Saturday, April 13, 2013

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு (ஏன் படிக்க வேண்டும்?)

------------------------------------------------------------------------------------------------------------------

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு (ஏன் படிக்க வேண்டும்?)

------------------------------------------------------------------------------------------------------------------ 

முன்சொல்
-------------- 

16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே "மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)" என்ற கையேடு. அது   போர்த்துக்கீசிய மொழியில் தமிழை விளக்கி எழுதப்பட்டது. அதை ஜீன் அம்மையாரும் (Jeanne Hein) நானுமாகச் (V.S.Rajam) சேர்ந்து மொழிபெயர்த்து இப்போது வெளியிட்டிருக்கிறோம். இது தொடர்பாக ஜீன் அம்மையாரின் வேலை தொடங்கியது 1964-இல். பிறகு 1978-இல் என்னோடு  சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலை தொடர்ந்தது. மொழிபெயர்ப்பு வேலை முடிந்தது 1982-இல். ஆனால் முழுப் புத்தகமாக வெளியிட உடனே இயலவில்லை, பல பல சிக்கல்கள். சிக்கல்களை முந்தைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். 

பாதிரியாரின் கையேட்டை ஏன் படிக்க வேண்டும்?
-------------------------------------------------------------- 
ஒரு சில கருத்துகளை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

1. அன்றீக்குப் பாதிரியார் இந்தத் தமிழ்க் கையேட்டை உருவாக்கிய காலச் சூழ்நிலையைத் தெரிந்துகொள்ளலாம். அது தமிழக வரலாற்றில் ஒரு குத்துக்கல்

2. தொல்காப்பியம், நன்னூல் போன்ற மரபிலக்கணங்களைத் தொடாமல் இலத்தீன் இலக்கணக்கூறுகளின் வழியே தமிழை விளக்கியிருப்பது முதல் முதலாக நமக்குத் தெரியவரும் புது முயற்சி. இந்த முயற்சியே பின்வந்த "அயலவர் படைத்த" தமிழ் இலக்கணங்களுக்கு முன்னோடி

3. வடமொழிச் சார்பு மிகுதியும் இல்லாத தமிழை இந்தக் கையேடு விளக்குகிறது. மிகச் சில வடமொழிச் சொற்களே இந்தக் கையேட்டில் உள்ளன. 

4. 16-ஆம் நூற்றாண்டில், தமிழக முத்துக்குளித்துறையில் தமிழ் எப்படி எழுதப்பட்டது, தமிழ்ச் சொற்கள் எவ்வாறு ஒலிக்கப்பட்டன என்று இந்தக் கையேட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

5. சில தமிழ் ஒலிகளின் வழி, 16-ஆம் நூற்றாண்டுப் போர்த்துக்கீசியம் எவ்வாறு ஒலிக்கப்பட்டது என்றும் தெரிகிறது என்று ஜீன் அம்மையார் சொன்னார்கள். 

6. 16-ஆம் நூற்றாண்டில் தமிழக முத்துக்குளித்துறையில் வாழ்ந்த  மக்களைக் குறிப்பிடும் பெயர்ச் சொற்களை (இயற்பெயர் அல்லாத 'கொல்லன்' 'தட்டான்' 'நாசுவன்' ... போன்ற பெயர்ச் சொற்களை)  அன்றீக்கு அடிகளார் வகைப்படுத்தியிருக்கும் முறையிலிருந்து ... "சாதி" "இனம்" "தொழில்" அடிப்படையில் அப்போது வழங்கிய பெயர்களை அயலவர்கள் எப்படிப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள் என்று தெரிகிறது. இதை எங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். "சாதி" என்ற தமிழ்ச்சொல்லை "caste" என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அந்தச் சொல்லுக்கு அடிப்படை போர்த்துக்கீசியச் சொல்லான "casta" என்பது இங்கே தெரிகிறது. மேற்குக் கடல் வழியே முதல் அயலவர் வந்த இடம் தென்னாடு; அவர்களுடைய சமயத்தைப்  பரப்புவதற்காக வாழ்ந்து பழகிய இடம் தமிழகம். அங்கே அவர்கள் பார்த்துப் பழகிய மக்களை அவர்கள் வகைப்படுத்தியபோதுதானே இந்த "casta" என்ற கருத்து உருவாகியிருக்க வேண்டும்? 

7. "கிறித்துவத் தமிழ்" என்ற ஒரு வகைத் தமிழ் உருவாகி வந்ததைப் புரிந்துகொள்ளலாம்

இன்ன பிற.  

Tuesday, April 9, 2013

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-3)

------------------------------------------------------------------------------ 

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-3) 

------------------------------------------------------------------------------ 


ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index)படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றித் தெரியாது, இல்லையா, அவர்களுக்கு உதவி செய்யத்தான் இந்த இரண்டும்.  

எங்கள் வரலாற்று மொழியியல் பேராசிரியர் Henry Hoenigswald சொல்வார்: Index is the place where you should start when you want to read/use a book seriously.  

பொருளடக்கமும் சொற்குறிப்புப் பட்டியலும் புத்தகப் படைப்பாளியின் திறமையையும் படிப்பவனின் திறமையையும் பறை சாற்றுமாம்! 

இந்த இரண்டு பகுதிகளையும் மின்பொறியின் உதவி இல்லாமலே பழைய காலத்தில் எப்படித்தான் உருவாக்கினார்களோ! அதுவும் மின்விளக்கு வசதி இல்லாமல் பிற பல சிக்கல்களுக்கு நடுவில் அவர்கள் உருவாக்கிய நூல்களுக்காக நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது! 

நிற்க.


சிக்கல்  3
-------------------- 
புத்தகம் என்றால் ... பக்கங்களை உருவாக்கினால் மட்டும் போதாது. அதுக்கு உரிய பொருளடக்கம் (Table of Contents), அடிக்குறிப்பு (foot notes), சொற்களைத் தேடும் குறிப்பு (Index) ... இன்ன பிற வேண்டும்.  அவற்றைப் பயனருக்காக வேண்டி ஒரு குறிப்பிட்ட வடிவில் கோக்க வேண்டும். அதுக்கு உரிய மென்பொருள் (word processing software) தேவை. 


எனக்குத் தேவையான மென்பொருள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. காரணம்: ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்து உருவக் கோவைகள், பொருளடக்கம்+சொல் தேடும் குறிப்பு இவற்றை உருவாக்குவது, பிடிஎஃப் கோப்பு உருவாக்குவது.


ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்த நைசஸ் மென்பொருள்  (Nisus Software, Southern California) இந்தக் குறிப்பிட்ட முயற்சிக்கு உடனடியாக உதவவில்லை; பல கோளாறுகள்.  

கோளாறுகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் (Nisus Software, Southern California) தெரிவித்தேன். கோளாறுகளைச் சரி செய்து உதவினார்கள். நான் அவ்வப்போது தெரிவித்த கோளாறுகளைச் சரி செய்து, அதனாலேயே அப்போது இருந்த நைசஸ் மென்பொருளுக்கு அடுத்த பிரதியை (next version) உருவாக்கினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளூங்களேன்! வாழ்க நம் புத்தக முயற்சி என்று நினைத்து மகிழ்ந்தேன். 

இதோ, சில பக்கங்கள்:

















சிக்கல் - 4
----------------
நைசஸ் மென்பொருள் நிறுவனத்தாரின் உதவியால் மகிழ்ச்சி ஒருபுறம்; புத்தக வெளியீட்டில் காலத் தாழ்ச்சி என்ற நிலையை மட்டுமே புரிந்துகொண்ட நார்வினின் (ஜீன் அம்மையாரின் கணவரின்)  கவலை குறித்து என்னை வாட்டிய மனநோவு ஒரு புறம். 

நார்வினுக்குக் கணினி பற்றி ஒன்றுமே தெரியாது. கணினி தெரிந்த பிறருக்கும் நான் சொன்னது புரியவில்லை. எல்லாருக்கும் என்ன புத்தகம் என்று தெரிந்துகொள்வதில் மட்டும் ஓர் ஆர்வக் குடைச்சல்! 

"யாரை நம்பி இந்த முயற்சியில் இறங்கினேன், போங்கடா போங்க" என்று நான்பாட்டுக்கு வேலை செய்துகொண்டேயிருந்தேன்.


சிக்கல் முடிவு -- புத்தக வெளியீடு 
------------------------------------------- 
ஒரு நாள் நல்ல முடிவு கிடைத்து, ஒருவழியாக ஒரு பிடிஎஃப் கோப்பைப் பதிப்பகத்தாருக்கு அனுப்பிவைத்தேன்! 

பதிப்பகத்தாரும் என் வேண்டுகோளின்படி ... புத்தகத்தின் ஒரே ஒரு படியை அவசர அவசரமாக ஜீன் அம்மையாருக்காகத் தயார் செய்து அனுப்பினார்கள். பிறகு பொதுமக்களுக்கான படிகளைத் தயார் செய்து வெளியிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி! 




Wednesday, April 3, 2013

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-2)


------------------------------------------------------------------

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-2) 
------------------------------------------------------------------


சிக்கல் 2
—————— 
பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது! 

ஒருவருடைய கையேட்டுப் பிரதியை ஓர் அச்சகத்தின் பக்கங்களுக்குள் கொண்டுவருவது எளிதான செயல் இல்லை! இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் என்னைக் கிண்டல் செய்து குற்றம் சொன்னார்கள்! மக்களின் இந்த மாதிரிக் கிண்டலில் என்ன புதுமை? சில மக்கள் பிறரைக் குற்றம் சொல்லியும் கிண்டலடித்துமே பொழுதைப் போக்குகிறவர்கள் ஆச்சே! 

சில பக்கங்களைப் பாருங்கள்: 








இப்படியே, பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்த்ததோடு மட்டுமில்லாமல், புத்தக வடிவில் உருவாக்கும் முயற்சியும் தொடர்ந்தது. 


சிக்கல்  3
-------------------- 
புத்தகம் என்றால் ... பக்கங்களை உருவாக்கினால் மட்டும் போதாது. அதுக்கு உரிய பொருளடக்கம் (Table of Contents), அடிக்குறிப்பு (foot notes), சொற்களைத் தேடும் குறிப்பு (Index) ... இன்ன பிற வேண்டும்.  அவற்றை ஒரு "புத்தக" வடிவில் கோக்க வேண்டும். அதுக்கு உரிய மென்பொருள் (word processing software) தேவை. 

(தொடரும்) 












தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1)


------------------------------------------------------------------
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1) 
------------------------------------------------------------------

2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி  மும்முரமாகத் தொடங்கியது. 

ஜீன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது. 

ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன்.  


சிக்கல் 1
—————————— 
பாதிரியாரின் 16-ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கையெழுத்தை இந்தக் காலக் கணினிக்குள் கொண்டுவருவது பெரும்பாடாய் இருந்தது. 

எனக்கு மிகவும் தேவையாக இருந்தது என்ன? 

1. தமிழ் எழுத்தின் ஒற்றைக்கொம்பு. அதாவது, "கொ" என்ற வடிவில் முதலில் இருக்கும் கொம்பு மட்டும். 

2. "ர" என்ற எழுத்தில் நமக்கு வலதுபுறம் தெரியும் நெட்டைக் கோட்டின் கீழே நீட்சி இன்மை. அதாவது "கா" போன்ற நெடிலில் உள்ள  துணையெழுத்துப் போல மட்டும். 

3. பழைய முறையில், 'யானைக்கொம்பு'டன் எழுதப்பட்ட "ணை, லை, ளை, னை" வடிவங்கள். 

4. பழைய முறையில் எழுதப்பட்ட "றா, னா" வடிவங்கள். 

ஏன் இந்தத் தேவை? 

பாதிரியார் கொடுத்த எடுத்துக்காட்டுச் சொற்களை அவர் 16-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்தில் எழுதியதை அப்படியே காட்டத்தான்

கீழே உள்ள படங்களைப் பாருங்கள். 




