Saturday, December 28, 2013

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 1

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 1
------------------------------------------------------

முன்னுரை
————
இன்று நாம் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தும் “சாதி,” “தீண்டாமை” என்ற சொல் வழக்காறுகளும், “உயர்ந்த சாதி,” “தாழ்ந்த சாதி” என்ற கோட்பாடுகளும் தமிழ் இலக்கியத்தில் எப்போது நுழைந்தன என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் தொடக்கமாக, பண்டைத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்கப் பாடல்களில், இந்த வழக்காறுகளும் கோட்பாடுகளும் காணப்படுகின்றனவா என்று பார்க்கத் தொடங்கினேன். அந்த முயற்சியில் எனக்குப் புரிந்த கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவே. தனிப்பட்ட முறையில் யாரையும் சாடும் எண்ணம் இல்லை.

******
முதல் இலக்கணமாக நமக்குக் கிடைத்திருக்கும் தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். 

0. உயிர் —> 1. அறிவு —> 2. சாதி —> 3. பிறப்பு —> 4. பெயர்

0. உயிர்
-------------
உலகத்து இயற்கையில் தோன்றிய உயிர்களே முதலில் இலக்கண ஆசிரியன் கண்களில் படுகின்றன. தொகையாக உள்ள அவற்றை அவன் படிப்படியாக வகுத்தும் விரித்தும் பார்க்கிறான். 

இந்தத் தொகை, வகை, விரி என்ற கோட்பாடுகளே பண்டைத் தமிழ் இலக்கணத்தின் அடிப்படை. உலகைப் பற்றிய தமிழனின் பார்வையும் இப்படியே அமைந்ததாகத் தோன்றுகிறது. தொகை, வகை, விரி இவற்றை ஒட்டு மொத்தமாக, ஆங்கிலவழியில், categorization என்று கொள்ளும் கருத்தும் உண்டு. 

நிற்க. 

முதலில், உலகத்து இயற்கையில் தோன்றிய உயிர்களின் அறிவுநிலை (senses) இலக்கண ஆசிரியனுக்குத் தென்படுகிறது.

1. அறிவு
——————
உலகத்து உயிர்களின் அறிவுநிலைகளை ஒன்றறிவது, இரண்டறிவது, மூன்றறிவது, நான்கறிவது, ஐந்தறிவது, ஆறறிவது என்று நம் முன்னோர் நெறிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நெறி தொல்காப்பியருக்கு முன்பே இருந்தது என்பது தொல்காப்பியத்தின் மூலம் தெரிகிறது. 

தொகையாக உள்ள உலகத்து உயிர்களை அறிவுநிலையில் வகைப்படுத்தித் தம் முன்னோர் சொன்னதைத் தொல்காப்பியரும் உரையாசிரியரும் சொல்கிறார்கள். 

புல், மரம் போன்றவை — ஓரறிவுயிர்
கிளைப் பிறப்பு — கொட்டி, தாமரை, கழுநீர் போன்றவை
நந்து, முரள் போன்றவை — ஈரறிவுயிர்
கிளைப் பிறப்பு — சங்கு, நத்தை, இப்பி, கிளிஞ்சல் போன்றவை
சிதல், எறும்பு — மூவறிவுயிர்
கிளைப் பிறப்பு — அட்டை போன்றவை
நண்டு, தும்பி போன்றவை — நான்கறிவுயிர்
கிளைப் பிறப்பு — ஞிமிறு, சுரும்பு போன்றவை
மா, புள் — ஐயறிவுயிர்
கிளைப் பிறப்பு — பாம்பு, மீன், ஆமை போன்றவை
மக்கள் — ஆறறிவுயிர்
கிளைப் பிறப்பு — தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர், ஒரு சார் விலங்கு (கிளி, குரங்கு, யானை போன்றவை)

அறிவுநிலைப்படி வகைப்படுத்தப்பட்ட உயிர்களை மேலும் நுண்ணித்துப் பார்க்கிறான் இலக்கண ஆசிரியன். உயிர்களின் இயங்குதன்மையும் வாழும் இடமும் அவற்றைப் பிரிப்பதைக் காண்கிறான். அந்த அடிப்படையில் ஒவ்வொரு பிரிவையும் குறிக்கச் “சாதி” என்ற குறியீட்டை உருவாக்குகிறான். இந்த வகைக் குறியீடு —“சாதி”— ஆங்கில மொழியில் species என்று உணரப்படும். 

2. சாதி
————
*மக்கள் சாதி, *மா/விலங்குச் சாதி, “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி” என்ற குறியீடுகள் உருவாகின்றன. 

இந்தக் குறியீடுகளில், “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி,” “பறப்பவை, தவழ்பவை (‘ஊர்வன’)” என்ற குறியீடுகள் தொல்காப்பிய, சங்க இலக்கியத்தில் உண்டு. இதைப் பிற்காலத்திய திருத்தணிகைப் புராணத்திலும் காண்கிறோம்: மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்று.

தொடக்கத்தில், *மக்கள் சாதி *மாச்சாதி/விலங்குச் சாதி என்ற அறிவு இல்லாமல் “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி” என்ற குறியீடுகள் உருவாகியிருக்க முடியாது. 

மக்கள், மா, பறவை, நீர்வாழ்வன இப்படிப்பட்ட ஒவ்வொரு “சாதி"க்குள்ளும் பல வகை உயிர்களைக் காண்கிறான் இலக்கண ஆசிரியன். ஒரு குறிப்பிட்ட “சாதி” என்ற தொகைக்குள் காணும் பல உயிர்களை எப்படிப் பகுத்து அறிவது? அப்போதுதான் “பிறப்பு” என்ற குறியீடு உருவாகிறது.

3. பிறப்பு
—————— 
இலக்கிய இலக்கணங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் சொற்கள்: “நீர்வாழ்சாதி,” “பறவைச்சாதி"

“நீர்வாழ்சாதி”யை எடுத்துக்கொள்வோம். தொல்காப்பிய உரையாசிரியர் சொல்லுவது: “நீர்வாழ்சாதியும் அறுபிறப்பு என்பன சுறாவும், முதலையும், இடங்கரும், கராமும், வராலும், வாளையும் என இவை.” எனவே, “நீர்வாழ்சாதி”யுள் தோன்றும் உயிர்கள் சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்றும் இவை ஒவ்வொன்றும் ஒருவகைப் “பிறப்பு” என்றும் அறியப்பட்டதாகத் தெரிகிறது. 

“பறவைச்சாதி" என்பதைச் சங்க இலக்கியப் பெரும்பாணாற்றுப்படையில் (229-230) பார்க்கிறோம்: “கடுப்புடைப் பறவைச் சாதியன்ன பைதற விளைந்த பெரும் செந்நெல்லின் தூம்பு-உடைத் திரள் தாள் … .” முற்றி விளைந்த செந்நெல்லின் குழல் போன்ற தாள் (அடிப்பகுதி, காம்பு) அந்த நெல்லை அரிகிறவரின் கையைக் குத்தும். அதுக்கு உவமை கொட்டுகிற தேனீ; அது “பறவைச்சாதி.”

மக்கட்சாதியை எடுத்துக்கொள்வோம். தொல்காப்பிய உரையாசிரியர் சொல்லுவது: “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.” நுண்ணித்துப் பார்க்கவும். இங்கே ‘குலம்’ என்பது ‘சாதி’ இல்லை! ‘குலம்' என்பது ‘சாதி’க்குள் அமையும் ஒருவகை அமைப்பு. இந்த எல்லாக் குலமும் மக்கட்சாதிக்குள் அடக்கம்! 

4. பெயர்
—————— 
இந்த மக்கட்சாதிக்குள்ளும் இடம், செயல் போன்றவற்றால் பிறப்புகள் பலவகைப்படுகின்றன. அப்படி வேறுவகைப்படும் அவற்றைத் தனித்தனியே குறிக்கவேண்டுமானால் என்ன செய்யலாம்? அப்போதுதான் “பெயர்" என்ற குறியீடு உருவாகிறது. 

மக்களை “உயர்திணை” என்றும் மக்கள் அல்லாதவற்றை “அஃறிணை” என்றும் பிரித்த இலக்கண ஆசிரியன் உலகில் காணும் பலவகைப்பட்ட உயர்திணைப் பெயர்களை வகுத்துச் சொல்கிறான்:

“நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே”

அதாவது, மக்களின் பெயர்கள் மேற்சொன்ன பல வகையில் புழங்கும்.

