Friday, May 30, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.2


"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.2
--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் ...

“சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்றும் பார்த்தோம்:  http://mytamil-rasikai.blogspot.com/2014/01/3.html

"உயர்வு, இழிவு, உயர்பிறப்பு, இழிபிறப்பு"  இன்ன பிற கோட்பாடுகளைப் பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html 

"இழிந்தோன்உயர்ந்தோன்இழிசினன்இழிபிறப்பாளன்" பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/04/5.html


இதற்கு முந்தைய பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடத்தொடங்கினோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/05/61.html

****************

இந்தப் பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடியதன் பயனைப் பார்த்துக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்வோம்!


****************


மக்களின் வளம்/வறுமை, இரவலர்-புரவலர் உறவு, ஆண்-பெண் உறவு ஆகிய நிலைகளிலும் நடைமுறைகளிலும் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற கோட்பாட்டுக்குச் சங்கப் பாடல்களில் சான்று இருக்கிறதா என்பதைப் பார்ப்போம். 



1. மக்களின் வளமும் வறுமையும்

————————————------

வளம்
—————
பொதுவாகப் பார்த்தால் மக்கள் எந்த நிலத்தில் வாழ்ந்தாலும் அந்தந்த நிலத்துக்கேற்ற தொழிலைச் செய்துகொண்டு அந்தந்த நிலம் தந்த வளனை நுகர்ந்துகொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. கடுமையான வாழ்வாக இருக்கலாம், ஆனால் அது அவர்களுடைய மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை என்று தெரிகிறது.

மன்றுதொறும் குரவையும் சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டமுமாக விழாக்கொண்டார்கள் என்பதை மதுரைக்காஞ்சி வரிகள் (611-619) தெரிவிக்கின்றன. 

குறிஞ்சி நிலத்தில், ஆநிரை கவர்ந்து வந்த வீரர்கள் கள்ளுண்டு களித்தாடும் தளர்ச்சியடையாத குடியிருப்பைப் பெரும்பாணாற்றுப்படை (140-146) காட்டுகிறது. 

மக்கள் தேனையும் கிழங்கையும் கொடுத்து அதற்குப் பண்டமாற்றாக மீனும் கள்ளும் பெற்றுக் களிப்பதையும், கரும்பையும் அவலையும் கொடுத்துப் பண்டமாற்றாக மானின் தசையையும் கள்ளையும் கொண்டுபோவதையும் பற்றிப் படிக்கிறோம். பரதவர் குறிஞ்சி பாட, குறவர் நெய்தல் கண்ணி சூட, அகவர்கள் நீல நிற முல்லையைப் பல திணைகளிலும் விற்க, காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் தின்னவும் மனைக்கோழிகள் தினையைக் கவரவும் மலையில் வாழும் மந்தி நெய்தற்கழியிலே மூழ்க, கழியிலுள்ள நாரைகள் மலையிலே கிடக்க என்று திணை வேறுபாடு இல்லாமல் பல உயிர்களும் நிலத்தின் வளத்தை நுகர்ந்து களித்ததைப் பொருநராற்றுப்படை காட்டுகிறது (பொருநராற்றுப்படை 210-226)

முத்தும் பவளமும் செழித்த இடங்களைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை (55-72) பெரும்பாணாற்றுப்படை (335-336) வரிகள் மூலம் அறிகிறோம். மகளிர் காலில் பொற்சிலம்பு அணிந்திருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை (332) சுட்டுகிறது. 

அதோடு, கீழ்க்காணும் பாடல் வரிகள் முத்தும் துகிரும் (பவளமும்) செழித்திருந்த நிலையைக் காட்டுகின்றன:

வளைபடு முத்தம் பரதவர் பகரும் (ஐங்குறுநூறு)
ஓதம் தொகுத்த ஒலிகடல் முத்தம் (சங்க மருவிய ஐந்திணை ஐம்பது)
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் (மதுரைக்காஞ்சி)
கடல் பயந்த கதிர் முத்தமும் (புறநானூறு)
தென் பவ்வத்து முத்துப் பூண்டு (புறநானூறு)
தெண்கடல் முத்தும் குணகடல் துகிரும் (பட்டினப்பாலை)


பொன்னை விரும்பாத மகளிர்
****************************
கோவலர் குடியிருப்பில் பொன்னை விரும்பாத ஆய்மகளைப் பற்றிப் பெருமாணாற்றுப்படை சொல்கிறது (162-166). தன் சுற்றத்துக்கு மோர் கொடுத்தபின், நெய்யை விற்ற ஆய்மகள் நெய்க்கு விலையாகப் பசும்பொன்னை ஏற்காதவளாய் எருமைக்கன்று (நாகு, பெண் கன்று) பெற்றுக்கொள்வாளாம்! 

பட்டினப்பாலையிலோ இன்னொரு வகையான காட்சி. வீட்டு முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் மீன் உணங்கலைக் கவர வந்த கோழிகளை விரட்ட அங்கே இருந்த மகளிர் தங்கள் காதுகளில் போட்டிருந்த கனங்குழையைக் கழட்டி எறிவார்களாம்; அந்தக் குழைகள் அங்கே சிறுதேர் உருட்டும் சிறுவர்களின் பொற்றேரைத் தடுக்குமாம்!


வறுமை
-------------
நிலத்தோடு ஒட்டி வாழ்ந்த மக்களை இயற்கை தந்த செல்வச் செழிப்பு மகிழ்வித்துக்கொண்டிருக்க இசைக்கலைஞர் உள்ளிட்ட ஒரு கூட்டம் மட்டும் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நகர்ந்துகொண்டேயிருந்தது. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியோர் உள்ளிட்டதே அந்தக் கூட்டம். இந்தக் கூட்டம் தொடக்கத்தில் எப்படி உருவானது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நிலத்திலும் பறைகொட்டலும் யாழிசைத்தலும் கூத்தும் நிகழ்ந்தமை தெரிகிறது. ஒருவேளை அவர்களில் சிலர் தத்தம் நிலத்தை விட்டு வேற்றுப் புலங்களில் நிகழ்ந்த விழாக்களில் தங்கள் கலைத்திறனைக் காட்டப் போயிருக்கலாம். இவர்களெல்லாம் தமக்கென நிலையான ஓரிடத்தில் இருந்து தம் அறிவும் திறமையும் மழுங்கிப்போகாமல் புலம்பெயர்ந்துகொண்டேயிருந்த நிலை தெரிகிறது. ஏன்? இசையும் பாடலும் கூத்தும் நாடகமும் செய்யுள் யாப்பும் இவர்களது கலைத்திறமையின் வெளிப்பாடு. அந்தக் கலைகளை விரும்பிப் போற்றுமிடம் விழாக்களும் அரசவையும் பொது மன்றமும் வள்ளல்களின் இருப்பிடமும். 

பிற இடங்களிலிருந்து வந்த கலைஞர்களும் இவர்களோடு இணைந்திருக்கலாம். எல்லாம் ஊகமே. 

ஆரியப் பொருநன் (அகநானூறு 386)
ஆரியர் துவன்றிய் பேரிசை முள்ளூர் (நற்றிணை 170)
ஆரியர் கயிறு ஆடு பறையின் (குறுந்தொகை 7:4)

சோற்றுக்காக மட்டுமே கலைஞர்கள் வாழவில்லை என்பதை எடுத்துக்காட்டப் பொருநராற்றுப்படை (1-3) நல்ல சான்று:
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்

சாறு கழி வழி நாள்சோறு நசை உறாது

வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!

ஓரிடத்தில் திருவிழா முடிந்தபின் அங்கே கிடைக்கும் சோற்றை விரும்பாத பொருநனும் அவன் கூட்டமும் வேற்றுப்புலத்தைத் தேடிப் போனார்கள் என்பது மிக மிக அருமையான குறிப்பு. சோறு கிடைத்தாலும் அதை விடுத்துக் கலையைச் சுவைத்துப் போற்றுகிறவர்களைத் தேடி இந்தக் கூட்டம் அலைந்திருக்கிறது என்பது வெளிப்படை!!

இப்படி இந்தக் கலைஞர்கள் (கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ) தம் கலைத்திறமையைப் போற்றிப் புரப்பவரை நாடிச் சென்றதனால் இவர்களைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று பட்டையடிப்பது நேரியதாகப்படவில்லை. 


2. இரவலரும் புரவலரும்
————————————
வறுமையில் வாடியவர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களைப் புரப்போரும் இருந்திருக்கிறார்கள். 

கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்ற இசைக்கலைஞர் மட்டுமில்லை, புலவர்களும் வறுமையில் வாடியிருக்கிறார்கள் என்பதற்குச் சிறுபாணாற்றுப்படை (130-140), புறநானூறு (159, 160, 164) போன்றவை எடுத்துக்காட்டு.

ஆக, இசைக்கலைஞர்களும் புலவர்களுமே தங்கள் வறுமை நிலை நீங்கவேண்டிப் புரவலர்களைத் தேடிச் சென்றனர் என்று தெரிகிறது. 


இதிலே புலவர்கள் இரக்கும் முறைக்கும் பிற இசைக்கலைஞர் இரக்கும் முறைக்கும் வேறுபாட்டைக் காணலாம். 

இசைக்கலைஞர் தங்கள் வறுமை நிலையை விளக்கமாகச் சொல்லிப் புலம்புவதில்லை. அவர்களைப் பார்த்தவுடனே அவர்களுடைய வறிய நிலையை அறிந்து வள்ளல் பரிசில் கொடுக்கும் நிலையைத்தான் காண்கிறோம். ஆனால், புலவர்கள் -- பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார் போன்றவர்கள்  -- தங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை விளக்கமாகச் சொல்லுவதும் பரிசில் வேண்டும் முறையும் மிகவும் இரங்கத்தக்கதாகத் (wretched and pitiful) தெரிகிறது. 

வரிசையறிந்து கொடுக்கவேண்டும், காலம் தாழ்த்தாது கொடுக்க வேண்டும் ... என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. விருப்பம் இல்லாவிட்டால் வேறு புரவலரை நாடிச் சென்ற கதையையும் கேள்விப்படுகிறோம். இதைத்தான் ஔவையார் ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’  (புறநானூறு 206:13) என்று குறிப்பிட்டார் போலும். பெருந்தலைச் சாத்தனார் (புறநானூறு 162:7), குமணனனுக்கே (தான் ஏறிவந்த?) யானையைப் பரிசிலாக எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்படுகிறார்! 

வேந்தர்கள், மன்னர்கள், வள்ளல்கள் என்று பெயர் பெற்றவர்கள் மட்டுமில்லை பிற மக்களும் இரவலரைப் புரந்திருக்கிறார்கள். முதல் வகையினர் உணவோடு பொன்னும், பொருளும் கொடுத்தார்கள் என்றால் மற்றவர்கள் வயிற்றுக்குத் தேவையான உணவு கொடுத்துப் புரந்திருக்கிறார்கள். ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டுவது இதுவே. 


சிறுபாணாற்றுப்படையில்
****************************** 
நெய்தல் நிலமக்களின் விருந்தோம்பல் (153-163)
முல்லைநில மகக்ளின் விருந்தோம்பல் (173-177)
மருதநில மக்களின் விருந்தோம்பல் (188-195)

பாலைநிலத்தில் சோர்ந்திருந்த இரவலர் நெய்தல், முல்லை, மருத நிலங்களில் விருந்துண்டபின் நல்லியக்கோடனின் மூதூரை அடைந்தால் அவன் தரும் பரிசிலோ மிகப்பெரிது (236-260). 


பெரும்பாணாற்றுப்படையில்
******************************** 
எயிற்றியர் அளிக்கும் உணவு (95-105)
எயினர் குறும்பில் கிடைக்கும் உணவு (129-133)
கோவலர் குடியிருப்பில் கிடைக்கும் உணவு (166-168)
முல்லை நிலத்தில் உழுதுண்பார் அளிக்கும் உணவு (191-196)
மருத நிலத்தில் வினைஞர் அளிக்கும் உணவு (254-256)
மருத நிலத்தில் கரும்பு அடும் ஆலைகளில் கரும்புச்சாறு கிடைத்தல் (261-262)
நெய்தல் நிலத்தில் வலைஞர் கிடியிருப்பில் கிடைக்கும் உணவு (275-282)
அந்தணர் உறைவிடங்களில் கிடைக்கும் உணவு (300-310)
பட்டினத்தில் கிடைக்கும் உணவு (339-345)
உழவரின் தனி மனையில் கிடைக்கும் உணவு (355-362)

இதையெல்லாம் தாண்டிச் சென்றால் இளந்திரையன் கொடுக்கும் பரிசிலோ மிகப் பெரிது (467-493). முதலில் இரவலர்களுடைய சிதறுபட்ட ஆடைகளை நீக்கி, ஆவிபோன்ற மென்மையான நூலாடை (கலிங்கம்) கொடுக்கிறான். பிறகு பெரிய கலத்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கொடுக்கிறான். பிறகு இரவலர் அணிவதற்காக பொற்றாமரை, பொன்மாலை, புரவு பூட்டிய தேர் இன்னவை கொடுக்கிறான்.

அதோடு, பெரும்பாணாற்றுப்படையில் (464-467) காணும் ஒரு கருத்து சிந்திக்கத்தக்கது. இளந்திரையன் பரிசில் கொடுத்தான் என்பதோடு இரவலனின் நிலைமையைத் தெரிந்துகொள்ளும் முன்னரே 'நிலையில்லாத உலகத்தில் ஈகைச் செயலால் புகழடைந்து என்றும் நிலைத்திருக்கக் கூடிய நிலைமையை எண்ணிப் பார்த்து'ப் பரிசில் கொடுத்தான் என்பதே அந்தக் குறிப்பு. புகழுக்கு மயங்காதார் யார்?!

நிற்க.

புரவலர்கள்/வள்ளல்கள் யாருமே இரவலரைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று விலக்கியதாகத் தெரியவில்லை. 

வறுமை நிலை என்பது இரவலருக்கு ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத நிலையைக் கொடுக்கவில்லை. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்ற இரவலர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றால் அவர்களுக்குச் சோறும் பிற பொருள்களும் அளித்த வள்ளல்கள் அவர்களைக் கண்ணெடுத்தும் பாராமலோ தொலைவில் நிற்கவைத்தல்லவோ பரிசில் கொடுத்திருக்கவேண்டும்! அப்படித் தெரியவில்லையே!


  • இளந்திரையன் "முகன் அமர்ந்து ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி"னான் (பெரும்பாணாற்றுப்படை 491-493) என்றும், காலம் தாழ்த்தாமல் பரிசில் கொடுத்தான் (பெரும்பாணாற்றுப்படை 493என்றும் அறிகிறோம்.
  • சிறுபாணாற்றுப்படை (203-261) வரிகள் நல்லியக்கோடன் என்ற வள்ளல் பரிசிலுக்காகத் தன்னை நாடி வந்தவர்களுக்கு எப்படிப் பரிசில் வழஙகினான் என்பதை விளக்குகின்றன. 
  • நல்லியக்கோடனுடைய ஊர் “அந்தணர் அருகா அருங்கடி வியனகர் (187).” அவனுடைய வாயில் பொருநர்க்கானாலும் சரி, புலவர்க்கானாலும் சரி, அந்தணர்க்கானாலும் சரி … அடைக்கப்படாத வாயில் (203-206). 

குறிப்பிடத்தக்க செய்திகள்:

சிறுபாணாற்றுப்படை 219-220:
பன்மீன் நடுவண் பான்மதி போல
இன்னகை ஆயமொடு இருந்தோன் குறுகி

சிறுபாணாற்றுப்படை 244-245:
பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி


நல்லியக்கோடன் யார் யாருடைய பசித் துன்பத்தைப் போக்குகிறான்?
கிணைமகள் (சிறுபாணாற்றுப்படை:136), விறலியர் (சிறுபாணாற்றுப்படை:31), பாணர் (சிறுபாணாற்றுப்படை:248).

மதுரைக்காஞ்சியில், பாண்டியன் நெடுஞ்செழியனின் வள்ளண்மை தெரிகிறது. அவனுடைய வாயில் இன்னவருக்கு என்று வரையறை செய்யாதது. 

மதுரைக்காஞ்சியில் (748-751) காண்பது:
பாணர் வருக, பாட்டியர் வருக,
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி

இங்கே குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. இரவலர் கூட்டம் பெரிது. அவர்களுக்குச் சொந்தம் பெரிது ("இருங்கிளை"). அந்தப் பெரிய கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டியே தேரும் களிறும் கொடுக்கப்பட்டன. விழாக்களில் பாட்டும் கூத்தும் நாடகமும் நிகழ்த்தி ஊரூராக வள்ளல்களைத் தேடிப்போகும் இரவலர் கூட்டத்துக்கு ஊர்தியாகத் தேரும் களிறும் உதவியிருக்குமே!

வள்ளல்களின் பரிசில் வயிற்றுக்குச் சோறும் வழிநடைக்கு உதவும் தேர், யானை போன்றவையும் கூத்துக்கும் நாடகத்துக்கும் அணிசெய்யப் பொற்றாமரையும் முத்து மாலைகளும்.

இங்கே நாம் குறித்துக்கொள்ளவேண்டியது ... இரவலரைப் பார்க்கவோ பக்கத்தில் வரச்செய்யவோ புரவலர்கள் தயங்கியதில்லை. எனவே வறுமை நிலையால் இரவலரைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று சொல்வது மிகப் பெருந்தவறு.


3. ஆண்-பெண் உறவு 

சங்க இலக்கியத்தில் ‘தீண்டாமை’ என்று தேடும்போது ஆண்-பெண் உறவு பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? நல்ல கேள்வி. 

ஏனென்றால், 'தீண்டுதல்' என்பது இருவருக்கிடையேயோ ஒருவருடன் ஒரு பொருளுக்கிடையேயோ நிகழ்வது ஆதலின் என்க.

வணிகம், விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளைச் சொல்லும் சங்கப் பாடல்களில் அப்படிப்பட்ட ‘தீண்டாமை’ என்ற நிலை இல்லை என்று இதுவரை பார்த்த பாடல்களிலிருந்து தெரிகிறது. இறுதியாக, தனிப்பட்ட ஆண்-பெண் உறவில் இந்தத் ‘தீண்டாமை’க் கருத்து காணப்படுகிறதா என்று பார்ப்போம். 

ஒரு பெண்ணுக்குத் தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது, ஆனால் அந்த முயற்சிக்குப் பல தடைகள் இருந்தமையைப் பெரும்பாலான சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. 

குறிப்பாக, பெண்ணின் தாயரும் (செவிலி, நற்றாய்) தமரும் பெரிய தடை. ஏனென்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் சில பாடல்கள் கோடி காட்டுகின்றன. 

ஒரு நிலத்துப் பெண் இன்னொரு நிலத்து ஆடவனைத் துணையாகக் கொள்ளத் தடை இருந்திருப்பதை நற்றிணை 45 காட்டுகிறது. 

நெய்தல் நிலத் தலைவியின் தோழி மருத/முல்லை நிலத் தலைவனிடம் சொல்கிறாள். 
‘இவளோ கடலில் புகுந்து மீன் பிடிக்கும் பரதவர் மகள். நீயோ கொடிகள் பறக்கும் மூதூரில் விரைந்து ஓடும் தேரையுடைய செல்வனின் அருமை மகன். கொழுப்புள்ள சுறாமீனை அறுத்துக் காயவைத்து அந்த உணங்கலைத் தின்ன வரும் பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்? நாங்கள் புலவு நாறுகிறோம். போய்வா. எங்கள் வாழ்க்கை பெரிய நீர்ப்பரப்பாகிய கடலில் விளையும் பொருள்களை (மீன் போன்றவற்றை) அடிப்படையாகக் கொண்ட சிறு நல் வாழ்க்கை. உன்னுடன் ஒத்தது அன்று. எங்களுக்குள்ளேயே (எங்களுடன் இணையத் தக்க) செம்மலோர் இருக்கிறார்கள்.’ 

இந்தப் பெண்ணின் சொற்களில் தன் நெய்தல் நிலத்தவரைப் பற்றி எவ்வளவு பெருமிதம்!

இங்கே குறித்து நோக்கவும். ‘நீ தேரோட்டும் செல்வனாக இருந்தாலும் உன்னால் எங்களுக்கு என்ன பயன்?’ என்று கேட்கிறாள் தோழி. ‘நாங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள்’ என்று தங்களை இழித்துச் சிறுமைப்பட்டுக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் நிலத்தொழிலில் பெருமை கொள்கிறாள்.  ‘எங்கள் வாழ்க்கை நல்ல வாழ்க்கை’ என்று பெருமிதம் கொள்கிறாள். எங்களுக்குள்ளேயே செம்மல்கள் இருக்கிறார்கள் என்று பிற நிலத்தவனாகிய தலவனுக்குச் சுட்டுகிறாள். இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இங்கே தேவையில்லாத ‘தீண்டாமை’க் கருத்தைப் புகுத்துவது நேரியதில்லை. 

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

குறிஞ்சி நிலத்தில் இன்னொரு வகை இறுக்கத்தைக் காண்கிறோம்.
கலித்தொகை 39 காட்டுவது. ஒரு குறவர் குடிப்பெண்ணும் கானக நாடனின் மகன் ஒருவனும் இணைந்த நிலையைக் காட்டுகிறது. 
இந்தக் குறவர் குடிப்பெண் தன் தோழியரோடு மிக வேகமாகப் பாய்ந்து வரும் நீரில் புகுந்து நீராடும்போது கால் தளர்ந்துவிடவே நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்படுகிறாள். அந்நேரத்தில் அங்கே வந்த கானக நாடன் (தலைவன்) நீரில் குதித்து அவளை மார்புறத் தழுவிக்கொண்டு அவளைக் கரையேற்றுகிறான். அவளும் அவனும் மார்புறத் தழுவிய நிலை அவளுடைய கற்பு நிலையைக் குறிக்கிறது என்பது தோழியின் கருத்து. தாய்க்குச் செய்தியைத் தெரிவிக்கிறாள். தாயும் அவருடைய ஐயன்மாருக்குத் தெரிவிக்கிறாள். ஐயன்மாரோ வில்லை எடுப்போமா, அம்பை எடுப்போமா என்று நினைத்து, ஒரு பகல் முழுவதும் சினம் கொண்டு ஒருவழியாக ஆறுதல் அடைந்து, ‘இருவர்கண்ணும் குற்றம் இல்லை’ என்று தெளிவு கொண்டு அவர்களுடைய இணைப்புக்கு ஒப்புக்கொண்டார்கள்! 
“இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை” என்று முடிகிறது இந்தப் பாட்டு. 
இங்கே பெண்ணும் ஆணும் இணைவதற்குக் குலத்தாழ்ச்சியோ தீண்டாமையோ காரணமில்லை என்பது தெளிவு. 

குறிஞ்சிப்பாட்டு (31-34) காட்டுவது சற்றே வேறுபட்ட நிலை. 
களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் சோர்வு தாய்க்குக் கவலை. தோழி முன்வந்து என்ன நடந்தது என்று சொல்கிறாள். 
“வண்ணத்தையும் (‘வர்ணத்தையும்’? ‘குணத்தையும்’?) துணையையும் (சுற்றத்தையும்) பொருத்திப் பார்க்காமல் நாங்களாகத் துணிந்த இந்தப் பாதுகாப்புடைய அரிய செயலை [களவு முறையை]  நடந்தது நடந்தபடிச் சொல்லுகிறேன், சினவாமல் கேள்”
இங்கே குறித்துக்கொள்ளவேண்டியது “வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது” [வண்ணத்தையும் சுற்றத்தையும் பொருத்திப் பார்க்காமல்] நாங்களாகவே துணிந்து ஈடுபட்ட இந்தச் செயல்” என்பது. “பொருத்தம்” என்ற ஏதோ ஒன்றைக் கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது. ஆனால், அது எந்த வகையிலும் தாழ்ந்த/ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத மக்கள் என்று எவரையும் சுட்டவில்லை.

கலித்தொகை (113: 7-10) ஆயர் குலத்துப்பெண் ஒருத்தி ஆயர் குலத்து ஆணை விரும்புதலைக் குறிக்கிறது.
தன்னைக் குறுக்கிட்ட தலைவனை ‘யார் நீ’ என்று கேட்கும் தலைவிக்கு அவன் சொல்கிறான்: “புல்லினத்து ஆயர் மகனேன்.”
அதைக் கேட்ட தலைவி சொல்கிறாள்: “ஒக்கும்; புல்லினத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு(ம்) நல்லினத்து ஆயர் எமர்.”
புல்லினம் என்பது ஆடுகளைக் குறிக்கும். குடம் சுட்டும் நல்லினம் என்பது பசுக்களைக் குறிக்கும். 
இங்கே ஆணும் பெண்ணும் இணைவதற்குத் தடையில்லை என்று தெரிகிறது.

இப்படி, ஐந்திணைகளில் பெண்ணும் ஆணும் இணைவதற்குத் தடையாக இருந்த நிலைகளைப் பற்றி அறிகிறோம். ஆனால், அவற்றில் எந்த நிலையுமே “தீண்டாமை” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமையவில்லை என்பது உறுதி.

களவு முறையில் செல்லாமல் வலிமையின் அல்லது வீரத்தின் அடிப்படையில் பெண்ணை எடுக்க வந்த நிலையை மறக்குடி மக்கள் எதிர்த்த நிலையை மிக அழகாகக் காட்டும் பாடல்கள் புறநானூற்றில் மகட்பாற்காஞ்சி என்ற திணையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன (புறநானூறு 336-339; 341-354). மகள்மறுத்தல் என்பது இந்தத் திணையின் ஒரு செயல்பாடு. 
சுருக்கமாகச் சொன்னால், அரசனுக்குப் பெண்கொடுக்க மறுக்கும் மறக்குடி மக்களின் வீரத்தையும் பெருமிதத்தையும் காட்டும் பாடல்கள் மகட்பாற்காஞ்சிப் பாடல்கள். பெண்ணின் தந்தை பெண்ணைக் கொடுக்க மறுக்கிறான். அரசன் போர் தொடுக்கிறான். அந்தப் பெண்ணின் பொருட்டாக அவள் பிறந்த ஊருக்கே அழிவு ஏற்படுகிறது. 

அரசனாக இருந்தாலும் சரி, உடனே காலில் விழுந்து பெண்ணைக் கொடுக்கும் வழக்கம் மறக்குடி மக்களிடம் இல்லை என்பதை மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் தெளிவிபடுத்துகின்றன.

புறநானூறு 343:10-13 காட்டும் செய்தி குறிப்பிடத்தக்கது:

... செங்குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி அன்ன
நலம்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
தந்தையும் கொடாஅன் ...

செங்குட்டுவனின் முசிறி போன்ற செழுமையான பொருளைப் பரிசமாகக் கொண்டுவந்து பணிவோடு கொடுத்தாலும் தனக்கு நேரானவன் அல்லன் என்றால் பெண் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று தந்தைக்குத் தெரியும், அதனால் அவனும் தன் பெண்ணைக் கொடுக்கமாட்டான்! எவ்வளவு பெருமிதம், பாருங்கள். இதோடு வடக்கத்தி முறைகளான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ... என்ற மணமுறைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பெண்ணுக்கு உரிமை எங்கே இருந்திருக்கிறது என்பது விளங்கும்!
இங்கே குறித்துக்கொள்ளவேண்டியது … ஆணும் பெண்ணும் இணைவதுக்குத் தடையாக அவர்கள் வாழந்த நிலமோ வேறு ஏதோ அமைந்திருந்த நிலை தெரிகிறது. ஆனால், 'தீண்டாமை' என்ற ஒன்று குறுக்கிட்டதாகத் தெரியவில்லை.
******************* 
சரி, எப்போதுதான் இந்தச் 'சாதி, தீண்டாமை' என்ற கோட்பாடுகள் தமிழ் இலக்கியங்களில் நுழைந்தன என்று தேடியபோது இரண்டு நல்ல சான்றுகள் கிடைத்தன: ஒன்று சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில், இன்னொன்று நம்மாழ்வார் ஈடு உரையில். 

சிலப்பதிகாரத்தில், மதுரையில் கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற கோவலனின் முன் வந்த பொற்கொல்லனை 'விலங்கு நடைச் செலவின் ... கொல்லன்' என்று இளங்கோ குறிக்கிறார் (சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை:107-108). 

'விலங்கு நடை' எனபதற்கு அடியார்க்கு நல்லார் உரை: 'இழிகுலத்தோனாதலின் உயர்ந்தோர் வந்தவிடமெங்கும் விலங்கி நடத்தல்.' உ.வே.சா உரை: 'மேன்மக்களைக் கண்டு ஒதுங்கி நடத்தல்.' 

இங்கே இந்த உரைகளில் 'குலத்தாழ்ச்சி, தீண்டாமை' என்ற கோட்பாடு ஊடுருவுவதைக் காண்கிறேன்.


நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி) இன்னும் சிறந்த எடுத்துக்காட்டு. 

குலம் தாங்கு சாதிகள் நாலினும் கீழ் இழிந்து எத்தனை
நலம்-தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று, உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே


இதன் விளக்கவுரையைக் காண்போம் (திருவாய்மொழி வியாக்யானம், ஈடு 3-7-9)


குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்துமுறைப்படி நடக்கும் விவாகத்தாலும் அநுலோம பிரதிலோம விவாகத்தாலும் உள்ள குலங்களைத் தரிப்பதான பிராஹ்மண வருணம் முதலான நான்கு பிறவிகளிலும் கீழே கீழே போய். எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்-அந்தச் சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞான ஒழுக்கங்கள் இன்றியே இருப்பாருமாய், ‘சண்டாளர்என்றால் நாம் நோக்காமல் போமாறு போன்று அந்தச் சண்டாளர்களும் விலகிச் செல்லக் கூடியவர்களாகிலும். ‘இவர்கள் உத்தேஸ்யர் ஆகைக்கு என்ன வலக்குறி உண்டு?’என்ன, விருத்தவான்கள் அன்றோ இவர்கள் என்று கைமேலே காட்டிக்கொடுக்கிறார் மேல்.
(நன்றி: Thiruvonum’s Weblog: 

மேற்காணும் உரையைப் பலமுறை படித்துப் புரிந்துகொள்ளுங்கள். 'குலம் தாங்கு சாதிகள்' என்ற குறிப்பு மிகவும் இன்றியமையாதது. வருண முறைக்கும் 'சாதி' என்பதுக்கும் உள்ள தொடர்பு விளங்கும்.  


முடிவுரை
-------

மேற்காட்டிய அடியார்க்கு நல்லார், உ.வே.சா, ஈடு உரைகளைத் தவிர, அவற்றுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் 'சாதி உயர்வு/தாழ்வு, ஒதுக்கப்பட்டவர், தீண்டாமை' போன்ற கோட்பாடுகளைக் காண என்னால் முடியவில்லை.  

(இத்தொடர் முற்றும்.)



Thursday, May 22, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.1



"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.1
--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் ...

“சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்றும் பார்த்தோம்:  http://mytamil-rasikai.blogspot.com/2014/01/3.html

"உயர்வு, இழிவு, உயர்பிறப்பு, இழிபிறப்பு"  இன்ன பிற கோட்பாடுகளைப் பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html 

"இழிந்தோன்உயர்ந்தோன்இழிசினன்இழிபிறப்பாளன்" பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/04/5.html

****************

இந்தப் பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடுவோம். 

கொஞ்சம் நீளமான பதிவு, அதனால் இரண்டாகப் பிரித்து எழுத விருப்பம். படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை. 

++++++++++++++++++++++++ 

‘தீண்டாமை’ என்றால் யாரோ ஒருவர் இன்னொருவர் மேல் ‘தீட்டு’ இருப்பதாகக் கற்பித்துக்கொண்டு அந்தத் ‘தீட்டுப்பட்டவர்'களைத் தீண்ட விரும்பாத நிலை என்று புரிந்துகொள்கிறேன். 

சங்க இலக்கியத்தில் 'தொடுதல்' என்பதும் 'தீண்டுதல்' என்பதும் வெவ்வேறு பொருளைத்தரும். முதலது ஆண்-பெண் உறவோடு (penetration) 'தோண்டுதல் (digging)' என்ற பொருளையும் தரும். காட்டு: 'பாசியற்றே பசலை ... தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே;' 'குளம் தொட்டு வளம் பெருக்கி ... .' முதலதை விளக்காமல் 'இடக்கரடக்கல்' என்று மறைத்துவிட்டார்கள். 'தீண்டுதல்' என்றால் ஒரு பொருளும் இன்னொரு பொருளும் இடைவெளியில்லாத அணுக்க நிலையில் அமைதல். இதையும் மனதில் கொள்ளவும்.

'தீட்டு' என்றால் என்ன என்று சங்கப்பாடல்களிலிருந்து அறிய முடியவில்லை.

இப்போது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சங்கப்பாடல்களில் 'தீட்டு' என்ற கருத்து எங்கே வெளிப்படுகிறது என்றும் எனக்குப் புலப்படவில்லை. 

இந்த நூற்றாண்டில் எனக்குத் தெரிந்த 'தீட்டு' என்ற கருத்தையோ ‘தீண்டாமை’ என்ற கருத்தையோ சங்கப் பாடல்களில் யான் காணவில்லை. 

