Thursday, August 25, 2011

தாய்கள் ...

விலங்குகளின் செயல்களில் தம் வாழ்வியலைப் பார்த்தார்களோ, பண்டைத் தமிழர்? 

"தெரியாது" என்று சொல்லலாம்; "இல்லை" என்று சொல்லலாம்; "ஆமாம்" என்று சொல்லலாம்; "ஏதோ ஒரு காரணத்தால் ... எளிமையாக வெளிக்காட்ட முடியாத தங்கள் உணர்வுகளை ... விலங்கினம் நடந்துகொள்ளும் முறையைப் பற்றிச் சொல்லுவதின் வழியாக வெளிப்படுத்தினர்" என்றும் சொல்லலாம். 

எதுவானால் என்ன? 

சங்க இலக்கியப் பாடல்கள் சில காட்டும் விலங்கின நடைமுறையைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமே.


இந்தப் பகுதியில் இரண்டு வகைத் தாய்களின் உணர்வைச் சங்க இலக்கியம் காட்டுவதையும் பார்க்கலாம்.  

+++++++++++++++++++++++++++++++++++++++



மகட்போக்கிய தாயின் மன உளைச்சல்...

நற்றிணை 29 (பூதனார்)
-----------------------------

கோடைக் காலம் முடிவதாகத் தெரியவில்லை. காந்தள் செடியில் நீர்ப்பசை இல்லை. பாலையின் நீண்ட வழியிலோ நெருப்பாகக் கொதிக்கிறது வெய்யில். நிழல் கிடைக்கவில்லை.  

நீரோ நிழலோ இல்லாத அந்த வறண்ட பாலையில் ஒரு சின்னஞ் சிறிய போக்குவரத்து வழி. பட்டப் பகலில் பதுங்கி மறைந்திருந்து இரை தேடுவதற்கு உதவும் வகையில் மரம் செடி கொடிகளின் தழைப்பு இல்லாத வேனல். அந்தத் தவிப்பில் ... அங்கே மங்கிய மாலைப் பொழுது வரட்டும் என்று புலி ஒன்று அசையாமல் காத்துக்கொண்டிருக்கிறது.

ஏன்? அந்தச் சிறு வழியில் யாராவது போய்வருவார்களா; அவர்களை அடித்துத் தாக்குவோமா என்றுதான்.

எதற்காக?

அந்தப் புலியின் பிணவு (அதாவது, பெண் புலி) குட்டி போட்ட களைப்பில் கால்கள் மடிந்து, பசி மிகுந்து கிடக்கிறது. அப்படி ஈன்று களைத்திருக்கும் தன் பிணவின் பசிக்கு இரை தேடவேண்டும் என்ற துடிப்பு இந்த ஆண் புலிக்கு. 

புலிக்கு இரையாக, நீர் நிழல் இல்லாத அந்தப் பாலையில் என்ன கிடைக்கும்? வேறென்ன? ஒரு சின்னஞ் சிறிய வழியில் போய்வரும் மக்களே அந்தப் புலிக்குக் கிடைக்கக்கூடிய இரை. 

அப்பேர்ப்பட்ட ஒரு பாலை வழியில் போவதற்குத் துணிந்து ஓர் இளம் பெண் போய்விட்டாள் என்றால்... அந்தப் பெண்ணின் தாயின் மனம் என்ன பாடு படும்! 

தலைவனுடன் துணிந்து கொடிய பாலைவழியில் போய்விட்ட ஒரு பெண்ணின் தாய் தவிக்கிறாள் இப்படி நினைத்து ... 

" 'அவளுடைய வடிவான ஏந்தலான இளைய முலைகள் நோகின்றனவோ?' என்று நான் நினைத்து, அவளைப் பிடித்திருந்த கையைச் சிறிது நெகிழ்த்தினேன்.  அந்த அளவில் ... அவளுடைய பெரிய செழுமையான கண்களில் நீர் கசிந்து பெருக ... கொதிக்கும் பெருமூச்சு விட்டாள்; கருமையான கூந்தலை உடைய, மிகவும் மடமை பொருந்தியவள் அவள். அப்படிப்பட்ட அவளால் அந்த வழியில் போக எப்படித்தான் முடியுமோ?"

(காந்தள் பற்றி: http://en.wikipedia.org/wiki/Gloriosa_(genus) )

**********************************************************

பாடல்:
--------
நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீளிடை நிழலிடம் பெறாஅது
ஈன்று கால் மடிந்த பிணவுப் பசிகூர்ந்தென
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலி பார்த்து உறையும் புல்-அதர்ச் சிறு-நெறி
யாங்கு வல்லுநள்கொல் தானே யான் தன்
வனைந்து ஏந்து இளமுலை நோவகொல் என
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேரமர் மழைக்கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்
மை-ஈர்-ஓதிப் பெரு-மடத்-தகையே
------------------------------------------ 

இந்தப் பாடலைக் கூர்ந்து நோக்கினால் ... படிப்பவர் மனத்துக்கு ஏற்றபடி ... இதன் பல படிவங்கள் புலனாகும்.

முதலில் ... அந்த ஆண் புலியின் செயல் -- அந்தப் புலியின் பிணவு குட்டி போட்டிருக்கிறது. குட்டி போட்டிருக்கும் நிலையில் பெண் புலிக்குத் தானாகத் தன் இரையைத் தேடிக்கொள்ளும் உடல் வலிமை இல்லை; அதன் கால்கள் முடங்கிய நிலை; அதன் பசியோ மிகுதி. இந்த நிலையில் அந்தப் பிணவின் பசிக்காக இரை தேடும் அன்பான ஆண் புலியின் அமைதியான பதுக்கம். 

அடுத்து ... "பெண்ணின் வடிவான ஏந்தலான இளம் முலைகள் நோகின்றனவோ?" என்று தாய் நினைத்ததற்கு உட்பொருள் ஏதாவது இருக்குமோ? அந்த இளம் பெண் கருவுற்றிருக்கிறாளோ என்று தாய்க்கு ஐயமோ? அதனால்தான் தலைவனுடன் போய்விட்டாளோ என்று இப்போது அந்தத் தாய் நினைக்கிறாளோ? இது தெளிவாகத் தெரியவில்லை.

அதோடு ... தாயும் மகளும் வாய்ச்சொல்லால் உரையாடவில்லை இங்கே; இருவருடைய உணர்ச்சிகளின் மன ஓட்டமும் அதன் விளைவாக இருவரின் செய்கைகளும் மட்டுமே சொல்லப்படுகின்றன.

பிறகு ... தாய்க்கு ஒருவகையில் மன அமைதி, ஒருவகையில் அச்சமும் கவலையும். குட்டி போட்ட பெண் புலியின் பசியைத் தீர்க்க ஆண் புலி இரை தேடும் காடு அது. அது போலவே ... தன் மகளுக்குக் குழந்தை பிறந்தாலும் அவளை அவள் தலைவன் அரவணைத்துப் பாதுகாத்துக்கொள்ளுவான் என்ற நம்பிக்கையில் தாய்க்கு மன அமைதி. 

ஆனால், வழிப்போக்கர்களைத் தாக்குவதற்காக அல்லவா அந்த ஆண் புலி காத்துக்கொண்டிருக்கிறது. அந்த வழியில் போகும் என் மகளே அந்தப் புலிக்கு இரையானால் ... என்று தாய்க்கு அச்சம். நீர் நிழல் இல்லாத அந்தச் சிறிய வழியில் போகத் தன மகளின் மென்மையான அடிகளுக்கு வலிமை இருக்காதே என்ற கவலை. ஆனால் அவளால் இனி வேறு ஒன்றும் செய்யமுடியாது. இலக்கியம் சொல்கிறது அவள் "மகட்போக்கிய தாய்" என்று. அப்படிப்பட்ட நிலையில் அவள் கவலைப்பட மட்டும்தான் முடியும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


திறமையான தாய்க் குரங்கின் குறும்பு!

நற்றிணை 57 (பொதும்பில் கிழார்)
-------------------------------------------


ஒரு தாய்க் குரங்கின் திறமை ...

ஒரு குன்று. அங்கே ஒரு வேங்கை மரம். அந்த மரத்தடியில் ஒரு காட்டுப்பசுக் கூட்டம் தங்கியிருக்கிறது.

