Wednesday, March 23, 2011

காமம் சான்ற கடைக் கோட் காலை ... (பகுதி 3)

கருத்துக்குரிய தொல்காப்பிய நூற்பாவைப் பார்ப்போம்.

நூற்பா
---------
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

+++++++++++++++++++++++++++++

இந்த நூற்பாவில் வரும் பெயர்ச் சொற்கள்
----------------------------------------------------
வரி 1-இல்: காமம், கடை, கோள், காலை 
வரி 2-இல்: ஏமம், மக்கள்
வரி 3-இல்: அறம், மக்கள், கிழவன், கிழத்தி
வரி 4-இல்: சிறந்தது, பயிற்றல், இறந்தது, பயன்

(குறிப்பு: "கோள்," "பயிற்றல்" என்பன தொழிற்பெயர்.)


இந்த நூற்பாவில் வரும் வினைச் சொற்கள்
------------------------------------------------------
வரி 1-இல்: சான்ற
வரி 2-இல்: சான்ற, துவன்றி
வரி 3-இல்: புரி

+++++++++++++++++++++++++++++

பெயர்ச் சொற்களின் பொருள்:
--------------------------------------

காமம் - காமம்
கடை - இறுதி நிலை
கோள் - மேற்கொள்வது, ஏற்றுக்கொள்வது
காலை - பொழுது, பொழுதில், காலத்தில்
ஏமம் - பாதுகாப்பு
மக்கள் - மக்கள்
அறம் - அறம்; (இல்லறம், துறவறம் -- இவை இதன் வகைகள்)
கிழவன் - (இல்லத்துக்கு, மனைவாழ்க்கைக்கு) உரிமையாளன்
கிழவி - (இல்லத்துக்கு, மனைவாழ்க்கைக்கு) உரிமையானவள்
சிறந்தது - (இதுவரை இருப்பவைகளுள் /செய்தவைகளூள்) மேம்பட்டது, (இதுவரை இருப்பவைகளுக்கு / செய்தவைகளுக்கு) அப்பாற்பட்டது
பயிற்றல் - பயிற்சி கொடுப்பது
இறந்தது - இதுவரை இருந்தது / நிகழ்ந்தது
பயன் - பயன்


வினைச் சொற்களின் பொருள்:
--------------------------------------
சான்ற - நிறைவடைந்த; (சான்ற < சால் 'நிறைவு')
துவன்றி - கூடி, ஒன்றாகச் சேர்ந்து இருந்து
புரி - செய்யும், நிகழ்த்தும்

+++++++++++++++++++++++++++++++
நூற்பா வரிகளின் சுருக்கமான பொருள்
------------------------------------------------

வரி: காமம் சான்ற கடைக்கோட் காலை
பொருள்: காமம் நிறைவடைந்த இறுதி நிலையை ஏற்றுக்கொள்ளும் காலத்தில்

வரி: ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
பொருள்: பாதுகாப்பு நிறைந்த மக்களோடு கூடி இருந்து

வரி: அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
பொருள்: அறம் செய்கிற மக்களோடு (== மக்களுக்கு), கிழவனும் கிழத்தியும்

வரி: சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
பொருள்: (இதுவரை செய்த செயல்களுக்குள்) மேம்பட்டதைக் கற்பித்தலே, இறந்த காலத்துச் செயல்களினால் உண்டாகும் பயன்.


நூற்பாவின் சுருக்கமான பொதுப் பொருள்
----------------------------------------------------
கிழவனும் கிழத்தியும் ...
(தங்கள்) காமம் நிறைவடைந்த இறுதி நிலையை ஏற்றுக்கொள்ளும் காலத்தில் ...
(இதுவரை செய்த செயல்களுக்குள்) மேம்பட்டதை (மக்களுக்குக்) கற்பித்தலே, இறந்த காலத்தில் செய்த செயல்களினால் உண்டாகும் பயன்.

+++++++++++++++++++++++++++++

இதிலிருந்து .... நூற்பாவின் அடிகளிலிருந்து ... "வானப்பிரத்தம்" "துறவறம்" என்ற பொருள்கள் கிடைப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"சிறந்தது" என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் தத்தம் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அவ்வளவே.

அதோடு, "பயிற்றல்" என்ற சொல் இலக்கணப்படிப் பிறவினைச் சொல். அது 'பிறருக்குக் கற்பித்தல்' என்ற பொருள் தருவதாகவே எனக்குப் படுகிறது. ஆனால், இதுவரை யாரும் அதைக் கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை.

(முற்றும்)

5 comments:

  1. தொல் தமிழர் நாகரீகத்தில், எந்த இடத்திலும் துறவறம் பற்றிய செய்திகள் இருந்ததாக நான் படித்ததில்லை. எல்லாம் பிற்காலத்தவையே. த்

    சமண சமயத்தின் எச்சமே, காவி வேட்டியும் துறவறமும்.

    ReplyDelete
  2. உங்கள் விளக்கமே மிக இயற்கையாகவும், மிக எளிமையாகவும் உள்ளது! சிறந்தது பயிற்றல் என்பதாலும் "ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
    அறம் புரி மக்களொடு" என்று தெளிவுற சொல்வதாலும் கூடி வாழ்வதையே குறிக்கும்.. தனிமை பேணும் வானப்பிரத்தம், துறவறம் போன்றவற்றை எவ்வாறு குறிக்கும் ??!! உங்கள் விளக்கம் மிகச் சிறந்ததாக எனக்குப் படுகின்றது.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே

    ReplyDelete
  4. மிகச் சரி.. நாம் வாழ்வில் கற்ற கடைப்பிடித்த சிறந்த விழுமியங்களை மற்றவர்களுக்குமா பகிர்ந்து கொள்ளுதல்.. உங்கள் புரிதல் சரியே

    ReplyDelete
  5. 'அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் ' என்பது தொல்காப்பியம்

    ReplyDelete