Saturday, March 30, 2013

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 3 (இலக்கணத்தின் அமைப்பு)


------------------------------
"கையேட்டின் அமைப்பு" 
------------------------------ 



போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது. 

கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க, பாதிரியாருக்கு  உதவியாளர் இருந்திருக்க வேண்டும். கையெழுத்துக் கலைஞர்கள் இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம். 

நிற்க.

பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில் புழங்கிய தமிழைப் படித்துத் தான் புரிந்துகொண்டபடி அந்தத் தமிழைப் பிற பாதிரிமாருக்கு விளக்க வேண்டும். அவர்கள் எல்லாருக்கும் இடையில் ஒரு பொதுக்களம் அமையவேண்டும். பொதுவான விளக்கமுறையும் தேவை. அதற்காக, இலத்தீன் மொழியின் இலக்கணம் இவருக்கு உதவுகிறது. இலத்தீன் இலக்கணக் கூறுகளின் வழியாகத் தமிழை விளக்குகிறார்.

தமிழ் எழுத்தும் ஒலிக்கும் முறையும், பெயர்ச்சொற்கள், பண்புப் பெயர்கள், வினைச்சொற்கள், சொற்றொடர் அமைப்பு என்று பல தலைப்புகளில் எழுதுகிறார். 

தமிழ் ஒலிகளை விளக்கப் போர்த்துக்கீசிய எழுத்துக்கள் போதவில்லை; அதனால், சில வடிவங்களைத் தானே புதிதாக உருவாக்குகிறார்! அங்கே ஓர் ஓவியக் கலைஞனின் உள்ளம் வெளிப்படுகிறது! அப்படி உருவாக்கிய எழுத்துக்களை நூல் முழுவதிலும் பயன்படுத்தவில்லை; பிற வகைச் சிக்கல்களைச் சமாளிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்திருக்கும்!

பெயர்ச்சொற்களை விளக்குவதில் சிக்கல் இல்லை. வினைச்சொற்களும் பண்புப் பெயர்களும் சிக்கல் தருகின்றன. “நல்ல” என்பதுக்கும் “நல்லவன்” என்பதுக்கும் இடையில் உள்ள வடிவ வேறுபாடும் கருத்து வேறுபாடும் குழப்பம் தருகின்றன! 

வினையெச்சங்களும் வினைமுற்றுகளும் கால வேறுபாடு காட்டும் நுணுக்கம் குழப்பம் தருகின்றது. 

தமிழில் இருக்கும் வடிவங்கள் தரும் குழப்பத்துக்கு மேல், இல்லாத வடிவைத் தேடும்போது வரும் குழப்பம் கொடுமையானது! தமிழில் "செயப்பாட்டு வினை"யைத் தேடுகிறார்; அது இங்கே இல்லை என்று புரிகிறது. ஆனாலும், இல்லாத கருத்தை விளக்க அவர் படும் பாடு புதுமை! 

தமிழ்ச் சொற்றொடர் அமைப்பைச் சுருக்கமாகவே சொல்கிறார். தமிழில் இப்படிச் சொல்கிறார்கள், இதை நாம் போர்த்துக்கீசியத்தில் இப்படிச் சொல்வோம் என்று ஒப்பிட்டுச் சொல்வது மிக நல்ல முறை.  

இப்படித்தானே தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார்! காட்டு: “மாயோன் மேஎய காடுறை உலகமும் முல்லை  என்று சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”

தெரிந்த ஒன்றின்மூலம் தெரியாத ஒன்றை விளக்குவது மிக நல்ல முறை, இல்லையா! 

தங்கள் மொழியில் இருக்கும் ஒன்றைப் பிற மொழியிலும் தேடி அது அங்கே இல்லாத நிலையிலும் அது இருப்பதாக எடுத்துக்கொள்வதும் புதுமை.


(தொடரும்) 



Friday, March 29, 2013

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 1


--------------------------------------------------------------------------------
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு
--------------------------------------------------------------------------------

முதலில் இந்தத் தலைப்பைப் பற்றி ... 
------------------------------------------------------

ஆம் பிற நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார், குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்தவர்கள், தம் சமயத்தைப் பரப்புவதற்காக நம் மொழிகளைப் படித்து அந்த மொழிகளை விளக்க எழுதிய "இலக்கணம்" அனைத்துமே "கையேடு"களே.