அதே குன்றில் ஒரு குரங்குக் கூட்டம், இரைச்சலை எழுப்பிக்கொண்டு. அந்தக் குரங்குக் கூட்டத்திலிருந்து அந்தக் காட்டுப்பசுக் கூட்டத்தைப் பார்க்கிறது பஞ்சுபோன்ற பரட்டைத் தலையை உடைய ஒரு பெண் குரங்கு. என்ன நினைப்போ அதற்கு!

அந்தப் பசுக்கூட்டம் அசந்து இருக்கும் நேரத்தை இந்தப் பெண் குரங்கு தனக்கு ஏற்பட்ட நல்லதொரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறது!

ஏனென்றால்...

இந்தப் பெண் குரங்குக்கு ஒரு குட்டி. அந்தக் குட்டி இளமையானது, தன்னுடைய தொழில் திறமைகளை அது இன்னும் கற்றுக்கொள்ளவில்லை; ஆனால் அது மிகவும் வலிமையானது. அந்தக் குட்டிக்குப் பால் வேண்டும்.

குரங்குக் கூட்டமோ சத்தம்போட்டுக்கொண்டிருக்கிறது.

தாய்க்குரங்கு என்ன செய்கிறது? கத்திக்கொண்டிருக்கும் தன் குரங்குக்கூட்டம் தன்னைச் சுற்றிக் கூடவே தொடர்ந்து வராமல் ... மெதுவாக ஒரு காட்டுப் பசுவின் கிட்டே போய் ... பால் நிறைந்து விம்மியிருக்கும் அதன் மடியை அமுக்கித் தன் பக்கம் இழுத்து ... அந்த மடியிலிருந்து சொரியும் இனிய பாலைத் தன்னுடைய குட்டியின் கை நிறையும்படிப் பிழிகிறது!!

என்ன ஒரு திறமை இந்தத் தாய்க்குரங்குக்கு!


பாடல் வரிகள்
------------------
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்
துஞ்சு பதம் பெற்ற துய்-த்-தலை மந்தி
கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால்
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்
மா மலை ... ... ...

+++++++++++++++++++++++++++++++++++++++

விலங்குகளுக்கும் "குடும்ப" உணர்வு உண்டு என்பதை எவ்வளவு நயமாக இந்தப் பாடல்கள் காட்டுகின்றன!

படிக்கப் படிக்கப் பல கருத்துகள் பலருக்கும் உண்டாகலாம். முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.



Tuesday, August 16, 2011

" ... கூடவே வருவதென்ன?"


இந்த உலகில் பிறந்த உயிர்கள் தம் உயிர் பிரிந்து ( == இறந்து / செத்து) இந்த உலகை விட்டுப் போகும்போது தங்கள் கூடவே எதையெல்லாம் / எதைத்தான் எடுத்துக்கொண்டு போக முடியும்? 

எகிப்திய பிரமிடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தெரிவது: இறந்துபோன அரசினர் மட்டுமில்லை, சாகாத ஒரு பெரிய கூட்டமே (அடிமை மக்கள், சொத்து, இன்ன பிற) அவர்களோடு சேர்த்துப் புதைக்கப்பட்ட நிலை இருந்திருக்கிறது. அது அந்த நாட்டு நம்பிக்கையையும் பழக்கத்தையும் தெரிவிக்கிறது.

எனக்குத் தெரிந்தது ... நம் ஊரில் "சனிப் பொணம் தனிப் போகாது" என்று இருந்த ஒரு சொல் வழக்கு மட்டுமே. அதாவது, யாராவது சனிக்கிழமையில் இறந்தால், சீக்கிரமே அந்த வீட்டு உறவினர் வேறு யாரோ இறந்துபோவார்கள் என்ற பதைப்பு. அதனால், சில இடங்களில் சனிக்கிழமையில் செத்தவர்களைப் புதைக்கவோ/எரிக்கவோ கொண்டு போகும்போது கூடவே (பாவப்பட்ட) ஒரு கோழியையும் பாடையில் கட்டி எடுத்துப் போவார்கள். சிறு வயதில் நானே இதைப் பார்த்திருக்கிறேன்.

பாவப்பட்ட ஒரு கோழி தவிர நம்மவர்க்குக் கூடவே வருவது வேறு ஒன்றும் இல்லை!

அதுதான் கண்ணதாசக் கவியரசர் அருமையாச் சொல்லிட்டாரே ... 

"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ"

என்ன அழகான அருமையான கருத்தாழம் நிறந்த பாடல்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

அண்மையில், இரண்டு வாரங்களுக்கு முன் ... எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு மாணவியின் கணவர் திடீரென இறந்துபோனார், யாரும் எதிர்பாரா நிலையில். மதிய உணவு சாப்பிட்டுப் படுத்தவர் எழுந்திருக்கவேயில்லையாம்.

அண்மையில் நான் பார்த்தபோது நல்ல உடல் நலத்தோடு இருந்த மாதிரித் தெரிந்தது. மிகவும் அன்பாகப் பேசினார். ஊருக்குத் திரும்பிப் போகும் முன் மீண்டும் வந்து தன் மனைவியின் சமையலைச் சுவைத்துச் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். பழைய கால நாட்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

பார்க்க மிக நல்ல, இனிய வடிவும் தெம்பும். தினமும் காலையில் நல்ல நடைப் பயிற்சி. ஆனால் ... தேவையில்லாத அந்த "இனிமையின்" அளவு கூடுதலாம். இதயக் குழாய் (?) அடைப்பைச் சரிசெய்துகொள்ளவேண்டிய நிலையாம்; மூன்று ஆண்டுகளாகத் தயக்கமாம்.

மிக நல்ல பண வசதி. வாழ்க்கையில் வேறு குறையொன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு மனக்குறை -- பிறந்த 4 பெண்களில் 3 தன் துணையைத் தானே தேடிக்கொண்டது.

பெண்களின் "சுயம்வரத்துக்கு"ப் பின் அவர்களையும் அவர்கள் கணவரையும் பார்க்க விரும்பாத நிலை. ஒரு வழியாக ... பேரக் குழந்தைகள் மட்டும் வீட்டுக்கு வரச் சம்மதித்தார்போல. நான் போயிருந்தபோதே ... ஒரு பெண்ணும் இரண்டு பேரக் குழந்தைகளும் (ஒன்று தூளியில்; ஒன்று ஆட்ட பாட்டத்துடன் நடமாட்டம்) வந்திருந்தும் ... அவர் வேலையிலிருந்து மத்தியானச் சாப்பாட்டுக்கு வருவார் என்ற நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலை.

மிகவும் தயக்கத்துடன் பேசிப்பார்த்தேன். பேரக் குழந்தைகள் / பெண்கள் பேச்சை எடுத்தவுடன் அந்த அழகான, பெருமிதமான முகத்தில் உணர்ச்சியே இல்லாத ஒரு திரை சட்டெனெ விழுந்தது.

"ஏன்? ஏன் ஐயா இப்படி இருக்கிறீர்கள்? இவ்வளவு இருந்தும் கடெய்சிலெ என்னத்தெக் கொண்டு போகப் போறீங்க?" என்று உலுக்கி எடுத்துப் பேச எனக்கு உரிமை இல்லை. உணர்வுகளை அடக்கிக்கொண்டேன். என் மாணவியிடம் மட்டும் என் உணர்வுளைப் பகிர்ந்துகொண்டேன். அவளும் ... "என்ன செய்ய மிஸ்? இப்படித்தான் எப்பவும். நல்லாத்தான் இருப்பார், இந்தப் பேச்சு வந்தா மட்டும் அப்படியே அமைதி ஆயிடுவார். மத்தபடி ரொம்ப நல்லவர்." என்று சொல்லி அமைதியாகிவிட்டாள். அவளுக்கும் நிறைவேறாத கனவுகள் நிறையவே.

நானும் பல முறை கொதித்து நினைத்துப் பார்த்து அமைதியானேன் -- அவருக்கு அவருடைய கொள்கைப் பிடிப்பு. அதையும் நான் மதிக்கவேண்டும், இல்லையா?

இப்போது வீடு நிறைய மனிதர்கள் -- அவர் பார்க்கத் தவிர்த்த, அவர் பார்வைக்கு அஞ்சிய பெண்கள், அவர் பார்க்க விரும்பாத மாப்பிள்ளைகள், அவ்வப்போது வந்து போன பேரக் குழந்தைகள். சீக்கிரமே எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்க என்று அவரவர் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். பிறகு ... என் மாணவியின் நிலை? தன்னந் தனியாக அவள் எப்படிச் சமாளிக்கப் போகிறாள்?