Saturday, January 18, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 2

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 2
---------------------------------------------------------
சென்ற பதிவில் “சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்:
 (http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html). 

சுருக்கமாகச் சொன்னால், உலகத்து உயிர்களை நீர்வாழ்சாதி, பறவைச்சாதி, மக்கள்சாதி என்று பிரிக்கலாமேயன்றி இந்த உயிர்ச்சாதி ஒவ்வொன்றுக்குள்ளும் ‘சாதிப் பிரிவினை’யைச் சங்கப்பாடல்கள் காட்டுவதாகச் சொல்லுவது கருத்துப்பிழை என்று தெரிந்தது.

பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மக்களுள் பிரிவுகள் பெயர் வகையில் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கின்றன, “சாதி” வகையில் இல்லவே இல்லை


தமிழில் பெயர்ச்சொற்கள்
———————————
தமிழில் அடிச்சொல் (stem) அமைப்பு மிகவும் எளிமையானது; மிஞ்சி மிஞ்சிப் போனால் 3 தமிழ் எழுத்துக் கொண்டது. இங்கே ‘எழுத்து’ என்பது உயிரெழுத்து (‘அ’ போன்றவை), ஒற்றெழுத்து (‘ம்’ போன்றவை), உயிர்மெய்யெழுத்து (‘ளா’ போன்றவை) ஆகியவற்றைக் குறிக்கும். எடுத்துக்காட்டுச் சொற்களை மிக அழகாக யாப்பருங்கலக் காரிகை தருகிறது: ஆழி, வெள், வேல், வெறி, சுறா, நிறம், விளாம். 

சொல் உருவாக்கத்தின்போது, மேலே குறிப்பிட்ட அமைப்பில் உள்ள அடிச் சொற்களைத் தொடந்து சாரியை, வேற்றுமை உருபு, பெயர் விகுதி; காலம் குறிக்கும் இடைநிலை, வினை விகுதிஇன்ன பிற வந்து ஒரு சொல்லை உருவாக்கும். அப்போது குற்றியலுகரத்தில் முடியும் அடிச்சொற்களின் இறுதியில் உள்ள உகரம் மாய்ந்து கெடும். (விளக்கம் தேவையானால் கேட்கவும்!). 

இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது: எந்தச் சொல்லாவது இரண்டு அடிச்சொற்களைக் கொண்டு அமையுமானால் அது முதல் கட்ட/நிலையைக் (primary formation) கடந்த இரண்டாம் கட்ட/நிலை உருவாக்கம் (secondary formation) என்று கொள்ளலாம். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு “இழிபிறப்பாளன்” என்ற சொல். ‘இழி’ என்ற அடிச்சொல்லுக்கு ஒரு பொருள்; ‘பிறப்பு’ என்ற அடிச்சொல்லுக்கு ஒரு பொருள். ‘இழி’ + ‘பிறப்பு’ என்ற இரண்டு அடிச்சொற்கள் சேர்ந்து ‘இழிபிறப்பு’ என்ற புதிய அடி (stem) உருவாகிறது. இந்த வகைக் கூட்டு உருவாக்கத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம்; அவற்றில் ஒன்றாகப் பிறமொழிக் கருத்தைத் தமிழில் சொல்ல முயன்ற முயற்சியாகவும் இருக்கலாமோ?

சொல் உருவாக்கத்தின் அடிப்படையில் சங்கப்பாடல்களில் வழங்கும் பெயர்ச்சொற்களைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. 

