மாதங்களில் சிறந்த மார்கழி நிறைவடையப்போகிறது.
நிலமும் நீரும் வானும் காற்றும் விசும்பும் இயற்கையின் பிற வடிவங்களும் புதுத் தெம்போடு சிலிர்த்து மிளிரும் "பொழுது" கண்முன்னே பரந்துகொண்டேயிருக்கிறது.
மண்ணுலகில் வேறு மாதிரியான சிலிர்ப்பு. வாழ்க்கையில் புதுத் தெம்பு கிடைக்காதா என்று ஏங்கியும் அதற்காகத் தவமிருந்தும் காத்திருக்கும் காளைகளுக்கும் கன்னியர்க்கும் மற்றவருக்கும் நம்பிக்கை தரும் வகையில் "தை" பிறக்கப் போகிறது.
இந்த நிலையில் ஒருவருக்கு அவர் பல நாட்களாக ஏங்கித் தவித்து வேண்டியது கிட்டியது என்றால் எவ்வளவு பூரிப்பு இருக்கும்!
"உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி" என்று உங்களிடம் யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று சிறிது நினைத்துப் பாருங்கள்.
"என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை" என்பது பலருக்கும் 'சட்'டென வரும் ஒரு நினைப்பு.
தமிழ் பேசும் குழந்தை இரு கைகளையும் பக்கவாட்டிலோ மேல் கீழாகவோ பிரித்துவைத்துக்கொண்டு, இரண்டு கைகளுக்கும் இடையில் உள்ள இடத்தை மனதில் நிறுத்தி, "இவ்ளோ பெரிசு" என்று சொல்லும்.
ஆங்கில வழிப் பேசும் குழந்தையும் தமிழ்க்குழந்தை போலக் கைகளை வைத்து, "eh big!" என்று சொல்லலாம்.
யாரானாலும் ... தன் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ... அடம் பிடிக்காத குழந்தையின் மனம் வேண்டும்!
சங்கத் தமிழ்ப் பெண்கள் இரண்டு பேர்; அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சியும் பூரிப்பும்! ஏன்? இருவரும் நெருங்கிய தோழிகள். அவர்களுடைய இயற்பெயர் தெரியாத நிலையில் அவர்களைத் "தலைவி" என்றும் "தோழி" என்றும் குறிப்பிட்டுச் சொல்வது இலக்கிய வழக்கம்.
தலவி பல நாட்களாகக் காத்திருந்தாள் -- தன் மனத்துக்கு இனியவன் வரவேண்டும் என்று. அவள் மனத்துக்கினிய தலவனைப் பல நாட்களாகக் காணோம். ஒருவழியாக ... ஒரு நாள் வந்தான் அவன்! அது தோழிக்குத் தெரிகிறது. தோழியைப் பொருத்தமட்டில் தலைவன் வந்ததுகூடப் பெரிய செய்தியில்லை; தன்னுடைய மகிழ்ச்சிதான் அவளுக்கு அவ்வளவு பெரிது!
இன்னொருவருக்காகத் தான் மகிழ்வதா?! ஆம், அதுவே உள்ளார்ந்த நட்பின் உண்மை இயல்பு!
அப்படிப்பட்ட தன் மகிழ்ச்சியைத் தோழி தலைவியிடம் எப்படி வெளிப்படுத்துகிறாள் என்பதைக் கபிலர் என்ற புலவர் ஒரு பாட்டாகச் சொல்லியிருக்கிறார். அதை இங்கே பார்ப்போம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
நிலம் மலியப் பெய்த மழையை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு வெடித்து மலர்ந்த பிச்சிப் பூவைப் போலப் பள பளக்கும் கண் விழிகள் அவளுக்கு. பிச்சிப் பூவின் செம்மையான புற இதழ் போலத் தளதளக்கும் கடைக் கண். அழகிய மாந்தளிர் போல உடம்பு.
