Friday, October 14, 2011

"வடசொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 6


இந்தப் பதிவில் என் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல விருப்பம். ஆனால், என் கருத்தை யார்மேலும் திணிப்பது இங்கே நோக்கமில்லை!

தமிழருக்கு, ஏன், இந்தியாவில் எல்லாருக்குமே, எந்த ஒன்றையும் "முழுமை"யாகப் பார்க்கத் தோன்றாது. எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துக் கூறுபோட்டு அலசி ஆராய்ந்து பார்த்துவிடவேண்டும்!

முப்பத்து முக்கோடி தேவர்கள், மூன்று கடவுளர், நால்வகை வருணங்கள், நான்கு/ஐந்து வகை நிலங்கள், ஆறு வகைச் சமயங்கள், ஏழு கன்னியர், எட்டுத் திசைகள், ஒன்பது கோள்கள், ... 

அப்பப்பா! புரியாதவருக்குத் தலை சுற்றும். 

எந்த ஒன்றையும் இந்த மாதிரிப் பிரித்துப் பிரித்துப் பிரித்துக் காண முயலுவது ஏன்? எதையும் தன்னால் அலசிப் பார்த்துவிட முடியும் என்ற ஒரு பெருமிதம், திமிர்ப்பு, மகிழ்ச்சி, மிதப்பு, துடிப்பு, துள்ளல் ... இருக்குமோ? 

இந்த வகைப் பிரிவுகளால் எந்த ஒரு குறிப்பிட்ட துறையில் அறிவு பெருகினாலும் ... அந்தப் பிரிவுகள் ஏற்படுத்தும் குழப்பங்களும் உண்டு! 

எந்தத் துறையிலும் முன்னோர் செய்த பிரிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதோ, இல்லை தவறு என்று மறுப்பதோ, மீண்டும் அவற்றை மாற்றி இன்னொரு வகைப் பிரிவு முறையை அமைப்பதோ ... எல்லாமே பிற்காலத்தவருக்கு இருக்கும் பிறப்புரிமை!

இலக்கணமும் இந்த வகைப் பகுப்பிலிருந்து தப்பிக்கவில்லை.

++++++++++++++++++++++++++++++ 

"சொல்" என்பதை எப்படி வகைப் படுத்தலாம் என்று பார்த்தார் அந்தத் தொல்காப்பியர்.

அவர் கால வழக்கப்படி, பிற அறிஞர்கள் "சொல்" என்பதை எப்படி வகைப்படுத்தினார்கள் என்று பார்த்தார். அதற்கப்புறம் அந்த அறிஞர்கள் சொன்னபடியே தாமும் சொல்கிறார்; அதை ஒத்துக்கொள்ளவும் செய்கிறார், எவ்வளவு பெருந்தன்மை, பாருங்கள்!

அவ்வழியே ...

முதலில் "சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டு வகைப்படும் என்று அது பற்றி அறிந்தவர்கள் சொல்லுவார்கள்" என்று தொல்காப்பியர் சொல்கிறார். 

"சொல் எனப்படுப பெயரே வினை என்று
ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே"

அப்படிச் சொன்னவுடனே "இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அந்தப் பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டையும் சார்ந்து வரும்" என்றும் சொல்லிவிடுகிறார். 

"இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப"

ஆங்? அது என்ன?

இங்கே எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ...

தொல்காப்பியர், அவருக்கு முன்னோர் அல்லது அவர் காலத்துப் பிற அறிஞர் சொன்னபடி, "சொல்" என்பதைப் பெயர், வினை, இடை, உரி என்று நான்கு வகையாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். 

அதே தொல்காப்பியர் ... இன்னோர் இடத்தில் ... மற்றவர் சொன்னதாகச் சொல்லாமல், தாமே பகுத்துச் சொல்லுவதுபோல ... சொற்களை இன்னும் 4 வகையாகவும் சொல்கிறார் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று. 

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

இந்தப் பதிவிற்கு முற்பட்ட பதிவுகளில் இந்த இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் இவை பற்றிப் பார்த்தோம்

இது என்ன கதையாய் இருக்கு? மொதல்லெ சொல்-க்ங்றது 4 வகை-ன்னு சொல்லிட்டு, அப்றம் இன்னொரு 4 வகையெச் சொன்னா? அப்ப ... சொல் 4 வகையா? 8 வகையா? அதெத் தெளிவாச் சொல்லணுமில்லே?

