Friday, October 14, 2011

"வடசொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 6


இந்தப் பதிவில் என் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல விருப்பம். ஆனால், என் கருத்தை யார்மேலும் திணிப்பது இங்கே நோக்கமில்லை!

தமிழருக்கு, ஏன், இந்தியாவில் எல்லாருக்குமே, எந்த ஒன்றையும் "முழுமை"யாகப் பார்க்கத் தோன்றாது. எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துக் கூறுபோட்டு அலசி ஆராய்ந்து பார்த்துவிடவேண்டும்!

முப்பத்து முக்கோடி தேவர்கள், மூன்று கடவுளர், நால்வகை வருணங்கள், நான்கு/ஐந்து வகை நிலங்கள், ஆறு வகைச் சமயங்கள், ஏழு கன்னியர், எட்டுத் திசைகள், ஒன்பது கோள்கள், ... 

அப்பப்பா! புரியாதவருக்குத் தலை சுற்றும். 

எந்த ஒன்றையும் இந்த மாதிரிப் பிரித்துப் பிரித்துப் பிரித்துக் காண முயலுவது ஏன்? எதையும் தன்னால் அலசிப் பார்த்துவிட முடியும் என்ற ஒரு பெருமிதம், திமிர்ப்பு, மகிழ்ச்சி, மிதப்பு, துடிப்பு, துள்ளல் ... இருக்குமோ? 

இந்த வகைப் பிரிவுகளால் எந்த ஒரு குறிப்பிட்ட துறையில் அறிவு பெருகினாலும் ... அந்தப் பிரிவுகள் ஏற்படுத்தும் குழப்பங்களும் உண்டு! 

எந்தத் துறையிலும் முன்னோர் செய்த பிரிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதோ, இல்லை தவறு என்று மறுப்பதோ, மீண்டும் அவற்றை மாற்றி இன்னொரு வகைப் பிரிவு முறையை அமைப்பதோ ... எல்லாமே பிற்காலத்தவருக்கு இருக்கும் பிறப்புரிமை!

இலக்கணமும் இந்த வகைப் பகுப்பிலிருந்து தப்பிக்கவில்லை.

++++++++++++++++++++++++++++++ 

"சொல்" என்பதை எப்படி வகைப் படுத்தலாம் என்று பார்த்தார் அந்தத் தொல்காப்பியர்.

அவர் கால வழக்கப்படி, பிற அறிஞர்கள் "சொல்" என்பதை எப்படி வகைப்படுத்தினார்கள் என்று பார்த்தார். அதற்கப்புறம் அந்த அறிஞர்கள் சொன்னபடியே தாமும் சொல்கிறார்; அதை ஒத்துக்கொள்ளவும் செய்கிறார், எவ்வளவு பெருந்தன்மை, பாருங்கள்!

அவ்வழியே ...

முதலில் "சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டு வகைப்படும் என்று அது பற்றி அறிந்தவர்கள் சொல்லுவார்கள்" என்று தொல்காப்பியர் சொல்கிறார். 

"சொல் எனப்படுப பெயரே வினை என்று
ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே"

அப்படிச் சொன்னவுடனே "இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அந்தப் பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டையும் சார்ந்து வரும்" என்றும் சொல்லிவிடுகிறார். 

"இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப"

ஆங்? அது என்ன?

இங்கே எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ...

தொல்காப்பியர், அவருக்கு முன்னோர் அல்லது அவர் காலத்துப் பிற அறிஞர் சொன்னபடி, "சொல்" என்பதைப் பெயர், வினை, இடை, உரி என்று நான்கு வகையாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். 

அதே தொல்காப்பியர் ... இன்னோர் இடத்தில் ... மற்றவர் சொன்னதாகச் சொல்லாமல், தாமே பகுத்துச் சொல்லுவதுபோல ... சொற்களை இன்னும் 4 வகையாகவும் சொல்கிறார் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று. 

