அண்மையில் தமிழ்மன்றம் (tamilmanram@googlegroups.com) குழுமத்தில் வாய்பாடு, வாய்ப்பாடு என்ற சொற்களைப் பற்றி உரையாடல் நடந்தது.
சரியான பயன்பாடு எது -- வாய்பாடு என்பதா? வாய்ப்பாடு என்பதா?
அதைத் தொடர்ந்து இங்கே இந்த இடுகையில் என் கருத்தைத் தெரிவிக்கிறேன். இந்த என் பதிவின் கருத்துகளை வேறு எங்கும் எடுத்துச் சொல்ல வேண்டுவோர் அன்புகூர்ந்து இந்த வலைத்தளத்திலிருந்து (http://mytamil-rasikai.blogspot.com/) எடுத்த கருத்து என்று தெரிவிப்பது நயநாகரிகம். நன்றி!
**************************
எனக்குத் தெரிந்த விளக்கம்.
பள்ளிப் பருவத்தில் நான் தெரிந்துகொண்டது: வாய்பாடு, வாய்ப்பாடு, வாய்ப்பாட்டு, மனப்பாடம் என்று பல சொற்கள் உண்டு; ஒவ்வொன்றும் தனித்தனிப் பொருள் கொண்டது.
வாய்பாடு
---------------
இது தமிழ் யாப்பிலக்கணத்தில் மட்டுமே
பயன்படுவது. தமிழ் யாப்பில் 'அசை'களின் அமைப்பை விளக்கத் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற சொற்கள் பயன்படுகின்றன.
இந்தச் சொற்கள் ஒருவகைக் குறியீட்டுச் சொற்கள். ஆங்கிலத்தில் mnemonic device அல்லது code அல்லது formula என்று சொல்லலாம். இதுவே வாய்பாடு.
இந்தச் சொற்களின் தனிப்பொருள், அதாவது 'தேமா' என்றால் இனிய சுவை தரும் மாமரம்/மாம்பழம், 'கருவிள' என்றால் கருமையான ஒரு மரம், ... என்பதுபோல. இந்தப் பொருள் எல்லாம் இங்கே நமக்குப் பயன்படாது. இந்தச் சொற்களின் அசை அமைப்பே தமிழ்ச் செய்யுளில் புழங்கும் சொற்கட்டு அமைப்பை அறிந்துகொள்ள உதவும்.
காட்டாக, தேமா என்பது ... இரண்டு நெடில் அல்லது குறில் அசைகள் அமைந்த ஒரு சொல்லுக்குக் குறியீடு/வாய்பாடு. ஒவ்வோர் அசைக்கும் தொடக்கத்திலும் இடையிலும் கடைசியிலும் மெய்யொலி வரலாம்.
அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தாத்தா, பாட்டி, பூக்கள், நண்பன் ... என்ற சொற்களின் அமைப்பைப் பாருங்கள்.
அம்மா, அப்பா, அக்கா ஆகிய சொற்களின் அசை அமைப்பு: குறில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + நெடில் உயிரொலி
அண்ணன் என்ற சொல்லின் அசை அமைப்பு: குறில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி
தாத்தா என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + நெடில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + நெடில் உயிரொலி
பாட்டி என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + நெடில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + குறில் உயிரொலி
பூக்கள் என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + நெடில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி
நண்பன் என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி
பாருங்கள், இத்தனை வகைப்பட்ட சொற்களுக்கு ஒரே கட்டமைப்பைத் தருகிறது தேமா என்ற சொல்; இதுவே தேமா வாய்பாடு.
ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... one form provides the base for generating many words of the same format.
வாய்ப்பாடு
----------------
என் பள்ளிப் பருவத்தில், காலையில் முதல் வகுப்பு கணக்குப் பாடமாகத்தான் இருந்தது. தூக்கக் கலக்கம் நீங்காத நிலையில் "ஓரோண் ஒண்ணு; ஈரோண் ரெண்டு" ... என்று தொடங்கிப் "பதினாஆஆறு பதினாஆறு எரநூத்தி அம்பத்தாஆறு" என்று கூட்டமாகப் பாடி முடிப்பது வழக்கம். இது முழு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாடு. இதற்கு அடுத்து, பின்ன (fraction) வாய்ப்பாடு உண்டு. மிகவும் கடுமையான பயிற்சியாக இருக்கும்!
அந்த வகைச் சொற்புழக்கமே வாய்ப்பாடு. ஆங்கிலத்தில் multiplication table என்று சொல்வார்கள்.
அந்த வகைச் சொற்புழக்கமே வாய்ப்பாடு. ஆங்கிலத்தில் multiplication table என்று சொல்வார்கள்.
இங்கே பாருங்கள். இரண்டு எண்கள் (A, B என) எடுத்துக்கொள்ளப்படும். முதலில் சொல்லப்படும் எண் (A என்பது) மாறிக்கொண்டேயிருக்கும். அதை அடுத்துச் சொல்லப்படும் எண் (B என்பது) அதைப் (A-ஐப்) பெருக்க எடுத்துக்கொள்ளப்படும்; அந்த எண் (B என்பது) மாறாமல் நிலைப்பட்டதாக இருக்கும்.
கட்டாக, 5-ஆம் வாய்ப்பாடு இப்படிப் போகும்:
"ஓரஞ்சு அஞ்சு (1 x 5 = 5)
ஈரஞ்சு பத்து (2 x 5 = 10)
மூவஞ்சு பதினஞ்சு (3x 5 = 15)
... ... ... "
இங்கே 5 என்ற எண் மாறாதது (constant). அதனால் பெருக்கப்படும் எண் மாறும் (variable). ஆனால் ஒரு குறிப்பிட்ட பெருக்கும் எண்ணும் பெருக்கப்பட்ட எண்ணும் தரும் தொகை மாறாதது. 2 x 5 = 10 என்றால் அந்தத் தொகை மாறாதது.
இப்படிப் புழங்குவதுதான் வாய்ப்பாடு.
வாய்ப்பாட்டு
--------------------
வாய்ப்பாட்டு என்பது இசை தொடர்பானது. ஒரு செய்யுளோ, பாட்டோ இசைப்படுத்தப்பட்டுக் குரலால் பாடப்படுவது வாய்ப்பாட்டு.
அட, அப்பிடீன்னா வேற என்ன பாட்டு இருக்கு-னு கேக்கலாம். சரியே.
ஒரு பாட்டை (ஆங்கிலத்தில் lyric என்று சொல்கிறார்களே அதை) வீணை, வயலின், குழல் போன்ற இசைக்கருவிகள் மூலமும் இசைக்கலாம், இல்லையா? இப்படி இசைக்கருவிகளின்வழி ஒரு பாடலை இசைப்பது "வாசித்தல்" எனக் குறிக்கப்படும். ஆனால், குரல்வளையைப் பயன்படுத்திக் கண்டத்தால் பாடுவது என்பது மாதவி பாடியதுபோலப் பாடுவது. அதுவே வாய்ப்பாட்டு. அந்தப் பாட்டை யாழிசையோடு சேர்த்துப் பாடுகிறாள் மாதவி. இந்தக் குறிப்புகளைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.
வாய்பாட்டிலும், வாய்ப்பாடு என்பதிலும் உள்ள மாற்றங்களுக்கு இங்கே இடமில்லை. அதாவது பாடலின் சொற்கட்டு மாறாது. யார் பாடினாலும் பாடலின் சொல் மாறாமல் அமையவேண்டும்.
இதுவே வாய்ப்பாட்டு.
நிற்க.
வாய்ப்பாட்டு போல வேறு ஏதாவது இருக்கா? ஆமாம், மனப்பாடம் என்று சொல்கிறோமே அது இருக்கு.
வாய்ப்பாட்டு போல வேறு ஏதாவது இருக்கா? ஆமாம், மனப்பாடம் என்று சொல்கிறோமே அது இருக்கு.
மனப்பாடம்
----------------
இது என்ன என்றால் ... இது வாய்பாடு, வாய்ப்பாடு போன்ற உத்திகளை வாயே திறக்காமல் மனதிலேயே சொல்லிச் சொல்லி, தேவையான நேரத்தில் நினைவுக்கு வரச் செய்வது. இதை மனனம் செய்வது அல்லது உருப்போடுவது, நெட்டுருப் போடுவது என்று சொல்வார்கள், இல்லையா?
இது என்ன என்றால் ... இது வாய்பாடு, வாய்ப்பாடு போன்ற உத்திகளை வாயே திறக்காமல் மனதிலேயே சொல்லிச் சொல்லி, தேவையான நேரத்தில் நினைவுக்கு வரச் செய்வது. இதை மனனம் செய்வது அல்லது உருப்போடுவது, நெட்டுருப் போடுவது என்று சொல்வார்கள், இல்லையா?
இதை ஒருவகை "வேண்டுதல்" என்றும் சொல்லலாம். ஐங்குறுநூற்றில் ஒரு தாய் வேண்டுகிறாளே ... "வாழி ஆதன்! வாழி அவினி! நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க! ... " இப்படி உலகளாவிய நல்ல நிலைக்காக ... அதுபோல.
ஒரு கருத்தைப் புரிந்துகொள்ளாமலேயே மனப்பாடம் செய்யலாம்! புரிந்து செய்வது வாழ்நாள் முழுவதும் உதவும்.
சமயக்கோட்பாடு தொடர்பான பல கருத்துகளைப் புரிந்துகொள்ளாமலே சிலர் மனப்பாடம் செய்வது உண்டு. ஆனாலும் அந்த முயற்சி பிற்காலத்தில் வீண்போகாது. மெல்ல மெல்ல அந்தக் கருத்துகள் புரியத்தொடங்கும்.
மணிமேகலை இப்படித்தான் பவுத்த சமயக்கோட்பாடுகளை மனப்பாடம் செய்திருக்க வேண்டும். காப்பியத்தின் இறுதியில், "மனப்பாட்டு அறம் வாய்வதாக" என்று அறவண அடிகளிடம் வேண்டுகிறாள். அதாவது, அதுவரை அவள் அல்லும் பகலும் நினைத்தும் வேண்டியும் வந்த அறக்கோட்பாடுகள் உண்மையாகட்டும் (== பலிக்கட்டும்) என்று.
"எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்" என்று பாரதியார் வேண்டினாரே அதுபோல.
அருமையான விளக்கம், அம்மையீர். ஒரு சிறிய திருத்தம்.
ReplyDelete"பதினாஆஆறு பதினாஆறு எரநூத்தி அம்பத்தாஆறு"
நாங்கள் இப்படிச் சொல்லுவோம்.
பதினாஆஆறு பதினாஆறா எரநூத்தி அம்பத்தாஆறேய்"
அந்த ஆறேய்-இல் கொடுக்கும் அழுத்தத்திற்குக் காரணம், 'அப்பாடா தொல்லை முடிந்தது' என்ற மகிழ்ச்சி. அந்தத் 'தொல்லை' இன்னும் பயன்தந்துகொண்டிரூகிறது.
மீண்டும் நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா