Thursday, February 3, 2011

வேறென்ன வேண்டும்?

இந்த உலகிலும் இதற்கு அப்பாற்பட்ட உலகிலும் கிடைக்காதது, அரியது, இனியது ... எது? நல்ல கேள்வி! ஐங்குறுநூற்றுப் புலவர் பேயனார் அதற்கு விடை தருவதுபோல் ஏதோ சொல்லியிருக்கிறார், பார்ப்போம்.

"அகத்திணை" என்ற சொல்லைக் கேட்ட உடனே ... பல மக்களின் கற்பனையில் 'காதல் உணர்வு சொட்டும் பாடல்/சூழல்' என்ற எண்ணமே மேலெழுந்து நிற்கும். அந்த எண்ணத்தில் தவறு ஏதும் இல்லை.

சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களில் காணும் காட்சிகள் பல. ஆனால் ... ஒத்த மனமும் உணர்வும் கொண்ட ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து இன்பமுடன் இருக்கும் காட்சிகளையா எல்லா அகத்திணைப் பாடல்களும் காட்டுகின்றன? இல்லவே இல்லை! ஆண்-பெண் இருவரும் சேர்ந்து-இல்லாத நிலையைத்தான் பெரும்பாலான பாடல்கள் காட்டுகின்றன என்று எனக்குத் தோன்றும். 

அதாவது ... பெரும்பாலான பாடல்களில் நாம் பார்ப்பது என்ன? 

காதல் என்ற உணர்ச்சியால் ஈர்க்கப்பட்ட ஓர் ஆணும் பெண்ணும் கூடி இருக்க விரும்பி அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் (குறிஞ்சித் திணையின் அடிப்படை), காதல் உணர்ச்சியைப் பகிர்ந்துகொண்டவன் பிரிந்த நிலையில் அவன் மீண்டும் வருவதற்காகக் காத்திருக்கும் பெண்ணின் நிலை (முல்லைத் திணையின் அடிப்படை), தனக்குரிய ஆடவன் இன்னொரு பெண்ணுடன் கொண்ட உறவினால் ஒருத்தி மனதில் உண்டாகும் உரிமை நெருடல்கள் (மருதத் திணையின் அடிப்படை), காதலனைப் பிரிந்த ஒருத்தி தனியே புலம்பும் நிலை (நெய்தல் திணையின் அடிப்படை), காதலன் ஒருவன் வீட்டை விட்டுப் பிரியும் நிலை அல்லது வீடு நோக்கி விரையும் நிலை (பாலைத் திணையின் அடிப்படை) ... இப்படித் தான் பெரும்பாலான பாடல்களைப் பார்க்கிறோம்.

ஒத்த மனமும் உணர்வும் கொண்ட ஓர் ஆணும் பெண்ணும் கூடியிருந்து மகிழ்ந்து கொண்டாடும் காட்சிகளை விவரிக்கும் பாடல்கள் மிகச் சிலவே! 

கணவனுக்குத் தயிர்க்குழம்பு சமைக்கும் பெண்ணைப் பற்றிய குறுந்தொகைப் பாடல் ஒன்று பலருக்கும் தெரிந்திருக்கலாம். அலுத்துப்போகும் அளவுக்கு அதைப்பற்றிப் பலரும் விளக்கம் சொல்லியிருக்கலாம்.

பிறிதொரு காட்சியை அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (அகநானூறு 5-இல்) பார்க்கிறோம். தலைவன் ஏதோ ஒரு தொழிலுக்காகப் பிரிந்து செல்ல நினைக்கிறான். கொடுமையான காட்டுவழியில் போக நினைக்கும் அவன் பிரிவை அவளால் தாங்கிக்கொள்ள முடியவே முடியாது. சிறு குழந்தையைத் தன் மார்பில் அணைத்துக் கொண்டு அவன் பக்கம் வருகிறாள் அவள்; நீர் பொங்கிவரும் கண்களுடன் அந்தக் குழந்தையின் தலையில் சூட்டிய பூவை மோந்து பார்த்துப் பெருமூச்சு விடுகிறாள். அவளுடைய பெருமூச்சின் வெம்மையில் குழந்தையின் தலையில் உள்ள பூ வாடுகிறது. அதை அவன் பார்க்கிறான். 'நான் பக்கத்தில் இருக்கும்போதே பிரிந்துவிடுவேனோ என்று கலங்கி இவ்வளவு துயரப்படும் இவள் நான் பிரிந்தால் உயிர் வாழவேமாட்டாள்' என்று உணர்கிறான்; அந்த உணர்வின் கவலையில் தன் பிரிவைத் தவிர்த்துவிடுகிறான் அவன்.

இப்படி இந்தப் பாடல்களில் அவனும் அவளும் ஓர் இடத்தில் இருக்கும் காட்சியைப் பற்றிப் படிக்கிறோம். ஆனால் அங்கே அவர்கள் இருவரும் எந்த அளவிற்கு ஒருவரை ஒருவர் தொட்டுத் தழுவி மகிழ்ந்திருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை. 

மேற்சொன்ன இரண்டு பாடல்களிலிருந்தும் வேறுபட்ட காட்சிகளை ஐங்குறுநூறு காட்டுகிறது; அது மிகவும் சுவையானது. இந்தக் காட்சிகளில் ஓர் அருமையான, மகிழ்ச்சியான குடும்பச் சூழலை உணரமுடிகிறது. இங்கே பிரிவு இல்லை. ஊடல் இல்லை. வருத்தம் இல்லை. கூடல் மட்டுமே உண்டு. தன் மகளின் அழகிய இனிய குடும்பத்தின் பொலிவைக் கண்ட ஒரு செவிலியின் மகிழ்ச்சியாக இந்த அருமையான சூழலைப் புலவர் பேயனார் பாடுகிறார். 10 குறும்பாடல்கள் (ஐங்குறுநூறு 401-410) ஒரு சிறுகதையை உருவாக்குகின்றன என்றுகூடச் சொல்லலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடல் 401:
---------------
அவள் குழந்தையோடு படுத்திருக்கும் காட்சி
--------------------------------------------------------
மறியிடைப் படுத்த மான்பிணை போல-ப்
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவின்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!

[குட்டியை (கால்களுக்கு) இடையில் தழுவிப் படுத்திருக்கும் மானின் பிணை போலப் புதல்வன் நடுவே படுத்திருக்க, அவர்களுடைய கிடக்கை உறுதியாக இனிமையானது. நீல நிறத்தில் அகன்று பரந்து விரிந்து கிடக்கும் பரப்பை வெறுக்காமல் (ஒரு சேரத்) தழுவிக்கொண்ட இந்த உலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட உலகத்திலும் இது கிடைப்பது அரிது!]


பாடல் 402:
---------------
குழந்தையைத் தாய் தழுவ, தாயைத் தந்தை தழுவும் காட்சி
-------------------------------------------------------------------------
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!

[புதல்வனை அரவணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு அவன் படுத்திருப்பது மிகவும் இனியது -- அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டிக் கிளப்பும் ஒசை போல இனியது; மிகுந்த பண்பும் உடையது!]


பாடல் 403:
---------------
மகன் சிறுதேர் உருட்டித் தளர்நடை நடந்து வருவதைக் கண்டு தந்தை மகிழும் காட்சி
--------------------------------------------------------------------------------------------------------
புணர்ந்த காதலின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதாகின்றே;
அகன் பெரும் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவல் இன்னகை பயிற்றி-ச்
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே!

[மிகுந்த பெரும் சிறப்பை உடைய தன் தந்தையின் பெயரன் ஆகிய தன் புதல்வன் சிறிய தேரை உருட்டிவரும்போது அவனுடைய தளர் நடையைக் கண்டு அவன்மேலும் விருப்பம் கொள்ளும் (தலைவனின்) உள்ளம் மிகவும் பெரியது.]


பாடல் 404:
---------------
குழந்தைக்குத் தாய் பாலூட்ட, தாயைத் தந்தை தழுவும் காட்சி
---------------------------------------------------------------------------
வாணுதல் அரிவை மகன் முலை ஊட்ட-த்
தான் அவள் சிறுபுறம் கவையினன், நன்றும்
நறும்பூந் தண்புறவு அணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழவோனே!