'தீட்டு' ‘தீண்டாமை’ பற்றி உங்களுக்குத் தெரிந்த அளவில் சங்க இலக்கியத்தில் விளக்கமோ சான்றோ ஏதேனும் அகப்பட்டால் குழப்பாமல் தெளிவாகச் சொல்லுங்கள். என் கருத்துச் சேவியில் நன்றியுடன் சேர்த்துக்கொள்வேன். 

இக்கால வழக்குப்படித் "தீண்டாமை" என்பது மக்களைப் பற்றியது ஆதலால் ... மக்களின் பெருக்கம், மக்களின் தொழில்கள், மக்களின் இருப்பிடம், மக்களின் செல்வ வளம், ஆண்-பெண் உறவு, இரவலரும் புரவலரும் என்ற கோணங்களில் சங்கப் பாடல்களில் "தீண்டாமையை"த் தேட முயலுகிறேன்.

நிற்க.

1. மக்களின் அடிப்படைப் பிரிவுகளும் அவர் பெருகிப் பல்கியமையும்


சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை + பத்துப்பாட்டு) பொதுமக்களின் இயற்பெயர்கள் கிடைப்பது அரிது. மன்னர், அரசர், வள்ளல், புலவர் ஆகியோரின் பெயர்களோடு பெண்களின் பெயர்கள் சில (ஐயை, மருதி, வெள்ளிவீதி, ஆதிமந்தி  என) அரிதாகக் கிடைக்கின்றன. அந்தப் பெயர்களும் ஏதோ ஒரு வள்ளல்/மன்னன்/ஆடுவான் என்று பொது வாழ்வில் புகழ் பெற்ற ஓர் ஆடவனுடன் தொடர்பான பெண்களின் பெயர்களே. 

அதைத் தவிர, மக்களைச் சுட்டும் பெயர்கள் எல்லாமே திணை, நிலம், குடி, கிழமை, தொழில், பண்பு இன்ன பிறவற்றின் அடிப்படையில் உருவாகியதைக் காண்கிறோம். இதை முன்னொரு பதிவில் (http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html) பார்த்தோம்.

இந்தப் பெயர்களில் ‘தீண்டாமை’ என்ற கருத்து இழையோடக்கூட இல்லை. 'புலையன்' என்றால் தீண்டத்தகாதவன், 'பறையன்' என்றால் தீண்டத்தகாதவன் இன்ன பிற கருத்தெல்லாம் இலக்கியச் சான்று இல்லாமல் கற்பித்துக்கொள்ளப்பட்டவை. பிற மக்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பட்டம் கட்டி ஒதுக்கிய நிலையைச் சங்கப்பாடல்களில் காணேன்.

1a. தமிழகத்தில் மக்கள் பெருகிப் பல்கிய நிலையைப் பற்றிய கருத்து இலக்கணத்தில் கிடைக்கிறது. 

தொல்காப்பிய உரையில்: 
 “ கிழவனும் கிழத்தியும் பலவகைப்படுவர். அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மர் ஆவர். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மர் ஆவர். இவரையும் அவ்வந்நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான் நோக்க வரம்பிலர் ஆவர்.”

பாருங்கள். 

அடிப்படைப் பிரிவுகள் (4 வகை)
——————————————
இதை முந்தைய பதிவில் (http://mytamil-rasikai.blogspot.com/2014/04/5.html) சுருக்கமாகப் பார்த்தோம். இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

A, B, C, D — அந்தணர் (A), அரசர் (B), வணிகர் (C ), வினைஞர் (D) என்று வைத்துக்கொள்வோம். 

அநுலோமர் (6 வகை)
——————————
AB, AC, AD, BC, BD, CD
அந்தணர் குல ஆண் + அரசர் குலப் பெண் —> அநுலோமர் (AB)
அந்தணர் குல ஆண் + வணிகர் குலப் பெண் —> அநுலோமர் (AC)
அந்தணர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (AD)
அரசர் குல ஆண் + வணிகர் குலப் பெண் —> அநுலோமர் (BC)
அரசர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (BD)
வணிகர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (CD)


நில வகைப் பிரிவுகளின்படி மக்கள் வகை (10 x 4)
————————————————————
(அடிப்படை 4 குலம் + அநுலோமர் 6 வகை == 10 வகை) x குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்கள் (4) == 40 வகை


ஒவ்வொரு நிலத்திலும் உயிர்களின் பன்மை
—————————————————
40 x ஆயர் குலம் 
40 x வேட்டுவர் குலம்
40 x குறவர் குலம் 
40 x பரதவர் குலம்

******************* 
இதையெல்லாம் இலக்கணத்தில் இவ்வளவு விளக்கமாகச் சொல்லக் காரணம் என்ன? 

பெண்கொடுத்தல், பெண்கோடல் என்ற முறைகளில் தமிழக மரபும் வடக்கத்தி மரபும் வேறுபட்டிருக்கின்றன.

வடக்கத்தி முறை: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தைவம்/தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம். இவற்றுள் முதல் நான்கும் (பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தைவம்/தெய்வம்) பெண்ணைக் கொடுக்கும் முறை; இங்கே பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. பின்னவை மூன்றும் (அசுரம், இராக்கதம், பைசாசம்) பெண்ணைக் கொள்ளும் முறை. இங்கேயும் பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. ஏதோ ஒரு போட்டியில் வெற்றி பெற்றுப் பெண்ணை அடைதல், பெண்ணை வலிய எடுத்துச் செல்லுதல், பெண் அசந்து இருக்கும் நேரத்தில் அவளை வலியப் புணர்தல் போன்ற முறைகளே இவை. இடைப்பட்ட ஒன்று (காந்தருவம்) மட்டுமே பெண்ணுக்குத் தன் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்ததைத் தெரிவிக்கிறது. 

தமிழக முறை: களவு, கற்பு. தன் துணையைத் தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணுக்கு உரிமை இருந்ததைக் களவு என்ற முறை சொன்னாலும், அந்தக் களவு கற்பில் முடிவேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் உடன்போக்கு என்ற முறை அமைந்தது.

தமிழகத்துக் ‘களவு’ என்ற மணமுறை வடக்கத்திக் ‘காந்தருவம்’ என்பதற்கு ஈடானது என்று ஆரிய அரசன் பிரகத்தனுக்கு விளக்க முனைந்த இலக்கியம் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு. எல்லாருக்கும் இந்தக் களவு-கற்பு முறையை இலக்கண நூல்களாகிய தொல்காப்பியமும் இறையனார் களவியலும் விளக்குகின்றன.

[குறிஞ்சிப்பாட்டைத் தனியாக அலச வேண்டும்.]

களவு என்ற ஒழுக்கத்தில் ஈடுபடத் தொடங்கும் பெண்ணும் ஆணும் எந்தெந்த வகைகளில் ‘ஒத்து’ இருப்பார்கள் என்று தொல்காப்பியர் சொல்கிற போது, அந்த ஆடவன் ‘மிக்கோன் ஆயினும்’ பரவாயில்லை என்றும் சொல்லிவிட்டார். அதைத் தொடர்ந்துதான் அநுலோமக் கருத்து வெளிவருகிறது. 

“இழிந்தானொடு உயர்ந்தாட்கு உளதாகிய கூட்டம் இன்மை பெருவழக்கு “ என்பது உரை. அதாவது, தமிழகத்தில், உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி அவள் குலத்தைவிட இழிந்த குலத்தவனோடு கூடுவது அந்தக் காலத்தில் பரவலாக நடைபெறவில்லை என்று தெரிகிறது. 

‘தீண்டாமை’ என்பது ஒரு தீவிரக் கோட்பாடாக இருந்திருந்தால்  மக்கள் பெருகிப் பல்கியதைக் குறித்த தொல்காப்பியரோ விளக்கம் சொன்ன உரையாசியரோ அந்த மக்களுள் இவர் இவர் இந்த இந்தக் காரணத்தால் 'ஒதுக்கப்பட்டவர்/‘தீண்டத்தகாதவர்’ என்று ஏன் குறிப்பிடவில்லை? 

2. மக்களின் தொழில்கள்


இயற்கை தந்த நிலத்தோடும் நீரோடும் ஒட்டி நிலையாக வாழ்ந்து தொழில் செய்தவர்கள் நெய்தல்நில மக்களும் மருதநில மக்களுமே. இவர்கள் தொழில் செய்த இடங்களின் இயற்கை/செயற்கை மாற்றத்தால் நிலத்தின் கூறும் தொழிலின் நிலையும் மாறுபடும். மற்ற நிலத்து ஆயர், வேட்டுவர், குறவர் எல்லாருமே இடம் பெயர்ந்துகொண்டேயிருக்கவேண்டிய தேவை இருந்திருக்கும், இல்லையா? 

இலக்கியத்தில்
-----------------------

வணிகம்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆகிய புலவர்களின் பெயர்கள் பலருக்கும் பழக்கமானவையே. மாசாத்துவான், மாநாய்கன், கோவலன், சாதுவன், சந்திரதத்தன் என்ற வணிகர்களின் பெயர்கள் சங்கமருவிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் கிடைக்கின்றன. மணிமேகலையில் காணும் "கம்பளச்செட்டி" என்ற குறிப்பு  கடல் கடந்து கம்பள வணிகம் செய்தவனைக் குறிக்கிறது. 

வேளாண்மை: 
வேள், வேளாண்மை, வேளாளர் (பரிபாடல்), இன்ன பிற.
வேளாண்மை செய்தன கண் (கலித்தொகை)

இதைத் தவிரப் பல்வேறு தொழில் செய்தவர்களைப் பற்றியும் ஏற்றுமதி/இறக்குமதி வணிகம்,   பண்டங்களுக்குக் கரிகாலனின் முத்திரை, சுங்கவரி, நாளங்காடி (பகல் நேரக் கடைத்தெரு), அல்லங்காடி (இரவு நேரக் கடைத்தெரு) இன்ன பிறவற்றைப் பற்றியும் மதுரைக்காஞ்சி (511-522), பட்டினப்பாலை (118-136) போன்ற இலக்கியங்களிலிருந்து அறியலாம்! 


இலக்கணத்தில்
-----------------------
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது … ; வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும் … (தொல்காப்பியம்)

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல்காப்பியம்)

தொல்காப்பிய உரையில் காணுவது: உமண் குடி, சேரி, தோட்டம், பாடி என வரும். எயின் குடி, சேரி, தோட்டம், பாடி என வரும். எட்டிப்பூ, எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு, நம்பிப்பூ, நம்பிப்பேறு என வரும். எல்லாக் கொல்லரும் சேவகரும் தச்சரும் புலவரும் எனவும், எல்லா ஞாயிறும் நாயகரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும். 

இவற்றோடு, கோலிகக் கருவி, வண்ணாரப் பெண்டிர், ஆசீவகப்பள்ளி என்ற குறிப்பும் கிடைக்கிறது.

இங்கே “உமண்” என்பது ‘கிளைப்பெயர்’ என்பதற்கு எடுத்துக்காட்டு. பிற பெயர்களை — எயின், எட்டி, கொல்லர், நாயகர், மணியகாரர், வணிகர், அரசர் ஆகியவற்றை நீங்களே புரிந்துகொள்க. 

3. மக்களின் இருப்பிடம் 


பொதுவாக ... 

மக்களின் உறைவிடங்கள் அந்தந்த நிலத்துக்கு ஏற்றபடிச் செவ்வனே அமைந்திருந்ததை ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டுகின்றன. 

ஒவ்வோர் ஆற்றுப்படை இலக்கியத்திலும் பல்வேறு நிலங்களின் அமைப்பும் மக்களின் வாழ்க்கை முறையும் விவரிக்கப்பட்டிருப்பது அருமை.  

ஓர் எடுத்துக்காட்டு:

பெரும்பாணாற்றுப்படை (263-274)
--------------------------------------------------
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ,

தாழை முடித்துதருப்பை வேய்ந்த

குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில்,

கொடுங்கால் புன்னைக்கோடு துமித்து இயற்றிய

பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,

புலவு நுனைப் பகழியும் சிலையும் மான,

செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்

மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி,

கோடை நீடினும் குறைபடல் அறியாத்

தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்

கொடு முடி வலைஞர் குடி

இந்த வகைப் பிரிவுபட்ட உறைவிடங்கள் அவரவர் செய்த தொழில் அடிப்படையில் அமைந்தனவே தவிர, தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற அடிப்படையில் அமையவில்லை. 


இலக்கணத்தில்
———————
ஒவ்வொரு திணைக்கும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) உரிய ‘கருப்பொருள்’ என்று தொல்காப்பியம் (அகத்திணையியல் 20) குறிப்பவை: தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பவை.

“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கரு என மொழிப”

இதைச் சற்றே விளக்கமாக முதலில் தெரிவிப்பது இறையனார் களவியல் உரை. இறையனார் களவியல் உரையில் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள் பட்டியலைக் காண்கிறோம். 

இங்கே குறித்துக்கொள்ள வேண்டியவை இரண்டு:

1. தொல்காப்பிய நூற்பாவில் மக்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் இறையனார் களவியல் உரை மக்களையும் சுட்டி, அதில் தலைமகன், தலமகள், மக்கள் என்ற பிரிவையும் குறிக்கிறது. 

2. பறையடித்தவரும் யாழிசைத்த கலைஞரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் என்ற குறிப்பு எங்குமேயில்லை. எல்லா நிலத்திலும் அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பறை முழக்கம் செய்திருக்கிறார்கள், யாழிசைத்திருக்கிறார்கள். அந்தந்த நிலங்களில் பறை முழக்கம் செய்த எல்லாரும் பறையரே, யாழிசைத்த எல்லாரும் பாணரே, துணங்கை போன்ற கூத்தாடிய எல்லாரும் கூத்தரே. சேர மன்னன் ஒருவன் தன் போர் வெற்றிக்குப் பிறகு துணங்கைக் கூத்துக்குத் தலைக்கை தந்தான் என்று அவனுடைய மனைவி ஊடல் கொண்டமையை ஒரு புலவர் பாடுகிறார். (இதைப் பற்றிய என் பதிவை இங்கே பார்க்கலாம்: http://mytamil-rasikai.blogspot.com/2010/12/blog-post_31.html )


இலக்கியத்தில்
——————
பட்டினம், பாக்கம், சேரி, குடி, ஊர், தெரு, மறுகு, நகர், பாடி, இருக்கை, பதி, என்று பல வகை இடங்கள் இருந்ததாகத் தெரிகிறது. ‘வீதி’ என்ற சொல் சிலப்பதிகார, மணிமேகலைக் காலத்திலிருந்து வழக்காறு பெறுகிறது; ஆனால், சங்கப் பாடல்களில் ஒரு பெண்ணின் பெயரில் (வெள்ளிவீதி) மட்டுமே 'வீதி' என்ற சொல் காண்கிறது. 

இந்தச் சொற்களில் ஒவ்வொன்றும் சங்க இலக்கியங்களில் எவ்வாறு புழங்குகிறது என்று ஆய்வதே முறை. அதை ‘விரிக்கின் பெருகும்’ என்பதனால் அந்த வகை ஆய்வு இங்கே இல்லை.

பொதுவாகவும் சுருக்கமாகவும் சொன்னால்  
  • பட்டினம், பாக்கம் இரண்டும் நெய்தல் நிலத்து இடங்களாகவும் கடல் தொடர்பான வணிகம் நிகழ்ந்த இடங்களாகவும் தெரிகிறது. 
  • ஊர், பதி என்பவை உள்நாட்டிலும் கடல் அல்லது நீர்ப்பரப்பு சூழந்ததுமான இடங்களிலும் இருந்தவை எனத் தெரிகிறது. 
  • யானையும் தேரும் செல்லும் வழி தெரு; பாம்பும் தெருவில் வழங்கியிருக்கிறது (குறுந்தொகை).
  • வணிகமும் பிற செயல்களும் நிகழும் இடம் மறுகு
  • ஊருக்குள்ளேயோ தொட்டடுத்தோ சேரி, குடி, நகர் என்பவை மக்கள் குழுக்களாக வாழும் இடமென்றும் தெரிகிறது. குடி என்பது குறிஞ்சி நிலத்திலும் இருந்திருக்கிறது.
  • இருக்கை என்பது ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபட்டவர்களின் தற்காலிகமான (temporary) நிலை என்பது-போலத் தெரிகிறது. மன்னனோ, வள்ளலோ மக்களைப் பார்ப்பதற்கும் பரிசில் வழங்குவதற்கும் என்று அமர்ந்திருந்த நிலை, பிற்காலத்தில் ‘திருவோலக்கம்’ என்று குறிக்கப்பட்ட நிலை, போல இருந்திருக்கலாம். 
  • பாடி என்பது போர்க்காலத்தில் காட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மிகப் பெரிய பரந்த இருப்பிடம் என்பது தெரிகிறது. இந்தப் ‘பாடி’ என்ற சொல்லுக்குப் ‘பாசறை’ என்று உரைகாரர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். முல்லைப்பாட்டு உரை காண்க. அதோடு, சென்னை அகரமுதலியின் பொருளும் காண்க. 
    • [பாடி¹ pāṭi
    • , n. < படு-. [T. pāḍu, K. M. pāḍi.] 1. Town, city; நகரம். பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 2. Hamlet; quarters; சேரி. (திவா.) 3. Pastoral village; முல்லைநிலத்தூர். (திவா.) 4. District; நாடு. (யாழ். அக.) 5. See பாடிவீடு. பாடி பெயர்ந் திட்டான் பல்வேலான் (பு. வெ. 3, 10). 6. Army, troop; சேனை. (திவா.) 7. Armour, coat of mail; கவசம். (அக. நி.) 8. Spy; உளவாளி. (W.)]
  • ஆனாலும் பாருங்கள், ‘பாடி’ என்ற சொல் ‘தீண்டாமை’ என்ற கோட்பாட்டைக் காட்டவில்லை! பெரியபுராண நந்தனின் புலைப்பாடிக்கு எப்போது ‘தீட்டு’ உண்டானதோ தெரியவில்லை!
நிற்க.


'சேரி' என்ற சொல்லுக்குச் சிறப்பிடம் கொடுத்து அதன் வழக்காற்றைப் பார்ப்போம், ஏனென்றால் அந்தச் சொல்தான் காலப்போக்கில் உருவான ‘தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டாமை’ என்ற கோட்பாடுகளைச் சங்க இலக்கியத்தில் புகுத்திக் காண்கிறவர்களுக்கு விருந்து! 

சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி விடை காண முயலுவோம். 

1. சேரி என்பது என்ன?

2. அது எங்கே அமைந்திருந்தது?

3. சேரியில் யார் வாழ்ந்தார்கள்? என்ன தொழில் செய்தார்கள்? 

4. சேரியில் மக்களின் போக்குவரத்து எப்படிப்பட்டது?

5. சேரியில் வாழ்ந்தவர் வறுமையில் வாடினார்களா?  

6. சேரியின் சூழ்நிலையால் சேரி மக்கள் தாழ்ந்தவர்களா?

+++++++++++++++
சங்க இலக்கிய வழக்காறுகளில் சில இங்கே:

1. ‘சேரி’ என்பது என்ன? 

இதற்குக் குறைந்தது இரண்டு உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். 
  • நற்றிணைக்கு உரையெழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சொன்னது: “பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி.” நற்றிணை 77, 331 காண்க.
  • தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் சொன்னது: “சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல் அதனைப் ‘பார்ப்பனச்சேரி’ என்பது.” 
ஆகா! இதுவே ‘சேரி’ என்பது இழிந்தோர்/தாழ்ந்தோர்/ஒதுக்கப்பட்டோர்/தீண்டத்தகாதவர் வாழுமிடம் என்ற கருத்தைச் சட்டென வெட்டுகிறது!


2. ‘சேரி’ என்பது எங்கே அமைந்திருந்தது?

சில எடுத்துக்காட்டுகள்:
உறைக்கிணற்றுப் புறச்சேரி (பட்டினப்பாலை: 76)
புறஞ்சேரியிறுத்த காதை (சங்க மருவிய சிலப்பதிகாரக் காதை ஒன்றின் தலைப்பு)
ஓரூர் வாழினும் சேரி வாரார் (குறுந்தொகை 231:1)
மையீர் ஓதி மடவோய், யானும் நின் சேரியேனே, அயலிலாட்டியேன் (அகநானூறு 386:10-11)
தமர் தமர் அறியாச் சேரி (நற்றிணை 331:12)
[பின்னத்தூரார் உரை: பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி. அவரே ‘ஆங்கண்’ என்பதுக்கு ‘ஊர்’ என்று பொருள் கொண்டு, ‘ஊரிலுள்ள சேரியெனக் கூட்டுக’ என்கிறார்!]
 ஊரலஞ்சேரிச் சீறூர் (நற்றிணை 77:8)
[பின்னத்தூரார் உரை: பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி.]


2a. முதலில் சங்க மருவிய சிலப்பதிகாரக் குறிப்பைத் தெளிவுபடுத்திவிடுவோம். காதையின் தலைப்பில் ‘புறஞ்சேரி’ என்று இருக்கிறதே தவிர, காப்பிய வரிகளில் இல்லை! காப்பிய வரிகளில் உள்ளது ‘புறஞ்சிறை,’ ‘புறச்சிறை’ — “அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் புறஞ்சிறைப் பொழில் (13:195; 14-1); அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் (15:7-8). அறத்துறை மாக்கட்கல்லது இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது (15:107-108).

[‘புறஞ்சிறை,’ ‘புறச்சிறை’ என்பவை அறம் செய்யும் அறவோர் நிறைந்த இடம் என்று தெரிகிறது.’ அது தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் வாழும் இடம் என்று சொல்லமுடியுமா?] 


2b. “உறைக்கிணற்றுப் புறச்சேரி” என்ற பட்டினப்பாலை வரியைக் கொண்டு ‘சேரி என்பது ஊருக்குப் புறத்தே, தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் வாழ்ந்த இடம்’ என்று முடிவு கட்டுவது மிகப்பெரும் தவறு. “புறச்சேரி” என்பது சேரியின் இட அமைப்பைக் குறிப்பது உண்மை. ஆனால் அது மக்களின் தாழ்ச்சியையோ ஒதுக்கப்பட்டமையையோ தீண்டாமையையோ குறிக்கவில்லை. 

[‘உறை’ என்பது சுட்ட களிமண்ணால் ஆன, தேவையான உயரமும் விட்டமும் கொண்ட வளையம். ’உறைக்கிணறு’ என்பது பல உறைகள் இறக்கப்பட்ட கிணறு. இது கரிகாலன் ஆண்ட காவிரிப்பூம்பட்டினத்தின் தொழில்நுட்பத்தைச் சுட்டும் மிகச் சிறந்த குறிப்பு. நெய்தல் நிலத்தில், பட்டினக்கரையில் குடிநீருக்காக உறையிட்டு அமைக்கப்பட்ட கிணறுகள் அன்றைக்கு இருந்தமைக்கு இது வலுவான சான்று. பிற நிலத்து மக்களுக்கு அருவி, ஆறு, சுனை, குளம் போன்ற நீர்நிலைகள் இருக்க நெய்தல் நில மக்களுக்கு உப்பில்லாத குடிநீர் கிடைக்க இந்த உறைக்கிணறுகள் பயன்பட்டிருக்க வேண்டும். உறையின் களிமண் கடல்நீரை வடிகட்டும் கருவியாக அமைந்திருக்கும். இது கரிகாலனின் திறமையை எடுத்துச் சொல்லுகிறது. கல்லணை கட்டிய சோழத்திறமை அல்லவா!

இன்றைக்கும் சாயல்குடி என்ற ஊருக்கு அருகே ‘உறைக்கிணறு’ என்ற இடம் இருக்கிறது என்பதை இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளலாம். தினமலர்ச் செய்தியிதழ்ப் பதிவு ஜூன் 21, 2010. 20-ஆம் நூற்றாண்டில் நகர்களிலும் வீட்டிற்குள் கடின உறைகள் (cement/concrete rings) இறக்கி உறைக்கிணறு அமைத்தார்கள்.]


2c. “ஓரூர் வாழினும் சேரி வாரார்” என்ற குறுந்தொகை (231:1) வரி ஒரே ஊரில் தலைமகனும் தலைவியும் வாழ்ந்தாலும் அவன் அவளுடைய சேரிக்கு வருவதில்லை என்று சொல்கிறது. இது மருதநிலத்தில் ஊரும் சேரியும் ஒருங்கே இருந்தமைக்குச் சான்று.


2d. “மையீர் ஓதி மடவோய், யானும் நின் சேரியேனே, அயலிலாட்டியேன்” என்று மருதநிலத்தில் தலைவியிடம் பரத்தை சொல்கிறாள் (அகநானூறு 386:10-11). தலைவியும் பரத்தையும் ஒரே சேரியில் அண்டைவீட்டுக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது! சேரியில் வாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்றால் அங்கேயிருந்த பெண்களுடன் உறவாடிய பரத்தனை என்ன வகையில் அடக்கலாம்???

