Wednesday, January 29, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 3

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 3

--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் “சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

இந்தப் பதிவில் ‘புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்ப்போம். 

கொஞ்சம் நீளமான பதிவு. படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை. 

++++++++++++++++

‘புலையன்’
———————— 
‘புலையன்’ என்பவன் யார்?

1. புலையன் என்பவன் போரில் ஈடுபட்டிருக்கிறான்; துடி, தண்ணுமை என்ற பறை/முழவுகளை இயக்கியிருக்கிறான் (நற்றிணை 77:1-2, நற்றிணை 347:5-6; புறநானூறு 287:1)

2. புலையன் என்பவன் ஈமச் சடங்கில் ஈடுபட்டிருக்கிறான் (புறநானூறு 360).

3. புலையன் என்பவன் பாணன் என்பவனுடன் இணைந்து திரிந்திருக்கிறான் (கலித்தொகை 85:22).  

4. புலையன் என்பவன் தலைவனின் பரத்தமைக்கு உதவியிருக்கிறான் (கலித்தொகை 68:19; 85:22-25). 

‘புலைத்தி’
————————
'புலைத்தி' என்பவள் யார்?

1. 'புலைத்தி' என்பவள் ஊரவர் ஆடையைத் துவைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறாள் (அகநானூறு 34:11; அகநானூறு 387:6-8; கலித்தொகை 72:13-14; நற்றிண 90; புறநானூறு 311).

2. 'புலைத்தி' என்பவள் தலைவனுக்கும் பரத்தைக்கும் இடையே ‘தூது’ ஆக இருந்திருக்கிறாள் (கலித்தொகை 72:13-14).

3. 'புலைத்தி' என்பவள் பூக்கூடை செய்து விற்றிருக்கிறாள் (கலித்தொகை 117:7-11).

4. 'புலைத்தி' என்பவளுக்கு ‘முருகு’ தொடர்பாகப் பங்கு இருந்திருக்கிறது (புறநானூறு 259). 

++++++++++++++++

சற்றே பொறுமையோடு ஆழ்ந்து நினைத்துப் பார்க்கவேண்டிய கருத்துகள்
—————————————————————— 

புலையன் என்பவனைப் பற்றி … 
————————————
1. துடியை/தண்ணுமையை இயக்கிய எல்லாரும் ‘புலையரா’? இல்லவே இல்லை! 

1a. துடியை இயக்கியவர்களைப் பற்றிச் சங்கப்பாடல் சான்று: 
  • மழவர், மறவர் (அகநானூறு 35:4-6; அகநானூறு 89:10-14; கலித்தொகை 15)
  • கொடு வில் எயினர் (அகநானூறு 79:13-14)
  • கொடு வில் ஆடவர் (அகநானூறு 159:5-10)
  • ஆ கோள் ஆடவர் (அகநானூறு 372:10-12)
  • வயலில் இளநெல்லைச் சுற்றிப் புனல் பரந்தது என, துடி ஒலித்தல் (பரிபாடல் 7:27-28) 
  • துடிச்சீர் (பரிபாடல் 21:60, 64)
  • நெடு நிரை தழீஇய மீளியாளர், மறவர் (புறநானூறு 260:13-15)
  • உவலைக் கண்ணித் துடியன்; ஆநிரை கவர்தல் குறிப்பு (புறநானூறு 269:6 ). 

1b. தண்ணுமை முழக்கியவர்களைப் பற்றிச் சங்கப்பாடல் சான்று: 
  • வெண்ணெல் அரிநர் (அகநானூறு 40:13-14; அகநானூறு 204:10; நற்றிணை 350:1; புறநானூறு 348:1; மலைபடுகடாம்:471)
  • வேட்டக் கள்வர் சேக்கோளுக்காகத் தண்ணுமை அறைகிறார்கள் (அகநானூறு 63:17-18)
  • கல் கெழு குறும்பில் மறவர் தண்ணுமையின் பாணி எழுப்புகிறார்கள் (அகநானூறு 87:7-8)
  • பாணன் (அகநானூறு 106:12-13; நற்றிணை 310:9-10)
  • சிறு குடி மறவர் சேக்கோள் தண்ணுமை (அகநானூறு 297:16)
  • குறுகிய நீர்த்துறையில் செல்லுகிறவர்கள் தண்ணுமை முழக்குகிறார்கள். அவர்களின் பின்னே இயவரின் ஆம்பல் தீங்குழலொலி (ஐங்குறுநூறு 215:3)
  • ஏறுகோள் சாற்றுவார் தண்ணுமை முழக்கும் குறிப்பு (கலித்தொகை 102:35)
  • வேல் ஏந்தியவர்கள் காவல் காடுகளில் (மிளை) வந்து தண்ணுமை முழக்குகிறார்கள் (குறுந்தொகை 390:5), 
  • ஒரு நற்றிணைப் பாடலில் (130:2) தண்ணுமை முழக்கியவர் யார் என்ற தெளிவில்லை. ஆனால், ஊரின் நடுவே தண்ணுமை முழக்கம் நிறைந்து ஒலிக்கவும் அந்த மூதூரின் மக்கள் செந்நீரில் செய்யும் பொதுவினைக்காக வந்து சேருகிறார்கள் என்று தெரிகிறது.
  • வழிப்போக்கர்களை அலைக்கும் ஆடவர்கள் தண்ணுமை முழக்குகிறார்கள் (நற்றிணை 298:3).
  • கைவல் இளையர் தண்ணுமை முழக்குகிறார்கள் (பதிற்றுப்பத்து 51:33-34).
  • போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு (பதிற்றுப்பத்து 84:15)
  • கழனி உழவர் (பதிற்றுப்பத்து 90:41)
  • வையைக் கரையில் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி எல்லாம் ஒத்து இசைக்கின்றன (பரிபாடல் 12:41).
  • தண்ணுமை பொதுவில் தூங்குகிறது! அப்படி என்றால் யார் வேண்டுமென்றாலும் எடுத்து அடிக்கலாம்! மள்ளர் என்ற குறிப்பும் இருக்கு (புறநானூறு 89:7).
  • மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரு மறவர் … (புறநானூறு 270:8)
  • பாசறை-ப் பூக்கோள் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் (புறநானூறு 289:9-10)
    • (பாணனும் இழிசினனும் ஒரே பிறவி/ஆள் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது, இல்லையா.)
  • நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை (புறநானூறு 293:1-2) 
    • (அடடே, இங்கே புலையனா யானை மேலோன்?!!)
  • எயினர் குடியில். தண்ணுமை சிலைப்ப, கொண்டாட்டம். (பெரும்பாணாற்றுப்படை:137-147)

கருத்தில் கொள்ளவேண்டியதுதுடி, தண்ணுமை போன்ற தோற்கருவிகள் பல தேவைகளுக்காக ஒலித்திருக்கின்றன. மக்கள் பலரும் கூடிச் செய்ய வேண்டிய செயல்களை அறிவித்தற்பொருட்டு இந்தக் கருவிகள் ஒலித்திருக்கின்றன. அதனால் இங்கே புலையனை மட்டும் ஒதுக்கிப் பார்க்கத் தேவையில்லை. 

2. ‘புலையன்’ மட்டுமா ஈமச்சடங்கில் ஈடுபட்டான்? இல்லை. 

