Friday, January 21, 2011

வியப்பா? வெறுப்பா?

"மெலிந்த மனம்" உடையவர்கள் இந்தப் பகுதியைப் படிக்கவேண்டாம் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்! ஏனென்றால் இது ... இது ... மனித உயிர்களால் வெல்ல முடியாத ஒரு நிகழ்வைப் பற்றியது.

"சாவு," "இறப்பு" -- எப்படி வேண்டுமானாலும் அந்த நிகழ்வைச் சொல்லுவோம்.

அந்தக் கொடுமையான நிகழ்வு என் வாழ்க்கையை நான் நினைக்காத வகையில் மிகவும் மிகவும் மிகவும் தாக்கியிருக்கிறது. ஆமாம், என் தாய் வயிற்றில் பிறந்த ஓர் இளையனை ("தம்பி") அவனுடைய 3-ஆம் வயதில் இழந்தது; என் தந்தையை அவருடைய 36-ஆம் வயதில் இழந்தது -- இந்த எல்லாமும் என் 15 வயதுக்குள் முடிந்துவிட்ட பாடு. செத்த உடம்பு ஒன்றை 15 வயதில் தீண்டிக் குமுறி அழுவேன் என்று கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை; நடந்தது.

அந்த வகையான இழப்பு சும்மாவா போகும், அதுவும் பாழாய்ப்போன நம் தமிழ்ச் சமுதாயத்தில்?

"கணவன்" என்ற ஆண் துணை இல்லாத பெண்ணாக ... "அடவு" இல்லாத மாமனாருடன் ஒத்துப்போய் ... எஞ்சியிருந்த இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு என் அம்மாவுக்கு! பொறுமைக்கும் விவேகத்துக்கும் விதி சொன்னவர்போல் வாழ்ந்தவர் என் அம்மா.

சும்மா சொல்லக்கூடாது ... நம்முடைய சில "தமிழ்" மரபுகள் அமோகமானவை! விதவைகளுக்கு என்று ஒரு விதி, மற்ற பெண்களுக்கு என்று ஒரு விதி, ஆண்களுக்கு என்று ஒரு விதி!

இந்த விதிகளைப் பார்த்த சிறுவயதிலிருந்தே எனக்கு இந்தச் சமுதாயத்தின்மேல் அடங்காத கோபம்.

ஆனால் ...

பெண்கள் "உணர்ச்சி வசப்படுபவர்கள்"; அவர்கள் "கோபம்" கொள்ளக்கூடாது -- இந்த மாதிரியெல்லாம் தாராளமாகச் சொல்லிவிடும் இந்த அருமையான மரபு! காசா பணமா ... இந்த மாதிரியெல்லாம் முத்துக் கருத்துக்களை உதிர்க்க! சொன்னவர்கள் கூட்டம் மட்டும் ஏதோ தாங்களும் அந்தப் "பெரிய மனுச"க் கூட்டத்தில் சேர்த்தி என்று உள்ளுரத் திமிரிக்கொண்டிருக்கும்!

இந்தச் சமுதாயக் கருத்துப்படி ... பெண்களுக்குக் "கோபம்" வரக்கூடாது, தெரியுமா?! ஏன்? அது, அந்தக் "கோபம்" என்பது ... ஆண் உருவம் கொண்ட முனிவர்களுக்கே உரிய சொத்து!  எவனும் (I mean anyone, any male, even a lousy one) ... "முனிவன்" ஆனால் .... அவனுக்கு நல்ல license! அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் -- அவன் காம உணர்ச்சி வசப்பட்டால்கூட அது "மகா பெரிய முனிவர் உணர்ந்த உணர்ச்சி; பட்டறிவு. ஆனாலும் அவருடைய 'முனி'த் தன்மை குறையவில்லை" என்ற விளக்கம் கிடைத்துவிடும்! எல்லாரும் கொண்டாடுவார்கள்! ஏன்? "அவன் முனிவன், Don't you understand!"

கடவுளே! நல்லவேளை ... இந்தச் சமூகத்தில் நான் ஆணாகப் பிறக்கவில்லை! :-) நல்லது செய்வதை நான் என் சாதாரண மனிதப் பிறவிக்கு, அதிலும் மகா மட்டமான பெண் பிறவிக்கு, ஏற்றபடியே செய்துவரப் பார்க்கிறேன்.

பெண்ணாகப் பிறந்ததால் குறையொன்றும் இல்லை! ஏன் ... எல்லாம் வல்ல அந்த மகா பெரிய முனிவர்களையோ அல்லது அந்த முனிவர்களின் காலில் விழுந்து வணங்குகிறவர்களையோ ... "பிரசவம்" என்ற கடுமையான தவத்துக்கு ஆளாக்குங்களேன், பார்க்கலாம்! ஒரு சின்ன gal stone  மூத்திரப் பையிலிருந்து வெளியேறும்போது படும் சிரமத்தைக்கூட அந்த மாதிரி மகாப் பெரியவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது! சும்மா ... "தாய்மை ஒரு தவம்" என்றெல்லாம் பேசிப் பயனில்லை! சும்மா .... வெத்துப் பேச்சில் பயன் இல்லை! பாடுபடும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கோபப் படும் பெண்களை மதித்து அவர்கள் ஏன் அப்படிக் கோபப்படுகிறார்கள் என்று பார்த்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுங்கள்! சும்மா "துர்க்கை / காளி" அம்மனை வழிபட்டால் மட்டும் போதாது!

இங்கே இந்த இடுகை முனிவர்களைப் பற்றியது அன்று. அந்த முனிவர்களையும் வெல்லும் இன்னொன்றைப் பற்றியது.

*********************************


அண்டம், உலகு ... என்று பரந்து கிடக்கும் ஒரு படிவை மனிதனின் அறிவு அளந்து பார்க்க முயல்கிறது. இன்று நேற்றில்லை, காலம் காலமாக இந்த முயற்சி இருந்துவருகிறது. அதனால் நீளம், அகலம், குறுக்கம், உயர்வு, தாழ்வு, ஆழம், மட்டம், பெருமை, சிறுமை, முன், பின், மேல், கீழ், இடது, வலது, ஓரம், நடு, ... இப்படிப் பல வகையான அளவைக் கோட்பாடுகளும் கிடைத்தன.

அதோடு ... ஒவ்வொரு பரிமாணத்தை உணரும்போதும் அதன் எல்லை எது என்று கண்டுபிடிக்கவும் அந்த எல்லையை எப்படி விளக்குவது என்று முயலவும் ஆர்வம். ஒவ்வொருவர் உள்ளத்திலும் "இருக்கிற எல்லாத்துக்குள்ளேயும் இதுதான் பென்னம் பெரிசு, இதுதான் சின்னஞ் சிறிசு. எல்லாரையும்விட இவர்தான் மிகவும் உயர்ந்தவர், இவன்தான் மிகவும் தாழ்ந்தவன்..." இப்படியும் ஒரு கருத்துப் போர்.

இதுவும் ஒருவகையில் "போட்டி" மனப்பான்மைதானோ?

பலருக்கும் தெரிந்த சங்க இலக்கியப் பாடல் ஒன்று -- புளித்துப்போகும் அளவுக்கு அடிக்கடிக் கேட்டிருக்கலாம். தலைவனுடன் தான் கொண்ட நட்பை அளந்து பார்க்கிறாள் ஒரு பெண். தான் கண்ட முடிவைச் சொல்ல நினைக்கிறாள். அந்தத் தலைவியின் முயற்சி இது.

அவள் தன்னைச் சுற்றிப் பார்க்கிறாள். கண்ணுக்கு எட்டியவரை எது பெரிதாக இருக்கிறது, எது உயரமாக இருக்கிறது, எது எங்கும் பரவி நிறைகிறது ... இப்படித் தேடித் தேடிக் கண்டுபிடித்து அவள் அடைவது என்ன உணர்ச்சி? அந்த உணர்ச்சி வெறும் மகிழ்ச்சி இல்லை, தன் மனத்துக்கு இனியவனுடன் அவள் கொண்ட நட்பு "எல்லாத்தையும் விட"ச் சிறந்தது என்று கண்டுபிடித்த பெருமிதச் செருக்கு! அந்தச் செருக்கில் எல்லைகளுக்கு இன்மை (non existence) காண்கிறாள்!

"நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே ...
... ... நாடனொடு நட்பே"

[சுருக்கமான பொருள்: அந்த மலை நாடனோடு நான் கொண்டிருக்கும் நட்பு ... நிலத்தைவிடப் பெரியது. வானத்தைவிட உயர்ந்தது. தண்ணீரை விட நன்றாகப் பரவி நிறைவது.]

இதே போல ... ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருள்களைச் சேர்த்துப் பார்ப்பதையும் சங்க இலக்கியம் மிக அழகாகக் காட்டுகிறது.

பலருக்கும் தெரிந்ததே ...

"மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"

[சுருக்கமான பொருள்: மாட்சிமை அடைந்ததால் 'பெரியவர்கள்' என்று பெயர் பெற்றவர்களை அதற்காக வியப்போடு போற்ற மாட்டோம்; அப்படியே அவர்களை ஒருவேளை போற்றினாலும் ... (மாட்சி பெறாததால்) 'சிறியவர்கள்' என்று இருக்கிறவர்களை ஒருபோதும் இகழவே மாட்டோம்.]

எவ்வளவு சிறப்பான, நயத்தக்க நாகரிகம்!!

பலரும் பலகாலமும் படித்துப் பழகிப் போன இந்தக் கருத்துக்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்த அளவிற்கு அறிமுகம் ஆகாத வேறு ஒரு கருத்தைப் பார்ப்போம். அறிமுகம் ஆகியிருந்தாலும் இன்னும் ஒரே ஒருமுறை மீண்டும் நினைத்துப் பார்ப்பதில் தவறு இல்லை.

'வெற்றி தோல்விகளின் எல்லைகள் எவை?' என்று யாராவது கேட்டால் நம்மில் ஒவ்வொருவருக்கும் பல எண்ணங்கள் நிழலாடும், இல்லையா?

'ஊருக்கெல்லாம், நாட்டுக்கெல்லாம், உலகுக்கெல்லாம் நெடுங்காலமாக ... கவலைப்படாமல், உணர்ச்சியில்லாமல் கொடுமை செய்துகொண்டிருக்கும் ஒருவனை/ஒருத்தியை/ஒன்றை எப்படி அடக்குவது, எப்படி ஒடுக்குவது, எப்படி அடியோடு ஒழித்துக்கட்டுவது?' என்று கேட்டால் ஒவ்வொருவரின் கற்பனைக்கும் அளவே இல்லாமல் போகும்!

'தோல்வியை எப்படி ஏற்றுக்கொள்வது அல்லது எப்படி மறுப்பது?' என்று கேட்டால் வாயடைத்தும் போகலாம்!

கற்பனையை அவிழ்த்துவிட்டுத்தான் பாருங்களேன்.

*****************************

இது என்ன இடம்? எங்கே பார்த்தாலும் முதிர்ந்த கள்ளிச் செடியாக இருக்கிறதே.

பறவைகள் உண்டா?
ஓ, உண்டே. அதோ, இந்தப் பட்டப்பகலில் கூட ஓயாமல் கூவுகிறதே, அதுதான் இங்கே பறவை; அதன் பெயர் கூகை.

மக்கள் நடமாட்டம் உண்டா?
ஆமாம், கோணல் மாணலாக ஒழுங்கில்லாமல் வளர்ந்த பல்லைக் காட்டிக்கொண்டு நிறையப் பேய்ப் பெண்கள் திரிவார்கள்!

இங்கே இரவில் இருட்டாக இருக்குமா, விளக்கு உண்டா?
உண்டு, உண்டு, எப்போதும் எரியும் விளக்குக் கூட இருக்கிறது. அதோ ... பிணங்கள் எரியும் தீ இருக்கிறதே, அதுதான் விளக்கு.

பாட்டு, கூத்து உண்டா?
ஓ, உண்டே; அதற்குமட்டும் குறைவே இல்லை. அதோ பாருங்கள் ... கடுமையான தீயில் எலும்பெல்லாம் உருகிச் சாம்பலாகிப் போய்க்கொண்டிருக்கும் பிணங்களை. அந்த இடத்தை விட்டு விலகிப் போக முடியாமல் அந்தச் சாம்பல் மேலேயே கண்ணீர் விட்டுக் கதறும் அந்தப் பிணங்களின் அன்பர்களுடைய அழுகை ஓசை கேட்கிறதில்லையா? அதுதான் இங்கே பாட்டு!