உரையாசிரியர் தரும் எடுத்துக்காட்டு:

நிலப்பெயர்: அருவாளன், சோழியன் என்பன.
குடிப்பெயர்: மலையமான், சேரமான் என்பன.
குழுவின் பெயர்: அவையத்தார், அத்திகோசத்தார் என்பன.
வினைப்பெயர்: தச்சன், கொல்லன் என்பன.
உடைப்பெயர்: அம்பர் கிழான், பேரூர் கிழான் என்பன. வெற்பன், சேர்ப்பன் என்பனவும் அவை.
பண்புகொள் பெயர்: கரியான், செய்யான் என்பன.
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர்: தந்தையர், தாயர் என்பன.
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர்: பெருங்காலர், பெருந்தோளர் என்பன.
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர்: பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர் என்பன.
கூடிவருவழக்கின் ஆடியற்பெயர்: பட்டிபுத்திரர், சங்கிராமத்தார் என்பன.
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்: ஒருவர், இருவர், மூவர், முப்பத்து மூவர் என்பன.
‘இன்றிவர்’ என்பது ‘இத்துணையர்’ என்னும் பொருட்டுப்போலும்.

ஆகவே, மக்களாகப் பிறந்த எந்த உயிரையாவது சுட்டிக் கூறவேண்டுமானால் மேற்கொண்ட பெயர் வகைகள் உதவியிருக்கின்றன என்று தெரிகிறது. 

இந்த நூற்பாவிலும் படிநிலை அணுகுமுறையைப் பாருங்கள். படிப்படியாக, பெரிய அமைப்பில் தொடங்கிச் சிறிய அமைப்புக்கு வருவதை: நிலம் என்பதே அடிப்படை, அதில் அமைவது குடி, குடியில் அமைவது குழு, குழுவில் அமைவது வினை இப்படி! 

இங்கே நமக்கு ஓர் ஐயம் தோன்றலாம். மக்களை வகைப்படுத்தும்போது ‘இந்த/அந்த வகை மக்கள்’ என்று குறிக்காமல் ஏன் ‘பெயர்' என்ற குறியீட்டை மேற்கொண்டார்

இன்னொரு தொல்காப்பிய நூற்பா இதற்கு விடை தருகிறது. 

“பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே”

இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் உரை:
“திணைநிலைப்பெயர் என்றதனான் அப்பெயருடையார் பிற நிலத்து இலர் என்று கொள்ளப்படும். பெயர் என்றதனால் பெற்றதென்னை? மக்கள் என அமையாதோ எனின், மக்களாவார் புள்ளும் மாவும்போல வேறுபகுக்கப்படார், ஒரு நீர்மையராதலின். அவரை வேறுபடுக்குங்கால் திணைநிலைப்பெயரான் அல்லது வேறுபடுத்தல் அருமையின் பெயர் என்றார்.”

அதாவது, மக்களிடமிருந்து பறவைகளையும் விலங்குகளையும் வேறுபடுத்துவதுபோல் மக்களுக்குள் வேறுபடுத்த முடியாது. மக்களுக்குள் வேறுபாடு காட்டவேண்டுமானால், ‘திணைநிலை மக்கள்’ ‘வினைநிலை மக்கள்’ போன்ற குறியீடுகளால் வேறுபடுத்த முடியாது. ஏனென்றால் எல்லா மக்களும் ஒரே நீர்மை/தன்மை உடையவர்

எவ்வளவு கூரிய, துல்லிய, நேரிய உரை! ‘மக்கட்சாதி’க்குள்  உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று வேறுபாடு காட்ட இயலாது என்பதைத் தலையில் அடித்து உணர்த்தியது போல அல்லவா இருக்கிறது, இந்த உரை! 

மேலே சொல்லிய பெயர்வகைகளோடு இயற்பெயர், சுட்டுப்பெயர், சிறப்பினால் ஆகிய பெயர் இன்ன பிற பெயர்களும் வழங்கியிருக்கின்றன. 