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

இந்தப் பதிவிற்கு முற்பட்ட பதிவுகளில் இந்த இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் இவை பற்றிப் பார்த்தோம்

இது என்ன கதையாய் இருக்கு? மொதல்லெ சொல்-க்ங்றது 4 வகை-ன்னு சொல்லிட்டு, அப்றம் இன்னொரு 4 வகையெச் சொன்னா? அப்ப ... சொல் 4 வகையா? 8 வகையா? அதெத் தெளிவாச் சொல்லணுமில்லே?

மிக நல்ல கேள்வி!

பாருங்க ... 

இந்தத் தொல்காப்பியர் மொதல்லெ ... அவர் காலத்துலெ "சொல்" என்பதை எப்படி வகைப் படுத்திப் பார்த்தார்கள்-னு சொன்னார் -- பெயர், வினை, இடை, உரி என்று 4 வகையாக. 

அதுக்குப் பிறகு அவராகவே இன்னொரு கோணத்திலிருந்தும் சொற்களை வகைப்படுத்திக் காட்டுகிறார் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று.

பார்த்தவுடனே இந்த இரண்டுவகைப் பகுப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரிகிறது, இல்லையா?

முதல்வகைப் பகுப்பு (பெயர், வினை, இடை, உரி) இலக்கண அடிப்படையில் உண்டானது.

இரண்டாவது வகைப் பகுப்பு (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்) சொற்கள் வழங்கும் முறை, இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

எளிமையான ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... 

The former categorization is based on the grammatical aspects of words while the latter is based on the usage/meaning and geographical origin of words.

ஆச்சா?

தொல்காப்பியரின் பகுப்பு மிகவும் துல்லியமானது. இந்த முறைப் பகுப்பில் எந்த வகைச் சொல்லும் தமிழ்ச் செய்யுளிலிருந்து தவிர்க்கப்படவேண்டியதில்லை என்று நான் புரிந்துகொள்கிறேன். குறிப்பாக ... திசைச்சொல்லையும் வடசொல்லையும் தொல்காப்பியர் விலக்கவில்லை; அவையும் தமிழ்ச்செய்யுள் செய்ய ஏற்ற சொற்களே என்று தெளிவுபடுத்திவிட்டார்.

அப்பொ ... 'தொல்காப்பியம் தொல்காப்பியம்'-னு அடிச்சுக்கிறவங்க தொல்காப்பியர் சொன்னதுபோலவே வடசொல்லையும் தமிழ்ச்செய்யுளுக்கு ஏற்ற ஒரு சொல் வகை ... அப்பிடித்தானே பாக்கணும்? அதுதானே நேர்மை?

எனக்கு அப்பிடித்தான் தோணுது. ஆனா ... காலப்போக்கிலே ... என்ன ஆகுது-ன்னா ...  

தொல்காப்பியருக்குப் பிற்காலத்தில் ... நன்னூல் என்ற இலக்கணத்தில் இந்தச் சொல் பகுப்பு முறை சிறிது வேறுபட்டிருக்கிறது. ஒருவேளை அந்தப் பகுப்பைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல்தான் "வடசொல்" என்றால் தமிழுக்கு ஆகாது என்று சிலர் நினைக்கிறார்களோ, தெரியவில்லை.

(தேவையானால் ... இயன்றபோது ... தொடரும்)

5 comments:

  1. 1.பிற்காலத்து பிறப்புரிமையை தொன்மையும், மேன்மையும் படைத்த தொல்காப்பியத் தன்மையில் இயக்குவது நம் கடன். குறுக்கே நிற்பது தற்பெருமை.

    2. 'நேர்மைக்கு ஓரிடம்; அது உமக்கு. அரசியல் சாயம் பூசிய சந்தர்ப்ப வாதம் எமக்கு.' ~ இது தமிழனின் நாகரீகமாயிற்று.

    ReplyDelete
  2. இலக்கணம்னா ஓட வேண்டாம்; இந்த மாதிரிப் புரியும்படி சொல்வோர் இருந்தால்.

