Saturday, February 15, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 4

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 4

--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் “சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்றும் பார்த்தோம்:  http://mytamil-rasikai.blogspot.com/2014/01/3.html


இந்தப் பதிவில் "உயர்வு, இழிவு, உயர்பிறப்பு, இழிபிறப்பு"  இன்ன பிற கோட்பாடுகளைப் பற்றிப் பார்ப்போம்.


கொஞ்சம் நீளமான பதிவு. படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை. 

++++++++++++++++

சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை + பத்துப்பாட்டு) காணும் “இழிபிறப்பாளன்,” “இழிபிறப்பினோன்,” “இழிசினன்” என்ற சொற்களை எடுத்துக் கொண்ட சிலர், இன்றைக்கு ‘இவன் தலித், அவன் தலித்; இந்தச் சாதி இந்த இழிந்த சாதிக்கு ஒரு சிறு படிதான் மேல்’ என்று பலபடியாகப் பட்டையடித்துப் பேசுவதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது மிகவும் குழப்பமும் வருத்தமும் அடைந்தேன். அப்போதுதான் அட, சங்கப்பாடல்கள் இப்படியா பேசுகின்றன என்று தெரிந்துகொள்ளத் தொடங்கிய என் முயற்சியின் விளைவை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


உயர்வு, இழிவு
———————- 
‘எது உயர்ந்தது? எது இழிவானது?’ என்பது நல்ல கேள்வி. ஒரு குமுகத்தில் எல்லாரும் ஒத்துக்கொள்ள வேண்டிய அளவில் ஏதோ ஒரு வகைச் சமநிலைக் கோட்பாடு இல்லாமல் ‘இது உயர்ந்தது, இது இழிந்தது’ என்று எடையிடும் கருத்து உருவாகியிருக்க முடியாது, இல்லையா? 

[We need an origin and steady state for drawing X and Y axis-based analysis.]

ஆனால், சங்கப் பாடல்களிலிருந்து அந்தச் சமநிலைக் கோட்பாடு (அப்படி ஒன்று இருந்திருந்தால்) எது என்றும் அது எப்போது உருவானது என்றும் தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தெரிந்தால் நல்லது, சொல்லுங்கள். 

உயர்வு/இழிவு என்ற கருத்து பலவகையில் வெளிப்படுகிறது. பழைய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் பார்ப்போம்.


1. செயலால் உயர்வும் இழிவும்

1a. “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு இளம்பூரணர் உரை: “உயர்வுதாம் பல. குலத்தால் உயர்தலும் தவத்தால் உயர்தலும் நிலையால் உயர்தலும் உபகாரத்தால் உயர்தலும் என. அவ்விழிந்தவழி ஒடு வைத்துச் சொல்லியது அந்நிலைக்கண் அது சிறப்புடைத்தாகலின்.” 

[இது “ஒடு” என்ற மூன்றாம் வேற்றுமை உருபின் பயன்பாடு குறித்தது. இந்தக் காலத்தில் இந்த வேற்றுமை உருபு ‘ஓடெ’ என்று பேச்சு வழக்கில் புழங்கும்.]

அதாவது, ஓர் அரசனும் சேவகனும் சேர்ந்து வந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது “அரசனொடு வந்தார் சேவகர்” என்று சொல்ல வேண்டுமாம்; ஏனென்றால் இங்கே அரசனுக்குச் சேவகனைவிட உயர்ந்த நிலையாம். ஆனால், யாராவது “நாயொடு நம்பி வந்தான்” என்று சொன்னால் அங்கே அந்த நிலையில் நாய் சிறப்புடையதாகலின் அது சரியாம். நம்பிக்குத் துணையாக இருக்கும் நாய்க்கு நம்பியைவிடச் சிறப்பு. இது சரியான கணிப்பு. 