காட்டு: சாத்தன், கண்ணன், அவன், இவன், ஏனாதி நல்லுதடன், சோழன் நலங்கிள்ளி போல்வன

****** 
இப்படிப் போகும் தொல்காப்பிய நூற்பாக்களும் உரைகளும் தெரிவிப்பது என்ன? 

1. “சாதி” என்ற சொல் உலகத்தில் மொத்தமாகக் காணப்படும் உயிர்களை வகைப்படுத்திச் சொல்லும் சொல். ஆங்கிலத்தில் species என்ற சொல் தரும் பொருளை ஒத்திருப்பதுபோல் தோன்றுகிறது. இது மக்களை மட்டும் குறிக்கும் குறியீடு இல்லை. 

1a. சாதிகளுள் உயர்வு/தாழ்வு சொல்லவேண்டுமானால் ஒரு சாதியோடு இன்னொரு சாதியை ஒப்பிடவேண்டும். எடுத்துக்காட்டாக, மக்கள் சாதியையும் பறவைச் சாதியையும் ஒப்பிட்டு அவற்றுள் உயர்ந்த சாதி எது தாழ்ந்த சாதி எது என்று சொல்லவேண்டும். ஆனால், அந்தந்தச் சாதியுள் காணும் பிறப்புகளை இது உயர்ந்த/தாழ்ந்த சாதி என்று சொல்லக்கூடாது. காட்டாக, முதலையை ‘உயர்ந்த சாதி’ என்றும் எறும்பை ‘இழிந்த சாதி’ என்றும் குறிப்பிடக்கூடாது. 

வலியுறுத்தவேண்டி மீண்டும் சொல்கிறேன். “சாதி” வேறுபாடு காட்டவேண்டுமென்றால் மக்கள் :: விலங்கு :: ஊர்வன :: பறப்பன :: நீரில் வாழ்வன :: பயிர்கள் என்ற அடிப்படையில்தான் காட்டவேண்டும். இந்த வகைகளுக்குள் ‘சாதி' வேறுபாடு காட்டக்கூடாது! அதாவது, நீர்வாழ்சாதியான சுறா, முதலை, வரால், வாளை இவற்றில் இது உயர்சாதி' ‘இது தாழ்சாதி' என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவை எல்லாமே ஒரே சாதி: ‘நீர்வாழ் சாதி.” புரிகிறதா? 

2. சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் "சாதி" என்பதும் "பிறப்பு" என்பதும் ஒரே பொருளைத் தரவில்லை. தொல்காப்பிய மரபியல் இதற்கு அடிப்படைச் சான்று. பிற இயல்களில் உள்ள நூற்பாக்களும் தொல்காப்பிய உரைகளும் இதை உறுதி செய்கின்றன. 

2a. "பிறப்பு" என்பது "சாதி"யின் உட்பிரிவு என்று தெரிகிறது. எனவே “இழிசாதி" == “இழிபிறப்பு" (low caste, low birth) என்று சொல்வதெல்லாம் பொருளற்றது, பெரிய தவறும்கூட.

3. மக்கட்சாதியில் பிறந்த உயிர்களைக் குறிக்கும் பெயர்கள் அந்த உயிர்கள் வாழும் இடம், அவை செய்யும் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தன. பிறப்பின் அடிப்படையில்  அமைந்ததில்லை. 

3a. எனவே "இழிபிறப்பாளன்" என்பது போன்ற சொற்கள் அவர்கள் பிறந்த மக்கட்"சாதி"யைக் குறித்து அமையவில்லை. 

(தொடரும்)





3 comments:

  1. அருமையான தேடல், கருத்துத்தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி! தொடரவும் அன்புடன் வேண்டுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல சொல்லுக்கு நெஞ்சார்ந்த நன்றி, செல்வா! ஏற்கனவே உலவுகின்ற சில ஆய்வுக் கருத்துகள் தரும் குழப்பங்களுக்கு விளக்கம் காணுவதே என் நோக்கம். பார்ப்போம், எந்த அளவுக்குச் செய்ய முடிகிறது என்று.

      இதற்கு அடுத்த பதிவையும் இயன்றபோது படித்துப் பார்க்கவும். மிக்க நன்றி!

      Delete
  2. Madam,
    நிலப்பெயர்-குடிப்பெயர்- குழுவின் பெயர் இந்த 3-க்கும்
    என்ன வித்தியாசம்?

    அதே போல
    பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
    பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
    பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
    இந்த 3-க்கும் என்ன வித்தியாசம்?

    இன்னும் சற்று எளிதாக விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete