Tuesday, August 16, 2011

" ... கூடவே வருவதென்ன?"


இந்த உலகில் பிறந்த உயிர்கள் தம் உயிர் பிரிந்து ( == இறந்து / செத்து) இந்த உலகை விட்டுப் போகும்போது தங்கள் கூடவே எதையெல்லாம் / எதைத்தான் எடுத்துக்கொண்டு போக முடியும்? 

எகிப்திய பிரமிடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தெரிவது: இறந்துபோன அரசினர் மட்டுமில்லை, சாகாத ஒரு பெரிய கூட்டமே (அடிமை மக்கள், சொத்து, இன்ன பிற) அவர்களோடு சேர்த்துப் புதைக்கப்பட்ட நிலை இருந்திருக்கிறது. அது அந்த நாட்டு நம்பிக்கையையும் பழக்கத்தையும் தெரிவிக்கிறது.

எனக்குத் தெரிந்தது ... நம் ஊரில் "சனிப் பொணம் தனிப் போகாது" என்று இருந்த ஒரு சொல் வழக்கு மட்டுமே. அதாவது, யாராவது சனிக்கிழமையில் இறந்தால், சீக்கிரமே அந்த வீட்டு உறவினர் வேறு யாரோ இறந்துபோவார்கள் என்ற பதைப்பு. அதனால், சில இடங்களில் சனிக்கிழமையில் செத்தவர்களைப் புதைக்கவோ/எரிக்கவோ கொண்டு போகும்போது கூடவே (பாவப்பட்ட) ஒரு கோழியையும் பாடையில் கட்டி எடுத்துப் போவார்கள். சிறு வயதில் நானே இதைப் பார்த்திருக்கிறேன்.

பாவப்பட்ட ஒரு கோழி தவிர நம்மவர்க்குக் கூடவே வருவது வேறு ஒன்றும் இல்லை!

அதுதான் கண்ணதாசக் கவியரசர் அருமையாச் சொல்லிட்டாரே ... 

"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ"

என்ன அழகான அருமையான கருத்தாழம் நிறந்த பாடல்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

அண்மையில், இரண்டு வாரங்களுக்கு முன் ... எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு மாணவியின் கணவர் திடீரென இறந்துபோனார், யாரும் எதிர்பாரா நிலையில். மதிய உணவு சாப்பிட்டுப் படுத்தவர் எழுந்திருக்கவேயில்லையாம்.

அண்மையில் நான் பார்த்தபோது நல்ல உடல் நலத்தோடு இருந்த மாதிரித் தெரிந்தது. மிகவும் அன்பாகப் பேசினார். ஊருக்குத் திரும்பிப் போகும் முன் மீண்டும் வந்து தன் மனைவியின் சமையலைச் சுவைத்துச் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். பழைய கால நாட்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

பார்க்க மிக நல்ல, இனிய வடிவும் தெம்பும். தினமும் காலையில் நல்ல நடைப் பயிற்சி. ஆனால் ... தேவையில்லாத அந்த "இனிமையின்" அளவு கூடுதலாம். இதயக் குழாய் (?) அடைப்பைச் சரிசெய்துகொள்ளவேண்டிய நிலையாம்; மூன்று ஆண்டுகளாகத் தயக்கமாம்.

மிக நல்ல பண வசதி. வாழ்க்கையில் வேறு குறையொன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு மனக்குறை -- பிறந்த 4 பெண்களில் 3 தன் துணையைத் தானே தேடிக்கொண்டது.

பெண்களின் "சுயம்வரத்துக்கு"ப் பின் அவர்களையும் அவர்கள் கணவரையும் பார்க்க விரும்பாத நிலை. ஒரு வழியாக ... பேரக் குழந்தைகள் மட்டும் வீட்டுக்கு வரச் சம்மதித்தார்போல. நான் போயிருந்தபோதே ... ஒரு பெண்ணும் இரண்டு பேரக் குழந்தைகளும் (ஒன்று தூளியில்; ஒன்று ஆட்ட பாட்டத்துடன் நடமாட்டம்) வந்திருந்தும் ... அவர் வேலையிலிருந்து மத்தியானச் சாப்பாட்டுக்கு வருவார் என்ற நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலை.

மிகவும் தயக்கத்துடன் பேசிப்பார்த்தேன். பேரக் குழந்தைகள் / பெண்கள் பேச்சை எடுத்தவுடன் அந்த அழகான, பெருமிதமான முகத்தில் உணர்ச்சியே இல்லாத ஒரு திரை சட்டெனெ விழுந்தது.

"ஏன்? ஏன் ஐயா இப்படி இருக்கிறீர்கள்? இவ்வளவு இருந்தும் கடெய்சிலெ என்னத்தெக் கொண்டு போகப் போறீங்க?" என்று உலுக்கி எடுத்துப் பேச எனக்கு உரிமை இல்லை. உணர்வுகளை அடக்கிக்கொண்டேன். என் மாணவியிடம் மட்டும் என் உணர்வுளைப் பகிர்ந்துகொண்டேன். அவளும் ... "என்ன செய்ய மிஸ்? இப்படித்தான் எப்பவும். நல்லாத்தான் இருப்பார், இந்தப் பேச்சு வந்தா மட்டும் அப்படியே அமைதி ஆயிடுவார். மத்தபடி ரொம்ப நல்லவர்." என்று சொல்லி அமைதியாகிவிட்டாள். அவளுக்கும் நிறைவேறாத கனவுகள் நிறையவே.

நானும் பல முறை கொதித்து நினைத்துப் பார்த்து அமைதியானேன் -- அவருக்கு அவருடைய கொள்கைப் பிடிப்பு. அதையும் நான் மதிக்கவேண்டும், இல்லையா?

இப்போது வீடு நிறைய மனிதர்கள் -- அவர் பார்க்கத் தவிர்த்த, அவர் பார்வைக்கு அஞ்சிய பெண்கள், அவர் பார்க்க விரும்பாத மாப்பிள்ளைகள், அவ்வப்போது வந்து போன பேரக் குழந்தைகள். சீக்கிரமே எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க என்று அவரவர் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். பிறகு ... என் மாணவியின் நிலை? தன்னந் தனியாக அவள் எப்படிச் சமாளிக்கப் போகிறாள்?

1 comment:

  1. மிக நல்ல பதிவு. எவ்வளவுதான் யோசித்தாலும் விடை தெரியாத கேள்விகள். இச்சமயங்களில் சாத்திரத்தை நம்பு என்று சொல்கிறது இந்து சமயம். எனக்குத் தெரிந்த சில நண்பர்களில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தர் மார்வலியால் போய்விட்டார். திடகாத்திரமான நபர். ஜெர்மனியில் ஒரு கல்வியாளர். இப்படித்தான் திடுதிப்பென்று. அவரது ஜெர்மன் மனைவி கூப்பிட்டவுடன் வந்து சேராத முதல் உதவி துறையை இன்னும் பழித்துக்கொண்டிருக்கிறாள். ஆக்ஸ்போர்டில் 18 நாள் கோமாவிலிருந்து மீண்டவர் கதை கேட்டேன். என் நண்பன் சோமுவை கோமாவில் இருக்கும் போது உயிருதவிச் சேவையை நிறுத்தி... (கருணைக் கொலையா?). பேசினால் துக்கம் வரும்! உங்கள் மாணவியின் அப்பாவின் பிடிவாதம் அசட்டுத்தனம். தன் வாழ்வே தன் கையில் இல்லாத போது, பெண்களின் வாழ்வு தன் கை விட்டுப் போய்விட்டது என்று வீம்பு செய்வது, என்ன புத்திசாலித்தனம்? எல்லாம் இறுதியில் கதையாய், பழம் கனவாய். ம்ம்..என்ன சொல்ல?

    ReplyDelete