சங்கப்பாடல்களில் காணும் பெயர்ச்சொற்கள்
—————————————————------
சங்கப்பாடல்களில் காணும் பெயர்ச்சொற்கள் மிகவும் எளிமையான முறையில் உருவானவை. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அடிப்படையில் மக்களின் பெயர்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டு: வேலன் (‘வேலை உடையவன்’; பொருட்பெயர்), குடவர் (‘குட/மேற்குத் திசையில் வாழ்கிறவர்’; இடப்பெயர்), பகலோன் (‘பகல் நேரத்துக்குரியவன்’; காலப்பெயர்), முடவன் (‘முடங்கிய உறுப்பு உடையவன்’; சினைப்பெயர்), இனியன் (‘இனிய பண்பு உடையவன்’; பண்புப்பெயர்/குணப்பெயர்), தச்சன் (‘தச்சுத் தொழில் செய்பவன்’; தொழில் அடிப்படை)

துடியன் என்பவன் துடிப்பறையை இயக்கியவன்; பாணன் என்பவன் பாண் தொழிலைச் செய்தவன்; பறையன் என்பவன் பறையை முழக்கியவன்; கடம்பன் என்பவன் கடம்படுதலைச் (தெய்வத்துக்கோ மனிதர்களுக்கோ செய்யவேண்டிய கடமையைச்) செய்தவன்; கூத்தர் என்பவர் கூத்தாடும் தொழிலைச் செய்தவர்; அகவுநர் என்பவர் அகவுதல் என்னும் தொழிலைச் செய்தவர்; விறலி என்பவள் உள்ளத்து உணர்வுகள் உடலில் வெளிப்படும் வகையில் ஆடியவள்; உழவர் என்பவர் உழவுத்தொழிலைச் செய்தவர்; உமணர் என்பவர் உப்பு விற்றவர்; இப்படி நூற்றுக்கணக்கான பெயர்களுக்கு விளக்கம் காணலாம்.  

ஆனால் சிலருடைய மேற்கத்தியப் பார்வை இந்தப் பெயர்களால் குறிக்கப்படும் சிலரை (துடியன், கிணைஞன், பாணன், கடம்பன், ) ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடும் அடைச்சொற்களாகவோ விளக்கச்சொற்களாகவோ (epithet) “புலையன்” என்ற சொல்லையும் “இழிபிறப்பாளன்” என்ற சொல்லையும் சுட்டுவது சரியா என்று நினைத்துப் பார்ப்பது நல்லது. 

இந்தக் கோணத்தில் ‘புலையன்,’ ‘புலைத்தி’ என்ற சொற்களின் வழக்காற்றைப் பார்ப்போம்.

புலையனும் புலைத்தியும்  
————————————
‘புலையன்,’ ‘புலைத்தி’ என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் வழங்குகின்றன. இவை போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் — துடியன், பாணன், பறையன், கடம்பன், விறலி, பாடினி, அகவர், அறைநர், அரிநர், இடையர், ஏழையர், ஊமன், கூவுநர், பொருநர், கோடியர், — சங்க இலக்கியத்தில் உண்டு.  

சங்கப் பாடல்களில் இந்தச் சொற்களின் வழக்காற்றைப் பற்றிக் கல்வியுலகில் ஒரு சிலர் பரப்பிய கருத்துகள் தமிழகத்து மக்களின் ஒருமைக்கு வழிகோலுவனவாக இல்லை; மாறாக, ‘சாதி,’ ‘தீட்டு,’ ‘தீண்டாமை’ என்ற கருத்துப் பேய்களுக்குத் தீனியாகவே அமைகின்றன. அதுவும், இணையம் என்ற வசதி பேயாக மாறியபின் ஒருவரை ஒருவர் இழித்து எழுதவும் அந்தக் கருத்துகள் உதவுகின்றன. அதுதான் மிகப் பெரிய தவறு, கொடுமை

இந்தக் காலத்தில் தமிழ் ஆய்வுக்குள் நுழைய விரும்பும் பலரும், அவர்கள் மரபுவழித் தமிழ் படித்தவர்களோ இல்லையோ, முதலில் அணுகுவது ஓர் அகராதியை. நாங்கள் படித்த பழைய காலத்தில் வகுப்பில் ஆசியர்கள் சொன்னதும் அவர்கள் கற்பித்த இலக்கிய இலக்கணங்களுமே எங்களுக்குக் கலங்கரை விளக்கம்; அகராதியைத் தேடிப்போனதில்லை. அகராதியெல்லாம் தமிழ் தெரியாதவர்களுக்கு என்று இருந்த காலம் அது. 

நிற்க. 

இந்த இணைய (internet) காலத்தில், ‘புலையன்’ என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கும் இணய ஆய்வாளர் (internet researchers) பலரும் முதலில் புரட்டுவது சில அகராதிகளையே. அதில் தவறில்லை. ஆனால், அந்த அகராதிகள் எடுத்த எடுப்பிலேயே ‘புலையன் என்பவன் கீழ்மகன்’ என்று சொன்னதை வைத்துக்கொண்டு மேற்செலுத்தும் ஆய்வுகளை எவ்வளவிற்கு நம்ப முடியும்? நீங்களே நினைத்துப் பாருங்கள். அதோடு, இக்கால நிகழ்வின் வழியே பார்த்துப் பழங்கால இலக்கியங்களை அலசி ஆய்வு முடிவுகளை உருவாக்குவது நேரியதா? 

**********
Winslow என்ற மேற்கத்தியரின் அகராதி தருவது:

புலை, [ pulai, ] s. Flesh, or fish, ஊன். 2. Stink, stench, நாற்றம். 3. Vice, evil, baseness, தீமை, as புல். 4. A lie, பொய். புலையுங்கொலையுங்களவுந்தவிர். Avoid flesh (or a lie) murder, and theft. (Avv.)
புலைச்சி--புலைமகள், s. A low caste woman. 2. See புலையன்.
புலைச்சேரி--புலைப்பாடி, s. A low caste village.
புலைஞர், s. [pl.] The base, as புலையர். (சது.)
புலைத்தனம், s. Barbarity, baseness, vileness, கொடுமை.
புலைத்தொழில், s. Vicious habits or practices, கொடுஞ்செய்கை.
புலைமகன்--புலையன், s. A very low caste man.
புலைமை, s. A vicious practice, as புலை த்தனம். 2. A vile or low condition, கீழ்மை.
புலையன், s. [pl. புலையர், fem. புலைச்சி.] A tribe of aborigines, inhabiting some mountains, as the Pulneys, ஓர்சாதியான். 2. A base or low caste person, கீழ்மகன்.
புலையாட, inf. To lead a vicious life.
புலையாட்டம்--புலையாட்டு, v. noun. Transitoriness, illusiveness, a false appearance. (Colloq.)

இங்கே ஓரிடத்திலாவது பழைய இலக்கியச் சான்று இருக்கா? நீங்களே சொல்லுங்கள்.

********** 
(Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary. 4th ed., rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. House, 1972.)
Fabricious என்ற மேற்கத்தியரின் அகராதி தருவது: 
புலை [ pulai ] , s. same as புலால்; 2. baseness, wickedness, evil, தீமை; 3. a lie, பொய்.
புலையுங்கொலையுங் களவுந்தீர், avoid flesh (or a lie), murder and theft.
புலைஞர், same as புலையர்.
புலையன், (fem. புலைச்சி, pl. புலையர்) a man of a certain low mountain tribe; 2. a base or low-caste person.
புலையாட, to lead a vicious life.
புலையாட்டம், -யாட்டு (coll.) illusiveness, a false appearance.

புலோமசித்து [ pulōmacittu ] {*}, s. Indra, the conqueror of the Rakshasa புலோமன்.
புலோமசை [ pulōmacai ] {*}, s. Indrani, (the wife of Indra) as daughter of புலோமன்.
புலோமன் [ pulōmaṉ ] , s. the father of Indrani; 2. a Rakshasa.
எச்சிலார், low-caste people, இழிஞர்
(Why did he understand/interpret the word எச்சிலார் as low-caste people, இழிஞர்?!!!).

[இதே அகரமுதலி ஆக்கிய பெருந்தகை Fabricious குறித்தது: கௌண்டர் (p. 321) [ kauṇṭar ] , (Kanarese) கவுண்டர், s. flesh-eaters, people of the lowest order, புலையர்; 2. a low caste named so, சண்டாளர்; 3. an honorific title of certain tribes. சௌனிகன் (p. 461) [ cauṉikaṉ ] {*}, s. a dealer in flesh; a meat seller; 2. one of low cast, புலைஞன்.] 

இங்கே ஓரிடத்திலாவது பழைய இலக்கியச் சான்று இருக்கா? நீங்களே சொல்லுங்கள்.

********** 
“புலை” என்ற சொல்லுக்குப் பொருள் தரும் சென்னைத் தமிழ் அகரமுதலி (Madras Tamil Lexicon) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்கப் பாடல்களிலிருந்து ஒரு மேற்கோளும் காட்டவில்லை என்பது நோக்கற்குரியது

புலை pulai
, n. prob. புல¹-. [K. hole.] 1. Baseness; இழிவு. புலையாம் பிறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க. 16). 2. Uncleanness; அசுத்தம். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 3. Defilement; தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11). 4. Vice, evil way; தீயநெறி. புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத் தின் (கம்பரா. இராவணன்வதை. 204). 5. Lie; பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்து மற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6). 6. Adultery; வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவ னென (மணி. 13, 91). 7. Animal food; ஊன். புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13). 8. Outcaste; கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக். 6). 9. Stench; தீ நாற்றம். (W.) 

************** 
இந்தப் பொருள்களைப் பார்ப்போம்.

1. Baseness: இழிவு. புலையாம் பிறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க. 16). 
இது சங்கப் பாடல் சான்றில்லை. எனவே, இந்தப் பொருளை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பாடல்கள் காட்டும் பண்பாட்டை ஆராய்வது நேரியதில்லை

2. Uncleanness; அசுத்தம். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 
இந்தப் பொருள் பரவாயில்லை. வேள்விச்சாலையில் பசுவைக் கொன்றதால் வடிந்த குருதியும் பிரித்தெடுத்த ஊனும் இருக்கும். ஆனால், அந்த வேள்விச்சாலை அந்தணர்களால் உண்டாக்கப் பெறுவது, புலையனால் இல்லை, அதைக் கட்டாயமாக நினைத்துப் பார்க்கவும். அல்லது புலையன் == அந்தணன் என்ற பொருளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

3. Defilement; தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11).  
இந்தப் பொருளுக்கு அடிப்படை என்ன என்று தெரியவில்லை
புலை செய்து” என்றால் தீட்டு’ செய்தலா? ‘தீட்டு’ என்பதை எப்படிச் ‘செய்ய’ முடியும்? ஆகவே, ‘புலை’ என்பதுக்குத் ‘தீட்டு’ என்பது சரியான பொருளில்லை.

4. Vice, evil way; தீயநெறி. புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் (கம்பரா. இராவணன்வதை. 204). 
இது சங்கப்பாடலில் இல்லை. பிறன் மனைவியைக் கவர்ந்த இராவணனின் செயல் குறிக்கப்பட்டதால் இங்கே ‘புலை’ என்பதுக்குப் ‘பரத்தமை’ என்ற பொருள் பொருந்தும் என்று தோன்றுகிறது.

5. Lie; பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்து மற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6).  
இது சங்கப்பாடலில் இல்லை. பவுத்த நெறியில் பஞ்ச சீலம்’ என்ற கோட்பாடு உண்டு. அதன்படி, ‘கள், களவு, காமம், கொலை, பொய்’ ஆகிய செயல்கள் ஐந்து வகைக் குற்றங்கள் என்று கொள்ளப்பட்டன. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்த எடுத்துக்காட்டில் உள்ள ‘புலை’ என்ற சொல்லுக்குப் ‘பொய்’ என்ற பொருள் ஏற்புடைத்தாகத் தெரிகிறது. சங்கப் பாடல்களில் களவு நட்பில் ஈடுபட்ட தலைவனும் பொய் சொல்லுகிறான் (குறுந்தொகை 25; அகநானூறு 256); அப்படியானால் அவனும் புலையன், இல்லையா?