ஈமச்சடங்கு அல்லது இறந்தவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்த சங்கப்பாடல் சான்று
  • மறக்களவேள்வி செய்த வேண்மாள் (புறநானூறு 372:8)
  • தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாதவர்கள் (புறநானூறு 9:3-4)
    • இங்கே பொத்தியார் பாடலும் (புறநானூறு 222) நினைக்கத்தக்கது. தன்னுடன் உயிர்விடத் துணிந்த பொத்தியாரைத் தடுப்பதற்குக் கோப்பெருஞ்சோழன் சொன்னது: “புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா.”  ஆகவே, ஈமக்கடன் செய்ய ஒரு புதல்வன் தேவை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பொத்தியார் புலையரா? 
  • யாரோ ஒருவனை ‘இழிபிறப்பினோன்’ என்று  குறித்துப் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல் (363:14) ஒன்று இருக்கிறது.
    • சில ஓலைச்சுவடிகளில் ‘இழிபிறப்பினோன்’ என்ற பாடம் இல்லை. உ.வே.சா அவர்களே தம் பதிப்பில் இதைச் சுட்டியுள்ளார். எனவே, இங்கே ஈமக்கடன் செய்பவன் ‘இழிபிறப்பினோன்’ என்று கொள்ள உறுதியில்லை.
    • “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் தப்பார்” என்று தொடங்கும் சங்கப்பாடலும் ஏதோ ஒருவகை ஈமச்சடங்கைத்தானே சொல்கிறது. அந்தச் சடங்கைச் செய்தவன் ‘புலையன்’ என்பவனா? 
3. புலையன் என்பவன் பாணன் என்பவனுடன் இணைந்து திரிந்ததாகச் சொல்லும் கலித்தொகைப் பாடலே (85:22) புலையனும் பாணனும் ஒருவரல்லர் என்பதுக்குச் சான்று. அதாவது, பாணன் == புலையன் என்ற சமன்பாடு தவறு. 

3a. “பாண் தலையிட்ட பல வல் புலையனை …” என்ற கலித்தொகை (#85) வரியில் உள்ள ‘தலையிட்ட’ என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். ‘தலையிட்ட’ என்றால் ‘முதலில் வைத்த’ என்பது பொருள். இந்த எளிய பொருளைத் தொல்காப்பிய நூற்பாக்களிலும் காணலாம் (எடுத்துக்காட்டு: புணரியல் 1, செய்யுளியல் 97). “பொழுது தலைவைத்த” என்று தொடங்கும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவும் (40) இதை உறுதிப்படுத்தும். இந்தக் கலித்தொகைப் பாடலில் தலைவியின் வீட்டுக்குள் பாணனை முதலில் நுழைய வைத்து அவன்பின்னே புலையன் வருகிறான் என்று எடுத்துக்கொள்வதே சரி.

3b. புறநானூற்றுப் பாடல் (289:8-10) வரிகள்: “கேட்டியோ வாழி, பாண, பாசறைப் பூக்கோள் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.” இங்கே, ‘இழிசினனின் தண்ணுமைக் குரலைக் கேட்டாயோ’ என்று பாணனை வினவுகிறார் புலவர். இது பாணனும் இழிசினனும் ஒருவரல்லர் என்பதுக்கு இலக்கியச் சான்று, இல்லையா?

4. தலவனின் பரத்தமை ஒழுக்கத்துக்கு உதவிய புலையன் (கலித்தொகை 68:19; 85:22-25) ‘கீழ்மகன்’ என்றால் பரத்தமையில் ஈடுபட்ட ‘தலைவன்’ எந்த வகையில் மேம்பட்டவனோ?!! பரத்தமையில் ஈடுபட்ட தலைவன் == புலையன் என்ற சமன்பாடே சரி! இதை ஏன் அகரமுதலிகள் கண்டுகொள்ளவில்லை என்பது வியப்பு!!!

5. ‘புலையனை’ மீனோடு (with fish) தொடர்புபடுத்தும் சங்கப்பாடல் சான்றுகள் என் கண்ணுக்குத் தென்படவில்லை. கிடைத்தால் சொல்லவும், நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.

5a. கிடைத்திருக்கும் அகரமுதலிகள் ‘புலை,’ ‘புலால்,’ ‘புலவு’ என்ற சொற்களின் வழக்காற்றைக் குழப்பியிருப்பதுபோல் தெரிகிறது. புலை == புலவு/புலால் என்பது சரியான சமன்பாடில்லை என்று தோன்றுகிறது. தொடரும் ஆய்வில் தெளிவு கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

6. ‘புலையன்’ என்பவன் ஊராருடைய ஆடைகளைத் துவைத்ததாக எந்தச் சங்கப் பாடலும் பேசவில்லை. ஆகவே, ‘புலையன்’ == ‘வண்ணான்’ என்று சொல்ல முடியாது.  

7. ‘புலையன்’ என்று குறிக்கப்படுகிறவனும் ‘இழிசினன்’ என்று குறிக்கப்படுகிறவனும் ஒரே மனிதன் அல்லன் என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று (#287) சான்றாக அமைகிறது. 

7a. ‘துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின!” என்று தொடங்குகிறது இந்தப் பாடல். இதில் “இழிசின” என்ற சொல்லுக்குப் பாட வேறுபாடாக “அறிசன” என்ற சொல்லையும் குறித்த உ.வே.சா “இழிசின” என்ற சொல்லையே தம் பதிப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தச் சொல்லையே எடுத்துக்கொண்டாலும், புலையனும் இழிசினன் என்று குறிக்கப்படுகிறவனும் வெவ்வேறு ஆட்கள் என்பது இந்தப் பாடலின் கடைசி வரியைப் படித்தால் தெளிவாகும்: “இம்பர் நின்றும் காண்டிரோ …” என்று புலையனையும் இழிசினனையும் தனித்தவராகக் காட்டும் பன்மை விளியைப் பார்க்கிறோம். இலக்கணம் இங்கே உதவுகிறது. அதோடு, புலையன் எறியும் துடியை இயக்க, கோல் என்பது தேவையா என்றும் நினைத்துப் பார்க்கவேண்டும். தண்ணுமையை முழக்கக் கோல் தேவை (நற்றிணை 130:2). 

7b. “மடிவாய்த் தண்ணுமை இழிசினன்” என்று புறநானூற்றில் குறிக்கப்படுகிறவன் ‘புலையனா’ என்பது ஐயமே.

8. ‘புலையன்’ என்பவனையும் ‘ஊன்/இறைச்சி/மாமிசம்’ என்பதையும் தொடர்புபடுத்தி எந்தச் சங்கப் பாடலும் பேசவில்லை.

8a. ஈமச் சடங்கு ஒன்றைப் பற்றிக் கூறும் புறநாற்றுப் பாடலிலும் (360) கள், புல், அவிழ், வல்சி என்ற பொருட்களே குறிக்கப்படுகின்றன; ஊனை/இறைச்சியை/மாமிசத்தைக் காணோம்.


புலைத்தி என்பவள் பற்றி
——————————-
1. ‘புலைத்தி’ என்பவள் ஊரவரின் ஆடைகளைத் துவைப்பவளாகத் தெரிகிறாள் (கலித்தொகை 72). இங்கே, ‘ஊரவர்’ என்பவர் மருதநிலத்தவர் என்றும் பரத்தமையில் ஈடுபட்டவர் என்றும் பொருள் கொள்ளத் தடையிருக்கா? இல்லை.

1a. புலைத்திக்கும் குருதிக்கும், குறிப்பாகப் பெண்களின் மாதவிலக்குக் குருதிக்கும், எந்த வகைத் தொடர்பும் இருப்பதாகச் சங்கப்பாடல்கள் காட்டவில்லை. ஊரில் உள்ள மகளிருக்கு மாதம் ஒரு முறை உண்டாகும் குருதிப்போக்குக்கும் இவளுக்கும் தொழில் வகையில் தொடர்பில்லை. அதாவது, மகளிரின் குருதிக்கறை படிந்த ஆடையைத் துவைத்து இவளுக்குத் “தீட்டு” என்ற களங்கம் ஏற்பட்டதான குறிப்பு இல்லவே இல்லை. சங்கப்பாடல் சான்று கிடைத்தால் சொல்லுங்கள், நன்றியுடன் ஏற்றுக்கொள்ளுவேன்.

1b. மாறாக, (கேட்கத் தயக்கமாக இருந்தாலும் சொல்கிறேன்), புலைத்தியின் கைவிரல்கள் ‘பசை’யை நீக்குவதாகவும் அந்தப் பசை நீர்த்துறையில் வெளியேறியது மென்மையான மயிருடைய அன்னத்துக்கு உவமையாகவும் சொல்லப்படுகிறது (அகநானூறு 34:11; 387:5-7). ஆடையில் வெள்ளைப் பசை, அதைப் புலைத்தி தோய்த்துக் களைகிறாள். இது பெண்களின் மாத விலக்குக் குருதியா அல்லது வேறு எதுவுமா என்று நினைத்துப் பார்க்கவும். மாதவிலக்குக் குருதி ‘பசை’யாக உறையாது! 

2. புலைத்தி என்பவளை வறுமையில் வாடியவளாகச் சங்கப்பாடல்கள் காட்டவில்லை. ‘பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி’ என்று அவளுடைய தோள்கள் ‘பெருந்தோள்’ என்று சுட்டப்படுகின்றன (அகநானூறு 34:11). அவளே “பெருங்கை தூவா வறன்-இல் புலைத்தி” (நற்றிணை 90) என்றும் குறிக்கப்படுகிறாள்.

3. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (259) வரும் ஒரு தொடர் “முருகு மெய்ப்பட்ட புலைத்தி.” இதன் விளக்கமும் குழப்பமானதே. புலைத்தி என்பவள் ‘கோயில் பூசாரி’ என்ற பொருள் குழப்பம் தருகிறது. 'கோயில் பூசாரி' என்ற அளவில் கோயிலில் புலைத்தி என்னென்ன செய்திருக்கிறாள் என்ற குறிப்பு ஒன்றுகூட இலக்கியத்தில் இல்லை. ஆடை துவைக்கும் பெண்ணுக்கும் கோயில் பூசைக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. ஆய்வாளரும் விளக்கம் சொல்லவில்லை. ‘காம உணர்வு உடலில் வெளிப்பட்ட’ நிலையில் துடித்துத் துள்ளிய புலைத்தி என்று சாதாரணமான பொருளைக் கொண்டாலே போதும் என்று தோன்றுகிறது. அதோடு, ‘ தாவுபு தெறிக்கும் மானே’ என்பதைச் சிலர் ‘தெறிக்கும் ஆனே’ என்று கொண்டு ‘துள்ளும் பசு’ என்று பொருள் கொண்டிருக்கிறார்கள். அது சரியென்று தோன்றவில்லை. “தெறிக்கும்” என்ற வினை மான், மறிகளுக்கு உரியது, ஆவுக்கு/பசுவுக்கு இல்லை. மாற்றுச் சான்று கிடைத்தால் தெரிவிக்கவும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். 

++++++++++++ 

ஆக, ‘புலையன்,’ ‘புலைத்தி’ என்று சங்கப்பாடல்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில்) குறிக்கப்படும் ஆட்கள் பிற ஆட்களைப் போன்றவரே. அவர்களைக் 'களங்கம் உடையவர்கள்; தீட்டுடையவர்கள்' என்று சொல்வதெல்லாம் சங்கப்பாடல்களைப் பொருத்த அளவில் நேரியதில்லை என்பது என் கருத்து. 

இன்றைக்கு, ‘புலையன்’ என்ற சொல்லைக் கேட்டவுடனே பலருக்கும் ஆகா, “ஆ உரித்துத் தின்று உழலும் புலையர்” என்ற தேவாரப் பாட்டு வரியும், நந்தனார், புலைச்சேரி, புலைப்பாடி பற்றிய சேக்கிழாரின் பெரிய புராணக் கதையும் முட்டிக்கொண்டு வந்து மனதில் நிற்கும். அவர்களுக்கு ஒரு சேதி: “சேரி” என்பது புலையருக்கு மட்டும் உரியதில்லை. பார்ப்பனருக்கும் உரியதே!!! இதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம். 

(தொடரும்)

5 comments:

  1. அம்மையீர், வணக்கம். அரிய கருத்துகள் அடங்கிய கட்டுரைகள். இவற்றை மின்னூலாக்கி இணையத்தில் பதியுங்கள். எப்பொழுதும் பிறருக்கு வழிகாட்டியாக அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /

    ReplyDelete
  2. நல்ல செறிவு நிறைந்த பயனுள்ள பதிவு...


    ReplyDelete
  3. நல்ல செரிவான ஆய்வு தொடருங்கள் .....

    ReplyDelete