Thursday, December 30, 2010

உலகளாவிய வாழ்த்தும் ... உள் நோக்கிய வேண்டுதலும் ...

(தலைப்பில் இருந்த சொற்களின் வரன்முறையைச் சிறிதே மாற்றினேன். வேறொன்றுமில்லை.)

பழைய காலம்
-----------------

சங்க இலக்கிய நூலான ஐங்குறுநூறு தரும் படிப்பினை அருமையானது.

இந்த இலக்கியத்தில் ஒரு 10 பாடல்கள் அருமையாக "உலக நன்மை நோக்கிய" வழிபாட்டை உள்ளடக்கிக் காட்டுகின்றன!

புலவரோ தம் போக்கில் இலக்கிய நயம்பட இதைச் சொல்லியிருக்கிறார்.

தாயும் மகளும் வேண்டுகிறார்கள். யாரை என்பதெல்லாம் கணக்கில்லை. என்ன வேண்டுகிறார்கள் என்பதே கருத்து.

தாய் வேண்டுகிறாள்:
"[மன்னன்] ஆதன் வாழ்க! [மன்னன்] அவினி வாழ்க! வேந்தனுக்குப் பகையில்லாமல் இருக்கட்டும்! பல ஆண்டுகள் அவன் செழிக்கட்டும்!" 

மகள் வேண்டுகிறாள்;
"விரிந்து படர்ந்த பொய்கையில் தாமரை மலர்ந்த குளிர்ச்சி பொருந்திய ஊர்க்காரன் [என்னை அவனுடையவளாக] வரையட்டும்! எந்தையும் [அவனுக்கு] என்னைக் கொடுக்கட்டும்!"

இப்படியே ஒவ்வொரு பாட்டிலும் தாய் வேண்டுதல் "உலகளாவியது." மகள் வேண்டுதல் "மனதளாவியது."

தாய் வேண்டுதல் மன்னனின் நலத்தையும் நாட்டின் வளத்தையும் பற்றியது. மகளின் வேண்டுதலோ ... தன் காதலனோடு தான் இணைவதைப் பற்றியது!

எளிமையான பாடல்கள். சொற்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். புரியும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டே முக்கால் (2 3/4) அடிகளில் தாய் வேண்டுதல்; மீதி அடிகளில் மகள் வேண்டுதல்.

படித்துச் சுவையுங்கள்:

***************************************
ஐங்குறுநூறு

1.
வாழி ஆதன்! வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
என வேட்டோளே யாயே; யாமே
நனைய காஞ்சி-ச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே!

2.
வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே! வருக இரவலர்!
என வேட்டோளே யாயே; யாமே
பல்-இதழ் நீலம்-ஒடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழி வழிச் சிறக்க என வேட்டேமே!

3.
வாழி ஆதன்! வாழி அவினி!
பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
என வேட்டோளே யாயே; யாமே
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன் மனை
வாழ்க்கை பொலிக என வேட்டேமே!

4.
வாழி ஆதன்! வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
என வேட்டோளே யாயே; யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க என வேட்டேமே!

5.
வாழி ஆதன்! வாழி அவினி!
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
என வேட்டோளே யாயே; யாமே
முதலை-ப்-போத்து முழு மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேர் எம்
முன் கடை நிற்க என வேட்டேமே!

6.
வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!
என வேட்டோளே யாயே; யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை-த்
தண் துறை ஊரன் வரைக;
எந்தையும் கொடுக்க என வேட்டேமே!

7.
வாழி ஆதன்! வாழி அவினி!
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
என வேட்டோளே யாயே; யாமே
உழைப் பூ மருதத்து-க் கிளைக் குருகு இருக்கும்
தண் துறை ஊரன் தன் ஊர்-க்
கொண்டனன் செல்க என வேட்டேமே!

8. 
வாழி ஆதன்! வாழி அவினி!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
என வேட்டோளே யாயே; யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூக்கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக என வேட்டேமே!

9.
வாழி ஆதன்! வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!
என வேட்டோளே யாயே; யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே!

10.
வாழி ஆதன்! வாழி அவினி!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
என வேட்டோளே யாயே; யாமே
பூத்த மாஅத்து-ப் புலால்-அம்-சிறு மீன்
தண் துறை ஊரன் தன்னொடு
கொண்டனன் செல்க என வேட்டேமே!


+++++++++++++++++++++++++++++++++++++

தொடர்ந்த காலம்
------------------------

கடந்த ஆண்டுகளின் நிகழ்ச்சிகளுக்கு நன்றி ... அவை நல்ல படிப்பினையைத் தந்து ... இனி வரும் ஆண்டுகளுக்கு ஏற்றவகையில் நம்மைத் திருப்பியிருப்பதால்!


"பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க ..."

என்று ... என்றைக்கோ ஒரு நாள் ... அந்தக் காலத்து மக்கள் வேண்டியபடியே இன்றும் வேண்டுவோம்!

+++++++++++++++++++++++++++++++++++++


இன்றைய வாழ்வுக்கு என் படையல்
---------------------------------------------
கரடு முரடான புறம்! உள்ளே இருப்பதோ ... சொல்லத் தேவையில்லை!





8 comments:

  1. உலகளாவியதும் வேண்டும். மனதளாவியதும் வேண்டும். உலகு செழிக்கவேண்டும். மனது நிறைய வேண்டும். தினந்தோறும், உங்கள் கருத்துக்களை தேடிப் படிப்பேன்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பின் இ சார்! உங்கள் அன்பான வருகையினால் இந்த என் தளம் பொலிவு பெற்றது; "அமோகமான ஆசீரவாதம்" பெற்றது; உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை!

    என்னால் முடிந்தவரை எழுதப் பார்க்கிறேன். அப்புறம் ... இயறகையின் வழி..., இல்லையா!

    ReplyDelete
  3. அருமையான ஆரம்பம் அம்மா. தமிழின் மேல் உங்கள் பற்று வியக்க வைக்கிறது. நன்றி. புதிய தளத்துக்கு வாழ்த்துகளும், வணக்கங்களும்.

    ReplyDelete
  4. தொடர ஆரம்பித்துவிட்டேன் அம்மா ...:))

    ReplyDelete
  5. வாருங்கள், கீதா, துரை ஐயா! உங்கள் எல்லாருடைய ஊக்கமும் இந்தத் தளத்திற்கு உயிர்ச்சத்து! மிகவும் நன்றி! என்னால் இயன்ற அளவு உழைப்பேன்.

    ReplyDelete
  6. இன்றுதான் சுவைத்தேன் இந்த இனிப்பை!
    உலகளாவிய வாழ்த்து
    உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டதே!

    கண்ணிலும் அல்லவா இனித்தது உங்கள்
    வெள்ளெனச் சிரிக்கும் தேங்காய்ப் படம் பார்த்ததும்.

    நல்வாழ்த்துகள்!

    அன்புடன்
    செல்வா
    தை 1, திருவள்ளுவர் ஆண்டு 2042

    ReplyDelete
  7. அன்பின் செல்வா, நல்வரவு! நல்ல நாளில் காலெடுத்து வைத்திருக்கிறீர்கள். தமிழிலக்கியச் சுவையை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று விரும்பித் தொடங்கியிருக்கிறேன். உங்கள் ஊக்கமும் பின்னூட்டமும் எனக்குப் பெரிய உந்துதல்! நன்றி!

    ReplyDelete