"ஊழிற் பெருவலி யாவுள?" என்று பாடிய குறளாசிரியர் "ஊடலிற் பெருவலி யாவுள?" என்று பாட மறந்தாரோ? இல்லை, பாடலில் தளை தட்டும் எனத் தளர்ந்தாரோ?
என்ன காரணமோ?
பெண்ணின் ஊடலைத் தாங்க எத்தனை ஆடவரால் முடியும்? ஒரே ஓர் அரசன் (பெயர் மறந்து போச்சு) ஊடல் செய்யும் பெண்ணிடம் கூடப் பணியமாட்டானாம்! போனால் போறான், அவன் மகா மக்கு!
நாடெல்லாம் சென்று பகையரசர்களை வென்ற ஒரு சேரலாதன் கூட இந்த ஊடல் வலிமைக்கு முன் தன் அடல்-ஆடல் வலிமையைக் காட்ட முடியவில்லை போல் தோன்றுகிறதே! இதை நான் சொல்லவில்லை ... காக்கை பாடினியார் நச்செள்ளையார் சொன்னதாகக் கேள்விப்படுகிறோம்.
பதிற்றுப்பத்தில் ஒரு பாட்டில் தெரியவருவது:
----------------------------------------------------------
கொடிகள் பறக்கும் தேர்கள், யானைகள் ... எல்லாம் ... பகைவர் நிலம் முழுவதும் பரவுகின்றன. கையில் கேடயம் பிடித்த வீரர்கள் ... பெரிய கடலில் கப்பல்கள் திசை எங்கும் சுற்றிச் சுழன்று வந்தது போல ... போர்க்களத்தில் தோன்றி முன்னேறுகிறார்கள். அவர்கள் உடம்பில் பாதுகாப்புக்கு என்று வேறு எதையும் தனியாக அணிந்திருக்கவில்லை; வேல் மட்டுமே சுமந்து வருகிறார்கள்! பகை மேம்பட்ட அந்த வகைப் போரில் பல ஆடவர்கள் உயிர் இழக்கிறார்கள்.
அந்த மாதிரிப் போரை எல்லாம் வென்றவன் இந்தப் பாட்டுக்கு உரிய சேரலாதன். அவனுடைய கைகளுக்கு இடி போன்ற வலிமை. அந்தக் கைகளுக்கு மேலும் ஒரு தனிச் சிறப்பு உண்டு! அது என்ன? அந்தக் கைகள் எந்நாளும் கீழ்ப்புறமாகக் கவிந்ததில்லை -- தன்னைக் கேட்டு வருபவர்களுக்குப் பொருள் கொடுக்கும்போது மட்டும் அவன் கைகள் கீழ்ப்புறமாகக் கவியும். அது மட்டுமில்லை ... பிறர் எவரையும் இரந்து கேட்பதற்காக மேல் நோக்கி விரியவும் விரியாது!
ஆனால் ... ஆனால் ... போரின் வெற்றி அவன் கையை எப்படிப் புரட்டிப் போட்டது, தெரியுமா? பார்ப்போம்.
துணங்கைக் கூத்து ஆடுகிறர்கள் அவன் மக்கள். அவன் தலைவன்; அதனால் அவன் முதல் கை கொடுத்து ஆடவேண்டும். ஆகவே, துணங்கைக் கூத்து ஆடும் மகளிரைத் தழுவி, சிலிர்த்து எழுந்த வலிமையான காளை போல ... முதல் கை கொடுத்து அவன் ஆடுகிறான் ஓர் ஆட்டம்!
வேறோர் இடத்தில் ... இன்னொருத்தி ... படுகிறாள் ஒரு பாடு! அவள் யார்? அவள் அவனுடையவள்; அவனுடைய அரிவை. அழகில் ஒன்றும் குறைந்தவள் இல்லை. இளமை துடிப்பவள். பெரிய வளமான கண்கள் அவளுக்கு. அவளுடைய சிறிய அடிகளின் உட்புறம் மலரின் அகவிதழ் போல் ஒளியும் மென்மையும் பொருந்தியவை. அந்தக் கால்களில் கிண்கிணி அணிந்திருக்கிறாள். (அவளுக்கு ஆட முடியாதா என்ன?!)
மகளிரைத் தழுவி, தலைக்கை தந்து, பெருமிதத்தோடு ஆடிய அவனுடைய துணங்கை ஆட்டம் பற்றி அவளுக்குத் தெரியவருகிறது. அரிவையின் உரிமை பொறுக்குமா? அங்குமிங்கும் அலைகிறாள்; அவள் காலின் கிண்கிணிகளும் அவளோடு அலைகின்றன. நடுங்குகிறாள் ... அவள் ஓர் இளந்தளிர். அவனுடைய செயலோ கடுமையான வெள்ளம் போன்றது. ஆகவே ... மிகவும் கடுமையான வேகத்தோடு வந்து அலைக்கழிக்கும் கொடிய வெள்ளத்தின் நடுவே நின்று அலைபடும் ஒரு சின்னஞ்சிறு தளிர் போல நடுங்குகிறாள்.
கூத்தாடிய காளை ... வருகிறான் தன் அரிவையிடம். அவனை அடிக்கவேண்டும், நன்றாகச் செம்மையாக அடித்து வெளுத்து வாங்கவேண்டும். பாவம், அந்த அரிவையால் வேறு என்னதான் செய்ய முடியும்?
ஒரு சின்ன, சிவப்பு நிறக் குவளைமலர் கிடைக்கிறது; அதை எடுக்கிறாள். அந்தச் சிறிய செங்குவளை மலரைவைத்து அந்தப் போர் வெ(ற்)றியனை அடிக்கப் பார்க்கிறாள்!
யாரிடமும் இதுவரை தோற்காத அவனுக்கு இப்போது தன் அரிவையிடம் படு தோல்வி! வேறு வழியில்லை. உடனே பணியவேண்டியதுதான்! என்றும் எவர்க்கும் முன்னால் தாழாத அவன் கை ... இன்று இப்போது ... அவள் முன்னால் தாழ்கிறது! "ஈ" ('எனக்கு அதைத் தா') என்று சொல்லிப் பணிந்து கேட்கிறான்.
அவளா விட்டுக் கொடுப்பாள்?
"என்னைப் பொருத்த மட்டில் நீ யார்?" என்று சொல்லி மெல்ல நகர்ந்துவிடுகிறாள்!
மன்னன் ... கேட்டவர்க்கெல்லாம் வாரி வழங்கிய மன்னன் அவன் ... அவன் இப்போது வேண்டிக் கேட்டதோ தன்னை அடிக்கவந்த ஒரு சிறு செங்குவளை மலரை மட்டுமே! அதை இரந்தும் ... கேட்டது கிடைக்கவில்லை! அதனால் பொங்கி எழுந்த சினத்தோடு அந்தக் குவளை மலரைத் தன்னுடைய சொந்த அரிவையிடமிருந்து பிடுங்கிக்கொள்ளக்கூட அவனால் முடியவில்லை!
புலவர்க்கு ஒரே வியப்பு!
தன்னுடைய அரிவை கையிலிருந்த ஒரு சின்னஞ் சிறிய குவளை மலரைக்கூடப் பிடுங்கி எடுக்க முடியவில்லை! அவனால் எப்படி மதில்களால் காக்கப்பெற்ற வெண்கொற்றக்குடை வேந்தர்களை வென்று அவர் நாட்டைத் தன்வசப்படுத்த முடிந்தது?!
எவ்வளவு அழகான பாடல்! இது "புறத்திணை" என்ற பிரிவில் தொகுக்கப்பட்ட பதிற்றுப்பத்தில் ஒரு பாடல். அக உணர்வுகளை எவ்வளவு நுணுக்கமாகப் புறத்தின் கருத்தோடு பின்னியிருக்கிறார் நச்செள்ளையார்! அழகுணர்ச்சியைத் தூண்டும் பாடல்! புலவருக்கு நன்றி!
+++++++++++++++++++++++++++++++++++++++++
பாட்டின் பெயர்: "சிறு செங்குவளை"
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது
---------------------------------------------------------
கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந்-தேர் வேறு புலம் பரப்பி,
அருங்-கலம் தரீஇயர் நீர்-மிசை நிவக்கும்
பெருங்-கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரு மா-இரும்-பல்-தோல்
மெய்-புதை-அரணம் எண்ணாது, எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர்-நிலை-உலகம் எய்தினர் பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்-கை
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும்; இனியே,
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்-புணை ஆக,
சிலைப்பு வல்-ஏற்றின் தலைக் கை தந்து, நீ
நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி,
உயவும் கோதை, ஊரல்-அம்-தித்தி,
ஈர்-இதழ் மழைக்கண், பேர்-இயல்-அரிவை
ஒள் இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப,
கொல்-புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய சிறு செங் குவளை,
"ஈ" என இரப்பவும், ஒல்லாள், "நீ எமக்கு
யாரையோ?" எனப் பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை; பாஅல்
யாங்கு வல்லுநையோ? வாழ்க, நின் கண்ணி!
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட
வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?
--------------------------------------------------------------
++++++++++++++++++++++++++++++++++++