ஆக, ‘செயல் திறமை’ என்பது இங்கே ‘உயர்வு’ என்பதை வரையறுக்கிறது என்று கொள்கிறேன். இது நல்ல கண்ணோட்டமாகத் தெரிகிறது. 


1b. ஈகையால் உயர்வும் இழிவும்

இன்னொரு தொல்காப்பிய நூற்பாவின்படி, ஒருவர் தனக்கு வேண்டியதை  இன்னொருவரிடம் கேட்கும்போது ஒப்பு/உயர்வு/இழிவு என்ற நிலை அடிப்படையாக அமைகிறது. 

“ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே”

ஈ, தா, கொடு என்ற மூன்று சொற்களும் ஒருவரை இன்னொருவர் இரந்து கேட்கும்போது பயன்படுத்தும் சொற்கள். 

“அவற்றுள், 
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.
தா என் கிளவி ஒப்போன் கூற்றே.
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே.”

இங்கே பாருங்கள் உயர்ந்தோன், ஒப்போன், இழிந்தோன் என்ற கோட்பாடுகளை. ஒருவரிடமிருந்து ஒருவருக்கு ஏதாவது தேவையானால் எப்படிக் கேட்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 

ஒத்த நிலையில் இருப்பவர்கள் “தா” என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டுமாம். உரையாசிரியர் காட்டுவது: சோறு தா; ஆடை தா

கேட்பவர் இழிந்த நிலையில் இருந்தால் “ஈ” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுமாம். உரையாசிரியர் காட்டுவது: உடுக்கை ஈ; மருந்து ஈ

சொல்பவர் உயர்ந்த நிலையில் இருந்தால் “கொடு” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுமாம். உரையாசிரியர் காட்டுவது: இவற்கு ஊண் கொடு, ஆடை கொடு

இந்தக் கருத்தையே இலக்கியம் எப்படிச் சொல்லுகிறது என்று பார்ப்போம்.


1b.i. புறநானூறு 204:1-4

“ஈ-என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்-எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”

ஒருவரிடம் “ஈ” என்று கேட்பது இழிந்த செயல். இரக்கப்பட்டவன் அதுக்கு மறுமொழியாகக் ‘கொடுக்க மாட்டேன்’ என்று சொல்வது அதைவிட இழிந்தது. 

‘இந்தா, இதை எடுத்துக்கொள்’ என்று கொடுப்பது உயர்ந்த செயல். அதுக்கு மறுமொழியாக ‘வேண்டாம், எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று சொல்வது அதைவிட உயர்ந்த செயல். 


1b.ii. பதிற்றுப்பத்துப் பாடல் ஒன்றில் (52:23), ஊடல்கொண்ட தன் மனைவியின் கையில் இருந்த செங்குவளை மலரைச் சேர அரசன் ஒருவன் “ஈ” என்று அவளிடம் இரந்து கேட்கிறான். 

[இதைப் பற்றிய என் பதிவு இங்கே: http://mytamil-rasikai.blogspot.com/2010/12/blog-post_31.html

இங்கே, சேர அரசனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் உண்டான ஊடலில் அவள் நிலை உயர்ந்தது, அவன் நிலை தாழ்ந்தது, அதுவே குறிப்பு; சாதி, குலம், கோத்திரத்துக்கு இங்கே இடமில்லை.


1b.iii. புறத்திணையைப் பொருளாகக் கொண்ட பாடல்கள் வலியுறுத்தும் பண்புகளுள் ஒன்று ஈகை, அதாவது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கும் செயல்; இதுவே கொடை என்று புகழப்படுகிறது. 

'உடையோர் கொடுப்பார்கள், இல்லோர் இரப்பார்கள்' என்ற செய்தி புதிதில்லை. புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்று (38:14). 

அதோடு, புலவர்கள் ஓர் அரசனுடைய பக்கத்தில் இருந்தாலும் பிற வள்ளல்களைத் தேடிச் செல்வார்களாம் (புறநானூறு 154:4-5). 