ஆக, ‘சேரி’ என்பது தாழ்ந்தவருக்கு/ஒதுக்கப்பட்டவருக்கு/தீண்டத்தகாதவருக்கு என்று அமைந்த தனி இடம் என்ற கருத்து எவ்வளவு தவறு என்பது வெளிப்படை.


3. சேரியில் வாழ்ந்தவர் யார்? அவர்கள் என்ன தொழில் செய்தார்கள்?



மீன் சீவும் பாண்சேரியொடு, மருதம் சான்ற தண்பணை (மதுரைக்காஞ்சி: 269-270)
[பொருள் வெளிப்படை.]

 வாலிழை மகளிர் சேரி (நற்றிணை 380:5)
  [பின்னத்தூரார் உரை: தூய இழையணிந்த பரத்தையர் சேரி. 
அப்படி என்றால் வாலிழை மகளிர் எல்லாரும் பரத்தையரா? அகநானூற்றுப் பாடலில் (86:12) குறிக்கப்படும் “வாலிழை மகளிர்” பரத்தையரா? இப்படியெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.]

 பாடுவார் பாக்கம் கொண்டென, ஆடுவார் சேரி அடைந்தென (பரிபாடல் 7:31-32)
[பாடுகிறவர்கள் வாழும் பாக்கத்தை வளைத்து, ஆடுகிறவர்கள் வாழும் குடியிருப்பை (வையைப் புனல் அடைந்தது).]

 “… கொற்சேரி, நுண்துளைத் துன்னூசி விற்பாரின் …” (சங்க மருவிய ஐந்திணை ஐம்பது: 21)

[கொல்லர்கள் வாழும் குடியிருப்பு.]

பரதவர் சேரி (சிலப்பதிகாரம்)

தொல்காப்பிய உரையில் உமண் சேரி, எயின் சேரி என்ற எடுத்துக்காட்டுகளைக் காண்கிறோம்.

இந்தச் சான்றுகளைப் பார்த்தால், மீன் பிடித்த பாணர், பரதவர், உமணர், எயினர், ஆடுகிறவர் (ஆண் + பெண்), கொல்லர் இன்ன பிற மக்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அதோடு, முன்னர்க் குறிப்பிட்டவாறு “சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது” என்ற தொல்காப்பிய உரையே போதும் — சேரிகளில் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற கருத்தை மறுக்க. 


4. சேரியில் மக்கள் போக்குவரத்து எப்படிப்பட்டது?

சேரியில் யார்யார் போய்வரலாம் என்ற கட்டுப்பாடு இருந்ததாகத் தெரியவில்லை. “தமர் தமர் அறியாச் சேரி” என்ற நற்றிணை (331:12) வரி அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போனார்கள் என்று குறிக்கிறது.

ஆனாலும், இங்கே கலித்தொகைப் பாடல் (65) ஒன்று சிந்திக்கத்தக்கது. சுருக்கமாகச் சொல்கிறேன். 

நல்ல இருட்டு நேரத்தில் தலைவன் வரவுக்காக ஒருத்தி காத்திருக்கிறாள். அப்போது அங்கே ஒரு "முடமுதிர் பார்ப்பான்" வருகிறான். தலைவியைப் பார்த்து ‘இந்த நேரத்தில் இங்கே நிற்கிற நீ யார்’ என்று அவளிடம் கேட்டுவிட்டுத் தம்பலம் கொடுக்கிறான். அவள் தான் ஒரு பிசாசு போல நடிக்கிறாள். பார்ப்பான் அஞ்சுகிறான். அவள் அவன்மேல் மணலை வாரித் தூவுகிறாள். அவன் பதறி அரற்றுகிறான். புலியைக் கொள்ளுவதற்கு என்று விரிக்கப்பட்ட வலையில் ஒரு குறுநரி சிக்கியது-போல இருந்தது அந்த அவலம். 

இந்த நிகழ்ச்சியை “எந்நாளும் தன் தொழில் அவ்வாறு தனிநிற்கும் மகளிரைக் கண்டால் தன் காமவேட்கையாலே மேல்விழுதலாகக் கொண்ட முதிய பார்ப்பானுடைய விரும்பு” என்று ‘உச்சிமேல் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் உரைக்கிறார்! இந்தக் கலித்தொகைப் பாட்டைப் புனைந்தவரும் புகழ்பெற்ற ஓர் அந்தணப் புலவரே — கபிலர்!

[எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பான கங்காவின் மாமா ('சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற கதையில்) நினவுக்கு வருகிறது. சில பிறவிகள் காலந்தோறும் அப்படித்தான் இருக்கும்-போல!!]

இங்கே சிந்திக்கவேண்டியவை பல. 

  • சேரி என்பது பரத்தையர் சேரியானால், ஒரு (முடமான கிழட்டுப்) பார்ப்பானுக்கு அங்கே என்ன வேலை, அதுவும் இருட்டு நேரத்தில்? 
  • சேரி என்பது தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் இருப்பிடமானால் அங்கே போய்விட்டுவரும் பார்ப்பான் அந்தத் தீட்டை எப்படிப் போக்கிக்கொள்வான்? அவனுடைய சாத்திரம் அவனுக்குக் கழுவாய் சொல்கிறதா? 
  • ‘சேரியில் தீட்டு’ என்று ஒருபக்கம் சாய்ந்த முடிவு ஏன்? அங்கே போன பார்ப்பானுக்குச் ‘சேரித்தீட்டு’ ஒட்டாதா??? கங்கையில் போய்க் குளித்துவிட்டா தன் வீட்டுக்குள் நுழைவான்?!
  • கள்ளமிலாச் சீதையையும் இறைப்பற்றில் தன்னை இழந்த நந்தனையும் தீயில் சுட்டுப் புடம் போட்ட இந்திய-தமிழகக் குமுகங்கள் கலித்தொகைப் பார்ப்பான் போன்றவர்களையும் பிற பரத்தனையும் பொசுக்கிப் புடம் போடாமல் மறுபடியும் தெருவில் உலவ விட்டது ஏன்

5. சேரியில் வாழ்ந்தவர்கள் வறுமையில் வாடினார்களா?

சேரிமக்கள் வறுமையில் வாடியதற்குச் சான்று இல்லை. [உங்களுக்குச் சான்று தென்பட்டால் தெரிவிக்கவும் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.] அவரவர் தத்தம் தொழிலைச் செய்துகொண்டு மிகக் களிப்போடு வாழ்ந்தார்கள் என்றுதான் தெரிகிறது. 

சில எடுத்துக்காட்டு மட்டும் இங்கே:

துணங்கையம் தழூஉவின் மணம் கமழ் சேரி (மதுரைக்காஞ்சி: 329)
[துணங்கைக் கூத்து நிகழ்கின்ற நறுமணம் கமழும் குடியிருப்பு.]

 மல்லலம் சேரி (நற்றிணை 249:9)
[வளம் மிகுந்த குடியிருப்பு.]

 சேரிக்கிழவன் மகளேன் யான் (கலித்தொகை 117:6)

[சேரியில் முதல் உரிமை படைத்தவனின் மகள் பெருமையாகத் தன்னைப் பற்றிச் சொல்லும் இடம் இது.]

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஒரு புலவர். இந்தப் புலவர் தாழ்ந்தவரா? ஒதுக்கப்பட்டவரா? தீண்டத்தகாதவரா?


6. சேரியின் சூழ்நிலையால் சேரி மக்கள் தாழ்ந்தவர்களா?

கோழியும் பன்றியும் ஆடும் மீனும் இறைச்சியும் புலாலும் நிறைந்த காரணத்தால் சேரியில் வாழ்ந்தோர் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற முடிவுக்கு வரமுடியாது. அதே போல இறைச்சியும் நாயும் பன்றியும் காணாத இடத்தில் வாழ்ந்தவர் உயர்ந்தவர் என்றும் சொல்ல முடியாது. நாயும் பன்றியும் துன்னாத பதியில் வாழ்ந்த மறைகாப்பாளர் (பெரும்பாணாற்றுப்படை 297-301) மறைகளைக் காக்கவேண்டிச் செய்த வேள்வியில் பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியைப் புழங்கிய நிலையை எப்படிப் புரிந்துகொள்வது? மோரும், வெண்ணெயும், மாதுளையும், மாவடுவும் உண்ட காரணத்தினால் அவர்கள் உயர்ந்தவர்களாகிவிடுவார்களா? 

இந்தச் சான்றுகளே போதும்  “சேரி என்றால் தாழ்ந்த/ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத மக்கள் இருந்த இடம்” என்ற கருத்தை மறுக்க! என்ன சொல்கிறீர்கள்? 

(தொடரும்)