"வடசொல்" பற்றித் தொல்காப்பியத்தில் காணும் கருத்தை இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
இந்தப் பதிவில் நன்னூலாரின் கருத்தைப் பார்ப்போம்.
"செய்யுள்" என்றால் என்ன என்று நன்னூலார் முதலில் விளக்குகிறார்.
பல்-வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினில்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்
[சுருக்கமான பொருள்: பலவகைத் தாதுகளால் (== அடிப்படைப் பொருள்களால்) உயிருக்கு உடல் அமைவதுபோல ... பல(வகைச்) சொற்களால், பொருள் என்பதைக் கொள்ளிடமாக, உணர்வில் முதிர்ச்சி அடைந்தவர்கள் அழகாகச் செய்வது செய்யுள்.]
இதன் வழிப் பார்த்தால் ... உயிர் + உடல் :: பொருள் + சொல் ==> செய்யுள்.
புரிகிறதா?
செய்யுளில் இடம் பெறுவதால் சொற்களைப் பற்றிப் பேசவேண்டிய நிலை இலக்கண ஆசிரியனுக்கு.
அதனால் ... சொற்களின் வகை பற்றிச் சொல்கிறார் நன்னூலார்.
இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர் வினை
என இரண்டாகும்; இடை உரி அடுத்து
நான்கும் ஆம், திசை வடசொல் அணுகாவழி
[சுருக்கமான பொருள்: இயற்சொல், திரிசொல் என்ற இரண்டுவகைச் சொற்களும் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று பிரிவுபடும். அதோடு, இடைச்சொல், உரிச்சொல் என்று இரண்டு வகைச் சொற்கள் உண்டு. ஆக, சொற்களின் வகை நான்கு. திசைச்சொல், வடசொல் என்பவை இதில் சேர்த்தியில்லை.]
மேற்போக்காகப் படிப்பவருக்கு இங்கேதான் சிக்கல் தொடங்கும்போல. ஏனென்றால் ... "திசை வடசொல் அணுகாவழி" என்ற தொடரிலிருந்து அரையும் குறையுமாக எடுத்துக்கொண்டு "வடசொல் அணுகாவழி" என்று நன்னூலார் சொன்னார் சொன்னார் என்று யாராவது நினைத்தும் சொல்லியும் திரிந்துகொண்டிருந்தால் .... அது நன்னூலாருக்கு இழுக்கு! :-)
இயற்சொல், திரிசொல் என்ற இரண்டுவகைச் சொற்களையும் பெயர், வினை, இடை, உரி என்ற இலக்கணப் பகுப்புக்கு உட்படுத்துகிறார் நன்னூலார்; ஆனால், திசைச்சொல், வடசொல் ஆகிய இரண்டு வகைச்சொற்களையும் அதேபோலப் பெயர், வினை, இடை, உரி என்ற இலக்கணப் பகுப்புக்கு உட்படுத்தவில்லை.
இந்த நோக்கில் பார்த்தால் ...
தொல்காப்பியத்தில் உள்ளதுபோலத் துல்லியமான பகுப்பு முறை நன்னூலில் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. தொல்காப்பியர் சொற்களை இலக்கண (grammatical) முறையிலும் வழக்கு (usage, geographical) முறையிலும் பகுத்திருக்கிறார். நன்னூலாரைப்போல 'இது இப்படி இரண்டு; இதோடு இதைச் சேர்த்தால் இது நான்கு; ஆனால், இந்த இரண்டும் சேர்த்தி இல்லை' என்று குழப்பவில்லை. அதனால் தொல்காப்பியத்தின் தெளிவு எனக்குப் பிடித்திருக்கிறது.
இங்கே, நன்னூலில் உள்ள "வட சொல் அணுகாவழி" என்பதைப் பிடித்துக்கொண்டு ... தமிழுக்கு "வட சொல்" என்பது சேர்த்தியில்லை என்று பிற்காலத்தில் ஒரு சிலர் நினைக்கத் தொடங்கிவிட்டார்களோ? அப்படி யாராவது நினைத்தால் ... அப்படி நினைக்கிறவர்கள் நன்னூலின் எல்லா நூற்பாக்களையும் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்கவேண்டும்.
