னோரு ஊர்லெ "தடவை"-னு சொல்லுவாங்க; எங்க ஊர்லெ "வாட்டி"-னு சொல்லுவோம்.

புரிகிறதா?

இலக்கணப்படி, இதெல்லாம் வெவ்வேற எடத்துலெ வழங்கறதுனாலெ ... இதுக்குப் பேரு "திசைச் சொல்."

இங்கே நாம் கருத்தில் வைத்துக்கொள்ளவேண்டியது ... தொல்காப்பியர் காலத்தில் ... தமிழ்ச் செய்யுள் செய்த புலவர்கள் "திசைச் சொற்களை" விலக்கவில்லை.

3 comments:

  1. அன்பு வீ.சு.இரா.
    I am very proud to be quoted by you.
    My article is available for download at
    "http://halshs.archives-ouvertes.fr/halshs-00442188/fr/"


    அன்புடன்
    ழான் (புதுவை)

    ReplyDelete
  2. நன்றாகப் புரிகிறது;
    மிக்க நன்றி

    தேவ்

    ReplyDelete