    மிக்க நன்றி


    தேவ்

    ReplyDelete
  3. மிகவும் அழகாக, எளிதாக புரியும்படி எழுதியுள்ளீர்கள். மிகுதியையும் தொடர்ந்து எழுதுங்கள்.

    நன்றி!

    அன்புடன்
    அருண் | HK Arun

    ReplyDelete
  4. 'எந்தத் துறையிலும் முன்னோர் செய்த பிரிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதோ, இல்லை தவறு என்று மறுப்பதோ, மீண்டும் அவற்றை மாற்றி இன்னொரு வகைப் பிரிவு முறையை அமைப்பதோ ... எல்லாமே பிற்காலத்தவருக்கு இருக்கும் பிறப்புரிமை!'-
    உண்மை, அதைத்தான் தற்பொழுது தமிழ் தேசியவாதிகள் செய்கிறார்கள்...
    தமிழ் தேசியவாதிகளின் மீது ஏன் இந்த கொலைவெறி என்று புரியவில்லை...!
    தமிழ் தேசியம் மொழிக்காக இல்லை, மக்களுக்காக....!
    தமிழை தமிழாகவும்,
    வேறு மொழியை, அந்தந்த மொழியாகவும் கற்றால் போதும்...
    தமிழில் வேறு மொழியை உட்புகுர்த்தி, அதன் தொன்மையை கெடுக்கவோ, திரிக்கவோ தேவையில்லை...
    சொல்வளம் மிக்க தமிழில், காரணப்பெயருக்கு பெயர்போன தமிழில்,
    சொற்களா கிடைக்காது, மாற்று மொழி சொல்லை உட்புகுத்த தேவையென்ன...!!??

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      இங்கே யாருக்குக் 'கொலைவெறி' என்று குறிப்பிடுகிறீர்கள்? சற்றே தெளிவுபடுத்தவும்.

      தமிழோடு கணிதமும் கணினியியலும் மொழியியலும் முறையாகப் படித்த எனக்கு மொழிப்பற்றாளர்மேல் எப்படிக் கொலைவெறி உண்டாகும்? என்னைத் தெரிந்த நண்பர்களிடம் கேட்டால் எனக்குத் தமிழ்ப்பற்றாளர்மேல் கொலைவெறி இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவார்கள்.

      வடநாட்டு மொழிகளுக்குச் சமமான நிலையைத் தமிழுக்குக் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு புகழ்வாய்ந்த அமெரிக்கப் பல்கலைக்கழக வேலையைத் துறந்து வெளியேறினேன். 'அடுத்து எங்கே போவது' என்று தெரியாத நிலையிலும் ஓர் அயல்நாட்டில் இப்படிச் செய்த என்னைப் பற்றித் தவறாக நினைப்பது நகைப்பைத் தருகிறது! ;-)

      தொல்காப்பியர் என்ன சொன்னார் என்று எனக்குப் புரிந்ததைப் பகிர்ந்துகொண்டேன், அவ்வளவே. இங்கே 'தேசிய'த்தைப் புகுத்தத் தேவையில்லை.

      இளைய தலைமுறையின் பொறுப்பு நிறைய இருக்கிறது -- எது தமிழ்ச்சொல் எது அயற்சொல் என்று ஒருசார்பு அற்ற நிலையில் முறையாக நுணுக்கமாக ஆய்ந்து சொல்வது இளைய தலைமுறையின் கடமை. என் காலம் முடியப்போகும் நிலை. என்னால் இனிமேல் அந்த மாதிரி ஆய்வுகளில் ஈடுபட இயலாது. இளைய தலைமுறைதான் தமிழாய்வை நுனிப்புல் மேயாமல், 'அயலவரின் கருத்தே சரி' என்று எடுத்துக்கொள்ளாமல், முறையாக மேலெடுத்துச் செல்லவேண்டும். அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும் என்றும் உண்டு.


      Delete