வேடிக்கை என்ன என்றால் ... நன்னூலார் "திசைச்சொல்"லையும் "வடசொல்"லோடு இணைத்துச் சொல்லியிருக்கிறார்! அப்படி இருக்கும்போது ... வடசொல்லை விலக்கினால் திசைச்சொல்லையும் விலக்கவேண்டுமே!
சரி, "திசைச்சொல்" "வடசொல்" பற்றி நன்னூலார் என்ன சொல்கிறார்? பார்ப்போமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
"திசைச்சொல்" -- நன்னூலார் கருத்துப்படி ...
---------------------------------------------------------------
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச்சொல் என்ப
[சுருக்கமான பொருள்: செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த 12 இடங்களிலும், 18 நிலங்களில் தமிழ் வழங்காத இடத்திலும், அந்தந்த நிலத்து மக்கள் தமக்கு மட்டுமே புரியும் வகையில் பயன்படுத்தும் சொல் (செந்தமிழில் வந்து வழங்கும்போது) "திசைச்சொல்" என்ற குறியைப் பெறும்.]
அதாவது 12 + 17 இடங்களில் அந்தந்த இடத்துக்கு ஏற்றபடிப் புழங்கி அங்கேயிருந்து செந்தமிழ் நிலத்துக்கு வந்து வழங்கும் சொற்கள் "திசைச்சொற்கள்" என்று சொல்லப்படும்.
இங்கே எனக்கு ஆர்வம் தரும் தொடர் "ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்-ஒழி-நிலத்தினும்" என்பது.
"திசைச்சொல்" பற்றித் தொல்காப்பியர் என்ன சொன்னார் என்று முன்னைய ஒரு பதிவில் பார்த்தோம்.
நினைத்துப் பாருங்கள், "தமிழ்-ஒழி-நிலம்" என்று தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.
நன்னூலார் காலத்துக்குள் அப்படி ஒரு பிரிவு (== "தமிழ் ஒழி நிலம்" 17 என்று) உண்டாக்கிப் பார்க்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கவேண்டும், அதனால் அவர் அந்தக் கோணத்தில் பார்க்கிறார் என்று தோன்றுகிறது, இல்லையா?
சரி. அது போகட்டும்.
இங்கெ பாருங்க, இந்த '12 நிலம்' '18 நிலம்' ... அப்பிடிப் பட்ட பிரிவுகளெ! ஏகப்பட்ட ஆராய்ச்சியும் உரையும் இருக்கு. அதில் எல்லாம் புகுந்து பார்த்து நான் புரிந்துகொண்ட கருத்தை விளக்க இப்போது எனக்கு நேரம் இல்லை. எனவே சுருக்கமான பொருளைமட்டும் தருகிறேன்.
அட, நன்னூலார் சொன்ன இந்தத் "தமிழ்-ஒழி-நிலம்" (== இடங்கள்) எது ஐயா? யாருக்காவது திட்டவட்டமாகத் தெரியுமா? எனக்குத் தெரியாது, ஒத்துக்கொள்கிறேன். உரையாசிரியர்கள் சொல்றாங்க ... "சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், குசலம்"
இதெல்லாம் "தமிழ் ஒழிந்த 17 நிலங்கள்"; அதாவது ... செந்தமிழ் நிலத்துக்கு அப்பால் இருந்து, தமிழ் புழங்காத 17 இடங்கள்.
அந்த 17 இடங்களிலிருந்தும் வந்து தமிழில் வழங்கும் சொல் "திசைச்சொல்" என்கிறார் நன்னூலார்.
அப்போ, இந்த 17 "தமிழ் ஒழி நில"த்திலிருந்து வந்த சொற்கள் நன்னூலார் காலத்துத் தமிழருக்குப் பழக்கப்பட்டிருக்கவேண்டும், இல்லையா?
ஒரு கருத்தை உன்னித்துப் பாருங்கள், இப்படித் "திசை"ச் சொற்களை வரையறுத்த நன்னூலார் அவற்றைத் தமிழுக்கு வேண்டாத சொற்கள் என்று விலக்கவில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++
"வடசொல்" -- நன்னூலார் கருத்துப்படி ...