ஆக, ஆற்றுப்படை இலக்கியங்களில் காணும் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியவர்கள் மட்டும் பொருளுக்காக வள்ளல்களைத் தேடிப் போகவில்லை, *புலவர்களும்* போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியவர்கள் இழிந்த நிலையில் (‘இழிந்த சாதி’யினராக) இருந்தார்கள், புலவர்கள் உயர்ந்த நிலையில் (‘உயர்ந்த சாதி’யினராக) இருந்தார்கள் என்று கருதுவது நேரியதில்லை


1c. வேள்வி செய்தது உயர்ந்ததாகக் கருதப்பட்டது. 

‘உயர்ந்தோர் உவப்ப’ வேள்வி செய்த அரசனைப் புலவர் பாடுகிறார் ஒரு பதிற்றுப்பத்துப் பாடலில் (74:1-2). 

பரிபாடல் 2:24-25
வடு-இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு-இல் கேள்வி-உள் நடு ஆகுதலும் 

இந்த இரண்டு பாடல் வரிகளிலும் குறிக்கப்படும் “உயர்ந்தோர்” என்ற சொல் அவரவர் கண்ணோட்டத்துக்குத் தகுந்தபடிப் பொருள் தரும். வேள்வி செய்வது பார்ப்பானின் தொழில் ஆதலால் இங்கே “உயர்ந்தோர்” என்பது பார்ப்பானைக் குறிக்கும் என்று பொருள் கொள்வதில் தவறில்லை. 


1d. நோன்பு என்பது உயர்வுக்கு அடையாளம்.

மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் பூம்புகாரில் உள்ள புத்த பீடிகையைத் தொழுது புத்த தேவனை வாழ்த்தும்போது, “உலக நோன்பின் உயர்ந்தோய்” என்று வாழ்த்துகிறாள் (மணிமேகலை 5:98). புத்த தேவன் வேள்வி செய்யும் பார்ப்பான் இல்லை!


1e. முயற்சியின் பெருமை உயர்வுக்கு அடையாளம்.

புறநானூறு 214 முழுப்பாடலையும் படித்துப் பயனடையலாம். குறைந்தது 6-7 வரிகளையாவது தெரிந்துகொள்ளலாம்:

“… உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு-ச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு” 

இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது ஒன்று: “உயர்ந்திசினோர்” என்ற சொல்லாட்சி! இதன் பின்னணியில் “இழிசினன்” போன்ற சொற்களையும் ஆராய்ந்து பார்க்கலாம்.

புறநானூறு 214
————————
செய்குவம் கொல்லோ நல்வினை, எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு-ச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
மாறிப் பிறவார் ஆயினும் இமயத்து-க்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு-த்
தீது-இல் யாக்கையொடு மாயல் தவத்தலையே 


1f. போரில் ஈடுபட்டது உயர்வு

பதிற்றுப்பத்து 11:10-11
அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர் ஊக்கலை 

இங்கே, பகைவரின் காவலை உடைத்த மன்னனின் ஊக்கம் புகழப்படுகிறது. அந்த முயற்சி “உயர் ஊக்கம்” என்ற சிறப்பைப் பெறுகிறது, இல்லையா.

அதோடு, தும்பைப் போரில் வீழ்ந்தவர்கள் எய்திய உலகம் “உயர்நிலை உலகம்” என்று குறிக்கப்பட்டது (பதிற்றுப்பத்து 52:9)


2. குலம், கல்வி, செல்வம் ஆகியவை உயர்வுக்கு அடையாளம்.

“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே 
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”

உரை: உயர்ந்தோர் என்றவழிக் குலத்தினால் உயர்ந்தாரையும் காட்டும், கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும், செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்.  


2a. இன்னொரு தொல்காப்பிய நூற்பாவுக்கு உள்ள உரையில் காண்பது:

“பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.”

“குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பு என்பது ஒன்று உண்டு என்று கூறினார் ஆகலின்.”

“மக்களுள் ‘உயர்ந்தோர்’ என்றவழிக் குலத்தினால் உயர்ந்தாரையும் காட்டும், கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும், செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்” என்பது தொல்காப்பியர் உரை. 

இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது: “அக்குலத்தினுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின்” என்ற கூற்று. அதாவது, ஒரு குலத்தின் பெயரைக் கொண்டு அந்தக் குலத்தில் பிறந்த எல்லாரும் உயர்ந்தவர்/இழிந்தவர் என்று முத்திரை குத்த முடியாது!


3. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சொல்லுவதின்படி, ‘இழிவு’ என்பது அழுகைச் சுவைக்கு ஓர் அடிப்படை. இங்கே உரையாசிரியர் சொல்லுவது: “இழிவு என்பது பிறர் தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது.”

இன்னொரு நூற்பாவுக்கு இளம்பூரணர் உரை: “இழிக்கத்தக்கன பிறவும் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் புல்லியன.” 


4. மொழி வழக்கிலும் ‘அழி/இழி’ என்ற கருத்து இருந்திருக்கிறது. “ஞ்” என்ற மெய்யொலி எந்தெந்த உயிரெழுத்தோடு இணைந்து ஒரு தமிழ்ச்சொல்லைத் தொடங்கலாம் என்று சொல்லும் தொல்காப்பிய நூற்பாவுக்கு உள்ள உரையில் “ஞழியிற்று” என்ற வழக்கைக் குறித்து அது “அழிவழக்கு” அல்லது “இழிவழக்கு” என்ற குறிப்பு உண்டு. 

ஆக, இங்கே கருத்தில் கொள்ளவேண்டியது: செயல் திறமை, கொடை, வேள்வி, நோன்பு, போர்த்திறமை, கல்வி, செல்வம், எளிமை, நாற்றம், தோற்றம், மொழிப் பயன்பாடு போன்ற பண்புகளும் செயல்களும் ஒருவருக்கு “உயர்வு” அல்லது “இழிவு” என்ற நிலையைக் கொடுத்திருக்கின்றன.


உயர்பிறப்பு, இழிபிறப்பு
—————————— 
ஓர் உயிர் பிறக்கும்போதே அது ‘உயர்பிறப்பு’ அல்லது ‘இழிபிறப்பு’ என்று பச்சை குத்தின குறியீட்டைப் பெறுமா? அல்லது பிறந்தபின் வாழும் வகை முறையால் ‘உயர்பிறவி’ என்றோ ‘இழிபிறவி’ என்றோ குறிக்கப்படுமா? என்பது என் கேள்வி. இதுக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை; என்றாலும், கிடைத்த சங்க/சங்க மருவிய சான்றுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். முழுவதுமாக ஆய்ந்து சொல்ல இப்போதைக்கு இயலவில்லை. அதனால், சில அடிப்படைச் சான்றுகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். 


1. பிறப்புகளில் சிறப்பு/இழிபு என்பதுக்குச் செவ்வேள் பற்றிய பரிபாடல் 5:19-21 ஒரு கருத்தைத் தருகிறது.

“சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும்
ஏனோர் நின் வலத்தினதுவே”

பரிமேலழகர் உரை: “நின்னை ஒழிந்தார் நல்வினையால் சிறப்புடைய உயர்பிறப்பினர் ஆதலும் தீவினையால் இழிபிறப்பினர் ஆதலும் ஆகிய இது நின் ஆணைக்கண்ணது.”

ஆக, ‘நல்வினை, தீவினை என்பவை உயர்பிறப்புக்கும் இழிபிறப்புக்கும் காரணம்’ என்ற கருத்து நிலவியதுக்கு இந்தப் பரிபாடல் வரிகள் சான்று. 

இங்கே சொல்லாட்சியைப் பாருங்கள்: ‘உயர்பு ஆகலும்,’ ‘இழிபு ஆகலும்.’ 

எந்த வகையான சமநிலைக் கோட்பாட்டிலிருந்து இந்த ‘உயர்பு’ நிலையும் ‘இழிபு’ நிலையும் ஆயின/உருவாயின? தெரிந்தால் தெளிவிக்கவும்.


2. சரி. ‘இழிபிறப்பாளன்’ என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் அதுக்கு எதிராக ‘உயர்பிறப்பாளன்’ ஒருவனும் இருந்திருக்க வேண்டுமே. 

இதோ, அவன் சிலப்பதிகாரத்தில் (15:48) இருக்கிறான். கோவலன் தொடர்பால் மாதவிக்கு மணிமேகலை பிறந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டுக் கோவலன் செய்த செம்பொன் தானத்தைப் பெற்றுக்கொள்ள வந்த ஒரு முதிய மறையோன் “உயர்பிறப்பாளன்” என்று குறிக்கப்படுகிறான். 


3. ஒழுக்கம் இல்லாதவர்களின் பிறப்பு ‘இழிந்த பிறப்பு’ ஆகிவிடும்.

குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும்

குறள் 134:
மறப்பினும் ஓத்து-க் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

ஆக, “உயர்ந்தோன்” என்பவன் ‘பார்ப்பான்/மறையோன்’ என்றால், இதோ, இந்தக் குறட்பாக்கள் அவனை இழிந்த பிறப்பினனாகச் செய்யும் நிலைகளைச் சுட்டுகின்றன. 

4. சிலப்பதிகாரத்தில் (10:241), கண்ணகியையும் கோவலனையும் பார்த்துக் கேலி செய்த வம்பர்கள் இருவரைக் கவுந்தியடிகள் சபிக்கிறார், கேலி செய்த வம்பர்கள் “முள்ளுடைக் காட்டில் முதுநரியாக”ப் போகக் கடவது என்று. அதைக் கேட்டும் கண்டும் நடுங்கிய கண்ணகி-கோவலருக்குக் கவுந்தியடிகள் சொல்லுவது: “அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர்

பாருங்கள், பிறந்துவிட்ட ஒரு பிறப்பில் சிலருடைய நிலைமை எப்படி மாறக்கூடும் என்று. 


5. கலித்தொகையில், ஒரு குறளின் பிறப்பு ஒரு கூனின் பிறப்பைவிட இழிந்ததோ என்ற கேள்வி எழுகிறது (கலித்தொகை 94:27-28). 

இந்தக் கலித்தொகை வரிகள் ஒருவரின் உடல் உறுப்பின் குறை ‘இழிந்த பிறப்பு’ எனக் கருதப்பட்டதுக்கு நல்ல சான்று.


இங்கே கருத்தில் கொள்ளவேண்டியது: ஒரு குறிப்பிட்ட நிலையிலிருந்து அதற்குக் கீழான நிலையை அடைந்தது ‘இழி’ந்ததாகக் கருதப்பட்டது என்பது தெளிவு. கலித்தொகையில் காணும் குறளனைவிடக் கூனியின் பிறப்பு இழிந்ததோ என்ற கேள்வியை நினைத்துப் பார்க்கவேண்டும். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகளின் சாபத்தால் இரண்டு வம்பர்கள் நரிகளாக மாறினது ‘இழிந்த பிறப்பாக’க் குறிக்கப்பட்டது. இப்படி எந்தெந்தச்  செயல்கள் ஒருவனை 'இழிந்த பிறப்பினன்' என்று கருதச் செய்தன என்று பார்ப்பது நல்லது. இயன்றவரை பார்ப்போம்.

(தொடரும்)



4 comments:

  1. தொடர் சிறப்பாக இருக்கிறது. அடுத்த கட்டுரைக்குக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல சொல்லுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி!

      எழுத எழுதத்தான் இன்னும் சொல்ல வேண்டியது எவ்வளவு இருக்கிறது என்று தெரியத் தொடங்குகிறது! "அறிதொறும் அறியாமை கண்டற்றால்." நிறைய நேரம் தேவைப்படுகிறது, ஆனாலும் சொல்லவேண்டியதைச் சொல்லித்தானே ஆகவேண்டும்! இயன்றதைச் செய்கிறேன். இன்னும் இரண்டு கட்டுரைகளில் தொடரை முடிக்க விருப்பம்; பார்ப்போம்.

      Delete
  2. மிகச்சிறப்பாகவும் சிந்திக்கத்தூண்டுவதாகவும் எழுதியிருக்கின்றீர்கள்!

    உடல் குறையிருந்தால், அதனை இழி (இழி=குறை) என்னும் நேரடிப்பொருளில் ஆண்டிருக்கலாம் அல்லவா? இழிதல் என்றால் நீங்குதல் என்று பொருள் கொள்ளலாமே. (அதாவது ஏற்றத்தாழ்வு என்று இல்லாமல், உறுப்புக் குலைந்ததை இழிந்ததைக் குறிக்கும்படியாக இருந்திருக்குமோ? என்று எண்ணத்தோன்றுகின்றது. ஆனால் தாழ்ந்த நிலையாகவும் கொன்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நெடுநாட்களுக்குப்பின் வருகை தந்து படித்துப் பார்த்து நல்லது சொல்லி ஊக்குவித்தமைக்கு மிகவும் நன்றி, செல்வா!

      ஆம், 'இழிதல்' என்றால் 'நீங்குதல்' என்பது சங்கப்பாடல்களில் யான் காணும் அடைப்படைப் பொருள். ஒரு பொருள் தான் சேர்ந்திருந்த/ஒட்டியிருந்த இடத்தை விட்டு நீங்குதல் என்ற பொருள் பொருத்தமே.

      ஆனால், உடல் உறுப்பு குலைந்ததை 'இழிதல்' என்ற பொருளில் எடுத்துக்கொள்ளும்படிச் சங்கப் பாடல் சான்று எனக்குக் கிடைக்கவில்லை.

      ஏதாவது ஓர் உறுப்பு இல்லாமல் பிறந்த உடலை ‘இழிபிறப்பு’ என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் அங்கே ‘நீங்குதல்’ என்ற பொருள் சரிப்பட்டு வாராது. ‘தாயின் வயிற்றில் உண்டான நிலையில் உறுப்பு வளர்ந்தும் பிறக்கும்போது நீங்கிய நிலை’ == ‘இழிபிறப்பு’ என்று வந்துவிடும்; அதைத் தவிர்க்கவேண்டும்.

      பிறந்தபின் ஏதாவது ஒரு குற்றத்துக்காக (களவு, கொலை, கொள்ளை, … போல) ஏதாவது ஓர் உடல் உறுப்பு நீக்கப்பட்ட நிலையை ‘இழிந்த நிலை’ என்று சொல்லலாம், ஆனால் ‘இழிந்த பிறப்பு’ என்று சொல்லத் தோன்றவில்லை.

      ‘இழி’ என்ற சொல்லின் பொருளையும் ‘தாழ்’ என்ற சொல்லின் பொருளையும் ஒப்பிட்டு நோக்குவதும் இன்றியமையாதது.

      ஒரு பொருள் தான் ஒட்டியிருக்கும் ஒரு நிலையிலிருந்து அறவே நீங்காமல் (without the point of contact with the source being lost) ஒரு/சில/பல படிகள் கீழிறங்குவது ‘தாழ்.’ ஆலமரத்தின் விழுதுகளை நினைத்துப் பார்க்கலாம்.

      அடடா, எனக்கு வரைபடத் திறமை இல்லையே. தமிழ் வேர்ச்சொற்களின் பொருள்களை வரைபடம் மூலம் நன்றாக விளக்கலாம் என்று நம்புகிறேன்.





      Delete