Sunday, October 9, 2011

புறநானூற்றில் ஒரு குரல் ...

புறநானூற்றில் 3 பாடல்கள் (83-85) நக்கண்ணையார் என்ற பெண்ணின் பெயரோடு இணைத்துக் காணப்படுகின்றன.

சங்க இலக்கியப் பாடல்களின் பதிப்புகளின்வழி, இந்தப் பாடல்களின் "திணை" என்பது "கைக்கிளை" எனவும் "துறை" என்பது "பழிச்சுதல்" எனவும் தெரியவருகிறது.

"திணை" என்றால் என்ன? "துறை" என்றால் என்ன என்ற ஆய்வு இங்கே தேவையில்லை, அதற்கு நேரமும் இல்லை. இந்தப் பதிவைப் படிப்போருக்கு அந்த அடிப்படைப் பொருள் தெரியும் என்ற நம்பிக்கை! 

"கைக்கிளை" என்றால் என்ன என்று மட்டும் இங்கே திரும்பவும் சொல்லிப் பார்ப்போம்.

"கைக்கிளை" என்பது பற்றித் தொல்காப்பியர் சொன்னது என்ன என்பதை விளக்குவது கொஞ்சம் ஆழமானது. அதனால் இங்கே "கைக்கிளை"யின் கருத்தை எளிமைப்படுத்திப் பார்ப்போம்.

பல முன்னோர் சொன்னபடி, "கைக்கிளை" என்பது "ஒருதலைக் காமம்." அவ்வளவே. 
நம் போன்ற பின்னோர் புரிந்துகொள்ளவேண்டுமானால் ... "கைக்கிளை" என்பது "ஒருதலைக் காமம்" என்ற உணர்வை வெளிப்படுத்திப் பாடல் போன்ற கலைகளில் சொல்வது. 

இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் ... ஒருவர் (A) இன்னொருவர் (B) மேல் ஆசை கொண்டு, அந்த உணர்வைப் பற்றி ஏதோ தனக்குள் சொல்லிப் புலம்புவது; ஆனால், அந்த இன்னொருவர் (B) அந்த ஒருவரின் (A-யின்) ஆசையைப் புரிந்துகொண்டு தனக்கும் அதேபோல அந்த ஒருவர் (A) மேல் ஆசை இருக்கா இல்லையா-ங்க்றதெ தெரிவிக்காமல் இருப்பது. அந்த இன்னொருவருக்கு (B-க்கு) அந்த ஒருவரின் (A-யின்) ஆசையைப் பற்றித் தெரியாமலே போகலாம். அப்படிப்பட்ட நிலையில் ... ஒருவர் (A) தன் ஆசையைப் பற்றித் தனக்குள் சொல்லிக்கொள்வதும் அது இன்னொருத்தருக்கு (B-க்கு)  தெரியாமல் இருப்பதும்தான் "கைக்கிளை" என்று தோன்றுகிறது.

ம்? புரியலையே?

அதாவது ... ஒருத்தர் மட்டும் இன்னோருத்தர்மேலே ஆசெ வச்சு, அதெ வெளிப்படுத்திச் சொல்றது; ஆனா அந்த ஆசைக்கு ஏத்தபடி அந்த இன்னோருத்தர் இந்த இவர் மேலே ஆசைப்படாம இருக்கிறது. இதுதாங்க "கைக்கிளை"-ங்கிற "திண"யின் அடிப்படை. சரியா?

இப்ப ஒரு புறநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்.

+++++++++++++++++++++++++++++++++ 

புறநானூறு 83
---------------------
அடி புனை தொடுகழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;
என்போல் பெரு விதுப்பு உறுக! என்றும்
ஒருபால் படாஅதாகி
இருபால் பட்ட இ-ம்-மையல் ஊரே!

[சுருக்கமான பொருள்: காலில் கழல் அணிந்த, கருமையான தாடியை உடைய, அந்தக் காளைக்காக என் தொடியைக் கழட்டி வைத்துவிடும் செயலைச் செய்யமுடியாமல் என்னைப் பெற்றவள் பொருட்டு அஞ்சுகிறேன். அதோடு, வெல்லும் வலிமை உடைய அவன் தோளைத் தழுவலாம் என்றாலோ ... பொது மன்றத்தை நினைத்து நாணம் கொள்கிறேன். என்ன செய்ய? என்னைப்போலவே மயங்கி, குழம்பிப்போன இந்த ஊரும் மிகவும் நடுங்கித் தொல்லைப்படட்டும்.] 

என்ன நடக்கிறது இங்கே? 

ஒரு பெண் தன்னுடையை ஊரை (== ஊராரை) ... திட்டிப் பழிக்கிறாள்.

ஏன்?

அந்த ஊரில் ஏதாவது ஒரு செய்தி என்றால் ... ஊரார் அதைப் பற்றி ஒரே மாதிரி நினைத்து ஒற்றுமையாக நடப்பதில்லை. எப்போதும் இரண்டுபட்ட பிளவுதான். அப்படிக் குழம்பி, மயங்கிப்போன ஊர்; கருத்து ஒற்றுமை இல்லாத ஊர் அது. 

அந்த ஊரை இவள் எப்படிப் பழிக்கிறாள்?

என்னைப்போலவே இந்த ஊரும் என்ன செய்வது என்று தெரியாமல் பரபரப்புடன் நடுங்கட்டும். 

இவளுக்கு என்ன கேடு?

இவளுக்கு ஓர் இளைஞனின் மேல் ஆசை உண்டாகிறது. ஆனால் அந்த ஆசையை வெளிப்படுத்த முடியவில்லை.

ஏன்?

1. தன்னைப் பெற்றவளைப் பற்றிய அச்சம். அதாவது ... இவளுக்கு அவன்மேல் ஆசை வந்தது என்று தெரிவிக்கவேண்டுமானால், இவள் அணிந்துகொண்டிருக்கும் "தொடி" என்ற தோள் வளையைக் கழற்றி வைத்துவிடவேண்டும். அப்படித் தெரிவிக்க இவளுக்கு அச்சம்; குறிப்பாக ... தன்னைப் பெற்ற தாய் என்ன சொல்லுவாளோ, என்ன செய்வாளோ என்று அச்சம்.

2. ஊர் மக்கள் பற்றிய அச்சம். அதாவது ... அவனை நெஞ்சாரத் தழுவிக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் ... அவள் வாழும் சமுதாயத்தில் பொது மக்கள் மன்றத்தில் ... அது பெரும் தவறாகக் கருதப்படும். 


இப்படி ... இவளுக்கு "இரண்டும் கெட்டான்" நிலை. அதைத்தான் -- (நம் காலத்துக் கவியரசர் கண்ணதாசன் மொழியில் சொல்லப்போனால்) -- தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாமல் ... தன் உணர்வுக்கும் தான் செய்ய முடிவதற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை -- இப்படி வெளிப்படுத்துகிறாள்.
 
++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு: இங்கே இந்தப் புறநானூற்றுப் பாடலுக்கான என் விளக்கவுரை மரபு வழிப்பட்ட உரைகளிலிருந்து வேறுபட்டது.  
கேள்வி:

1. "தொடி கழித்திடுதல்" என்பது எந்த வழக்கத்தைக் குறிக்கிறது? அந்தக் காலச் சமுதாயத்தில் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்?
2. "கைக்கிளை" என்பது எப்படிப் புற இலக்கியத்தில் (== புறநானூற்றில்) இடம் பெறுகிறது?

No comments:

Post a Comment