-------------------------------------------------------
பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈரெழுத்தானும் இயைவன வடசொல்
[சுருக்கமான பொருள்: தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்தால் ஆகிய சொற்களும், வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்தால் ஆகிய சொற்களும், இருவகைப்பட்ட (பொது + சிறப்பு) எழுத்தாலும் ஆகிய சொற்களும் (தமிழில் வந்து வழங்கும்போது) "வடசொல்" என்று குறிக்கப்படும்.]
உரையாசிரியர் தரும் எடுத்துக்காட்டு:
1. அமலம், காரணம் -- இவை பொது எழுத்தால் இயைந்தன
2. சுகி, போகி, சுத்தி -- இவை சிறப்பெழுத்தால் இயைந்தன
3. அரி, அரன், சயம் -- இவை ஈரெழுத்தாலும் இயைந்தன
உரையாசிரியர்கள் கருத்துப்படி, மேற்கண்ட சொற்களில் முதல் வகை "தற்சமம்" என்று குறிக்கப்படும். மற்ற இரண்டும் "தற்பவம்" என்று குறிக்கப்படும்.
ஆங்? நம்ம வழிய்லெ அதெ எப்பிடிப் புரிஞ்சிக்கிறது?
சரி.
அமலம், காரணம் -- இந்தச் சொற்களில் உள்ள ஒலிகள் தமிழ் ஆரியம் இரண்டு மொழிகளுக்கும் பொது; ஆகவே இந்த இரண்டு மொழிகளிலும் உள்ள பொதுவான எழுத்திலேயே இந்தச் சொற்களைப் புழங்கலாம்.
சுகி (sukhi), போகி (bhogi), சுத்தி (śuddhi) -- இந்தச் சொற்களில் உள்ள மெய்யெழுத்து ஒலிகள் ஆரியத்துக்கே உரியவை. அதனால் இந்தச் சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமானால் அவற்றை எழுதத் தனிப்பட்ட எழுத்து ("சிறப்பு எழுத்து") தேவை.
அரி (< ஹரி), அரன் (< ஹர), சயம் (< ஜய) -- இவை தமிழ், ஆரியம் இந்த இரண்டு மொழியின் எழுத்தாலும் ஆனவை.
இப்படி உரை சொல்லும்படி நன்னூலார் செய்த "பொது எழுத்தானும் ... ... ... வடசொல்" என்ற நூற்பா தொல்காப்பியத்திலிருந்து சிறிது வேறுபட்டது.
எப்படி?
தொல்காப்பியர் "வடசொல்" பற்றிச் சொன்னதை முன்பு ஒரு பதிவில் பார்த்தோம்.
நன்னூலார் சொன்ன 'சிறப்பு எழுத்தானும் ... அமைந்து வருவது வடசொல்' என்ற வரையறை தொல்காப்பியத்திலிருந்து வேறுபட்ட விரிவு, இல்லையா? இதனால் ... அவர் காலத்தில் சிறப்பு எழுத்தால் வடமொழிச் சொல்லை எழுதித் தமிழில் புழங்கும் வழக்கம் இருந்திருக்கவேண்டும் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது, இல்லையா?
எனவே, நன்னூலார் காலத்தில் "வடசொல்" பற்றிய கருத்து சிறிது விரிவுபட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது, இல்லையா?
இல்லையென்றால் ... ஏன், தொல்காப்பியத்தில் இல்லாத அளவுக்கு ... விளக்கமாக ... வடமொழிச் சொற்களைத் தமிழில் புழங்கும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்று மெனக்கிடுகிறார் நன்னூலார்?
தமிழின் சிறப்பு எழுத்து இவை என்று ஒரு பட்டியல் தருகிறார்:
"ற ன ழ எ ஒவ்வும் உயிர்மெய்யும் உயிரளபும் அல்லாச் சார்பும் தமிழ்; பிற பொதுவே" (நன்னூல்: 150)
அதோடு எந்த எந்த எழுத்து எப்படித் தமிழில் திரியும் என்றும் சொல்கிறார் (நன்னூல்: 146-149).
