Friday, December 21, 2012

மணிமேகலை -- உருவத்தோற்றம் ... (1)

மணிமேகலை என்று தமிழில் ஒரு காப்பியம் உண்டு என்று பலருக்கும் தெரியும். காப்பியத்தலைவி யார் என்றால், மணிமேகலை என்ற ஒருத்தி என்றும் தெரியும்.
  
அந்த மணிமேகலையைப் பற்றி இந்தக் காலத்தில் பல நூல்கள் இருப்பதாகவும் இணையத்தில் கட்டுரைகள் இருப்பதாகவும் தெரிகிறது.


**********************************************

முன்னாளில்
----------------
தமிழ் முதுகலை வகுப்பில் படித்த காலத்தில்,  என் மதிப்பிற்குரிய அன்பு நிறைந்த பேராசிரியர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எங்களுக்கு மணிமேகலைப் பாடம் கற்பித்தார். அந்தக் காலத்தில், மாணவர்கள் ஆசிரியரைக் கேள்வி கேட்பது அரிது. அவர் சொன்னதை அப்படியே கேட்டுக்கொள்ளவேண்டும். ஆனாலும், அந்த ஒடுக்கத்தை மீறி ஔவையிடம் நான் கேட்ட பல கேள்விகளுள் ஒன்று மணிமேகலையின் உருவத்தோற்றம் பற்றி.
  
  
மணிமேகலை என்ற பெயரைக் கேட்டவுடனே பலரும் நினைப்பது ஒரு பெண் துறவியை. அந்தப் பின்னணியில்தான் நானும் மணிமேகலைக் காப்பியத்தைக் கல்லூரியில் படித்தேன். ஆனால் ஒரு பெண் துறவி எப்படியிருப்பாள் என்ற விளக்கம் கிடைத்ததில்லை. அன்றாட வாழ்க்கையிலும் பெண் துறவிகளைப் பார்த்ததில்லை. பார்த்த ஆண் துறவிகள் சிலர் சடாமுடி வைத்திருந்தார்கள், சிலர் தலைமயிரை மழித்திருந்தார்கள். இந்த அமைப்பில் மணிமேகலையைக் கற்பனை செய்திருந்தது என் மனம்.
  
அதனால் காப்பியத்தில் மணிமேகலையைக் குறிக்கும் "அணிப்பூங்கொம்பர்," "மணிப்பூங்கொம்பர்," "ஆயிழை," "அணியிழை" இன்ன பிற சொற்கள் எனக்குக் குழப்பம் தந்தன. ஆசிரியரிடம் கேட்டேன் -- காப்பிய ஆசிரியர் (சீத்தலைச் சாத்தனார்) ஒரு துறவிப் பெண்ணை ஏன் இப்படி வருணிக்கிறார் என்று. ஆசிரியர் சொன்னார் அது பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபு என்று. எனக்கு அந்த விடை அமைதி தரவில்லை. ஆனால், மேற்கொண்டு கேள்வி கேட்க முடியாத வகுப்புச் சூழ்நிலை.

பிற்காலத்தில்
-------------------
நான் தமிழாசிரியையாகப் பணி செய்த காலத்திலும் பின்னாளில் ஆய்வுக்களத்தில் மணிமேகலைக் கதையைப் பலமுறை படித்தபின்பும் மணிமேகலையைப் பற்றி எனக்கு ஒரு விடை கிடைத்தது. மணிமேகலைக் காப்பியத்தில் சொல்லப்பட்ட மணிமேகலை காப்பியம் முழுவதிலும் துறவி இல்லை. காப்பியத்தின் கடைசி வரியான "பவத்திறம் அறுக எனப் பாவை நோற்றனள்" என்ற வரியில்தான் மணிமேகலையின் துறவு பற்றிச் சொல்லப்படுகிறது.

துறவற நிலைக்குச் செலுத்தப்பட்ட ஓர் இளம்பெண்ணின் கதையே இந்த மணிமேகலைக் காப்பியம். மணிமேகலை ஒரு கணிகையாகவும் வாழ்ந்ததில்லை. அவளுடைய தாய் மாதவியைப் போல நாட்டியத்தில் தேர்ச்சி பெறவுமில்லை. நாம்தான் மணிமேகலை என்ற காப்பியம் ஒரு பெண் துறவியைப் பற்றிய கதை என்றோ ஒரு நாட்டியக்காரியின்/கணிகையின் கதை என்றோ மாறாகச் சொல்லிவருகிறோம்.