20~21-ஆம் நூற்றாண்டுப் பல்கலைக்கழகத்து ஆய்வாளர்களைப்போல மொழி ஆராய்ச்சி செய்வதற்காக அந்த இலக்கணங்களைப் பாதிரிமார் எழுதவில்லை. தங்களை ஒத்த பாதிரிமாருக்கு உதவும் வகையில் தாங்கள் படித்து அறிந்த மொழிகளை விளக்கியிருக்கிறார்கள், அவ்வளவே.

இந்தக் கையேடுகள்/இலக்கணங்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சொல்லும் கதைகளும், மொழி/சமூக/சமய வரலாறும் தலைமேல் வைத்துக் கும்பிடத்தக்கவை. இவற்றின் உண்மையான, அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல்

"இது தொல்காப்பியத்தைக் 'கோட்' [quote] பண்ணவில்லை; திருக்குறளைக் 'கோட்' [quote] பண்ணவில்லை" "இதில் phonology சரியாயில்லை; phonetics சரியாயில்லை" "இந்தச் சொல்லின் வேர்ச்சொல் இது; இதை இந்தப் பாதிரி புரிந்துகொள்ளவில்லை" என்று  

களத்தில் இறங்காமல், மேலே சேறு படாமல், தந்தக் கோபுரத்தில் அமர்ந்துகொண்டு, ரொட்டி கிடைக்காவிட்டால் 'கேக்' தின்னட்டும் என்ற வகையில் "திறனாய்வு" செய்கிறவர்களுக்கு ... இந்தக் கையேடுகளையும் அவை உருவான சூழலையும் நேரிய வகையில் புரிந்துகொள்ள இயலாது!


அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், சரியா! அவர்கள் சுற்றிச் சுற்றி வந்து குழப்பியடித்தால் கேளுங்கள்: "அம்மாமாரே, ஐயாமாரே, அந்தப் பாதிரிமார் நம் மொழிகளைப் படிக்க முயன்று துன்புற்ற அந்தக் காலத்தில் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவி செய்யாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?"


அன்றீக்குப் பாதிரியாரின் நூல்கள்: அறிமுகம்
--------------------------------------------------------------

நம் தமிழருக்கு "முதல்" என்பதிலும் "கடைசி" என்பதிலும் மிகுந்த ஆர்வம்! முதல் பிள்ளை/தலைச்சன், கடைக்குட்டி; முதல் நூல், கடைசி நூல்; இப்படி. 

அதனால் எனக்கும் இந்த "முதல்" பற்றிய கிறுக்கு பிடித்துவிட்டது! இங்கே நான் சொல்லியிருப்பது தமிழில் ஒரு "முதல்" நூல்!

ஆமாம். "முதல்" என்ற நடப்பு நிகழ்ந்துகொண்டேயிருக்கும்.

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சேறிய நூல் தமிழில், இரண்டாவதாக அச்சேறிய நூல் தமிழில் இதெல்லாம் பற்றிப் பல வகை விளக்கங்களைப் பலரும் எழுதிவிட்டார்கள், பேசிவிட்டார்கள். அதெல்லாம் ஊர் முழுவதும் நாடு முழுவதும் இணைய முழுவதும் எதிரொலித்துக் கிடைக்கிறது. இனியும் நான் எழுதினால் பேசினால் அரைத்த மாவை அரைத்து விழுங்கிக் கக்குவது போல ஆகிவிடும். 

ஆனாலும் அச்சேற்றப்பட்ட அந்த "முதல், இரண்டாவது" நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ஒரு "முதல்" கையேடு பற்றி இதுவரை யாரும் கண்டுகொண்டு, பேசி, பாராட்டியதாகத் தெரியவில்லை. எனவே நானே "முதல்" ஆளாக இதைச் செய்யத் துணிகிறேன்! :-)

இந்தக் கையேடு அன்றீக்கெ அன்றீக்கஸ் (Henrique Henriques; Anrique Anriquez) என்ற ஒரு போர்த்துக்கீசியப் பாதிரியாரால், தமிழ் மொழியைப் பிற போர்த்துக்கீசியப் பாதிரிமாருக்கு விளக்குவதற்காக, தாளில் (paper) கருப்பு மையில் கையால் எழுதப்பட்டது. இந்த முயற்சிக்கு உதவிய தாள்கள் சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டன  என்று கேள்விப்பட்டேன். அன்றீக்கு அடிகளார்  கி. பி. 1548~1549-ஆம் ஆண்டுகளில் இந்தக் கையேட்டைத் தயார் செய்தார். நுணுக்கமாகப் பார்க்கவும் -- இது உருவான காலம் 1548~1549. எனவே, அச்சில் ஏறிய தமிழ் நூல்களுக்கெல்லாம் இது முந்தியது!

பின்வரும் உண்மைகளைத் தெரிந்துகொள்ளவும்:

1. கார்த்திலா என்பதுவே கி.பி. 1554-இல் முதலில் அச்சில் ஏறிய தமிழ் நூல் (Cartilha: pp. 38, Germano Galhardo, Lisbon, 11th February, 1554). இறைவணக்கம் பற்றியது. ஆனால் இது தமிழ் எழுத்தில் இல்லை, உரோமன் எழுத்தில். அச்சான இடமும் தமிழகம் இல்லை; போர்த்துகலில் லிஸ்பன் என்ற இடத்தில்.


2. முதலில் அச்சில் ஏறிய தமிழ் நூல்கள் -- தமிழ் எழுத்தில்; கொல்லத்திலும் கொச்சியிலும் தூத்துக்குடியிலும் எனப் பின்வருமாறு:

தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Tamul or தம்பிரான் வணக்கம், pp.16, Colligio do Saluador, Quilon, 20 Febraruy, 1577) -- கி.பி. 1577

கிரீசித்தியானி வணக்கம் (Doctrina Christam: கிரீசித்தியானி வணக்கம், pp. 120, Collegio da madre de Deos, Cochin, 14 November, 1579) -- கி.பி. 1579 

அடியார் வரலாறு (Flos Sanctorum o Libro de las vidas di algunos santos trasladas en lengua malavar, pp. 669, (Tuticorin or Punnaikayil), 1586) -- கி.பி. 1586 


0. நான் குறிப்பிடும் கையேடு (தமிழ் மொழியைப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்குவது) -- கி.பி. 1548~1549

இப்போது சொல்லுங்கள் -- அயலவரால் எழுதப்பட்ட "முதல் தமிழ் நூல்" எது என்று!

இந்தக் கையேட்டை அன்றீக்கு அடிகளார் "Arte Da Lingua Malabar" என்று குறிப்பிட்டார். "மலபார் மொழியின் கருவி; மலபார் மொழிக்குத் திறவுகோல்" என்றும் இன்றைய நாட்களில் உருவாகிவரும் "30 நாட்களில் தமிழ்" போன்ற ஒரு கையேடு என்றும் வைத்துக்கொள்ளுங்களேன்.


அண்மைக்கால முயற்சி
-------------------------------------
அன்றீக்கு அடிகளாரின் இந்தக் கையேட்டைத்தான் ஓர் அமெரிக்கப் பெண்மணியும் (Jeanne Hein; இப்போது அகவை 94+) நானுமாகச் (V.S. Rajam; இப்போது அகவை 70+) சேர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளோம்.





எல்லாம் வல்ல இணைய அறிஞர்களே, அந்தக் காலப் (16-ஆம் நூற்றாண்டுப்) போர்த்துக்கீசிய மொழியில் அந்தக் காலத் தமிழை (16-ஆம் நூற்றாண்டுத் தமிழை) விளக்கி அந்தக் காலப் (16-ஆம் நூற்றாண்டுப்) போர்த்துக்கீசிய-தமிழ் எழுத்துகளில் எழுதிய பாதிரியாரின் கையேட்டைப் படித்துப் புரிந்துகொள்வது எளிதான வேலையில்லை, நம்புங்கள்! நம்ப முடியாதவர்களைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை! அடம் பிடிப்பவர்கள் இருந்தால்   பழைய போர்த்துக்கீசியக் கையேட்டிலிருந்து ஒரு பத்துப் பக்கம் அனுப்பிவைக்கிறேன். அந்தப் பக்கங்களை அவர்கள் மனம் போன போக்கில் மொழிபெயர்த்துத் தமிழ்கூறு நல்லுலகை உய்விக்கலாம்!

பல பல ஆண்டுகளாக, பல பல இடையூறுகளுக்கு நடுவில், மிகவும் பாடுபட்டு உழைத்து இந்த நூலை இன்று வெளியிட்டிருக்கிறோம். இதைச் செய்யத் தேவையான பண உதவி எங்களுக்கு எங்கிருந்தும் இல்லை. அதுவும், கடைசி ஆண்டுகளில் (2009-2013) எல்லாமும் என் தனி முயற்சியும் என் கைச்செலவும்.

இதை ஹார்வர்ட் பல்கலைக்கழகக் கீழ்த்திசை நூல்களில் ஒன்றாகச் சேர்த்து அச்சிட்டு உதவிய ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கும், குறிப்பாகப் பேராசிரியர் விட்சல் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

(தொடரும்)








தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 2 (பின்னணி)



நினைத்துப் பாருங்கள்
—————————— 

உங்கள் நாட்டில், உள்ளூரில் அரசியல் குழப்பம்; அமைதியில்லை. உங்கள் தொழிலுக்குக் கேடு. உங்கள் குடும்பத்துக்குக் கேடு. அந்த நேரத்தில் கப்பலில்/தோணியில் வந்து இறங்குகிறார்கள் சில அயலவர். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனித உருவம் என்பதைத் தவிர ஒற்றுமை என்பது மிகவும் குறைவு; உருவத்தில், நிறத்தில்,  பார்க்கும் முறையில், உடல் அசைவில், ... பல வேற்றுமை. ஒருவர் சொல்வது ஒருவருக்குப் புரியாத நிலை. அவர்கள் ஏன் வந்தார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெளிவாகத் தெரியாத நிலை. 

இந்த நிலையில் ... வந்து சேர்ந்த அயலவரைத் தயக்கமில்லாமல்  தாரை தப்பட்டை முழக்கத்தோடு மாலை போட்டு வரவேற்றுத் தமிழக விருந்து கொடுத்து  “ஐயா, வந்தீங்களா? பசியாறினீங்களா?” என்றா கேட்பீர்கள்? 

அயலவனுடைய கால் தமிழ் மண்ணில் பட்டபோதே வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற எல்லாமே தொடர்ந்திருக்கும், இல்லையா? 

முதலில் வந்த அயலவரைத் தன்பால் ஈர்த்த தென்னகம் இரண்டு பெருஞ்சிறப்புடைத்து: தென்மேற்குக் கடற்கரைப் பக்கம் கருமுத்து (கருமிளகு/குறுமிளகு) + தென்கிழக்குக் கடற்கரைப் பக்கம் வெண்முத்து.

ஆழ்கடலிலிருந்து வெண்முத்து எடுத்துத் தரும் உள்ளூர்த் தமிழ் மக்களுக்குப் (== பரவருக்குப்) பகைவர்களிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களைத் தங்கள் நாட்டு அரசரின் குடிமக்களாக மாற்றவேண்டும்; அதற்கு முன்னோடியாக அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றவேண்டும். இதுவே அயலவராய் வந்த போர்த்துக்கீசியரின் எண்ணம்; குற்றமில்லை, நேரியதே. 

அப்படிப்பட்ட ஒரு காலத்தில்தான் போர்த்துக்கீசியப் பாதிரிமாரும் நம் மண்ணில் கால் வைத்திருக்கிறார்கள். 

அப்படி வந்த பாதிரிமார்கள் பலரில் முன்னுக்குத் தெரிந்த பெயர்கள் சில: ஃபிரான்சிஸ் சேவியர், கிரிமினாலி, அன்றீக்கு அடிகளார். 

ஃபிரான்சிஸ் சேவியர் நெடுநாள் தமிழகத்தில் தாக்குப் பிடிக்கவில்லை. அன்றீக்கு அடிகளாருடன் இன்னும் சில பாதிரிமாரை இருக்கச் செய்து வேறிடம் போய்விட்டார். பின்னும் தென்னகத் தொடர்பு விடவில்லை; கோவாவில் அவருடைய இறப்புடலின் கூறுகள் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. [நேரில் கண்டு வணங்கிய பேறு எனக்கும் உண்டு.]

அன்றீக்கு அடிகளாருடன் வந்த கிரிமினாலி அடிகளார் உள்ளூர்க் கலவரத்தில் கொலைப்பட்டார்.

அதன் பிறகு சேவியரின் மேற்பார்வையில் அன்றீக்கு அடிகளார் தமிழக முத்துக்குளித்துறையில் கிறித்துவ சமயம் பரப்பும் பணியைச் செய்யவேண்டிய நிலை. 

கல்லையும் மண்ணையும் கும்பிட்டுக்கொண்டிருந்த உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவக் கோட்பாடுகளை எப்படி விளக்குவது? 

இரண்டு பிரிவினரும் (தமிழர் + அயலவர்) தங்கள் உடல் உறுப்புகள் செய்யும் செயல்களைச் செய்து காட்டி, ஒவ்வொரு செயலையும் அடுத்தவர் எப்படிச் சொல்கிறார்கள் என்று காதால் கேட்டுத் தாங்களும் அப்படியே சொல்ல முயற்சி செய்யலாம்.

ஆனால் உள்ளம் மட்டுமே உணர்ந்த இறைத் தத்துவங்களை எப்படி விளக்குவது? 

காட்டாக கிறித்துவக் கோட்பாடுகளான Trinity, Immaculate conception ...  போன்றவற்றை உள்ளூர் மக்களுக்கு எப்படி விளக்கி அவர்களை நம்பச்செய்வது?

நம்மூர்க்காரர்களிடம் ஆயிரம் புராணக்கதைகள் இருக்கும்; மணிமேகலையின் ஆபுத்திரனைக் கேட்டுப் பாருங்கள். ஆனாலும், 'Immaculate conception' என்று ஒரு பாதிரியார் சொன்னபோது  நம்மூர் ஆட்களுக்குப் புரிந்திருக்குமா? 'யோவ், யாரிட்டெய்யா கதெ வுட்றே' என்று நம்மூர் ஆட்கள் கேட்டிருப்பாங்க, இல்லெ? தொடர்ந்து ... நம்பச் சொல்லிக் கசையடியும் கிடைத்திருக்கும், கலகமும் நடந்திருக்கும், இல்லையா? 

இதற்காகவே உள்ளூர் ஆட்களை அரவணைத்து அவர்கள் பேசும் மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும். மொழிக்குள்ளே பண்பாடும் அடக்கம். 

அன்றீக்கு அடிகளாருக்கு இருந்த உதவியாளர் (interpreter) வேறு வேலை தேடிப்போய்விட்டார். [அந்த உதவியாளரும் ஒரு கலப்பில் பிறந்தவராகத்தானே இருந்திருப்பார்!]

அன்றீக்கு அடிகளாருக்குத் தமிழ்மொழியைத் தானே கற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிறித்துவ போதனை செய்யும் பணியிலிருந்து சிறு ஓய்வு கேட்டுப் பெற்று, அல்லும் பகலுமாக உழைத்துத் தமிழைப் படித்தார்! பிறகு, தான் புரிந்துகொண்ட தமிழைத் தன்னைப் போன்ற பிற பாதிரிமாருக்கு விளக்குவதற்காகத் தன் மொழியில் எழுதிய கையேடுதான் 'தமிழ்மொழிக் கருவி' Arte Da Lingua Malabar.

உள்ளூர் மக்களுடன் பழகி அவர்களுடன் பேசித் தனக்குப் புரிந்த தமிழைப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்கியிருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போகும் மொழியியல் ஆய்வாளருக்காக எழுதவில்லை! இந்த நிலையில் இவரைப்போய் ... "நீர் ஏன் தொல்காப்பியத்தைக் கோட் பண்ணவில்லை? திருக்குறளைக் கோட் பண்ணவில்லை? ஃபொனாலஜியைச் சரியாகச் சொல்லவில்லை? ... " என்று குத்திக் குடைந்தால் ... யாருக்கு இழப்பு?

(தொடரும்)