மிக நல்ல கேள்வி!

பாருங்க ... 

இந்தத் தொல்காப்பியர் மொதல்லெ ... அவர் காலத்துலெ "சொல்" என்பதை எப்படி வகைப் படுத்திப் பார்த்தார்கள்-னு சொன்னார் -- பெயர், வினை, இடை, உரி என்று 4 வகையாக. 

அதுக்குப் பிறகு அவராகவே இன்னொரு கோணத்திலிருந்தும் சொற்களை வகைப்படுத்திக் காட்டுகிறார் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று.

பார்த்தவுடனே இந்த இரண்டுவகைப் பகுப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரிகிறது, இல்லையா?

முதல்வகைப் பகுப்பு (பெயர், வினை, இடை, உரி) இலக்கண அடிப்படையில் உண்டானது.

இரண்டாவது வகைப் பகுப்பு (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்) சொற்கள் வழங்கும் முறை, இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

எளிமையான ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... 

The former categorization is based on the grammatical aspects of words while the latter is based on the usage/meaning and geographical origin of words.

ஆச்சா?

தொல்காப்பியரின் பகுப்பு மிகவும் துல்லியமானது. இந்த முறைப் பகுப்பில் எந்த வகைச் சொல்லும் தமிழ்ச் செய்யுளிலிருந்து தவிர்க்கப்படவேண்டியதில்லை என்று நான் புரிந்துகொள்கிறேன். குறிப்பாக ... திசைச்சொல்லையும் வடசொல்லையும் தொல்காப்பியர் விலக்கவில்லை; அவையும் தமிழ்ச்செய்யுள் செய்ய ஏற்ற சொற்களே என்று தெளிவுபடுத்திவிட்டார்.

அப்பொ ... 'தொல்காப்பியம் தொல்காப்பியம்'-னு அடிச்சுக்கிறவங்க தொல்காப்பியர் சொன்னதுபோலவே வடசொல்லையும் தமிழ்ச்செய்யுளுக்கு ஏற்ற ஒரு சொல் வகை ... அப்பிடித்தானே பாக்கணும்? அதுதானே நேர்மை?

எனக்கு அப்பிடித்தான் தோணுது. ஆனா ... காலப்போக்கிலே ... என்ன ஆகுது-ன்னா ...  

தொல்காப்பியருக்குப் பிற்காலத்தில் ... நன்னூல் என்ற இலக்கணத்தில் இந்தச் சொல் பகுப்பு முறை சிறிது வேறுபட்டிருக்கிறது. ஒருவேளை அந்தப் பகுப்பைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளாமல்தான் "வடசொல்" என்றால் தமிழுக்கு ஆகாது என்று சிலர் நினைக்கிறார்களோ, தெரியவில்லை.

(தேவையானால் ... இயன்றபோது ... தொடரும்)

மொழியியல் ஆய்வு ...

இன்றைய இணைய மின்னுலகில் மொழியியல் ஆய்வு தாறுமாறாகப் போய்க் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாம். நூறாயிரம் கோடி முறைக்கும் மேலே ... பல இணையங்களில் புகுந்து ... மறுபடியும் மறுபடியும் ... தன் கருத்தையே முன்வைத்துக்கொண்டிருக்கும் காலம் இது.

இந்த நாட்களில் ... என் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய வரலாற்று மொழியியல் பேராசிரியர் ஹென்றி ஹோனிக்ஸ்வால்ட் (Henry Hoenigswald) அவர்களின் கருத்துச் செறிவான நூலிலிருந்து சில பக்கங்கள் இங்கே.


கன்னா பின்னா என்றும் ... தாறுமாறாகவும் ... கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றும் ... வரலாற்று மொழியியல் ஆய்வில் ஈடுபடுகிறவர்களைத் தலை வணங்க வைக்கும் நூல் இது.

அந்த ஆசிரியரிடம் கற்றதனால்தான் ... இன்றும் நேர்மையான மொழியியல் ஆய்வில் ஈடுபடுவதற்கு ஏற்ற அறிவுத்தேர்ச்சி இல்லை என்று எனக்குத் தோன்றினால் ... பண்போடு விலகி நிற்கிறேன். கற்றது கைம்மண் அளவே!

Wednesday, October 12, 2011

எழுத்துக் குறியீடுகள் ...

ஆங்கிலத்தில் punctuation என்பது தமிழில் எப்படிக் கையாளப் பெறுகிறது (அல்லது, கையாளப் பெறலாம்) என்று நினைக்கிறவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் ஒரு நல்ல நூல் "சந்தி குறியீட்டு விளக்கம்." 
இதை வெளியிட்டவர் சென்னையில் இருந்த எஸ். ராஜம் பதிப்பகத்தார். அவர்கள் இப்போது "சாந்தி சாதனா" என்ற பெயரில் இயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தப் புத்தகத்திலிருந்து ("சந்தி குறியீட்டு விளக்கம்") ஒரு சில பக்கங்கள்:



Sunday, October 9, 2011

புறநானூற்றில் ஒரு குரல் ...

புறநானூற்றில் 3 பாடல்கள் (83-85) நக்கண்ணையார் என்ற பெண்ணின் பெயரோடு இணைத்துக் காணப்படுகின்றன.

சங்க இலக்கியப் பாடல்களின் பதிப்புகளின்வழி, இந்தப் பாடல்களின் "திணை" என்பது "கைக்கிளை" எனவும் "துறை" என்பது "பழிச்சுதல்" எனவும் தெரியவருகிறது.

"திணை" என்றால் என்ன? "துறை" என்றால் என்ன என்ற ஆய்வு இங்கே தேவையில்லை, அதற்கு நேரமும் இல்லை. இந்தப் பதிவைப் படிப்போருக்கு அந்த அடிப்படைப் பொருள் தெரியும் என்ற நம்பிக்கை! 

"கைக்கிளை" என்றால் என்ன என்று மட்டும் இங்கே திரும்பவும் சொல்லிப் பார்ப்போம்.

"கைக்கிளை" என்பது பற்றித் தொல்காப்பியர் சொன்னது என்ன என்பதை விளக்குவது கொஞ்சம் ஆழமானது. அதனால் இங்கே "கைக்கிளை"யின் கருத்தை எளிமைப்படுத்திப் பார்ப்போம்.

பல முன்னோர் சொன்னபடி, "கைக்கிளை" என்பது "ஒருதலைக் காமம்." அவ்வளவே. 
நம் போன்ற பின்னோர் புரிந்துகொள்ளவேண்டுமானால் ... "கைக்கிளை" என்பது "ஒருதலைக் காமம்" என்ற உணர்வை வெளிப்படுத்திப் பாடல் போன்ற கலைகளில் சொல்வது. 

இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் ... ஒருவர் (A) இன்னொருவர் (B) மேல் ஆசை கொண்டு, அந்த உணர்வைப் பற்றி ஏதோ தனக்குள் சொல்லிப் புலம்புவது; ஆனால், அந்த இன்னொருவர் (B) அந்த ஒருவரின் (A-யின்) ஆசையைப் புரிந்துகொண்டு தனக்கும் அதேபோல அந்த ஒருவர் (A) மேல் ஆசை இருக்கா இல்லையா-ங்க்றதெ தெரிவிக்காமல் இருப்பது. அந்த இன்னொருவருக்கு (B-க்கு) அந்த ஒருவரின் (A-யின்) ஆசையைப் பற்றித் தெரியாமலே போகலாம். அப்படிப்பட்ட நிலையில் ... ஒருவர் (A) தன் ஆசையைப் பற்றித் தனக்குள் சொல்லிக்கொள்வதும் அது இன்னொருத்தருக்கு (B-க்கு)  தெரியாமல் இருப்பதும்தான் "கைக்கிளை" என்று தோன்றுகிறது.

ம்? புரியலையே?

அதாவது ... ஒருத்தர் மட்டும் இன்னோருத்தர்மேலே ஆசெ வச்சு, அதெ வெளிப்படுத்திச் சொல்றது; ஆனா அந்த ஆசைக்கு ஏத்தபடி அந்த இன்னோருத்தர் இந்த இவர் மேலே ஆசைப்படாம இருக்கிறது. இதுதாங்க "கைக்கிளை"-ங்கிற "திண"யின் அடிப்படை. சரியா?

இப்ப ஒரு புறநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்.

+++++++++++++++++++++++++++++++++ 

புறநானூறு 83
---------------------
அடி புனை தொடுகழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;
என்போல் பெரு விதுப்பு உறுக! என்றும்
ஒருபால் படாஅதாகி
இருபால் பட்ட இ-ம்-மையல் ஊரே!

[சுருக்கமான பொருள்: காலில் கழல் அணிந்த, கருமையான தாடியை உடைய, அந்தக் காளைக்காக என் தொடியைக் கழட்டி வைத்துவிடும் செயலைச் செய்யமுடியாமல் என்னைப் பெற்றவள் பொருட்டு அஞ்சுகிறேன். அதோடு, வெல்லும் வலிமை உடைய அவன் தோளைத் தழுவலாம் என்றாலோ ... பொது மன்றத்தை நினைத்து நாணம் கொள்கிறேன். என்ன செய்ய? என்னைப்போலவே மயங்கி, குழம்பிப்போன இந்த ஊரும் மிகவும் நடுங்கித் தொல்லைப்படட்டும்.] 

என்ன நடக்கிறது இங்கே? 

ஒரு பெண் தன்னுடையை ஊரை (== ஊராரை) ... திட்டிப் பழிக்கிறாள்.

ஏன்?

அந்த ஊரில் ஏதாவது ஒரு செய்தி என்றால் ... ஊரார் அதைப் பற்றி ஒரே மாதிரி நினைத்து ஒற்றுமையாக நடப்பதில்லை. எப்போதும் இரண்டுபட்ட பிளவுதான். அப்படிக் குழம்பி, மயங்கிப்போன ஊர்; கருத்து ஒற்றுமை இல்லாத ஊர் அது. 

அந்த ஊரை இவள் எப்படிப் பழிக்கிறாள்?

என்னைப்போலவே இந்த ஊரும் என்ன செய்வது என்று தெரியாமல் பரபரப்புடன் நடுங்கட்டும். 

இவளுக்கு என்ன கேடு?

இவளுக்கு ஓர் இளைஞனின் மேல் ஆசை உண்டாகிறது. ஆனால் அந்த ஆசையை வெளிப்படுத்த முடியவில்லை.

ஏன்?

1. தன்னைப் பெற்றவளைப் பற்றிய அச்சம். அதாவது ... இவளுக்கு அவன்மேல் ஆசை வந்தது என்று தெரிவிக்கவேண்டுமானால், இவள் அணிந்துகொண்டிருக்கும் "தொடி" என்ற தோள் வளையைக் கழற்றி வைத்துவிடவேண்டும். அப்படித் தெரிவிக்க இவளுக்கு அச்சம்; குறிப்பாக ... தன்னைப் பெற்ற தாய் என்ன சொல்லுவாளோ, என்ன செய்வாளோ என்று அச்சம்.

2. ஊர் மக்கள் பற்றிய அச்சம். அதாவது ... அவனை நெஞ்சாரத் தழுவிக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் ... அவள் வாழும் சமுதாயத்தில் பொது மக்கள் மன்றத்தில் ... அது பெரும் தவறாகக் கருதப்படும். 


இப்படி ... இவளுக்கு "இரண்டும் கெட்டான்" நிலை. அதைத்தான் -- (நம் காலத்துக் கவியரசர் கண்ணதாசன் மொழியில் சொல்லப்போனால்) -- தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாமல் ... தன் உணர்வுக்கும் தான் செய்ய முடிவதற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை -- இப்படி வெளிப்படுத்துகிறாள்.
 
++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு: இங்கே இந்தப் புறநானூற்றுப் பாடலுக்கான என் விளக்கவுரை மரபு வழிப்பட்ட உரைகளிலிருந்து வேறுபட்டது.  
கேள்வி:

1. "தொடி கழித்திடுதல்" என்பது எந்த வழக்கத்தைக் குறிக்கிறது? அந்தக் காலச் சமுதாயத்தில் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்?
2. "கைக்கிளை" என்பது எப்படிப் புற இலக்கியத்தில் (== புறநானூற்றில்) இடம் பெறுகிறது?