காப்பியம் முழுவதிலும் மணிமேகலை ஒரு சாதாரணப் பெண்ணாகவே காட்டப்பட்டிருக்கிறாள். ஒரு சாதாரணப் பெண்ணுக்கு இருக்கும் உணர்ச்சிகள் அனத்தும் அவளுக்கு உண்டு. இதை மிக நுணுக்கமாகக் காப்பிய ஆசிரியர் காட்டிப் போகிறார். இதைப் பிறகு பார்ப்போம். 
   

*************************************************


அண்மையில் , இணைய காலத்தில்
------------------------------------------------ 
நெடுநாட்களாக மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள ஒரு சொல்லுக்கு உரையாசிரியர்கள் தந்த விளக்கம் சரியென்று தோன்றாததால் குழம்பிக்கொண்டிருந்தேன். அந்தச் சொல்லைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். என் குழப்பத்துக்குத் தெளிவு தேவையாக இருந்தது. அதனால், மணிமேகலையின் உருவத்தோற்றம் பற்றி எனக்குத் தெரியவேண்டியிருந்தது. 

மணிமேகலையின் தோற்றத்தை யாராவது ஓவியமாக வரைந்திருக்கலாம் என்று நினைத்து இணையத்தில் தேடிப் பார்த்தபோது பல படங்கள் கிடைத்தன.

படங்களுக்கு நன்றி: இணையம் + நூல், கட்டுரை ஆசிரியர்கள் + ஓவியர்கள்


படம் 1

படம் 2
படம் 3
படம் 4

 
 
படம் 5
 

 
படம் 6

 
படம் 7
படம் 8

படம் 9

****************************************************


மேலே உள்ள படங்கள் மலர்வனத்தில் மணிமேகலையையும் (படம் 1) பிச்சைப்பாத்திரம் ஏந்திய மணிமேகலையையும் (படங்கள் 2-8) இக்கால நாடகத்தில் மணிமேகலை நடிப்பது மாதிரியான நிலையையும் (படம் 9) குறிக்கிற மாதிரித் தெரிகின்றன.

ஆனால், படங்களில் உள்ள மணிமேகலைக்கும் காப்பியத்தில் உள்ள செய்திகளுக்கும் 100% என்ற அளவில் பொருத்தம் இல்லை.

படம் 1 காட்டுவதுபோல் ... காப்பியத்தில் மணிமேகலையும் உதயகுமரனும் இவ்வளவு அணுக்கத்தில் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளவேயில்லை. உதயகுமரன் தேரில் வந்தபோது மணிமேகலையைப் பார்க்கவேயில்லை. அணுக்கத்தில் வந்தபோது சுதமதியைத்தான் பார்க்கிறான். அப்போது மணிமேகலை பளிக்கறைக்குள் இருக்கிறாள். பளிக்கறைச் சுவர் வழியேதான் மணிமேகலையின் உருவம் உதயகுமரனுக்குத் தெரிகிறது. அவ்வளவே. 

படங்கள் 2-4 காட்டுவது மணிமேகலை தன் பிச்சைப்பாத்திரத்திலிருந்து உணவை எடுத்துப் பசித்தவர்களுக்குக் கொடுக்கும் நிலை. பொருள் சரியே. ஆனால் அப்போது அவளுடைய கோலம் ஒரு பிக்குணிக்கோலமாக இருக்கவேண்டும். இந்தப் படங்களில் உள்ளவள் ஒரு பிக்குணியா? அதோடு, பிச்சை ஏற்றுக்கொள்ளும் மக்களும் "பசி தின வருந்திய பைதல் மாக்க"ளாக, அதாவது, பசித்துன்பத்தால் வருந்திய மக்களாகக் காட்டப்படவில்லை. அவர்கள் நல்ல உடையெல்லாம் போட்டிருப்பதாகவும் தெரிகிறது. காப்பியம் சொல்லும் அவல நிலையில் உள்ள மக்களை இந்தப் படங்கள் காட்டவில்லை. 

