Wednesday, September 7, 2011

"வட சொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 3

இந்தப் பதிவில் "திரிசொல்" என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஏன் என்றால் ... திரிசொல் என்பதும் தமிழ்ச் செய்யுள் செய்யப் பயன்படும் ஒரு வகைச் சொல்.

நினைவில் வைக்கவேண்டுவது, தொல்காப்பியர் சொன்னது:

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

அதாவது ... "இயற்சொல்" "திரிசொல்" "திசைச்சொல்" "வடசொல்" என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே ... தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் சொற்கள்.

****************************************


திரிசொல்
---------------- 

தொல்காப்பியர் சொல்வது:

"ஒரு பொருள் குறித்த வேறுசொல் ஆகியும்
வேறுபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
இருபாற்று என்ப திரிசொல் கிளவி"

இளம்பூரணர் உரை:

"ஒரு பொருளைக் கருதிப் பல சொல்லான் வருதலும், பல பொருளைக் கருதி ஒரு சொல்லான் வருதலும் என இரு கூற்றனவாகும் திரிசொற்கள்."

அதாவது:

ஒரு சொல் ரெண்டு வகையாத் திரிஞ்சு வரலாம்.

1. ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறிக்கப் பல சொற்கள் வழங்கலாம். அதாவது ... பொருள் ஒண்ணுதான்; ஆனா, அதெச் சுட்டிக்காட்ட நெறயவே சொற்கள் வழக்கத்துலெ இருக்கும். 

2. ஒரு சொல்லுக்கு ஒரு வடிவம் மட்டும் இருக்கும்; ஆனா, அது பல வேறு பொருள்களைக் குறிக்கும்.

-------------------------------------------

முதல் வகைக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு: அடுக்கல், பிறங்கல், விண்டு, ஓங்கல் என்பன.

அதாவது, இந்தச் சொற்கள் எல்லாமே ஒரே பொருளைச் சுட்டுகின்றன. நம்ம மொழிய்லெ சொல்லப்போனா ... இந்த எல்லாச் சொல்லுக்கும் "மலை"-னு அர்த்தம். இப்டி வரதெ ஆங்கிலத்தில் synonym-னு சொல்லலாம்.

அடுத்த வகைக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு: உந்தி

இந்த உந்தி-ங்க்ற சொல் அது எங்கெ வருதோ அந்த எடத்துக்குத் தகுந்த மாதிரிப் பொருள் தரும்.

உந்தி - ஆற்றிடைக்குறை (அதாவது ... ஓர் ஆற்றின் நடுவில் ஒரு தீவு / திட்டு மாதிரி இருக்ற எடம். ஆத்துத்தண்ணி அதெச் சுத்திச் சுழிச்சுப் போகும்.)

உந்தி - கொப்பூழ் (தொப்புள்-னு இப்ப சொல்வாங்க)

உந்தி - தேர்த்தட்டு

உந்தி - யாழ் என்ற இசைக்கருவியின் ஒரு பகுதி

இப்டி ஒரே மாதிரி ஒலிக்கிற ஒரு சொல் அது வர எடத்தெப் பொருத்து அதுக்குத் தக்க பொருள் தரதெ ... ஆங்கிலத்தில் homophones-னு சொல்லலாம். மீண்டும் சொல்லப்போனால்... ஒரு சொல்லுக்கு ஒரே மாதிரி ஒலி; ஆனால், எடத்துக்கு எடம் அதன் பொருள் வேறாக இருக்கும்.

*********************

இப்ப என்ன தெரியுது?

திரிசொல் என்றால் ... அது, தான் வழங்கும் இடத்துக்கு ஏற்றபடித் "திரி"ந்த பொருளைத் தரும் ஒரு சொல்.

ஒரு கருத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். காரணம் இல்லாமெ ஒரு சொல் திரியாது. அது synonym-ஆக இருந்தாலும் சரி, homophone-ஆக இருந்தாலும் சரி. இன்னெக்கி நமக்கு அந்தக் காரணம் இன்னது-னு தெரிய/புரிய வாய்ப்பிலாமலே போகலாம்.

சரி.

இளம்பூரணர் கொடுத்த எடுத்துக்காட்டையே எடுத்துக்குவமே: அடுக்கல், பிறங்கல், விண்டு, ஓங்கல் ... இந்த எல்லாச்சொல்லும் "மலை"யைக் குறிக்கும் என்றால் ... அதுக்கு அந்தக் காலத்துலெயாவது ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கணும் இல்லெ?

Eskimo-ன்ற இனத்தவர் மொழிய்லெ பனியெக் குறிக்க நெறயச் சொற்கள் இருக்காம். ஏன்? அவுங்க வாழற எடத்துக்கும் சூழ்நிலெக்கும் வாழ்க்கெ மொறெக்கும் ஏத்த மாதிரி, பனியின் வெவ்வேற நிலையையும் தன்மையையும் சுட்டிக்காட்டத்தான் அப்படிப் பல சொற்கள் தேவையாயிருக்கும்.

ஆங்கிலத்திலும் ... mountain, hillock, rocky mountain ... இப்படி நெறயவே பயன்பாடு உண்டு.

அது கிடக்க ... 

தமிழில் மலை-ங்கிற ஒரு பொருளுக்கு எத்தனையோ தன்மைகள் இருக்கும். அதுலெ ஒரு குறிப்பிட்ட தன்மையை மேம்படுத்திச் சொல்ல ஒரு குறிப்பிட்ட சொல்லை உருவாக்கியிருப்பாங்க-னு தோணுது.

"அடுக்கல்"- என்ற சொல் ஒரு மலை அடுக்கு அடுக்காக இருக்கும் தன்மையைச் சுட்டுவதற்காக உருவாகியிருக்கலாம்.

"பிறங்கல்" என்ற சொல் ஒரு மலையின் அடர்த்தியான, தொடர்ச்சியான, கரடு முரடான தன்மையைச் சுட்டலாம்.

"விண்டு" என்ற சொல் ஒரு மலையின் பிளவுபட்ட தன்மையைச் சுட்டலாம்.

"ஓங்கல்" என்ற சொல் ஒரு மலையின் வானளாவிய தன்மையைச் சுட்டலாம்.

காலப் போக்கில் பொருளின் நுண்மை காணாமல் ஓடியே போயிருக்கும்.

சரி. 

இப்ப, "உந்தி"-ங்க்ற சொல்லெ எடுத்துக்குவம். அது ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது என்றால் ... அது அந்த எல்லாப் பொருளுக்கும் பொதுவான ஒரு தன்மையைச் சுட்டுகிற அடைப்படையில்தானே உண்டாகியிருக்கவேண்டும்?

ஆற்றிடைக்குறைக்கும் தொப்புளுக்கும் ஒரே சொல் குறியீடா? இது என்ன பைத்தியக்காரத்தனம்? அப்ப ... ஸ்ரீரங்கம்-னா என்ன அர்த்தம்?

பொறுமையுடன் நினைத்துப் பார்ப்போம்.

கொப்பூழ் (தொப்புள்), ஆற்றிடைக்குறை, தேர்த்தட்டு ... இதுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை என்னவாக இருக்கலாம்? வட்டமாகச் சுழித்து, நடுப்பகுதி குழிவாக இருக்கும் தன்மையாக இருக்கலாம், இல்லையா?

**************************

இதுமட்டும் இல்லெ. இளம்பூரணர் இன்னொரு வகைத் திரிபையும் சுட்டிக்காட்டுகிறார்.

அது சொல்லின் வடிவத்தில் மாறுவது. எடுத்துக்காட்டாக, கிள்ளை, மஞ்ஞை என்று இரண்டு சொற்கள் தருகிறார்.

கிளி என்ற சொல் கிள்ளை என்று திரிந்திருக்கும். மயில் என்ற சொல் மஞ்ஞை என்று மாறியிருக்கும். ஆனால் இந்த வகை மாற்றம் அந்தச் சொல்லின் பொருளில் மாற்றம் உண்டாக்காது.

இப்ப, நம்ம கால மொழிய்லெ சொல்லப்போனா ... "வெண்டி" "வெண்டிக்கா" "வெண்டெக்கா(ய்)" எல்லாமே ஒரே ஒரு குறிப்பிட்ட காய்வகையைத்தானே குறிக்கும்?

அதே போல ... 

*******************************************

பொதுவாகச் சொல்லப்போனால் ... திரிசொல் என்பது ... ஒரு சொல் அதன் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ... 'தன் வடிவம்,' 'பொருள் மாற்றம்' என்ற இரண்டு வகை மாற்றங்களுக்கும் உட்படும் ஒரு சொல்.

இந்த வகைச் சொல்லும் தமிழ்ச்செய்யுளுக்கு ஏற்ற ஒரு வகைச் சொல்லே.



4 comments:

  1. நன்றி. நல்லவிளக்கம்.
    மூன்றுவகை திரிசொல் இருக்கிறது. அவ்வகைகளுக்கு ஏதேனும் பெயர்யிருக்கிறாதா. ஏன்னென்றால் தமிழில் Thesarus வொன்று உருவாகவேண்டுமென்று எனது நீண்டநாள் விழை.
    synonym, homophones என்று ஒப்பிட்டுக்கூறியிருந்தீர்கள். synonymபோல் இருக்கும் அந்த முதல்வகை திரிசொல் Thesarusபோல் உள்ளது. தமிழில் Thesarusவுருவாகினால் திரிசொலின் பெயரையே அதற்கிடலாம் - ’திரிசொல் அகராதி’ என்று.
    - கனவு மெய்படவேண்டும் :-)

    ReplyDelete
  2. படித்ததற்கும் பின்னூட்டம் தந்து மேலும் எழுத ஊக்குவித்தமைக்கும் நன்றி!

    ஒருபொருட்பன்மொழி -- synonyms

    பல பொருள் ஒரு சொல் -- homophones

    திரிபு -- variants ( கிளி/கிள்ளை; மயில்/மஞ்ஞை போல)

    தமிழில் Thesaurus உருவாக்க விரும்பினால் ...

    1. Thesaurus என்பதன் வரையறையைத் தெரிந்துகொள்ளவும்.

    2. தமிழில் வீரமாமுனிவர் உண்டாக்கின "சதுரகராதி" பற்றித் தெரிந்துகொள்ளவும்.

    3. தமிழில் உள்ள பல வகை "நிகண்டு"களைப் பற்றியும் தெரிந்துகொள்ளவும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக ... முக்கியமாக ...

    பிற அகராதிகளிலிருந்து சொற்களைப் பொறுக்கி எடுத்துப் போட்டு மட்டுமே ஒரு புது அகராதியை உருவாக்கும் முயற்சி வேண்டாம். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

    மற்றபடி ...

    உங்கள் கனவு நல்ல முறையில் மெய்ப்பட என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மிக எளிய விளக்கம். நெடுநாள் குழப்பம் தீர்ந்தது.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete