Wednesday, March 23, 2011

காமம் சான்ற கடைக் கோட் காலை ... (பகுதி 3)

கருத்துக்குரிய தொல்காப்பிய நூற்பாவைப் பார்ப்போம்.

நூற்பா
---------
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

+++++++++++++++++++++++++++++

இந்த நூற்பாவில் வரும் பெயர்ச் சொற்கள்
----------------------------------------------------
வரி 1-இல்: காமம், கடை, கோள், காலை 
வரி 2-இல்: ஏமம், மக்கள்
வரி 3-இல்: அறம், மக்கள், கிழவன், கிழத்தி
வரி 4-இல்: சிறந்தது, பயிற்றல், இறந்தது, பயன்

(குறிப்பு: "கோள்," "பயிற்றல்" என்பன தொழிற்பெயர்.)


இந்த நூற்பாவில் வரும் வினைச் சொற்கள்
------------------------------------------------------
வரி 1-இல்: சான்ற
வரி 2-இல்: சான்ற, துவன்றி
வரி 3-இல்: புரி

+++++++++++++++++++++++++++++

பெயர்ச் சொற்களின் பொருள்:
--------------------------------------

காமம் - காமம்
கடை - இறுதி நிலை
கோள் - மேற்கொள்வது, ஏற்றுக்கொள்வது
காலை - பொழுது, பொழுதில், காலத்தில்
ஏமம் - பாதுகாப்பு
மக்கள் - மக்கள்
அறம் - அறம்; (இல்லறம், துறவறம் -- இவை இதன் வகைகள்)
கிழவன் - (இல்லத்துக்கு, மனைவாழ்க்கைக்கு) உரிமையாளன்
கிழவி - (இல்லத்துக்கு, மனைவாழ்க்கைக்கு) உரிமையானவள்
சிறந்தது - (இதுவரை இருப்பவைகளுள் /செய்தவைகளூள்) மேம்பட்டது, (இதுவரை இருப்பவைகளுக்கு / செய்தவைகளுக்கு) அப்பாற்பட்டது
பயிற்றல் - பயிற்சி கொடுப்பது
இறந்தது - இதுவரை இருந்தது / நிகழ்ந்தது
பயன் - பயன்


வினைச் சொற்களின் பொருள்:
--------------------------------------
சான்ற - நிறைவடைந்த; (சான்ற < சால் 'நிறைவு')
துவன்றி - கூடி, ஒன்றாகச் சேர்ந்து இருந்து
புரி - செய்யும், நிகழ்த்தும்

+++++++++++++++++++++++++++++++
நூற்பா வரிகளின் சுருக்கமான பொருள்
------------------------------------------------

வரி: காமம் சான்ற கடைக்கோட் காலை
பொருள்: காமம் நிறைவடைந்த இறுதி நிலையை ஏற்றுக்கொள்ளும் காலத்தில்

வரி: ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
பொருள்: பாதுகாப்பு நிறைந்த மக்களோடு கூடி இருந்து

வரி: அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
பொருள்: அறம் செய்கிற மக்களோடு (== மக்களுக்கு), கிழவனும் கிழத்தியும்

வரி: சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
பொருள்: (இதுவரை செய்த செயல்களுக்குள்) மேம்பட்டதைக் கற்பித்தலே, இறந்த காலத்துச் செயல்களினால் உண்டாகும் பயன்.


நூற்பாவின் சுருக்கமான பொதுப் பொருள்
----------------------------------------------------
கிழவனும் கிழத்தியும் ...
(தங்கள்) காமம் நிறைவடைந்த இறுதி நிலையை ஏற்றுக்கொள்ளும் காலத்தில் ...
(இதுவரை செய்த செயல்களுக்குள்) மேம்பட்டதை (மக்களுக்குக்) கற்பித்தலே, இறந்த காலத்தில் செய்த செயல்களினால் உண்டாகும் பயன்.

+++++++++++++++++++++++++++++

இதிலிருந்து .... நூற்பாவின் அடிகளிலிருந்து ... "வானப்பிரத்தம்" "துறவறம்" என்ற பொருள்கள் கிடைப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"சிறந்தது" என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் தத்தம் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அவ்வளவே.

அதோடு, "பயிற்றல்" என்ற சொல் இலக்கணப்படிப் பிறவினைச் சொல். அது 'பிறருக்குக் கற்பித்தல்' என்ற பொருள் தருவதாகவே எனக்குப் படுகிறது. ஆனால், இதுவரை யாரும் அதைக் கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை.

(முற்றும்)

Tuesday, March 22, 2011

காமம் சான்ற கடைக் கோட் காலை ... (பகுதி 2)

இப்போதைக்கு ... என்னிடம் எல்லாத் தொகாப்பிய உரைகளும் இல்லை. இளம்பூரணர் உரை மட்டும் இருக்கிறது.


இளம்பூரணர் "சிறந்தது பயிற்றலாவது அறத்தின்மேல் மன நிகழ்ச்சி. சூத்திரத்தால் பொருள் விளங்கும்" என்று மட்டும் சொல்லியிருக்கிறார்! பல இடங்களில் இவர் ரொம்ப விளக்கமாட்டார்.

பதிப்பாளர் அடிக்குறிப்பிலிருந்து நச்சினார்க்கினியரின் உரை கொஞ்சம் தெரிகிறது:

"சிறந்தது -- அறம் பொருள் இன்பத்திற் சிறந்த வீட்டின்பம். சான்ற காமம் என்றார், நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. ஏமஞ்சான்றவாவன - வானப்பிரத்தமும் சந்நியாசமும்."

இங்கே "ஏமம் சான்ற" என்பதைக் கொண்டு கூட்டி, "சிறந்தது பயிற்றல்" என்பதோடு சேர்த்த மாதிரிப் படுகிறது.

ஆனால், அந்த "ஏமம் சான்ற" என்பதை இயற்கையான வரவாக அதைத் தொடரும் "மக்களொடு" என்பதோடு சேர்க்க எனக்கு விருப்பம்.
 
இந்த நூற்பாவை விளங்கிக்கொள்ள அடிப்படையாகச் சில கருத்துக்களை எண்ணிப்பார்ப்பது நல்லது.  

+++++++++++++++++++++++++
1. காமம் சாலா நிலை -- கைக்கிளை
2. காமம் ஒத்த நிலை -- ஐந்திணை
3. காமம் மிக்க நிலை -- பெருந்திணை

இதற்கு அப்பாற்பட்ட நிலை "காமம் சான்ற" நிலை. அந்த நிலையில், என்ன (== "சிறந்தது") செய்தால் ... இதுவரையில் செய்துவந்ததற்கு (== "இறந்ததன்") பயன் இருக்கும் என்பதைச் சொல்லுகிறமாதிரி இருக்கிறது இந்த நூற்பா ("காமம் சான்ற கடைக்கோட் காலை...").

"வானப்பிரத்தம்" "சந்நியாசம்" ... எல்லாம் உரையாசிரியர்கள் கொண்டுவருவது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ளச் சிறிது தயக்கமாக இருக்கிறது.
++++++++++++++++++++++

( ... தொடரும் ... )

காமம் சான்ற கடைக் கோட் காலை ... (பகுதி 1)

தொல்காப்பியத்தில் ஒரு நூற்பா ...

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் கற்பியலில் காணப்படும் நூற்பா இது.

இதன் பொருள் எனக்குத் தெளிவாகக் கிடைக்கவில்லை.

நண்பர் திரு சொ. வினைதீர்த்தான் ஐயா மூலம் சில விளக்கம் கிடைத்தது.


இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்தல் மனையறத்தின் கடந்த காலப் பயனாகும் -- இது முனைவர் ச.வே.சு உரை. 
கணேசய்யர் பதிப்பு: முன்பு இல்லறம் நிகழ்த்திய தலைவனும் தலைவியும் பின்னர் துறவறம் நிகழ்த்தி வீடு பெறுப என்கிறது.
இறந்ததின் பயன் -- நூலில் முற்கூறிய இல்லறத்தின் பயன்.
சான்ற காமம்- நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற சான்ற என்றார்.
ஏமம் சான்றவாவன-- வானப்பிரத்தமும் சன்னியாசமும்- மெய்யுணர்ந்து வீடு பெறுபவ என்றார்.


இந்த நூற்பாவில் ... "சிறந்தது பயிற்றல்" என்றால் என்ன என்று ஒரு கேள்வி. அதற்குத் தகுந்த விடை இன்னும் கிடைக்கவில்லை.

(... தொடரும் ...)