6. Adultery; வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவ னென (மணி. 13, 91).  
இந்தப் பொருள் சரியாகப் படுகிறது. ஆனால், இங்கே ‘புலைமகன்’ என்று இகழப்படும் ஆபுத்திரனின் தாய் சாலியின் செயலே ‘புலை’ என்ற குறிப்பில் அடக்கம். சாலி தன் அந்தணக் கணவனை விடுத்து வேறொருவன் மூலம் பெற்ற மகனே ஆபுத்திரன். எனவே, சாலியின் செயலே இங்கே குறிப்பு. மணிமேகலைக் காப்பியத்தில் விளக்கம் காணலாம்.

7. Animal food; ஊன். புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13). 
இது ‘இன்னா நாற்பது’ என்ற இலக்கியத்தில் உள்ள 12-ஆம் பாடலில் ஒரு வரி. முழுப்பாடலும் இங்கே:
“தலை தண்டம் ஆகச் சுரம் போதல் இன்னா;
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா
முலை இல்லாள் பெண்மை விழைவு”
புலையுள்ளி < புலை + உள்ளி.’ “உள்ளி” என்றால் ‘நினைத்து’ என்பது பொருள். 
யாராவது “ஊனையே” நினைத்து வாழ்வார்களா? ‘ஊன் உண்ண வேண்டும்’ என்பது அவர்களுக்குக் கனவா? சரி, அப்படியே எடுத்துக்கொண்டாலும் பாரியின் பறம்பு மலையில் வெட்டப்பட்ட ஆடுகளின் கறியையும் வார்த்த கள்ளையும் சுவைத்த அந்தணர் கபிலர் என்பவரும் ஒரு புலையன், இல்லயா? மறவர்களும் கொழுத்த ஆவின் இறைச்சியைத் தின்றிருக்கிறார்கள் (அகநானூறு 129); மழவர்களும் கொழுத்த ஆவின் குருதியைத் தூவிச் சமைத்து உண்டிருக்கிறார்கள் (அகநானூறு 309). ஆகவே, இவர்களும் புலையர்களே, இல்லையா?

8. Outcaste; கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக். 6). 
எடுத்த எடுப்பிலேயே “புலை” என்பதுக்கு “Outcaste; கீழ்மகன்” என்று பொருள் சொன்னதைப் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அதுக்குச் சான்றாகச் சொன்ன ஆசாரக்கோவைப் பாடலையும் நாம் பார்க்க வேண்டும். 

இந்த எச்சில் என்ற சொல் அகரமுதலிகள் கையில் படாத பாடு பட்டிருக்கிறது! 
மனிதரின் வாயில் ஊறும் உமிழ்நீரிலிருந்து சிவனும் உமையும் புணர்ந்து உண்டாகிய கருவின் சிதைவுகள் வரை “எச்சில்” என்பதுக்குப் பொருள் இருக்கு!!!

8a. தமிழ் ஆர்வலர்கள் பரிபாடல் (#6) ஒன்றைக் கட்டாயமாகப் படித்துப் பார்க்கவேண்டும். முருகனுக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே இழையும் வரலாறு சொல்லும் அருமையான பாடல் இது. இங்கே கார்த்திகேயன் என்பவன் உமை-சிவன் இருவரும் காலமல்லாத காலத்தில் கலந்த புணர்ச்சியில் உருவான “எச்சில்” (5:42). இந்தக் குறிப்பில் தவறில்லை. ஆனால் இந்த “எச்சில்” என்ற சொல் பாவப்பட்ட “புலையன்” என்ற பிறவியை மட்டும் குறிப்பதாக எடுத்துகொண்டால் அந்தக் கார்த்திகேயனும் புலையனே, இல்லையா???

8b. ஆசாரக்கோவையில் பல பாடல்களில் (5-7) “எச்சில்” என்பது பற்றிய குறிப்பு இருக்கிறது. 

8bi. எச்சிலோடு தீண்டக்கூடாதவர்கள்: பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை

8bii. எச்சிலோடு பார்க்கக்கூடாதவை: புலை, திங்கள், ஞாயிறு, நாய், வீழ்மீன் 

8biii. எச்சிலில் பல வகை உண்டாம். அதிலே, நான்கு வகை எச்சிலை மட்டும் சொல்கிறது ஆசாரக்கோவை. அவை: இயக்கம் இரண்டு (மலம் மூத்திரம் கழித்தல்), இணை விழைச்சு (sexual intercourse), வாயில் விழைச்சு (oral sex). 

இதையெல்லாம் சொல்லிய ஆசாரக்கோவை (#8) ஓர் அறிவுரையும் தருகிறது: மேதைகளாக உருவாகிறவர்கள் இந்த நால்வகை எச்சிலையும் கடைப்பிடித்து, ஒன்றினையும் ஓத மாட்டார்களாம், ஒன்றினையும் பற்றிச் சொல்லமாட்டார்களாம். அதாவது இந்த மாதிரி “நால்வகை எச்சிலும் உண்டான இடத்து ஒன்றும் படித்தல் ஆகாது, வாயால் ஒன்றையும் சொல்லல் ஆகாது, தூங்கல் ஆகாது.” 

சரிதான்! ‘எச்சிலார்’ என்பவர் ஏற்கனவே எச்சில் பட்டவர்கள். ஆனால், அவர்கள் தம் எச்சிலோடு ‘புலை’யைப் பார்க்கக் கூடாது என்ற விதியின் அருமை பெருமை என்ன என்று எனக்குப் புரியவில்லையே!

9.  Stench; தீ நாற்றம்
இந்தப் பொருளுக்கு அடிப்படை என்ன என்று விளங்கவில்லை. ‘புலை’ என்பது ‘தீநாற்றம் (stench)’ என்றால் அதை ஒரு குறிப்பிட்ட மக்களோடு மட்டும் பொருத்திச் சொல்வது பொருத்தமா??? பிற மக்கள் தீநாற்றமே வெளிப்படுத்தாதவர்களா? உலக உயிர்கள் அனைத்துமே (மக்கள், விலங்கு, பயிர்) தீநாற்றம் வெளிப்படுத்தும் என்பதை அறியாதவருடன் உரையாடிப் பயனில்லை. அந்த வகையில் எல்லாருமே/எல்லாமுமே ‘புலையர்’களே. இந்தக் காரணத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களைப் பற்றி மட்டும் ‘புலையர்’ என்று சொல்வது அறிவுப் பிறழ்ச்சி, இல்லையா?

+++++++++++++++++++

சங்க இலக்கிய வழக்காற்றைப் பார்க்கும்போது இலக்கிய வழியில் தோன்றும் சில விளக்கங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

(தொடரும்) 

2 comments:

  1. அம்மா வணக்கம் ! அருமையாக எழுதிக்கொண்டு வருகின்றீர்கள் :)
    " மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
    கீழோர்க் காகிய காலமு உண்டே " என்பது எதை உணர்த்துகின்றது !
    தொல்காப்பியர் காலத்தில் திருமால், சிவன், பிரம்மன் இவர்களின் புராணங்கள் புழக்கத்தில் உண்டா ? அதிலிருந்து இந்தச் சூத்திரம் பிறந்து இருக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்! ஊக்கம் தரும் நல்ல சொற்களுக்கு நன்றி!

      "மேலோர்," "கீழோர்" என்ற சொற்களின் பண்டை வழக்கு எனக்குக் கொஞ்சம் குழப்பம் தரும். 'எல்லா நிலத்துக்கும் பொதுவானவர் மேலோர், ஒரு நிலம் பற்றி வாழ்பவர் கீழோர்' என்ற கருத்தில் இளம்பூரணர் உரை ஒன்று இருக்கிறது. அதனால், 'மேல்,' 'கீழ்' என்ற சொற்கள் இடம் (location) குறிப்பதாக ஒரு காலத்தில் வழங்கியிருக்கலாம் என்பது என் கருத்து. மேலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

      தொல்காப்பியத்தில் புராணக்கதைகள் இல்லை. "மாயோன் மேஎய காடுறை உலகமும்" என்று தொடங்கும் நூற்பாவும் புராணம் சொல்லவில்லை. அதனால் நீங்கள் குறிப்பிடும் நூற்பாவுக்குப் புராணங்களே மூலமாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

      Delete