படங்கள் 5-8 மணிமேகலையை ஒரு பிக்குணியாகக் காட்ட முயல்கின்றன. ஆனால், இதுதான் பிக்குணிக் கோலமா? இல்லை. சில படங்களில் உள்ளதுபோல, பிக்குணிகள் உருத்திராக்க மாலை அணிந்தார்களா? இல்லை என்று நினைக்கிறேன். காப்பியமும் மணிமேகலையை உருத்திராக்கம் அணிந்தவளாகச் சொல்லவில்லை. 

படம் 9 பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

****************************************

இந்தக் காப்பியத்தில் என்னைக் கவரும் ஒரு புதுமைக்கூறு என்ன என்றால் ... காப்பியத் தலைவியும் (மணிமேகலை) காப்பியத் தலைவனும் (உதயகுமரன்) இணையாதது மட்டுமில்லை, அவர்கள் இருவரும் "மணிமேகலை"யாகவும் உதயகுமரனாகவும் அணுக்கத்தில் நேருக்கு நேர் பார்த்து உரையாடவும் இல்லை. ஆ, இது உண்மையா என்று கேட்கலாம். ஆம், உண்மை. விளக்கத்தை அடுத்துக் காண்போம்.

மலர்வனத்தில் மணிமேகலையைப் பளிக்கறைச் சுவர் வழியேதான் பார்க்கிறான் உதயகுமரன். அவன் பார்த்த வடிவும் பல உருவங்களாகத் தோன்றி அவனைக் குழப்புகிறது. அதனால், உண்மையான "மணிமேகலை" உதயகுமரனுக்குப் புலப்படவில்லை.

அடுத்து உதயகுமரன் அவளைப் பார்ப்பது ஊர் அம்பலத்தில்.  தன் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி மணிமேகலையைத் தேடி வந்த உதயகுமரன் ஒரு பிக்குணியைப் பார்க்கிறான். அந்தப் பிக்குணிக்கோலத்தின் உள்ளே மறைந்திருக்கும் "மணிமேகலை"யைப் பார்க்க முடியவில்லை. 

பிக்குணிக் கோலத்தில் இருக்கும் மணிமேகலை, உதயகுமரனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தெய்வம் கொடுத்த மந்திரத்தை ஓதிக் காயசண்டிகையாக உருவெடுக்கிறாள். இப்போது காயசண்டிகையைப் பார்க்கிறான் உதயகுமரன். அந்த உருவத்தைக் கண்ட உதயகுமரனுக்கு அவள் உண்மையில் மணிமேகலை என்று தெரியவில்லை. ஆக, இப்போது காயசண்டிகை வடிவத்தின் உள்ளே மறைந்திருக்கும் மணிமேகலையை அவன் பார்க்கவில்லை.

அவன் கொலைப்பட்டு இறக்கும்வரை மணிமேகலை காயசண்டிகை உருவில்தான் இருக்கிறாள். அவன் கொலைப்பட்டு இறந்ததை அறிந்து உடனே காயசண்டிகை வடிவத்தை மாற்றி உண்மையான மணிமேகலை வடிவத்தைப் பெறுகிறாள். அவன் உடலைத் தழுவ விரும்பி அவன் பக்கம் வருகிறாள். தெய்வம் தடுத்துவிட அவன் உடலை அவள் தொடவில்லை. அந்தோ, தனக்காகப் பரிதவித்த அந்த உண்மையான மணிமேகலையை அவ்வளவு அணுக்கத்தில் பார்க்க உதயகுமரன் உயிரோடு இல்லை.


இப்படி, மணிமேகலை --> பிக்குணிக்கோலம் --> காயசண்டிகை உருவம் --> மணிமேகலை என்றும், பிறகு மணிமேகலை --> ஆண்மைக்கோலம் --> மணிமேகலை என்று பல நிலைகளிலும் இந்தக் காப்பியத்தலைவியைப் பார்க்கிறோம். 

  
  
(தொடரும்)