முதலிலேயே ஒத்துக்கொள்கிறேன் ... எனக்கு வேர்ச்சொல் ஆய்வில் அவ்வளவாகப் பிடிப்பில்லை, திறமையும் இல்லை. ஏன் என்றால் ... அந்த வகை ஆய்வுக்குத் தேவையான பலமொழிப் புலமை இல்லை. என் தமிழை மட்டுமே முழுதுமாக அறிந்தேனா என்பதுவும் ஐயமே!
இக்கால வேர்ச்சொல் ஆய்வின் நடைமுறை எனக்கு ஒத்துவரவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல இருக்கிறது. சரியான சான்றுகள் இல்லாமல் ... இங்கேயிருந்து இது அங்கே போச்சு என்ற கூற்றும், இந்த ஒலி இப்படித் திரியும் என்ற கூற்றும் என்னை இந்தவகை ஆய்விலிருந்து அப்புறப்படுத்துகின்றன.
என் முறைப்படி, ஒரு தமிழ்ச் சொல்லுக்கு வேர்ச்சொல் காணவேண்டுமென்றால் ...
1. ஒலி ஒப்புமை மட்டும் நோக்கி உடனே பிற மொழிக்குத் தாவக்கூடாது.
2. அந்தச் சொல் தமிழிலேயே காலந்தோறும் எப்படிப் புழங்கிவந்திருக்கிறது என்பதைத் திட்டமாக அறியவேண்டும் (இலக்கியம், இலக்கணம், உரைகள், எழுத்து, பேச்சு, கல்வெட்டு, இன்ன பிற அகப்படும் சான்றுகள் மூலம்).
3. காலத்தையும் வரையறுத்துக் கொள்ளவேண்டும். வெறுமனே ... ஈன் என்ற மிகப் பழைய தமிழ்ச்சொல்லில் இருந்துதான் yean என்ற ஆங்கிலச்சொல் பிறந்தது என்றும், நெருடு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்துதான் nerd என்ற ஆங்கிலச் சொல் உருவானது என்றும் சொல்லுவதில் பயனும் இல்லை, பிறருடைய கிண்டலுக்கும் ஆளாவோம்.
4. தமிழுக்குள்ளேயே கிடைக்கும் சான்றுகளுக்கு இடையே காணப்படும் ஒலி மாற்றங்களுக்கும் பொருள் மாற்றங்களுக்கும் நேரிய முறையில் விளக்கம் கொடுக்கவேண்டும். அதாவது, இன்ன ஒலி/பொருள், இந்தச் சொற்சூழலில், இந்தச் சமூகச் சூழலில், இந்தக் காலத்தில் ... இப்படி மாறியிருக்கிறது என்று சான்று காட்டவேண்டும்.
5. எல்லாவற்றுக்கும் மேலாக ... தமிழைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் பிறமொழிச் சொற்களைக் களையவேண்டி வேர்ச்சொல் ஆய்வில் இறங்குவது நேரியதில்லை. ஜன்னல் என்ற சொல்லில் உள்ள கிரந்த ஒலியை/எழுத்தைக் களையவேண்டிச் சன்னல் என்று சொன்னாலும் எழுதினாலும் அது பிறமொழிச் சொல்லே! போர்த்துக்கீசியம். தமிழில் இருக்கு ஓர் அழகான சொல்: காலதர் (== 'காற்று வழி'). அதைத் தவறாக நம் இளைய தலைமுறை 'காதலர்' என்று எழுதிவிடும். அதுக்கு ஜன்னலே பரவாயில்லை! ;-) அலமாரியை என்ன செய்வீர்கள்? கிராம்பு என்பதை இலவங்கம் என்று சொல்லலாம், ஆனால் அது எங்கேயிருந்து வந்தது?
அடுத்து, சில சொற்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். ஓர் இடத்தில் நிகழும் ஒலி மாற்றத்தைப் பொத்தாம் பொதுவாக எல்லா இடத்துக்கும் பொருத்த முடியுமா என்று பாருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++
சில எடுத்துக்காட்டு
------------------------
எழுத்தில் பேச்சில் மாற்றம் வேர்?
---------------------------------------------------------------------------
அகம் ஆம் க > 0 ?
இலை எல இ > எ ?
இழப்பு, இழவு எழப்பு, எழவு இ > எ ?
உலக்கை ஒலக்கை உ > ஒ ?
உவகை ஓகை உ > ஓ ?
ஒப்பிலி உப்பிலி ஒ > உ ?
குடை கொடெ உ > ஒ ?
கொடை கொடை
குயவன் கொயவன்
குலை (bunch) கொல
பருமன் பெருமன் அ > எ ?
பிறகு பொறவு இ > ஒ; க் > வ் ?
புறா, புறவு பொறா உ > ஒ ?
விரல் வெரல் இ > எ ?
++++++++++++++++++++++++++++
கன்று கண்டு ன்ற் > ண்ட்
கன்று கன்னு ன்ற் > ன்ன்
மூன்று மூணு ன்ற் > ண்
++++++++++++++++++++++++++++
பூண்டு பூடு ண் > 0
தாண்டு ?
++++++++++++++++++++++++++++
ஓத்து (வேதம், நூற்பா) < ஓது
ஓத்து (இன்று கொச்சை மொழி) < உவ
கொல < கொல் (kill)? குலை (bunch)?
++++++++++++++++++++++++++++++++
மரம் ~ மரன்
குணம் ~ குணன்
அப்போ ... அவன் என்பதை அவம் என்றும் சொல்லலாமோ?!
பந்தர் ~ பந்தல்
அப்போ ... இவர் என்பது இவல் என்றும் புழங்கப் படலாமே?!
+++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்கிறாள் சொல்றா, சொல்லுதா
இதைப் பற்றி என்ன சொல்லலாம்?
வால், வாலம் ('tail'; சங்க இலக்கியச் சான்று).
அப்போ, கால் ('leg') என்பது காலம் என்றும் சொல்லப்படுமோ?
++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆல் < யால் < சால்
ஆனை < யானை < சானை?
ஆத்தா < யாத்தா? < சாத்தா?
++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கேயும் பார்க்கவும்:
http://viruntu.blogspot.com/2010/10/roots-and-stems.html
++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு வினாடி வினா: "சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் என்ன?