கீழே உள்ளது பாதிரியாரின் கையேட்டில் ஒரு பக்கம். 



மேலே உள்ள பக்கத்தை இந்தக் காலக் கணினிக்குள் அகப்படுத்திய என் முயற்சி இங்கே: 



இன்னும் சில பக்கங்கள்: 





இதுபோலப் பல பல பக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை! 


தமிழ் ஒருங்குறியெழுத்துக் கோவை (unicode), கணினியின் வகை (Windows, Apple Mac), போன்ற எல்லாமே உதவியைவிடத் தடையைக் கூடுதலாகக் காட்டின. 

மலேசியாவில் முத்து நெடுமாறனைக் கேட்டு அவருடைய தமிழ் ஒருங்குறி எழுத்துக் கோவையை வாங்கிக்கொண்டேன். அது மட்டும் போதவில்லை.  

நண்பர் மணிவண்ணனிடம் பாதிரியாரின் கையேட்டுப் பிரதியிலிருந்து சில பக்கங்களைக் கொடுத்தனுப்பித் தமிழகத்தில் உதவி கிடைக்குமா என்று கேட்டேன். 

மருத்துவர் தி. வாசுதேவனின் (திரு. திவாஜியின்) மகனார் ஶ்ரீரமணசர்மா, மதுரை உதயசங்கர், வினோத் ராஜன்  எல்லாரும் உடனடியாக உதவி செய்ய முன்வந்தார்கள்.  ஆனால் அவர்கள் எனக்காக உருவாக்கிய எழுத்துக் கோவையைப் பயன்படுத்த இயலவில்லை -- என் கணினியில் அந்தக் கோவையைப் பயன்படுத்த சுற்றுவட்ட முயற்சி தேவையாக இருந்தது; அதற்கேற்ற நேரமும் காலமும் எனக்கில்லை. 

ஆகவே, என்னிடம் இருந்த இரண்டு மூன்று வகைத் தமிழ் எழுத்துக் கோவையை ஒட்டிப்போட்டு எப்படியோ எனக்குத் தேவையான எழுத்துக் கோவையை உருவாக்கிக்கொண்டேன். 


சிக்கல் -- 2
------------------- 

பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது! 

(தொடரும்) 





Tuesday, April 2, 2013

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 5 (புத்தக முயற்சிச் சிக்கல்)


------------------------------------------------------------------

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 5 (புத்தக முயற்சிச் சிக்கல்) 
------------------------------------------------------------------

1982-லிருந்து புத்தக வேலையைப் பற்றிய பேச்சை எடுத்தாலே ஜீன் அம்மையாருக்கு வெறுப்பாக இருந்தது. எல்லாக் குறிப்பேடுகளையும் கட்டித் தூக்கிவைத்துவிட்டார். என் குறிப்புகள் மட்டும் என்னிடம் இருந்தன. 

அவ்வப்போதைய தொலைபேசித் தொடர்பும் கிறித்துமஸ் வாழ்த்துகளும் மட்டுமே எங்கள் தொடர்பை வளர்த்தன. 2001-இல் என் அம்மா இறந்தபோது ஜீன் அம்மையாரின் சொற்களே எனக்கு ஆதரவு. 1978-1988 ஆண்டுகளில் என் மகனைப் பிரிந்திருந்த காலத்திலும் ஜீன் அம்மையாரே எனக்கு ஆறுதல். ஆனால் 1982-இலிருந்து புத்தகப் பேச்சு மட்டும் அவருக்குப் பிடிக்கவில்லை. 

2009-இல் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்து மாநாட்டுக்குப் போகும் வழியில் என் மகனோடு சென்று அவரைப் பார்க்க விரும்பினேன். அவரும் “நீ எப்போது வருவாய் என்று காத்திருக்கிறேன், உன் மகனைப் பார்க்கவேண்டும்” என்றார். நான் புத்தக  வேலைக்காகத்தான் வருவேன் என்றேன். சரி என்றார்! :-) இந்தப் பேச்சு நடந்தது 2009 ஏப்ரலில். ஆனால், சரியான விமானத் தொடர்பு கிடைக்காததால் அவர் ஊருக்கு நாங்கள் போக முடியவில்லை. 

2009 ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பேசியபோதெல்லாம் நான் அவரைப் பார்க்க வரவில்லை என்றும் என் மகனை அவருக்குக் காட்டாமல் வைத்திருக்கிறேன் என்றும் சொல்லி அன்போடு நொந்துகொண்டார். 

2009-இல் ஒரு முறை பேசியபோது உலகத்தோடு தொடர்பில்லாத முறையில் அவர் பேசிய மாதிரித் தெரிந்து அதிர்ந்துபோனேன். பிறகு பேசியபோதெல்லாம் அதே நிலை. அப்போதுதான் மறதிநோய்  (Alzhiemer's disease) அவரைப் பீடித்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். 

யாரோ அவர்களிடம் புத்தக வேலை செய்யவேண்டும் என்றால் பண உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு நான் பேசியபோதும் யாரோ பணத்துக்காக அவரைத் தொல்லை செய்வதாக நினைத்துக் கூச்சல். மறதிநோய் முற்றிக்கொண்டே வந்தது. 

பிறகு ஜீன் அம்மையாரின் கணவர் என்னுடன் தொடர்புகொண்டு நாங்கள் எழுதிய எல்லாக் குறிப்புகளையும் எனக்கு அனுப்பிவைத்தார். அப்போது எனக்குக் கணினி அலுவலகத்தில் வேலை போய்விட்ட நிலை -- நாங்கள் பலர் செய்துவந்த ஒரு project கலைக்கப்பட்டு எங்கள் குழுவினருக்கு வேலை இல்லை. 

மிகவும் நொந்துபோயிருந்தேன். மாத வருவாய் இல்லாத நிலையில் வீட்டை விற்க வேண்டிய நிலை வரலாம் என்று பழைய குறிப்பேடுகளையும் கட்டுரைகளையும் குப்பையில் போட நினைத்துக் கிளறிக்கொண்டிருந்த நேரம் 2010 ஈஸ்டர் திருநாள். ஏதோ உட்குரல் சொன்னது -- இந்த முயற்சியைக் கைவிடாதே என்று. உடனே கடைக்கு ஓடினேன் ஒரு scanner வாங்க. கடை அடைப்பு. மறுநாள் காலையில் போய் ஒரு scanner வாங்கி வந்து (அந்தச் செலவு மிகவும் பெரிய செலவு எனக்கு) எங்கள் கட்டுரைகளை மின்வருடத் தொடங்கினேன். நாங்கள் இந்தப் புத்தக வேலை தொடங்கிய காலத்தில் மேசைக்கணினி, மடிக்கணினி ... இல்லை. IBM typewriter-இல் ஜீன் அம்மையார் தட்டியதும் என் கையெழுத்துப் பிரதிகளும் மட்டுமே! அனைத்துக் குறிப்பேடுகளையும் மின்னாக்கம் செய்வது பெரும்பாடு. அத்தனை ஆண்டுகள் பழசாகிப் போன தாட்களிலிருந்து கணினிக்கு எழுத்து ஏறுவதில் சிக்கல். அந்தச் சிக்கலைத் தாண்டி ஒருவழியாக 400+ பக்கங்களைக் கடைத்தேற்றினேன்! 

அந்தப் பக்கங்களைப் படியெடுத்து (print பண்ணி) ஜீன் அம்மையாரின் கணவருக்கு அனுப்பி, இதைத்தான் ஒரு புத்தக வடிவில் கொண்டுவரப்போகிறேன் என்று சொல்லி அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். 

ஜீன் அம்மையாருக்கு அது புரிந்திருக்க வழியில்லை. 

(தொடரும்) 







Monday, April 1, 2013

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 4 (மொழிபெயர்ப்பு முயற்சி)




------------------------------------------------------------------ 
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 4 (மொழிபெயர்ப்பு முயற்சி-1) 
------------------------------------------------------------------

ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கப் பெண்மணி 1919-ஆம் ஆண்டு மார்ச்சு 17-ஆம் நாள் பிறந்தவர். மிக நல்ல முற்போக்கு எண்ணம் கொண்டவர். வியட்நாம் போர்க்காலத்தில் எளியவர்கள் சார்பில் போராடியவர். கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்தார்; பிறகு இல்வாழ்க்கை. 