அவளுடைய மனத்துக்கு இனியவன் மிக நெடும் தொலைவில் ... வானைத்தொட்டு ஓங்கித் தெரிகிற மலைக்காரன். எங்கே அவன்? அவனப் பல நாட்களாகக் காணவில்லை. அவனைக் காணாமல் அவள் வாடியிருக்கவேண்டும்.
அப்பாடா! அவன் இப்போது வந்துவிட்டான்! அவன் வருகை தோழியின் உள்ளத்தில் மகிழ்ச்சியைக் கிளறுகிறது.
தோழிக்குத் தாங்கமுடியவில்லை ... அவ்வளவு மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியை அப்படியே வெளியே கொட்டவேண்டும்.
நெடுந்தொலைவில் வானளாவி ஓங்கித் தோன்றும் மலை நாடன் வந்ததற்கு இவள் உள்ளம் எப்படிக் கிளர்ந்து எழுகிறது?
உள்ளத்து உணர்வுகளை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்துவது அவ்வளவு எளிதில்லை, இல்லையா! உவமை உதவிக்கு வருகிறது.
நாட்டில் வறட்சி. கலப்பைகளுக்கு வேலையில்லை; அதனால் கலப்பைகள் தூங்குகின்றன. கோடைக் காலத்துக்கு ஒரு முடிவே இல்லை. பசுமை அறவே மறைந்துவிட்டது. (குளத்து நீரின் மட்டம் குறைந்து போய்) பெரிய குளக்கரைகள் எல்லாம் ஏதோ குன்றுகள் போல் உயர உயரமாய்த் தெரிகின்றன. ஒரு பறவையும் அங்கே வருவதில்லை. அவ்வளவு கொடுமையாகக் கோடையின் வறட்சி நீளுகிறது.
அப்படிக் கடுமையாக வறண்ட காலத்தில் ஒரு நாள் பெய்கிறது மழை! அடித்துப் பெய்கிறது! காய்ந்து போய் வற்றிய குளத்தின் உட்புறம் முழுவதும் நிறையும்படி வீசி வீசிப் பெய்கிறது! அது மிகப் பெரிய மழை! விடியல் காலைப் பொழுது ஊர் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிற மாதிரி வருகிறது.
அந்த மாதிரி மழை வந்தால் ... வானம் பார்த்து வாழுகிற ஊர் மக்களின் மகிழ்ச்சிக்கு அளவு காண முடியுமா?
ஊருக்கெல்லாம் மகிழ்ச்சி! ஆனால் ... அவளுக்குத் (தோழிக்குத்) தன் ஒருத்தியின் மகிழ்ச்சி மட்டும் போதவில்லை. ஊரில் உள்ள எல்லாருடைய மகிழ்ச்சியையும் அள்ளிச் சேர்த்துத் தனக்குள்ளே போட்டுக் கொண்டு திளைக்கிறாள். அப்படிக் கிடைத்துத் தான் உணர்ந்த மகிழ்ச்சியைத் தன் தோழியிடம் (தலைவியிடம்) வெளிப்படுத்துகிறாள்.
"பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்றே ...
... வான் தோய் வெற்பன் வந்த மாறே"
***************************************************************************
அகநானூறு 42 (கபிலர்)
---------------------------------
மலி பெயல் கலித்த மாரி-ப்-பித்திகத்து-க்
கொயல்-அரு-நிலைய பெயல் ஏர் மண முகை-ச்
செவ் வெரிந் உறழும் கொழும் கடை மழைக்கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே!
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச
கோடை நீடிய பைது அறு காலை
குன்று கண்டன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி-ப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை
பல்லோர் உவந்த உவகையெல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே; சேண்-இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்த மாறே!
++++++++++++++++++++++++++++++++++++++
இயற்கை தரும் பரிசு, குழந்தை மன நட்பு, காதல் நிறைவு -- வேறென்ன வேண்டும்?
No comments:
Post a Comment