Saturday, September 3, 2011

"வட சொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 1


"வடசொல்" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதிலும் ஒருவகை எரிச்சல் ஏற்படுவதைப் பார்க்கிறேன், உணர்கிறேன். 

அவர்களுக்கு ஏன் அந்த எரிச்சல் என்பதற்கான தெளிவான விளக்கம் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. 

*********************************************************

எனக்குத் தமிழ் எலக்கணம் சொல்லிக்குடுத்த வாத்திமார் எல்லாரும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க -- பள்ளிக்கூடக் காலத்துலெர்ந்து. இது புரியலெ, இது தெரியலெ, இது வெளங்கலெ--னு எது கேட்டாலும் ... நக்கல், கிண்டல் ஒண்ணு இல்லாம அன்பா அமைதியா வெளக்கம் சொல்வாங்க. "அட, தெரியாம, புரியாமத்தானெ புள்ளெ கேக்குது" அப்டி நெனெச்சிருப்பாங்கபோல.  ஏன் ... ரொம்ப ரொம்பப் பெரியவங்க எலக்குவனார், சுப. அண்ணாமலெ ... அவுங்களெயெ எடுத்துக்குவமே. அவங்க ரெண்டு பேரும் தொல்காப்பியம், நன்னூல் அல்லாத்தெயும் மனப்பாடம் பண்ண வச்சாங்க அந்தக் காலத்துலெ. எவ்வளவு மக்கான கேள்வி கேட்டாலும் அன்போடெ வெளக்கம் சொல்லுவாங்க. ஒரு கிண்டல், நக்கல், கேலி இருக்காது.

இப்ப, சுப. அண்ணாமலை ஐயா மட்டும்தான், வயசாகிப்போய், உடல் மட்டும் தளர்ந்து இருக்கார். மனதோ. அறிவோ, நினைவோ ... தளர்ச்சி என்பதை அவரிடம் காட்டவேயில்லை! வள்ளலாரெப் பத்திப் பேசச் சொல்லுங்க ... மணிக்கணக்காப் பேசத் தயாரா இருக்கார். கேக்கத்தான் ஆளில்லெ.

சமீபத்துலெ நான் பாத்தப்பொ ... அந்தக் காலத்துலெ (1961-1963) எங்க வகுப்புலெ அவர் வெளக்கின "முன்னிலை முன்னர் ஈயுமேயும் ..." என்ற நன்னூல் நூற்பாவை எப்படி அவர் இரட்டுற மொழிந்து எங்களைச் சிரிக்கவைத்தார் என்பதை நினைவுபடுத்தினேன்; அவருக்கும் நினைவு வந்தது. இருவரும் மகிழ்ந்தோம், சிரித்தோம் நெடுநேரம். ஆச்சிக்கும் என் தோழிக்கும் ஒரே வியப்பு, மகிழ்ச்சி!

*********************************************************

சரி, இப்பொ "வடசொல்"லுக்கு வருவோம். என் ஆசிரியர்களுடன் வாதாட எனக்கு வாய்ப்பில்லை. அதனால் ... தனித்து விடப்பட்டேன்.

நமக்குத்தான் இருக்கிறாரே தொல்காப்பியர் என்று ஒருத்தர் ... அவரைக் கேட்போம் என்று மனதில் அவரை வணங்கிச் சிந்தனை செய்தேன். அட, இந்தக் காலக் கலப்பு மொழியில் meditation செய்தேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். தொல்காப்பியர் சொன்னார் ... "ஏ, பிள்ளாய்! யாம் எம் நூலில் எச்சவியல் என்ற இயலில் முதல் ஆறு நூற்பாக்களில் இயம்பிய கருத்தை மறந்தாயா? அன்றி யாம் சொன்னது நின் அறிவுக்கு எட்டவில்லையா? இதுவரை இல்லையெனில் இனியேனும் அறிய முயல்க!" 

"ஓ, அப்படியா ஐயா, மறந்தேபோனேனே. மீண்டும் போய்ப் பார்க்கிறேன், ஐயா" என்று அவருக்கு உறுதியளித்துவிட்டு ஆழ்சிந்தனையிலிருந்து நல்ல வேளையாகத் தப்பித்தேன்!

உண்மை என்ன?

தொல்காப்பியர் தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார், இரண்டு முறை!

முதலில், அந்தச் சொற்களை அவற்றின் இலக்கண அடிப்படையில், "பெயர், வினை, இடை, உரி" என்று பிரிக்கிறார்.

பிறகு அந்தச் சொற்களின் வழக்காறு பற்றி, "இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்" என்று பிரிக்கிறார்.

இதில் குறிப்பாகப் பார்க்கவேண்டியது என்ன என்றால் ... 

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

என்று சொல்லிவிட்டார்!

அடடா, அப்படியானால் "வடசொல்"லும் தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் ஒன்றுதானா?"  

அப்றம் ஏன் சில பல மக்கள் "வடசொல்"லை வெறுக்கிறார்கள்?

தொகாப்பியத்தையே பிடித்துக்கொண்டிருக்கிற மக்கள் ... தொல்காப்பியர் சொன்ன "செய்யுள் ஈட்டச் சொல்" ஆகிய வடசொல்லை வெறுத்தால் ... தொல்காப்பியர் காலத்திலிருந்து கிடைத்ததாக நம்பப்படும் "தமிழ்ச் செய்யுள்"களையும் அல்லவா அவர்கள் வெறுக்கவேண்டும்?

*********************************************************

ஒண்ணுமே புரியல ... "இலக்குவன் இன்றுளனாயின் நன்றுமன்."   எங்க எலக்குவனார் மட்டும் இன்னிக்கு இருந்தா ... அவரோடெ பிறர் போடாத சண்டெயெல்லாம் நான் போட்டு, திறந்த மனதோடு கருத்துரையாட முடியும். அவ்ளோ நல்லவர் அவர், தெரியுமா.
நிற்க.

இனி, தேவை என்றால் ... தொல்காப்பியர் சொன்ன அந்த 4-வகைச் சொற்களின் வரையறையை முடிந்தபோது பார்க்கலாம்.


10 comments:

 1. பழனி மலை மேல் ஏறுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படியிலும் கால் வைத்து ஏறுவது விவேகம். படி தாண்டி ஏறினால், உருண்டு விழ ஹேது உண்டு. தொல்காப்பியர், அடி மேல் அடி வைத்து, திட்டங்கள் அமைத்து, வரிசைப்படுத்தி, மொழியிலக்கணம் வகுத்ததாலே வட சொல் பொருத்தமாகவே வந்தது. இலக்கிய நோக்கில் பார்த்தால், மறைமலை அடிகளின் பக்தரான திரு.வி.க. தன் இதழ்களுக்கு வட சொல் உபயோகித்து பெயர் வைத்தார் ~ தேசபக்தன், நவ சக்தி. மஹாகவி பாரதியரோ வட சொல் சரளம். தமிழ் மொழி வரலாற்றில், திராவிட இயக்கப் பிரசாரங்கள் வலுத்து வட மொழி காழ்ப்புணர்ச்சி ஆட்சி செலுத்தியதை ஒரு சிறிய நிகழ்வு எனலாம். இப்போதே அந்த காழ்ப்புணர்ச்சி தணிந்து வருகிறது என தோற்றம்.

  ReplyDelete
 2. அரிய பல தகவல்கள்;
  என் தமிழ்- ரசிகையின் மொழி குறித்த பதிவுகளுக்கு
  நானும் ஒரு ரசிகன்.
  நன்றி


  தேவ்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. தொல்காப்பியத்திலிருந்து கருத்துகளை எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. சொல்வகைகளில் வடசொலும் ஒருவகையாக தொல்காப்பியத்தில் இருப்பது மிகவருமையானசெய்தி.
  தொல்காப்பியத்தில் 1% வடசொற்கள் இருக்கிறதாம் அதன்பின்வந்த திருக்குறளில் 10% வடசொல் இருக்கிறதாம் அதற்கும்பின்வந்த கம்பராமாயணத்தில் கிட்டதட்ட 50% வடசொற்கள் இருக்கிறதாம். காலப்போக்கில் தமிழில் வடசொல்பயன்பாடு மிகுந்துக்கொண்டேவந்துள்ளது. கற்றறிந்தவர்கள் பேச்சுத்தமிழிலும் வடசொற்களை வெகுவாக பயன்படுத்தியகாலத்தையுங்கடந்து கல்லாதவரும் வெகுவாகப்பயன்படுத்திய காலம் வந்துவிட்டது, இக்காலத்தில் ஆங்கிலம்பயிலாதவர்கூட தன்னுரையாடலில் ஆங்கிலசொற்களை மிகவும்பயன்படுத்துவதைப்போல. காலப்போக்கில் மக்கள் பலயிடங்களில் தமிழ்ச்சொற்களைப்பயன்படுத்தாமல் அவற்கினையான வடசொற்களையே பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர். எதுவொன்றும் சிறியவளவில் இருக்கையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வராது, மிகப்பெருமளவில் வரும்போதுதான் தனித்தமிழ்போன்ற விழிப்புணர்ச்சி மறைமலையடிகளார்போன்றவரால் கொண்டுவரப்பட்டது. இதுவேறு 50தாண்டுகளுக்குப்பிறகு திராவிடகழத்தினர் அரசியலாக்கிவிட்டனர் எனக்கூறப்படும் போராட்டங்கள்வேறு. இக்காலத்தில் தனித்தமிழில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதென்பது அரியதாகிவிட்டது. மக்கள் வெகுவாகப்புழங்கும் இனையதளத்தில் எழுத்துத்தமிழிலாவது தனித்தமிழில் எழுதிவந்தால் அது தமிழை பின்வரும் வழியினருக்கு நல்லநிலையில் தரவியலும். அதற்காக வடமொழிகலந்தெழுதுவது குற்றமல்ல. தாங்கள்கூறும் பிறமொழியை வெறுக்கவேண்டாம் என்னும் கருத்து எடுத்துக்கொள்ளவேண்டியாவொன்று, வமொழி அதுபோக்கில் இருக்கட்டும். தனித்தமிழில் எழுதுவதென்பது வெட்கப்படவோ அரிதானவொன்றாகவோ இல்லாமலிருந்தால் அது ஒரு மொழிக்கு நன்மையே எனக்கருதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துகளும் தொகைகளை ஒரேசொல்லாயெழுதியிருக்கும் பாங்கும் அருமை.

   Delete
  2. @sivakumar
   //தொல்காப்பியத்தில் 1% வடசொற்கள் இருக்கிறதாம் அதன்பின்வந்த திருக்குறளில் 10% வடசொல் இருக்கிறதாம் அதற்கும்பின்வந்த கம்பராமாயணத்தில் கிட்டதட்ட 50% வடசொற்கள் இருக்கிறதாம். காலப்போக்கில் தமிழில் வடசொல்பயன்பாடு மிகுந்துக்கொண்டேவந்துள்ளது.//

   அகத்தியரும் முருகரும் மதுர மொழிக்கு இலக்கணம் வகுத்து தமிழ் என்று பெயர் சூட்டி, அந்த இலக்கணம் செய்யப்பட்ட தமிழ் வளர்ந்தது வடவேங்கடம் முதல் தென்குமரி வரையிலான இடைப்பட்ட பகுதியில். இந்த பகுதி தவிர்த்து பிற பகுதியில் மதுர மொழி தொடர்ந்தது. காலபோக்கில் அது கன்னடம், தெலுங்கு என புது மொழியாக பிறந்தது.

   சோழர்கள் ஆட்சிகாலம் வரை தெய்வ காரியங்களுக்கு மட்டுமே சமஸ்க்ருதம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிறகு தெலுங்கை தாய் மொழியாக கொண்ட விஜயநகர மன்னர்கள் இங்கே வந்துதும் அவர்கள் சமஸ்க்ருதத்தை அமுல்படுத்தினார்கள். ஆகையால் தான் இந்த மாற்றம்.

   Delete
 5. எனக்கு அரியதொரு பாடம் கிடைத்துள்ளது. நன்றி அம்மா. இதெல்லாம் நான் சற்றும் அறியாத ஒன்று. உங்கள் மூலம் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

  ReplyDelete
 6. அன்புடையீர்,
  இன்சொல்லிருக்க வன்சொல் தவிருங்கள் என்றால் அது தலையெழுத்துத் தொலைத்த தமிழனுக்கு எப்போது புரியும் ? (N.கணேசன்)
  இன்சொல்:இன்னல்,இடர்,இடுக்கண்,இடையூறு,இடைஞ்சல், தொல்லை, துயர், துன்பம் என பல இருக்க 'சங்கடம்' ஏனையா வேண்டும் என்று கேட்டால் தனித்தமிழ் வெறியர் என்று தமிழனைத் தமிழனே பழிக்கும் பாழ்நிலை.
  அன்பன்,
  மீ.கணேசன்.

  ReplyDelete
 7. வணக்கம்,

  நல்ல முயற்சி,இன்று தமிழன் தமிழையும், அதன் இலக்கணத்தையும் மறந்துவிட்டு கண்டபடி பேசித்திரிகிறான். தமிழன் மீண்டும் தமிழைக் கண்டுபிடிக்க தொடர்ந்து பதிவிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

  நன்றி
  வணக்கங்களுடன்
  தீரன்.

  ReplyDelete