எங்கே பார்த்தாலும் மூடுபனி போல வெள்ளைப் புகை கவிந்திருக்கிறது. பார்க்கவே அச்சமாக இருக்கிறதே.

இதென்ன இப்படி ஓர் அவலமான இடம்? இந்த அருவருப்பையெல்லாம் அடியோடு போக்கி இந்த இடத்தை அழித்துத் துடைத்துத் துப்புரவு செய்துவிட்டு ஒரு நல்ல புது இடத்தை உண்டாக்க முடியாதா?

முடியவே முடியாது. இந்த இடத்தை யாராலும் கைப்பற்றி எடுத்துச் செம்மைப்படுத்தவே முடியாது. முயன்றால் தோல்விதான்.

அப்படி என்ன இதற்கு அவ்வளவு வலிமை?

வலிமையா? திறமை! இதன் திறமை மிகப் பெரியது, பழையதும்கூட.

இதோடு போரிட்டால்?
நமக்குத்தான் தோல்வி. இது நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நாம் எல்லாரும் நம் முதுகைக் காட்டிவிட்டு இல்லாமல் போய்விடவேண்டியதுதான்.

ஏன் அப்படி?
இது ஒரு மிகப் பழைய காடு. இது எல்லாருடைய முதுகுப் புறத்தையும் பார்த்துவிடும்; ஆனால் இதன் முதுகுப் புறத்தைமட்டும் யாரும் பார்த்தது இல்லை, பார்க்கவும் முடியாது. இது எல்லார் முதுகும் போன பிறகும் அவர்களுக்கு ஒரு முதுகைத் தரும்! அதாவது ... இதுவே மக்களுக்கு ஒரு முதுகாகவும் ஆகக்கூடியது. அதுதான் இதனுடைய மிகப் பெரிய வலிமையும் திறமையும்!

இவ்வளவு திறமையுடைய இதனால் செய்ய முடியாதது என்று ஏதாவது இருக்குமே, இல்லையா?
ஆமாம், ஒரே ஒன்றை மட்டும் இதனால் செய்யமுடியாது.
அதாவது ... இதன் முதுகுப் புறத்தைப் பார்த்தவர்களைமட்டும் இதனால் பார்க்கமுடியாது!

*******************************

புறநானூறு 356 (எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்)
---------------------------------------------------------------------
களரி பரந்து கள்ளி போகி-ப்
பகலும் கூவும் கூகையொடு பிறழ்பல்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந்தன்று இம் மஞ்சுபடு முதுகாடு;
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண்-நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதைக்கெல்லாம் தான் ஆய்-த்
தன் புறம் காண்போர்க் காண்பறியாதே

*******************************

"உயர்திணை" உயிர்களைப் பார்ப்போம்.

"உயர்திணை" மக்களால் என்னவெல்லாமோ சாதிக்க முடியும் -- கம்பன் ஆகமுடியும், கொம்பன் ஆகமுடியும், காட்டான் ஆகமுடியும். பிறர் முதுகைக் கூடப் பார்க்க முடியும். ஆனால் தன்னுடைய முதுகை மட்டும் தன் சொந்தக் கண்ணால் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க வேண்டுமானால் ... ஓர் "அஃறிணை"யின் புற உதவி தேவை -- ஒன்றின் உருவை இன்னொன்று காட்டுகிற மாதிரியில் இரண்டு கண்ணாடிகள் வேண்டும்!

ஆனால் ... உயிர் இல்லாத ... "அஃறிணை"யான இந்தச் சுடுகாடோ அதற்கு நேர் மாறு, இல்லையா?

இந்தப் போட்டியில் யாருக்கு வெற்றி?

இந்தப் பாடலைப் பாடிய புலவருக்கு ... முதுகாட்டின் இடுக்குப் பிடியில் உயிரினங்கள் காலம் காலமாய்ச் சிக்கித் தவித்துத் தோல்வி அடைந்துகொண்டிருப்பதைப் பற்றி எழுந்த உணர்வு வெறுப்பா? வியப்பா?

எனக்குப் புரியவில்லை!

6 comments:

  1. அற்புதம்! மனதின் மறைந்து போன எண்ணங்களின் பதிவு தெரிகிறது தங்கள் எழுத்தில் அம்மா!!


    இரா.பா,
    சென்னை

    ReplyDelete
  2. "உயர்திணை" மக்களால் என்னவெல்லாமோ சாதிக்க முடியும் -- கம்பன் ஆகமுடியும், கொம்பன் ஆகமுடியும், காட்டான் ஆகமுடியும். பிறர் முதுகைக் கூடப் பார்க்க முடியும். ஆனால் தன்னுடைய முதுகை மட்டும் தன் சொந்தக் கண்ணால் பார்க்க முடியாது.>>>

    உங்கள் சிந்தனைகள் உயரியது..

    சுகதுக்கங்களை சீர்தூக்கிப் பார்க்கும் விதத்தில் உங்கள் கருத்துகளோடு ஒத்துப்போகிறேன். பெண்கள் விஷயத்தில் 'எத்தைத் தின்றால் பித்து போகும்' என்பது பழைய காலத்திலிருந்து இக்காலம் வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்கள் விஷயத்தில் முன்னேறுவதற்கும், சம அந்தஸ்து பெறுவதற்கும் அவர்களுக்குப் பல சமயங்களில் ஆண்சமூகத்தை விட பெண் சமூகமே தடையாக இருக்கிறது என்பதும் உண்மை.

    நாரதர்கலகம் நன்மையில் முடியும் என்பதைப் போல முனிவர் கோபமும் நன்மையில்தான் முடிவதாக நிறைய புராணக்கதைகள் சொல்கின்றது. விஸ்வாமித்திரர் மிகப் பெரிய சாட்சி இதற்கு. இப்படியெல்லாம் பதில் சொல்வதால் உங்களை மறுத்ததாகக் கொள்ளவேண்டாம். தாருகாவன் முனிவர்களைப் பற்றிய என் பதிவு ஒன்றினை ஏற்கனவே தங்களுக்கு அனுப்பியிருந்தேன்.. என் கருத்து அதுதான்.

    ஆனாலும் ராஜம் அம்மா.. உங்களிடம் நிறைய, இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்..
    நன்றிகள் பல

    அன்புடன் திவாகர்

    ReplyDelete
  3. உங்களுக்கு எதனால் சினம் அம்மா ?
    சினம் ஆடவரின் தனி உரிமை அன்று.
    கண்ணகியின் சினம் மதுரையை எரித்தது;
    தமயந்தி தன்னை நெருங்கிய வேடனை எரித்தாள்;
    வேதவதியும் அரக்கனை சபித்தாள்; காந்தாரி கண்ணபிரானையே சபித்தாள்


    தேவ்

    ReplyDelete
  4. Gandhari believed that Krishna though had the power to prevent the war, he did not do enough in spite of having such being who he is. So, if Krishna had really willed this bloodshed could have been avoided. In anger, Gandhari cursed Krishna and said the Yadav clan would also be destroyed through an internal strife in the same way as the Pandava and Kauravas were destroyed after fighting with each other.

    She also cursed that Krishna will be a mute witness of this entire carnage. She also said Krishna would watch his entire clan perish and would himself die a cheap death like an animal

    http://en.wikipedia.org/wiki/Mausala_Parva

    Sati Devi cursed her own father; we read about Kavundi Adigal’s curse in Silappadhikaram


    dev

    ReplyDelete
  5. R.Deva's comments are true; yet they are not meant to counter her (Rajam ammal's) argumet that the Indian society has for long been chauvinistic, and ill-treated women, and did not give women the social recognition they derserved.

    Whenever I see an orphaned child or a socially handicapped woman burdened with young children and if I spend more than a minute thinking of their plight my eyes well up with tears.

    ReplyDelete
  6. ஜயபாலன் சாருக்கு நன்றி.
    உங்கள் கருத்தே என் கருத்தும்.
    பெண் கண்ணீர் சிந்தும் இடத்தில் தெய்வம் இருக்காது
    என்று எழுதி வைத்தவர்களும் அந்த முனிவர்களே.
    ஒடுக்குமுறையும், சுரண்டலும் தொடர்ந்து ஏதோ ஒரு வடிவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன


    தேவ்

    ReplyDelete