Sunday, January 8, 2012

திருவாதிரை -- அப்பர் நோக்கில் ...

"திரு ஆதிரைத் திருப்பதிகம்"
-----------------------------------

தேவார மூவருள் அப்பர் பாடிய ஒரு தேவாரப் பதிகம் "திரு ஆதிரைத் திருப்பதிகம்" என்று தொகுக்கப்பட்டிருக்கிறது.

திரு ஆரூர், திரு ஆதிரைத் திருப்பதிகம், குறிஞ்சி(ப் பண்)

(நன்றி: திருவாளர்கள் கோபாலையரும் ஃபிரான்சுவா க்ரோ அவர்களும் சேர்ந்து பதிப்பித்த வெளியீடு. Institut Français D'Indologie, Pondichery, 1985)
++++++++++++++++++++++++++++++++++

முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்:-
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

மணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்:-
"மணியே! பொன்னே! மைந்தா! மணாளா!" என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

வீதிகள்தோறும் வெண் கொடியோடு விதானங்கள்;
சோதிகள்விட்டுச் சுடர் மா மணிகள்; ஒளி தோன்றச்
சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள்:-
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்--
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

நிலவெண்சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்லவடங்கள் பரந்து, எங்கும்
கலவமஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்;
தம் மாண்பு இலராய்த் தரியார், தலையான் முட்டுவார்:-=
"எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன்" என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

செந்துவர்வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்;
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்:--
இந்திரன் ஆதி வானவர், சித்தர், எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

முடிகள்வணங்கி மூவாதார்கள் முன் செல்ல,
வடிகொள் வேய்த்தோள் வான் அர மங்கையர் பின் செல்ல,
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ,
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

"துன்பம், நும்மைத் தொழாத நாள்கள்" என்பாரும்,
"இன்பம், நும்மை ஏத்தும் நாள்கள்" என்பாரும்,
"நுன்பின் எம்மை நுழையப் பணியே!" என்பாரும்:--
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன்தன் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

+++++++++++++++++++++++++++++++++++++
இங்கே அப்பர் தேவாரப் பாடல்களின் வரிகளில் சொற்கள் எளிமையாகப் பிரித்து இருப்பதால், அந்தச் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வதில் தடை இருக்காது என்று தோன்றுகிறது.

அதற்கும் அப்பால் நமக்குக் கிடைக்கும் விவரங்கள் அன்றைய காலத்து, அதாவது அப்பர் காலத்து, நிலையை நாம் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல ஆவணம். 

திரு ஆதிரை நாளில், திரு ஆரூரில் அப்பர் கண்ட காட்சியை இங்கே படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இன்றைக்கு அங்கே திருவாரூரில் நடப்பது என்னவோ/எப்படியோ, தெரியவில்லை. ஆனால், இந்த அப்பர் பதிகம் ஒவ்வோர் ஆண்டும் திருவாதிரை நாளில் என் கற்பனையை/மனதை நிறைவு செய்துவருகிறது.

+++++++++++++++ 

அதெல்லாம் கிடக்கட்டும். சாப்பாடு? அதுதானே நம் பண்டிகைகளில் முக்கியமானது?

ஒவ்வோர் ஆண்டும் என் அம்மா செய்த திருவாதிரைக் களி அல்வா போல இருக்கும்! அந்தத் "தாளகம்" ஊரைக் கூட்டும் மணம். அந்தக் கலயை அவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். பல ஆண்டுகள் இங்கேயும் களியும் தாளகமும் தவறாமல் செய்தது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக எல்லாக் கடவுளருக்கும் நான் "லீவு" கொடுத்துவிட்டேன் -- "எனக்கு ஒடம்பு சௌகரியம் இல்லெ"-னு. 

இனிமேல் அந்தக் கடவுளா வந்து வேண்டினால்தால் என்னால் எதுவும் செய்ய முடியும். என்னைப் படைத்தும் இயக்கியும் ஆட்டியும் வைப்பவன் அவன்தானே? அப்பொ ... அவனுக்கு வேணும்-னா எனக்கு வேணுங்க்றதெ அவன் செய்யணும். இது நல்ல பிடிவாதம், இல்லையா?

பார்ப்போம். கைலெ கெடெக்கிற எதாவது ஒண்ணெ வச்சு ஒரு களி கிண்டி ஒரு தாளகமும் வெக்கப் பாக்கிறேன்; ஆனா எப்போ-னு சொல்ல முடியாது. முடிஞ்சப்போ செய்வேன்; என்னப் படைத்த அவனும் ஏற்றுக்கொள்வான்; அவனுக்கு வேறு வழியில்லை! :-) :-) :-) 


No comments:

Post a Comment