இந்தியாவில் கிறித்தவ சமயம் பரவியது எப்படி என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஜீன் அம்மையாரைக் கத்தோலிக்கப் பாதிரிமார் பற்றிய படிப்பில் இழுத்தது. யூதராகப் பிறந்த ஒருவர் (அன்றீக்கு அடிகளார்) சட்டப் படிப்பு (Cannon Law) படித்து, இயேசு  வகையில் (Society of Jesus) சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணியாற்றியது அவர் கவனத்தை ஈர்த்தது. மேற்கொண்டு அந்தப் பாதிரியைப் பற்றிப் படிக்கத் தொடங்கி, பல வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து, 1964-இல் அந்தப் பாதிரியின் வரலாற்றை எழுதத் தொடங்கினார். 

அப்போது, அந்தப் பாதிரி எழுதிய நூல்களைப் பற்றியும் தெரிந்துகொண்டார். பாதிரியின் ஒரு கையேடு (handwritten manuscript)  பதிப்பிக்கப்படாமலே இருந்ததை அறிந்து,  அந்தக் கையேட்டின் பிரதி இருக்கும் இடத்தை (லிஸ்பன், போர்த்துகல்) அணுகி அங்கேயிருந்து ஒரு படியை வாங்கி அதைப் படிக்கத் தொடங்கினார். 

ஆ, அப்போதுதான் வந்தது சிக்கல்! 


சிக்கல் - 1
--------------- 

அன்றீக்கு அடிகளாரின் படைப்பு ஒரு கையேடு. பழங்காலப் (16-ஆம் நூற்றாண்டு) போர்த்துக்கீசியமும் பழங்காலத் (16-ஆம் நூற்றாண்டு) தமிழும் கலந்து எழுதப்பட்ட ஒன்று. பழங்காலத் தமிழைப் பழங்காலப் போர்த்துக்கீசிய மொழியில் விளக்கியது. 

ஜீன் அம்மையாருக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. அவர் பள்ளியில் படித்த இலத்தீன் மொழி ஓரளவு உதவி செய்தது. கணவர் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்ததால் பிற பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது. பல போர்த்துக்கீசிய அறிஞர்களைக் கலந்து பேசி ஒருவழியாக அந்தக் கையேட்டைப் புரிந்துகொண்டார். ஆனால் ... பழைய தமிழ் குறுக்கிட்டது! 


என்னுடன் தொடர்பு -- 1978-இல் 
------------------------------------------------ 
பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த டேவிட் மெக்கால்பின் மூலமாக அங்கே முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்துகொண்டிருந்த என்னைப் பற்றி ஜீன் அம்மையாருக்குத் தெரியவந்தது. 

பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்ப்பதில் எனக்கு விருப்பம் இருக்குமா என்பதில் ஜீன் அம்மையாருக்கு ஐயம். அதைப் பற்றி என்னைக் கேட்பதற்காகப் பிலடெல்ஃபியாவுக்கு வந்தார். தொல்காப்பியம்-பாணினி பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உடனே அவருடன் இணைந்து வேலை செய்ய ஒத்துக்கொண்டேன். 

அதன் பிறகு, நேரம் கிடைத்தபோதெல்லாம் அவர் ஊருக்குப் போவேன்; அவரும் அடிக்கடி நான் இருந்த ஊருக்கு வருவார். இப்படி இருவருமாக இணைந்து வேலை செய்து மொழிபெயர்ப்பை ஒருவழியாக 1980-இல் முடித்தோம். 

முடித்தோம் என்று எளிமையாகச் சொல்கிறேன். ஆனால், சிக்கலான சிக்கல்! 



சிக்கல் - 2 
-------------- 
பாதிரியாரின் கையேடு பல இடங்களில் தெளிவாக இல்லை; தாளைப் பூச்சி அரித்த இடங்கள், மையின் கருப்புப் பூசல், அடித்தல் திருத்தல்கள், கொஞ்சம் போர்த்துக்கீசியம், கொஞ்சம் தமிழ் என்று இருக்கும் இடங்களே மிகுதி. "en" என்ற சொல் போர்த்துக்கீசியமா தமிழா என்று பார்த்தவுடனே சொல்லிவிட முடியாது! "chati" என்று எழுதப்பட்ட ஒரு சொல்லை எப்படிப் புரிந்துகொள்வது? சதி? சத்தி? சாதி?  சாத்தி? சட்டி? சடி? சாடி? கதி? கத்தி? காத்தி? கடி? காடி? காட்டி? கட்டி? -- இப்படிப் பல வகையிலும் நினைத்துப் பார்த்துத்தான் பாதிரியார் சொல்லவந்த கருத்தைப் புரிந்துகொள்ள முடியும்! 

தமிழ் ஒலியைப் போர்த்துக்கீசிய எழுத்து வழியாகக் காட்டப்பட்ட இணைப்பைப் புரிந்துகொள்வது எளிமையாக இல்லை. பாதிரியின் கையேடு முழுவதையும் பல பல முறைகள் முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது! ஓரிடத்தில் உள்ள சொல்லுக்கு இன்னோர் இடத்தில் இருக்கும் சொல்லின் வடிவம் விளக்கம் தரும், இப்படி. 

ஆனாலும் ... "கூரைப்பாய் தோணிய்லெ இருக்கிது" "கோளி திண்டான்" என்று எங்கள் பாதிரி தந்த எடுத்துக்காட்டுகளைப் புரிந்துகொள்ளூம்போது கிடைக்கும் பெருமித மகிழ்வு இருக்கே ... அதுக்கு இணையே இல்லை!! 


இப்படியே எங்கள் முயற்சி தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள "அனைத்துலகத் தமிழ் ஆய்வுக்கூடம் (International Association of Tamil Research)" என்ற இடத்தில் எங்கள் நூலைப் பதிப்பிக்க ஜீன் அம்மையார் விரும்பினார். 




அந்த ஆண்டு (1980) நான் என் முழுநேர ஆசிரியப் பணியைத் தொடரவேண்டி, ஜீன் அம்மையாரிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு மிச்சிகனுக்குப் புலம் பெயர்ந்தேன். 

1982-இல் மீண்டும் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பணிக்குத் திரும்பினேன்.


சிக்கல் - 3
----------------- 
1982-ஆம் ஆண்டில் ஜெர்மனியிலிருந்து ஒருவர் நம் பாதிரியாரின் கையேட்டைப் பதிப்பித்திருக்கிறார் என்ற செய்தி வந்தது! அதைக் கேட்டதும் ஜீன் அம்மையார் ஊக்கம் இழந்தார்கள். நாம் செய்துவந்த வேலையை வேறு யாரோ ஒருவர் செய்து முடித்துவிட்டார், இனி நம் உழைப்புக்கும் செயலுக்கும் மதிப்பில்லை என்று போட்டது போட்டபடி ... எங்கள் ஆய்வைத் தொடர்ந்து செய்வதில் விருப்பமும் ஊக்கமும் இழந்தார். 

என்னால் ஆனமட்டும் சொன்னேன்: ஜெர்மனிப் பதிப்பாளர் நம் பாதிரியாரின் கையேட்டை மொழிபெயர்க்கவில்லை. நம் முயற்சி மிகவும் வேறுபட்டது. ஊக்கம் இழக்க வேண்டாம். 

ஜீன் அம்மையாரின் தளர்ந்த உள்ளம் மீண்டு வரவேயில்லை. 

1982-க்குப் பிறகு நான் என்னுடைய சொந்த ஆய்வுகளில் ஈடுபட்டேன். சங்க இலக்கியங்களுக்கான இலக்கண நூல் எழுதினேன். இன்ன பிற ஆய்வுகள் செய்தேன்.


(தொடரும்)