வடசொல்லையோ திசைச்சொல்லையோ தமிழுக்கு ஆகாதவை என்று நினைத்திருந்தால் இந்த நூற்பாக்கள் செய்திருப்பாரா?
++++++++++++++++++++++++++++++++
தொல்காப்பியம், நன்னூல் செய்த இலக்கண ஆசிரியர்கள் திசைச்சொல்லையோ வடசொல்லையோ தமிழிலிருந்து விலக்கவில்லை; இது தெளிவு.
குறிப்பிட்ட சொற்களைத் தமிழிலிருந்து களையவேண்டும் என்று நாம் நினைத்தால் ... அதற்குத் தொல்காப்பியமோ நன்னூலோ வழிகாட்டாது! பழைய இலக்கண ஆசிரியர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு திசைச்சொல்லையோ வடசொல்லையோ தமிழிலிருந்து களைய முயல்வது அந்த இலக்கண ஆசிரியர்களைப் புறக்கணிப்பதுபோலாகும். இதுவே என் கருத்து.
ரொம்ப பெரிதாக இருந்தாலும், பெரிய விஷயங்கள் அடங்கி இருக்கிறது...
ReplyDeleteநல்ல கட்டுரை. இருப்பினும் சில ஐயங்கள்.
ReplyDeleteசில இடங்களில் 17 நாடுகள் என்றும் சில இடங்களில் 18 என்றும் சொல்லி இருக்கிறீர்கள் (கொடுத்துள்ள பட்டியலிலும் 17 தாம் இருக்கின்றன). எது சரி? 17 என்றால் நுாற்பாவில் ஒன்பதிற்றிரண்டில் என்று வரக்கூடாதே? 18 என்றால் அந்த இன்னொரு நாடு எது?
அப்புறம், தொல்காப்பியத்திலும் சரி, நன்னுாலிலும் சரி, ஏன் வடசொல் திசைச்சொல் என்று இரண்டு வகைகள்? வடசொல்லும் திசைச்சொல் தானே? பல காலமாகக் குழம்பிக்கொண்டிருக்கிறேன்.
பதிவிற்கு தொடர்பில்லாத இன்னொன்று, றகர ஒலிப்பு பற்றி நீங்களாவது விளக்குங்களேன். இது தவிர பல ஐயங்களுண்டு. யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. உங்களிடம் கேட்கலாமா?
அன்புடன்
மணிவண்ணன்
அட்லாண்டா.
"ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலம்" என்று சேர்த்துப் பார்க்கவேண்டும்.
ReplyDelete"ஒன்பதிற்று இரண்டினில்" == '18 இடங்களுள்'
"தமிழ் ஒழி நிலம்" == 'தமிழ் ஒழிந்த (17) இடங்கள்'
அதனால் ... உரையாசிரியர்கள் '18 minus தமிழ் ஒழி நிலம் == 17 இடங்கள்' என்று சொல்கிறார்கள்.
"செந்தமிழ் நிலம்" எது என்று அந்தக் கால உரையாசிரியர் சொன்னதை முன்னைய பதிவு ஒன்றில் ("வடசொல் -- தொல்காப்பியர் அடிச்சுவட்டில்" என்ற பதிவுகளுள் ஒரு பதிவில்) விளக்கியிருக்கிறேன்.
*****************************
"வடசொல்லும் திசைச்சொல் தானே?"
இல்லை.
"திசைச்சொல்" என்பது தமிழிலேயே "வட்டார வழக்கு" போல.
"வடசொல்" என்பது ஆரிய மொழிச்சொல் தமிழ் எழுத்துக்கும் ஒலிக்கும் ஏற்றபடி மாற்றி, தமிழில் வழங்கப்படுவது.
"வட்சொல் -- தொல்காப்பியர் அடிச்சுவட்டில்" என்ற என் பதிவுகளில் இதையும் விளக்கியிருக்கிறேன்.
*****************************
"றகர ஒலிப்பு பற்றி" நேரம் கிடைக்கும்போது சொல்ல முயல்கிறேன்.
அருமை ஐயா அருமை
ReplyDelete