[குளிர்ச்சி பொருந்திய காடுகளில் நல்ல நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்திருக்கும் சிறு சிறு பாறைகள் நிறைந்து கிடக்கும் நாட்டுக்கு உரிமையாளன் அவன். ஒளிபொருந்திய நெற்றியை உடைய அரிவை (அவனுடைய) மகனுக்குப் பால் ஊட்ட, (அவன்) அவளை அவளுடைய சிறிய பின்புறத்தில் தழுவி அரவணைத்துக்கொண்டான்.]


பாடல் 405:
---------------
மகனைப் பெற்ற தாய் வீட்டுக்கு விளக்குப் போல் திகழும் காட்சி
-----------------------------------------------------------------------------
ஒண் சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற, கனைப் பெயல்
பூப்பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன் புதல்வன் தாயே

[இடித்துப் பெய்யும் மழையின் வளத்தால் பூக்கள் மலிந்த காடுகள் நிறைந்திருக்கும் நாட்டினன் அவன். அவனுடைய புதல்வனின் தாய் ஒளிவிட்டுத் திகழும் விளக்கின் சிவந்த சுடர் போல அந்த மனைக்கு விளக்கு ஆனாள்.]


பாடல் 406:
---------------
மகன் விளையாட, தாயைத் தழுவித் தந்தை இருக்கும் காட்சி
--------------------------------------------------------------------------
மாதர் உண்கண் மகன் விளையாட-க்
காதலித் தழீஇ இனிது இருந்தனனே
தாது ஆர் பிரசம் ஊதும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனே

[தேனை நுகரும் வண்டுகள் சுற்றிவரும் பூக்கள் நிறைந்த வெளியிடங்களையுடைய மலைநாடன் அவன். அழகிய கண்களை உடைய மகன் விளையாடிக்கொண்டிருக்க, அவன் தன் காதலியைத் தழுவிக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கிறான்.]


பாடல் 407:
----------------
காதலியை அரவணைத்த நிலையில் தலவன் யாழ் இசையை நுகரும் காட்சி
------------------------------------------------------------------------------------------
நயந்த காதலித் தழீஇப் பாணர்
நயம் படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென்புல வைப்பின் நாடு கிழவோனே

[தான் விரும்பிய தன் காதலியைத் தழுவியிருக்கும் நிலையில், பாணர்கள் நயமாக வெளிப்படுத்திய இசையை நுகர்ந்துகொண்டிருக்கிறான் மென்மையான நிலங்கள் நிறைந்த நாட்டின் உரிமையாளனாகிய அவன்.]
பாடல் 408:
---------------
இருவரும் இனிதே இசையைச் சுவைக்கும் காட்சி
--------------------------------------------------------------
பாணர் முல்லை பாடச், சுடரிழை
வாணுதல் அரிவை முல்லை மலைய,
இனிது இருந்தனனே நெடுந்தகை
துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே

[பாணர்கள் முல்லைத் திணையைப் பாட, ஒளி வீசும் இழை அணிந்த அவனுடைய அரிவை முல்லை மலரை அணிந்துகொண்டிருக்க, இவனோ ... வெறுப்பையெல்லாம் தீர்த்துவிட்ட தன் புதல்வனோடு சேர்ந்து இனிமையாக இருக்கின்றான்.]

பாடல் 409:
---------------
புதல்வனைத் தந்தை தழுவ, தாய் அவர்கள் இருவரையும் கட்டி அணைக்கும் காட்சி
---------------------------------------------------------------------------------------------------
புதல்வற் கவையினன் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே

[புதல்வனைக் கட்டி அணைத்தான் தந்தை; இனிய மொழி பேசும் புதல்வனின் தாயோ ... இருவரையும் கட்டி அணைத்தாள்! இப்படிப்பட்ட இவர்களின் கிடக்கை இனியது; மிகவும் பரந்துபட்ட இந்தப் பெரிய உலகில் பெறக்கூடிய பயன் அனைத்தையும் உடனே தருவது!]

பாடல் 410:
--------------
தந்தையின் மார்பில் புதல்வன் தவழுகிறான்; மனைவி பக்கத்தில்.
---------------------------------------------------------------------------
மாலை முன்றில் குறுங்காட்டின்னகை
மனையோள் துணைவியாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்ப-ப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித்தம்ம பாணனது யாழே

[மால நேரம். சிறிய காடு. இனிமையாய்ப் புன்னகைக்கும் மனைவி அவனுக்குத் துணை. அவன் மார்பில் தவழுகிறான் புதல்வன். இந்த இனிமையான பொழுதிற்கு ஒத்து இசைக்கின்றது ... பாணனின் மென்மையான யாழிசை!]

++++++++++++++++++++++++++++++++++++

'இந்த உலகிலும் இதற்கு அப்பாற்பட்ட (துறக்க?) உலகிலும் கூட இதைப் போலக் குழந்தையோடு இருக்கும் இன்பம் கிடைக்காது' -- எவ்வளவு அருமையான கருத்து (பாடல் 401)! 

தலைவியை நுகர விழையும் தலைவனின் வேட்கை, அதில் அவன் காட்டும் பொறுமை -- இந்த உணர்வுகளை வெளிப்படுத்த முறுக்கேற்றப்பட்ட யாழ் நரம்புகள் பற்றிச் சொன்னது கவிநயம் சொட்ட உளவியல் கருத்துக்களை நயமாகத் தெரிவிப்பதாகத் தோன்றுகிறது (பாடல் 402).

'புதல்வன் பிறந்த பின்னும் அவனுக்கு அவர்கள்மேல் விருப்பம் குறையவில்லை.' எவ்வளவு நுணுக்கமான கருத்து (பாடல் 403)!

"தந்தை பெயரன்" என்ற தொடரிலிருந்து இன்றைக்கு வழங்கும் "பேரன்" என்ற சொல்லுக்கு விளக்கம் கிடைக்கிறது அல்லவா (பாடல் 403).
இன்னும் எவ்வளவோ நினைத்துப் பார்க்கலாம்.

திருக்குறள் கருத்துக்களுக்கு இந்த ஐங்குறுநூற்றுப் பாடல் கருத்துக்கள் முன்னோடியோ? தெரியவில்லை. 

மொத்தத்தில் சொல்லப்போனால் ... இந்த ஐங்குறுநூற்றுப் பாடல்கள் காட்டும் சூழல் மிக மிக அழகிய இனிய குடும்பச் சூழல்; மென்மை உள்ளம் கொண்ட யாவரும் எப்போதும் விரும்பி வேண்டத்தக்க சூழல்! ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் இப்படி அமைந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!


2 comments:

  1. என்ன அருமையான உணர்வுகளை, எத்தனை நயம்படப் பகிர்ந்துள்ளீர்கள். நெஞ்சாழத்தில் இருந்து நன்றி :)

    ReplyDelete
  2. அருமையான பாடல்களின் திரட்டு. அழகான கோர்ப்பு.
    மிக இனிமையான சூழலை விவரிக்கின்றன.

    குடும்பத்தைப் பிரிந்து இருப்பவர்களுக்கு,
    குறுந்தொகையும் அகநானூறும் வேதனையை சற்று முடுக்கி விட்டாலும் ஒத்தடம் போட்டுவிடுவது போலிருக்கும்.

    ஆனால் இந்தப்பாடல்களின் இன்பம் வேதனையை மேலும் முடுக்கி விட்டால் வியப்பில்லை :-)

    //ஒத்த மனமும் உணர்வும் கொண்ட ஓர் ஆணும் பெண்ணும் கூடியிருந்து மகிழ்ந்து கொண்டாடும் காட்சிகளை விவரிக்கும் பாடல்கள் மிகச் சிலவே!
    //

    மகளைப் பிரிந்து கலங்கும் தாய், தலைவனைப் பிரிந்து கலங்கும் தலைவி என்று பல அக உணர்வுகளில் இருக்கும் உருக்கத்தை
    இறைவன் கழல்களைப் பிரிந்து தவிக்கும் வாசகர் பெருமானின் உருக்கத்தை நினைவுக்குக் கொண்டு வரும். இக வாழ்க்கையில் இருக்கும் பிரிவின் உருக்கத்திற்கும், இக வாழ்க்கையையே துறக்க முடியாமல்/வேண்டித் தவிக்கின்ற உருக்கத்திற்கும்
    இருக்கின்ற நுண்ணிய ஒற்றுமைகள் கண்டு, சில வேளைகளில் நான் வியந்துபோவது உண்டு.

    அம்மையீர், மேலும் இந்தச் சூழல் உள்ள பாட்டுக்களை எழுதுங்கள். நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete