Sunday, January 31, 2016

தொல்காப்பிய "நறுக்" ... பகுதி 2 (முத்தை)


முத்தை
==========

தொல்காப்பிய 'நறுக்' … - பகுதி 1-இல் தொல்காப்பியர் பயன்படுத்திய "இம்பர்," "மிசை" என்ற சொற்களின் வரவு பற்றிப் பார்த்தோம். 

இந்தப் பகுதியில் (தொல்காப்பிய 'நறுக்' … - பகுதி 2) ...  முத்தை என்ற சொல்லைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன். என் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டவை: தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை.

முத்தை எனும் சொல் காணும் இடங்கள்:  

தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 165, பதிற்றுப்பத்து 85, சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, மணிமேகலை 18: 144; 19: 13

முத்தை என்பதை உ.வே.சா தொடங்கிப் பலரும் முந்தை என்பதன் வலித்தல் விகாரம் என்கிறார்கள். அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. தொல்காப்பியத்தில் முத்தை என்பதும் முந்தை என்பதும் தனித்தனியாக ஆளப்பட்டிருக்கின்றன. 

என்ன ஆனாலும் இந்தச் சொல் முத்து+ஐ என்ற பிரிவுக்குள் அடங்காது. 

உங்கள் கருத்து என்ன என்று தெரிந்துகொள்ள ஆவல். 

++++++++++

சரி, நம்ம கதைக்கு வருவோம். உங்கள் சிறுவர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள். 

நீங்கள்: தம்பீ, இப்ப மணி என்ன? 

பிள்ளை: ரெண்டு கால்

நீங்கள்: அப்படிச் சொல்லக்கூடாது.

பிள்ளை: ஏன்?

நீங்கள்: ரெண்டேகால்-னு சொல்லணும்.

பிள்ளை: ஏன்?

நீங்கள்: அப்படித்தான் சொல்லணும்.

பிள்ளை: போங்கம்மா/போங்கப்பா தமிழ் ரொம்ப difficult.

உங்கள் மூளைக்குள் ஒரு நெருடல். ஆமா, அது ஏன் இரண்டு என்பதுக்கும் கால் என்பதுக்கும் இடையில் ஒரு  வரணும்?

கவலற்க! நம்ம தொல்காப்பியர் அப்படித்தான் சொல்லிவச்சிருக்காரு! ;-)

++++++++++

இணையத்தில் அளவை அடுக்குப் பொருள்களின் படங்கள் கிடைக்கும் ( measuring spoons and cups )

அவற்றில் ஏதாவது ஓர் அளவையை (X என்று குறித்து) எடுத்துக்கொள்ளுவோம். அதுக்குத் தொட்டடுத்து உள்ளடங்கி, கீழாக, சிறிதாக ஓர் அளவை இருக்கு பாருங்கள், அதுதான் நாம் எடுத்துக்கொண்ட அளவைக்கு (X-க்கு) 'முத்தை.' இதை X-n என்று குறிப்போம். இதுவே தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா 165-இல் உள்ள 'முத்தை' என்ற சொல் குறிப்பது. 

கணித இயலில், factorial குறியீட்டில், காணும் "descending natural number(s)" என்ற கருத்து நினைவுக்கு வருகிறது. காட்டாக, 5! = 5 x 4 x 3 x 2 x 1 அல்லவா? 

இந்த 'முத்தை'யின் சிறப்பு என்னவென்றால் … இது வேறு எந்த ஒன்றினுக்கு உள்ளடங்கியிருக்கிறதோ அதற்கு அடிப்படை! இது (முத்தை) இல்லாமல் அந்த வேறொன்று உருவாகியிருக்க முடியாது. 2 இல்லாமல் 3 இல்லை; 4 இல்லாமல் 5 இல்லை, அல்லவா. 

இந்த மாதிரி இடங்களில் முதல் எண்ணுக்கும் தொடர்ந்துவரும் எண்ணுக்கும் இடையில் என்ற சாரியை வரும் என்பது தொல்காப்பியர் சொன்னது.

எடுத்துக்காட்டு: இரண்டேகால் (அளவு, எண், காலம்), முக்காலேமூணுவீசம் (நிறை)

++++++++++

'முத்தி'ப்போச்சு என்ற பேச்சுவழக்குக்கும் 'முத்தி' என்ற பழைய சொல்லுக்கும் தொடர்பு இருக்குமோ???



தொல்காப்பிய "நறுக்" ... பகுதி 1 (இம்பர், மிசை)

இம்பர், மிசை

====================================

முன்னுரை
--------------

தொல்காப்பியத்தில் எல்லா நூற்பாக்களுமே நறுக்கெனத் துல்லியமாக இருக்கும். இலக்கணமே அப்படித்தானே அமையும்! அதன் காரணம் அவை 'கலைச்சொற்கள்' (technical terms) மிகுந்தவையே. அந்தச் சொற்களில் சிலவற்றைப்பற்றிய என் கருத்தைப் பகிர்ந்துகொள்வதே இந்தத் தொடரின் நோக்கம்

ஒன்றைப்பற்றித் தெரியாதவர்களுக்கு அந்த ஒன்றைப் பற்றி எப்படி விளக்கலாம்

இப்போது பலவழிகள் இருக்கு. படம் வரைந்து காட்டலாம்எழுதிக்காட்டலாம்நடித்துக்காட்டலாம்இணையத்துக்கு அனுப்பலாம்


1993-இல் அமெரிக்காவில் தொழில்துறையினருக்காக எழுதும் முறை பற்றித் தெரிந்துகொள்ள  விரும்பி ஒரு பல்கலைக்கழக வகுப்பில் சேர்ந்தேன். ஆங்கிலத்தில் சொன்னால் 'Technical writing in software, hardware, chemical, medical engineering.' முதல் நாளே பயிற்சிக் கட்டுரை -- படம் வரையாமல் வெறும் ஆங்கிலச் சொற்களின் வழியே, ஒரு புட்டியின் தக்கை அடைப்பானைத் திருகியெடுக்கும் கருவியை (cork screw) அதை முன்பின் தெரியாதவர்களுக்கு விளக்கி எழுத வேண்டும். சொல் வரையறையும் கொடுத்துவிட்டார்கள். எல்லாருமே திணறிப்போனோம்; எத்தனை வகைத் திருகுகருவிகள், எத்தனை வகை அமைப்பு … எல்லாவற்றையும் தெரிந்தும் புரிந்தும் கொண்டாலன்றி விளக்க முடியுமா? Technical writing என்பதன் நுணுக்கம் புரியத்தொடங்கியது. 


மேற்சொன்ன நிகழ்வைப்போலவே தொல்காப்பியருக்கும் இருந்திருக்கும், இல்லையா? ஒரு மொழியை விளக்கவேண்டிய நிலையில் அவரும் பல நுணுக்கச் சொற்களைக் கையாண்டதில் வியப்பில்லை

நிற்க

++++++++++

இங்கே நாம் முதலில் பார்க்கப்போகும் சொற்கள் இரண்டுஇம்பர்மிசை 

தொல்காப்பியர் இந்தச் சொற்களை முறையே ஓர் எழுத்துக்கு 'இடப்பக்கம்' 'வலப்பக்கம்' என்று பயன்படுத்துகிறார்அதாவது, "இம்பர்" == ஓர் எழுத்துக்கு இடப்பக்கம்; "மிசை" == ஓர் எழுத்துக்கு வலப்பக்கம்.

(நூற்பாக்கள் தேவையானால் பிறகு எடுத்துத் தருகிறேன்.) 


இம்பர்மிசை என்ற குறியீடுகள் இடம் (position) பற்றியனகாலம் (time) பற்றியில்லை


ஆக,

1. இம்பர் என்றால் ஓர் எழுத்துக்கு இடப்பக்கம்மிசை என்றால் ஓர் எழுத்துக்கு வலப்பக்கம்நேர்நின்று பார்க்கும் பார்வையாளருக்கு இவை முறையே வலமும் இடமுமாகத் தெரியும்

2. நான் ஆய்ந்த அளவில் … ஓர் எழுத்துக்கு இம்பர் வரும் எழுத்து அங்கே ஏற்கனவே இருக்கும் எழுத்தைவிட ஒலிக்கும் அளவில் குறைந்ததாக இருக்கிறதுஅதே போஓர் எழுத்துக்கு மிசையில் ஒட்டியும் நிலைத்தும் நிற்கும் எழுத்தும் அங்கே ஏற்கனவே இருக்கும் எழுத்தைவிட ஒலிக்கும் அளவில் குறைந்ததாக இருக்கிறதுஒரே ஒரு நூற்பா இந்த எண்ணத்தைச் சாடுகிறதுஅதையும் துழாவிக்கொண்டிருக்கிறேன்

3. இலக்கியப் புழக்கத்தையும் இலக்கணக் குறியீட்டையும் பொருத்திப் பார்க்கும்போது … இம்பர் என்பது ஓர் எழுத்துக்கு இடப்பக்கம் என்பதோடு அதன் கீழ்ப்பக்கத்தையும் உள்ளடக்கி இக்காலத்துக் 'கீழ்க்குறி (subscript)'  என்பதையும் மிசை என்பது ஓர் எழுத்துக்கு வலப்பக்கம் என்பதோடு அதன் மேற்பக்கத்தையும் உள்ளடக்கி 'மேற்குறி (superscript)' என்ற பொருளையும் உணர்த்துமோ என்றோர் ஐயம்இது ஐயம் மட்டுமே


இருகைகள் மட்டுமே கொண்டு காட்சி தரும் இறைவன்-இறைவியரின் சிலைகளின் கைக்குறியீடுகள் காண்கவலதுகை மேல் நோக்கியும் இடதுகை கீழ்க்காட்டியும் இருக்கும்இதுக்கும் இலக்கணத்துக்கும் தொடர்பு உண்டா இல்லையா தெரியாது

++++++++++++++++++++ 

இதில் எல்லாம் என்ன பெரீஇய புதுமை என்று சிலர் எள்ளலாம்அது பற்றி எனக்குக் கவலையில்லை.

சொற்களை உருவாக்கும்போது எழுத்துக்கள் தொடர்ந்து வரும்இல்லையாஅவற்றை எழுதும் முறையைத் தெரியாத ஒருவருக்கு எப்படிச் சொல்லித்தருவது

இருப்பதை வைத்துக்கொண்டு இல்லாததைத் தெரிவிக்கும் முறை இதுதலைகை போன்ற உறுப்புகளை மட்டும் திசை காட்டும் கருவிகளாக வைத்துக்கொண்டுஇடம்வலம்மேல்கீழ்முன்பின் … போன்ற கருத்தை உருவாக்கி எழுத்து அறிவிக்கும் முறை இது

அது மட்டுமில்லைஎனக்குள் ஓர் எண்ணம் உறுத்திக்கொண்டேயிருக்கிறது

தொல்காப்பியரின் 'இம்பர்மிசைபோன்ற இலக்கணக் குறியீடுகளுக்கும் பண்டைத்தமிழ் எழுத்து வடிவங்களுக்கும் (பிராமி?) தொடர்பு இருக்கிறதா என்று ஆராயலாம்அங்கே தனித்து நிற்கும் ஓர் எழுத்தும்அதோடு சேரும் இன்னோர் எழுத்தும் … இடத்தைப்பொருத்த அளவில் (positions) எப்படி மாறுகின்றன என்று பார்க்கலாம்வினோத் ராஜனின் virtualvinodh.com என்ற தளத்தில் உள்ள எழுத்து மாற்றுக் கருவியைப் பயன்படுத்தி என் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறேன்

++++++++++++++++++++ 


Monday, October 5, 2015

இலக்கியத்தேன் பருக வந்தார்கள்!!!

இலக்கியத்தேன் பருகத் தமிழார்வலர்கள் வந்தார்கள்!!!
----------------------------------------------------------------------

அக்டோபர் 3, 2015 காலை 9-மணிக்குத்தொடங்கிச் சிலமணிநேரங்கள் பொழுதுபோனதே தெரியாமல் ஓர் இலக்கியச்சுவையரங்கம் என் வீட்டில் அமைந்தது.

சங்க இலக்கியப்பாடல்கள் (8-தொகை, 10-பாட்டு) என்று ஒட்டுமொத்தமாக அனைத்தையும் ... எந்த நிறுவனத்திடமும் உதவித்தொகையை எதிர்பாராமல் தன்னந்தனியாக மொழிபெயர்த்து, தன் சொந்தச்செலவில் வெளியிட்ட திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் இங்கே எங்களூர்ப்பக்கம் வந்திருப்பதை அறிந்து, இந்த இலக்கியக்கூட்டத்தை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். அவரும் தங்கள் உறவினர் வீட்டுத் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகளிலிருந்து நேரம் எடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு வருவதெனக் கனிவுடன் இசைந்தார். 

பிறகென்ன ... காலை 9-மணிமுதல் 11-மணிவரை என்ற வரையறை கடந்து ... பிற்பகல் சுமார் 3-மணிவரை எல்லாம் தமிழின்பமயம்!

முதலில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய மிகவும் தயங்கினேன் -- எத்தனைப்பேருக்கு ஆர்வம் இருக்குமோ, வருகிறவர்களுக்கு என் வீட்டுத்தரையில் உட்கார இடம் இருக்குமா, வருகிறவர்களுக்கு வண்டி நிறுத்த இடம் கிடைக்குமா ... என்று பலப்பல வகையில் கவலை.  

என் தயக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் ... பல மைல் தொலைவிலிருந்தும் வந்த (~25 பேர்) அனைவரும் தரையில் ஆடாமல் அசையாமல் அமர்ந்தும் சங்கப்பாடல்களைச் சுவைத்தும் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்தது என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்திவிட்டது! ஆனந்தக்கண்ணீர் ('உவகைக்கலுழ்ச்சி') பெருகியது. இது கலப்படமற்ற உண்மை!

திருமதி வைதேகி அவர்கள் தாம் தேர்ந்தெடுத்திருந்த பாடல்களின் கோப்பை நிகழ்ச்சிக்கு முன்னதாகவே எல்லாருக்கும் அனுப்பியிருந்தார்; செல்வி சிவகாமி அவர்கள் எல்லாருக்கும் தேவையான படிகள்/நகல்கள் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்; ஒவ்வொருவரும் தனக்கென ஓர் எழுதுகோல் மட்டும் கொண்டுவரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.  ஆக, இலக்கியச்சுவைப்புக்குத் தேவையான பாடுபொருள், எழுதுகோல், திறந்த மனம், அயர்வில்லாக் கண்கள், ஆர்வம் ... இவையெல்லாம் உந்துகருவிகளாயின.

பலரும் கொண்டுவந்திருந்த உணவுப்பொருள்கள் பலவகை! 25-பேருக்கு 4-மணி நேரத்துக்குப் போதுமான சுடுசுடு "குளம்பி" (==காப்பி), பழச்சாறுகள், பலவகைப் பழங்கள் (apples, grapes, bananas), "பிஸ்கட்" வகைகள் (cookies and other snacks), bagels,   croissants, muffins, ஹவாயீ மேக்கடேமியா (macademia), ... so on and so forth. அவற்றை வைக்க என் மேசையில் இடம் போதவில்லை என்றால் ... நினைத்துப்பாருங்களேன்!

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எல்லாரும் "குளம்பியை (காப்பியை)" மட்டும் எடுத்துக்கொண்டு சிலை-போலத் தரையில் அமர்ந்தார்கள்!

ஒரு குறுக்குப்பேச்சு இல்லை! ஒருவர் தன் கருத்தைச் சொல்லி முடித்த பின்னரே அடுத்தவர் தன் கருத்தைச் சொன்னார். 

ஒன்றரை மணிக்கூறு கழித்து, வயிற்றுக்கு உணவு ஈவதற்காக என்றே செவிக்குணவு ஈவதை நிறுத்தச்சொல்லி நான்தான் குறுக்கிட்டேன்

நண்பர்கள் சொக்கலிங்கம்-சிவகாமி இணையர்களின் இளையர் அஸ்வினும் எங்கூர்ப்பொண்ணு சுபாவும் (சுபா ராஜேஷ்) பிறரும் எடுத்த நிழற்படங்களை இங்கே இணைக்கிறேன்.


வந்திருந்த எல்லாரும் படங்களில் இல்லை, ஒளிந்துகொண்டார்களோ?! திரு டில்லி துரை எங்கே? 


ரம்யா + 'விழுதுகள் சிற்பி' திரு உதய் பாஸ்கர் + திரு சுந்தர் குட்டி (?) + திரு இந்திரா தங்கசாமி.






டாக்டர் ஜானகிராமன் + செல்வர் தொல்காப்பியன். இருவரும் தத்தம் கோவைக்கல்லூரி (பி.எஸ்.ஜி) நாள்பற்றிக் கதைக்கிறார்கள்-போல! டாக்டர் ஜானகிராமனின் அருமை மகன் விக்ரம் என் அருமை மாணவன்.






செல்வியர் சாந்தி புகழ் + நளாயினி (ஈழத்தமிழர்)





செல்வியர் நித்யா + சுபா ராஜேஷ் + சிவகாமி. 
நித்யா ஒரு பட்டிமன்றப்பேச்சாளர் என்று தெரிந்துகொண்டேன்.





திரு கந்தசாமி ('Kandy') என்ற கந்தவேள்! தமிழ்_இலக்கியம் குழுவில் கலக்குபவர். இவர் காதில் ஒரு சங்கப்பாடல் விழட்டும் ... பதினூறு பாடல்கள் நமக்குக் கிடைக்கும்! அந்த அளவு இலக்கிய அறிவும் ஆழமான புலமையும்.




திருவாளர்கள் ஜெயக்குமார், சுந்தர், சொக்கலிங்கம்






செல்வியர் சுபா, நித்யா, சிவகாமி. இந்தப்படை வெல்லாத நிலமில்லை!








செல்வி ரம்யா, விழுதுகள் 'வெட்டுநர்' திரு உதய் பாஸ்கர் 





செல்வி சிவகாமி, செல்வர் தினேஷ் 





திருமிகு நளாயினி, செல்வர் தினேஷ்






திரு தில்லைக்குமரன் (2015 ஃபெட்னா இணைப்பாளர்; எங்களூர்த் தமிழியக்கத்தின் தூண்), திரு சுந்தரபாண்டியன் 




செல்வி சாந்தி புகழ், ஆயி-அவ்வா, செல்வி பாரதி (இப்போது பெர்க்கிலியில் தமிழ் + தெலுங்கு கற்பிக்கிறவர்; எங்கள் பாத்திமாக்கல்லூரி மாணவியாக்கும்!)




செல்வி சாந்தி புகழ் + ஆயி-அவ்வா






திரு சுந்தரபாண்டியன், திரு உதய் பாஸ்கர், திருமிகு நளாயினி 





செல்வியர் செல்வர் பலர் 





++++++++++
நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகத் தினையை ஊறவைத்துப் பிறகு அதைத் தேங்காய்ப்பூவுடன் அரைத்து அந்த விழுதோடு பாதாம்பருப்புத்தூளைப் (almond meal) போட்டு ... பனைவெல்லச்சருக்கரையைச் (organic coconut palm sugar) சேர்த்துக் கொஞ்சூண்டு தேங்காயெண்ணை (unrefined coconut oil) விட்டுக் கலக்கிக் கிளறி ... ஏலக்காய்த்தூளும் பச்சைக்கற்பூரமும் சேர்த்து ... பிஸ்தாப்பருப்பைப் பரப்பிச் 'சோடனை' செய்து தயாரித்தும் ... ... ... இலக்கியத்தேன் பருகும் ஆர்வத்திலும் வந்த ஆர்வலர்களுடன் உரையாடும் கலகலப்பிலும் ... ... ... பரிமாறப்படாமல் மறக்கப்பட்ட 'தினைப்பால் பாதாம் அல்வா!!!'



++++++++++

தோட்டத்தில் ஈடுபாடு ... 


இந்த இலக்கிய நிகழ்ச்சியின்வழியே மிக அருமையான நண்பர்களின் தொடர்பு அமைந்தது என் கொசுறுப்பேறு. 

இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த எல்லாருக்கும் சின்னஞ்சிறிய கறிவேப்பிலைக்கன்று ஒன்றை எடுத்துச் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது. பலரும் எடுத்துப்போனார்கள். 

கன்றுகளுக்குத் 'தமிழ்' என்ற பெயர் வைக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். 












திரு சொக்கலிங்கம் -செல்வி சிவகாமி இணையரின் இளையர் அஸ்வின். அவர் பின்னே என் கொடிப்பசலை (Malabar spinach).





அண்மையில் யான் கண்டுகொண்ட "வனமாலீ" (வனமாலி, an epithet of Vishnu as wearing a basil garland.ஜெயக்குமார்! இவர் கைச்சிறப்பால் என் தோட்டம் உருப்படப்போகிறது என்று நினைக்கும்போதே பூக்களும் காய்களும் மனக்கண்ணில் தோன்றித்தோன்றி மகிழ்வூட்டுகின்றன.



++++++++++

அன்பு நண்பர்களே, தமிழைப் படிப்பதைத் தொடருங்கள். தமிழின் தொன்மை தானாக நிலைபெறும்.

அன்புடன்,
ராஜம்


Friday, May 30, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.2


"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.2
--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் ...

“சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்றும் பார்த்தோம்:  http://mytamil-rasikai.blogspot.com/2014/01/3.html

"உயர்வு, இழிவு, உயர்பிறப்பு, இழிபிறப்பு"  இன்ன பிற கோட்பாடுகளைப் பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html 

"இழிந்தோன்உயர்ந்தோன்இழிசினன்இழிபிறப்பாளன்" பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/04/5.html


இதற்கு முந்தைய பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடத்தொடங்கினோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/05/61.html

****************

இந்தப் பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடியதன் பயனைப் பார்த்துக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்வோம்!


****************


மக்களின் வளம்/வறுமை, இரவலர்-புரவலர் உறவு, ஆண்-பெண் உறவு ஆகிய நிலைகளிலும் நடைமுறைகளிலும் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற கோட்பாட்டுக்குச் சங்கப் பாடல்களில் சான்று இருக்கிறதா என்பதைப் பார்ப்போம். 



1. மக்களின் வளமும் வறுமையும்

————————————------

வளம்
—————
பொதுவாகப் பார்த்தால் மக்கள் எந்த நிலத்தில் வாழ்ந்தாலும் அந்தந்த நிலத்துக்கேற்ற தொழிலைச் செய்துகொண்டு அந்தந்த நிலம் தந்த வளனை நுகர்ந்துகொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. கடுமையான வாழ்வாக இருக்கலாம், ஆனால் அது அவர்களுடைய மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை என்று தெரிகிறது.

மன்றுதொறும் குரவையும் சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டமுமாக விழாக்கொண்டார்கள் என்பதை மதுரைக்காஞ்சி வரிகள் (611-619) தெரிவிக்கின்றன. 

குறிஞ்சி நிலத்தில், ஆநிரை கவர்ந்து வந்த வீரர்கள் கள்ளுண்டு களித்தாடும் தளர்ச்சியடையாத குடியிருப்பைப் பெரும்பாணாற்றுப்படை (140-146) காட்டுகிறது. 

மக்கள் தேனையும் கிழங்கையும் கொடுத்து அதற்குப் பண்டமாற்றாக மீனும் கள்ளும் பெற்றுக் களிப்பதையும், கரும்பையும் அவலையும் கொடுத்துப் பண்டமாற்றாக மானின் தசையையும் கள்ளையும் கொண்டுபோவதையும் பற்றிப் படிக்கிறோம். பரதவர் குறிஞ்சி பாட, குறவர் நெய்தல் கண்ணி சூட, அகவர்கள் நீல நிற முல்லையைப் பல திணைகளிலும் விற்க, காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் தின்னவும் மனைக்கோழிகள் தினையைக் கவரவும் மலையில் வாழும் மந்தி நெய்தற்கழியிலே மூழ்க, கழியிலுள்ள நாரைகள் மலையிலே கிடக்க என்று திணை வேறுபாடு இல்லாமல் பல உயிர்களும் நிலத்தின் வளத்தை நுகர்ந்து களித்ததைப் பொருநராற்றுப்படை காட்டுகிறது (பொருநராற்றுப்படை 210-226)

முத்தும் பவளமும் செழித்த இடங்களைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை (55-72) பெரும்பாணாற்றுப்படை (335-336) வரிகள் மூலம் அறிகிறோம். மகளிர் காலில் பொற்சிலம்பு அணிந்திருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை (332) சுட்டுகிறது. 

அதோடு, கீழ்க்காணும் பாடல் வரிகள் முத்தும் துகிரும் (பவளமும்) செழித்திருந்த நிலையைக் காட்டுகின்றன:

வளைபடு முத்தம் பரதவர் பகரும் (ஐங்குறுநூறு)
ஓதம் தொகுத்த ஒலிகடல் முத்தம் (சங்க மருவிய ஐந்திணை ஐம்பது)
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் (மதுரைக்காஞ்சி)
கடல் பயந்த கதிர் முத்தமும் (புறநானூறு)
தென் பவ்வத்து முத்துப் பூண்டு (புறநானூறு)
தெண்கடல் முத்தும் குணகடல் துகிரும் (பட்டினப்பாலை)


பொன்னை விரும்பாத மகளிர்
****************************
கோவலர் குடியிருப்பில் பொன்னை விரும்பாத ஆய்மகளைப் பற்றிப் பெருமாணாற்றுப்படை சொல்கிறது (162-166). தன் சுற்றத்துக்கு மோர் கொடுத்தபின், நெய்யை விற்ற ஆய்மகள் நெய்க்கு விலையாகப் பசும்பொன்னை ஏற்காதவளாய் எருமைக்கன்று (நாகு, பெண் கன்று) பெற்றுக்கொள்வாளாம்! 

பட்டினப்பாலையிலோ இன்னொரு வகையான காட்சி. வீட்டு முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் மீன் உணங்கலைக் கவர வந்த கோழிகளை விரட்ட அங்கே இருந்த மகளிர் தங்கள் காதுகளில் போட்டிருந்த கனங்குழையைக் கழட்டி எறிவார்களாம்; அந்தக் குழைகள் அங்கே சிறுதேர் உருட்டும் சிறுவர்களின் பொற்றேரைத் தடுக்குமாம்!


வறுமை
-------------
நிலத்தோடு ஒட்டி வாழ்ந்த மக்களை இயற்கை தந்த செல்வச் செழிப்பு மகிழ்வித்துக்கொண்டிருக்க இசைக்கலைஞர் உள்ளிட்ட ஒரு கூட்டம் மட்டும் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நகர்ந்துகொண்டேயிருந்தது. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியோர் உள்ளிட்டதே அந்தக் கூட்டம். இந்தக் கூட்டம் தொடக்கத்தில் எப்படி உருவானது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நிலத்திலும் பறைகொட்டலும் யாழிசைத்தலும் கூத்தும் நிகழ்ந்தமை தெரிகிறது. ஒருவேளை அவர்களில் சிலர் தத்தம் நிலத்தை விட்டு வேற்றுப் புலங்களில் நிகழ்ந்த விழாக்களில் தங்கள் கலைத்திறனைக் காட்டப் போயிருக்கலாம். இவர்களெல்லாம் தமக்கென நிலையான ஓரிடத்தில் இருந்து தம் அறிவும் திறமையும் மழுங்கிப்போகாமல் புலம்பெயர்ந்துகொண்டேயிருந்த நிலை தெரிகிறது. ஏன்? இசையும் பாடலும் கூத்தும் நாடகமும் செய்யுள் யாப்பும் இவர்களது கலைத்திறமையின் வெளிப்பாடு. அந்தக் கலைகளை விரும்பிப் போற்றுமிடம் விழாக்களும் அரசவையும் பொது மன்றமும் வள்ளல்களின் இருப்பிடமும். 

பிற இடங்களிலிருந்து வந்த கலைஞர்களும் இவர்களோடு இணைந்திருக்கலாம். எல்லாம் ஊகமே. 

ஆரியப் பொருநன் (அகநானூறு 386)
ஆரியர் துவன்றிய் பேரிசை முள்ளூர் (நற்றிணை 170)
ஆரியர் கயிறு ஆடு பறையின் (குறுந்தொகை 7:4)

சோற்றுக்காக மட்டுமே கலைஞர்கள் வாழவில்லை என்பதை எடுத்துக்காட்டப் பொருநராற்றுப்படை (1-3) நல்ல சான்று:
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்

சாறு கழி வழி நாள்சோறு நசை உறாது

வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!

ஓரிடத்தில் திருவிழா முடிந்தபின் அங்கே கிடைக்கும் சோற்றை விரும்பாத பொருநனும் அவன் கூட்டமும் வேற்றுப்புலத்தைத் தேடிப் போனார்கள் என்பது மிக மிக அருமையான குறிப்பு. சோறு கிடைத்தாலும் அதை விடுத்துக் கலையைச் சுவைத்துப் போற்றுகிறவர்களைத் தேடி இந்தக் கூட்டம் அலைந்திருக்கிறது என்பது வெளிப்படை!!

இப்படி இந்தக் கலைஞர்கள் (கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ) தம் கலைத்திறமையைப் போற்றிப் புரப்பவரை நாடிச் சென்றதனால் இவர்களைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று பட்டையடிப்பது நேரியதாகப்படவில்லை. 


2. இரவலரும் புரவலரும்
————————————
வறுமையில் வாடியவர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களைப் புரப்போரும் இருந்திருக்கிறார்கள். 

கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்ற இசைக்கலைஞர் மட்டுமில்லை, புலவர்களும் வறுமையில் வாடியிருக்கிறார்கள் என்பதற்குச் சிறுபாணாற்றுப்படை (130-140), புறநானூறு (159, 160, 164) போன்றவை எடுத்துக்காட்டு.

ஆக, இசைக்கலைஞர்களும் புலவர்களுமே தங்கள் வறுமை நிலை நீங்கவேண்டிப் புரவலர்களைத் தேடிச் சென்றனர் என்று தெரிகிறது. 


இதிலே புலவர்கள் இரக்கும் முறைக்கும் பிற இசைக்கலைஞர் இரக்கும் முறைக்கும் வேறுபாட்டைக் காணலாம். 

இசைக்கலைஞர் தங்கள் வறுமை நிலையை விளக்கமாகச் சொல்லிப் புலம்புவதில்லை. அவர்களைப் பார்த்தவுடனே அவர்களுடைய வறிய நிலையை அறிந்து வள்ளல் பரிசில் கொடுக்கும் நிலையைத்தான் காண்கிறோம். ஆனால், புலவர்கள் -- பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார் போன்றவர்கள்  -- தங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை விளக்கமாகச் சொல்லுவதும் பரிசில் வேண்டும் முறையும் மிகவும் இரங்கத்தக்கதாகத் (wretched and pitiful) தெரிகிறது. 

வரிசையறிந்து கொடுக்கவேண்டும், காலம் தாழ்த்தாது கொடுக்க வேண்டும் ... என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. விருப்பம் இல்லாவிட்டால் வேறு புரவலரை நாடிச் சென்ற கதையையும் கேள்விப்படுகிறோம். இதைத்தான் ஔவையார் ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’  (புறநானூறு 206:13) என்று குறிப்பிட்டார் போலும். பெருந்தலைச் சாத்தனார் (புறநானூறு 162:7), குமணனனுக்கே (தான் ஏறிவந்த?) யானையைப் பரிசிலாக எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்படுகிறார்! 

வேந்தர்கள், மன்னர்கள், வள்ளல்கள் என்று பெயர் பெற்றவர்கள் மட்டுமில்லை பிற மக்களும் இரவலரைப் புரந்திருக்கிறார்கள். முதல் வகையினர் உணவோடு பொன்னும், பொருளும் கொடுத்தார்கள் என்றால் மற்றவர்கள் வயிற்றுக்குத் தேவையான உணவு கொடுத்துப் புரந்திருக்கிறார்கள். ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டுவது இதுவே. 


சிறுபாணாற்றுப்படையில்
****************************** 
நெய்தல் நிலமக்களின் விருந்தோம்பல் (153-163)
முல்லைநில மகக்ளின் விருந்தோம்பல் (173-177)
மருதநில மக்களின் விருந்தோம்பல் (188-195)

பாலைநிலத்தில் சோர்ந்திருந்த இரவலர் நெய்தல், முல்லை, மருத நிலங்களில் விருந்துண்டபின் நல்லியக்கோடனின் மூதூரை அடைந்தால் அவன் தரும் பரிசிலோ மிகப்பெரிது (236-260). 


பெரும்பாணாற்றுப்படையில்
******************************** 
எயிற்றியர் அளிக்கும் உணவு (95-105)
எயினர் குறும்பில் கிடைக்கும் உணவு (129-133)
கோவலர் குடியிருப்பில் கிடைக்கும் உணவு (166-168)
முல்லை நிலத்தில் உழுதுண்பார் அளிக்கும் உணவு (191-196)
மருத நிலத்தில் வினைஞர் அளிக்கும் உணவு (254-256)
மருத நிலத்தில் கரும்பு அடும் ஆலைகளில் கரும்புச்சாறு கிடைத்தல் (261-262)
நெய்தல் நிலத்தில் வலைஞர் கிடியிருப்பில் கிடைக்கும் உணவு (275-282)
அந்தணர் உறைவிடங்களில் கிடைக்கும் உணவு (300-310)
பட்டினத்தில் கிடைக்கும் உணவு (339-345)
உழவரின் தனி மனையில் கிடைக்கும் உணவு (355-362)

இதையெல்லாம் தாண்டிச் சென்றால் இளந்திரையன் கொடுக்கும் பரிசிலோ மிகப் பெரிது (467-493). முதலில் இரவலர்களுடைய சிதறுபட்ட ஆடைகளை நீக்கி, ஆவிபோன்ற மென்மையான நூலாடை (கலிங்கம்) கொடுக்கிறான். பிறகு பெரிய கலத்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கொடுக்கிறான். பிறகு இரவலர் அணிவதற்காக பொற்றாமரை, பொன்மாலை, புரவு பூட்டிய தேர் இன்னவை கொடுக்கிறான்.

அதோடு, பெரும்பாணாற்றுப்படையில் (464-467) காணும் ஒரு கருத்து சிந்திக்கத்தக்கது. இளந்திரையன் பரிசில் கொடுத்தான் என்பதோடு இரவலனின் நிலைமையைத் தெரிந்துகொள்ளும் முன்னரே 'நிலையில்லாத உலகத்தில் ஈகைச் செயலால் புகழடைந்து என்றும் நிலைத்திருக்கக் கூடிய நிலைமையை எண்ணிப் பார்த்து'ப் பரிசில் கொடுத்தான் என்பதே அந்தக் குறிப்பு. புகழுக்கு மயங்காதார் யார்?!

நிற்க.

புரவலர்கள்/வள்ளல்கள் யாருமே இரவலரைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று விலக்கியதாகத் தெரியவில்லை. 

வறுமை நிலை என்பது இரவலருக்கு ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத நிலையைக் கொடுக்கவில்லை. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்ற இரவலர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றால் அவர்களுக்குச் சோறும் பிற பொருள்களும் அளித்த வள்ளல்கள் அவர்களைக் கண்ணெடுத்தும் பாராமலோ தொலைவில் நிற்கவைத்தல்லவோ பரிசில் கொடுத்திருக்கவேண்டும்! அப்படித் தெரியவில்லையே!


  • இளந்திரையன் "முகன் அமர்ந்து ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி"னான் (பெரும்பாணாற்றுப்படை 491-493) என்றும், காலம் தாழ்த்தாமல் பரிசில் கொடுத்தான் (பெரும்பாணாற்றுப்படை 493என்றும் அறிகிறோம்.
  • சிறுபாணாற்றுப்படை (203-261) வரிகள் நல்லியக்கோடன் என்ற வள்ளல் பரிசிலுக்காகத் தன்னை நாடி வந்தவர்களுக்கு எப்படிப் பரிசில் வழஙகினான் என்பதை விளக்குகின்றன. 
  • நல்லியக்கோடனுடைய ஊர் “அந்தணர் அருகா அருங்கடி வியனகர் (187).” அவனுடைய வாயில் பொருநர்க்கானாலும் சரி, புலவர்க்கானாலும் சரி, அந்தணர்க்கானாலும் சரி … அடைக்கப்படாத வாயில் (203-206). 

குறிப்பிடத்தக்க செய்திகள்:

சிறுபாணாற்றுப்படை 219-220:
பன்மீன் நடுவண் பான்மதி போல
இன்னகை ஆயமொடு இருந்தோன் குறுகி

சிறுபாணாற்றுப்படை 244-245:
பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி


நல்லியக்கோடன் யார் யாருடைய பசித் துன்பத்தைப் போக்குகிறான்?
கிணைமகள் (சிறுபாணாற்றுப்படை:136), விறலியர் (சிறுபாணாற்றுப்படை:31), பாணர் (சிறுபாணாற்றுப்படை:248).

மதுரைக்காஞ்சியில், பாண்டியன் நெடுஞ்செழியனின் வள்ளண்மை தெரிகிறது. அவனுடைய வாயில் இன்னவருக்கு என்று வரையறை செய்யாதது. 

மதுரைக்காஞ்சியில் (748-751) காண்பது:
பாணர் வருக, பாட்டியர் வருக,
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி

இங்கே குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. இரவலர் கூட்டம் பெரிது. அவர்களுக்குச் சொந்தம் பெரிது ("இருங்கிளை"). அந்தப் பெரிய கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டியே தேரும் களிறும் கொடுக்கப்பட்டன. விழாக்களில் பாட்டும் கூத்தும் நாடகமும் நிகழ்த்தி ஊரூராக வள்ளல்களைத் தேடிப்போகும் இரவலர் கூட்டத்துக்கு ஊர்தியாகத் தேரும் களிறும் உதவியிருக்குமே!

வள்ளல்களின் பரிசில் வயிற்றுக்குச் சோறும் வழிநடைக்கு உதவும் தேர், யானை போன்றவையும் கூத்துக்கும் நாடகத்துக்கும் அணிசெய்யப் பொற்றாமரையும் முத்து மாலைகளும்.

இங்கே நாம் குறித்துக்கொள்ளவேண்டியது ... இரவலரைப் பார்க்கவோ பக்கத்தில் வரச்செய்யவோ புரவலர்கள் தயங்கியதில்லை. எனவே வறுமை நிலையால் இரவலரைத் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்று சொல்வது மிகப் பெருந்தவறு.


3. ஆண்-பெண் உறவு 

சங்க இலக்கியத்தில் ‘தீண்டாமை’ என்று தேடும்போது ஆண்-பெண் உறவு பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? நல்ல கேள்வி. 

ஏனென்றால், 'தீண்டுதல்' என்பது இருவருக்கிடையேயோ ஒருவருடன் ஒரு பொருளுக்கிடையேயோ நிகழ்வது ஆதலின் என்க.

வணிகம், விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளைச் சொல்லும் சங்கப் பாடல்களில் அப்படிப்பட்ட ‘தீண்டாமை’ என்ற நிலை இல்லை என்று இதுவரை பார்த்த பாடல்களிலிருந்து தெரிகிறது. இறுதியாக, தனிப்பட்ட ஆண்-பெண் உறவில் இந்தத் ‘தீண்டாமை’க் கருத்து காணப்படுகிறதா என்று பார்ப்போம். 

ஒரு பெண்ணுக்குத் தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது, ஆனால் அந்த முயற்சிக்குப் பல தடைகள் இருந்தமையைப் பெரும்பாலான சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. 

குறிப்பாக, பெண்ணின் தாயரும் (செவிலி, நற்றாய்) தமரும் பெரிய தடை. ஏனென்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் சில பாடல்கள் கோடி காட்டுகின்றன. 

ஒரு நிலத்துப் பெண் இன்னொரு நிலத்து ஆடவனைத் துணையாகக் கொள்ளத் தடை இருந்திருப்பதை நற்றிணை 45 காட்டுகிறது. 

நெய்தல் நிலத் தலைவியின் தோழி மருத/முல்லை நிலத் தலைவனிடம் சொல்கிறாள். 
‘இவளோ கடலில் புகுந்து மீன் பிடிக்கும் பரதவர் மகள். நீயோ கொடிகள் பறக்கும் மூதூரில் விரைந்து ஓடும் தேரையுடைய செல்வனின் அருமை மகன். கொழுப்புள்ள சுறாமீனை அறுத்துக் காயவைத்து அந்த உணங்கலைத் தின்ன வரும் பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்? நாங்கள் புலவு நாறுகிறோம். போய்வா. எங்கள் வாழ்க்கை பெரிய நீர்ப்பரப்பாகிய கடலில் விளையும் பொருள்களை (மீன் போன்றவற்றை) அடிப்படையாகக் கொண்ட சிறு நல் வாழ்க்கை. உன்னுடன் ஒத்தது அன்று. எங்களுக்குள்ளேயே (எங்களுடன் இணையத் தக்க) செம்மலோர் இருக்கிறார்கள்.’ 

இந்தப் பெண்ணின் சொற்களில் தன் நெய்தல் நிலத்தவரைப் பற்றி எவ்வளவு பெருமிதம்!

இங்கே குறித்து நோக்கவும். ‘நீ தேரோட்டும் செல்வனாக இருந்தாலும் உன்னால் எங்களுக்கு என்ன பயன்?’ என்று கேட்கிறாள் தோழி. ‘நாங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள்’ என்று தங்களை இழித்துச் சிறுமைப்பட்டுக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் நிலத்தொழிலில் பெருமை கொள்கிறாள்.  ‘எங்கள் வாழ்க்கை நல்ல வாழ்க்கை’ என்று பெருமிதம் கொள்கிறாள். எங்களுக்குள்ளேயே செம்மல்கள் இருக்கிறார்கள் என்று பிற நிலத்தவனாகிய தலவனுக்குச் சுட்டுகிறாள். இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இங்கே தேவையில்லாத ‘தீண்டாமை’க் கருத்தைப் புகுத்துவது நேரியதில்லை. 

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

குறிஞ்சி நிலத்தில் இன்னொரு வகை இறுக்கத்தைக் காண்கிறோம்.
கலித்தொகை 39 காட்டுவது. ஒரு குறவர் குடிப்பெண்ணும் கானக நாடனின் மகன் ஒருவனும் இணைந்த நிலையைக் காட்டுகிறது. 
இந்தக் குறவர் குடிப்பெண் தன் தோழியரோடு மிக வேகமாகப் பாய்ந்து வரும் நீரில் புகுந்து நீராடும்போது கால் தளர்ந்துவிடவே நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்படுகிறாள். அந்நேரத்தில் அங்கே வந்த கானக நாடன் (தலைவன்) நீரில் குதித்து அவளை மார்புறத் தழுவிக்கொண்டு அவளைக் கரையேற்றுகிறான். அவளும் அவனும் மார்புறத் தழுவிய நிலை அவளுடைய கற்பு நிலையைக் குறிக்கிறது என்பது தோழியின் கருத்து. தாய்க்குச் செய்தியைத் தெரிவிக்கிறாள். தாயும் அவருடைய ஐயன்மாருக்குத் தெரிவிக்கிறாள். ஐயன்மாரோ வில்லை எடுப்போமா, அம்பை எடுப்போமா என்று நினைத்து, ஒரு பகல் முழுவதும் சினம் கொண்டு ஒருவழியாக ஆறுதல் அடைந்து, ‘இருவர்கண்ணும் குற்றம் இல்லை’ என்று தெளிவு கொண்டு அவர்களுடைய இணைப்புக்கு ஒப்புக்கொண்டார்கள்! 
“இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை” என்று முடிகிறது இந்தப் பாட்டு. 
இங்கே பெண்ணும் ஆணும் இணைவதற்குக் குலத்தாழ்ச்சியோ தீண்டாமையோ காரணமில்லை என்பது தெளிவு. 

குறிஞ்சிப்பாட்டு (31-34) காட்டுவது சற்றே வேறுபட்ட நிலை. 
களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் சோர்வு தாய்க்குக் கவலை. தோழி முன்வந்து என்ன நடந்தது என்று சொல்கிறாள். 
“வண்ணத்தையும் (‘வர்ணத்தையும்’? ‘குணத்தையும்’?) துணையையும் (சுற்றத்தையும்) பொருத்திப் பார்க்காமல் நாங்களாகத் துணிந்த இந்தப் பாதுகாப்புடைய அரிய செயலை [களவு முறையை]  நடந்தது நடந்தபடிச் சொல்லுகிறேன், சினவாமல் கேள்”
இங்கே குறித்துக்கொள்ளவேண்டியது “வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது” [வண்ணத்தையும் சுற்றத்தையும் பொருத்திப் பார்க்காமல்] நாங்களாகவே துணிந்து ஈடுபட்ட இந்தச் செயல்” என்பது. “பொருத்தம்” என்ற ஏதோ ஒன்றைக் கருத்தில் கொண்டிருந்தார்கள் என்பது. ஆனால், அது எந்த வகையிலும் தாழ்ந்த/ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத மக்கள் என்று எவரையும் சுட்டவில்லை.

கலித்தொகை (113: 7-10) ஆயர் குலத்துப்பெண் ஒருத்தி ஆயர் குலத்து ஆணை விரும்புதலைக் குறிக்கிறது.
தன்னைக் குறுக்கிட்ட தலைவனை ‘யார் நீ’ என்று கேட்கும் தலைவிக்கு அவன் சொல்கிறான்: “புல்லினத்து ஆயர் மகனேன்.”
அதைக் கேட்ட தலைவி சொல்கிறாள்: “ஒக்கும்; புல்லினத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு(ம்) நல்லினத்து ஆயர் எமர்.”
புல்லினம் என்பது ஆடுகளைக் குறிக்கும். குடம் சுட்டும் நல்லினம் என்பது பசுக்களைக் குறிக்கும். 
இங்கே ஆணும் பெண்ணும் இணைவதற்குத் தடையில்லை என்று தெரிகிறது.

இப்படி, ஐந்திணைகளில் பெண்ணும் ஆணும் இணைவதற்குத் தடையாக இருந்த நிலைகளைப் பற்றி அறிகிறோம். ஆனால், அவற்றில் எந்த நிலையுமே “தீண்டாமை” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமையவில்லை என்பது உறுதி.

களவு முறையில் செல்லாமல் வலிமையின் அல்லது வீரத்தின் அடிப்படையில் பெண்ணை எடுக்க வந்த நிலையை மறக்குடி மக்கள் எதிர்த்த நிலையை மிக அழகாகக் காட்டும் பாடல்கள் புறநானூற்றில் மகட்பாற்காஞ்சி என்ற திணையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன (புறநானூறு 336-339; 341-354). மகள்மறுத்தல் என்பது இந்தத் திணையின் ஒரு செயல்பாடு. 
சுருக்கமாகச் சொன்னால், அரசனுக்குப் பெண்கொடுக்க மறுக்கும் மறக்குடி மக்களின் வீரத்தையும் பெருமிதத்தையும் காட்டும் பாடல்கள் மகட்பாற்காஞ்சிப் பாடல்கள். பெண்ணின் தந்தை பெண்ணைக் கொடுக்க மறுக்கிறான். அரசன் போர் தொடுக்கிறான். அந்தப் பெண்ணின் பொருட்டாக அவள் பிறந்த ஊருக்கே அழிவு ஏற்படுகிறது. 

அரசனாக இருந்தாலும் சரி, உடனே காலில் விழுந்து பெண்ணைக் கொடுக்கும் வழக்கம் மறக்குடி மக்களிடம் இல்லை என்பதை மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் தெளிவிபடுத்துகின்றன.

புறநானூறு 343:10-13 காட்டும் செய்தி குறிப்பிடத்தக்கது:

... செங்குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி அன்ன
நலம்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
தந்தையும் கொடாஅன் ...

செங்குட்டுவனின் முசிறி போன்ற செழுமையான பொருளைப் பரிசமாகக் கொண்டுவந்து பணிவோடு கொடுத்தாலும் தனக்கு நேரானவன் அல்லன் என்றால் பெண் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று தந்தைக்குத் தெரியும், அதனால் அவனும் தன் பெண்ணைக் கொடுக்கமாட்டான்! எவ்வளவு பெருமிதம், பாருங்கள். இதோடு வடக்கத்தி முறைகளான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ... என்ற மணமுறைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பெண்ணுக்கு உரிமை எங்கே இருந்திருக்கிறது என்பது விளங்கும்!
இங்கே குறித்துக்கொள்ளவேண்டியது … ஆணும் பெண்ணும் இணைவதுக்குத் தடையாக அவர்கள் வாழந்த நிலமோ வேறு ஏதோ அமைந்திருந்த நிலை தெரிகிறது. ஆனால், 'தீண்டாமை' என்ற ஒன்று குறுக்கிட்டதாகத் தெரியவில்லை.
******************* 
சரி, எப்போதுதான் இந்தச் 'சாதி, தீண்டாமை' என்ற கோட்பாடுகள் தமிழ் இலக்கியங்களில் நுழைந்தன என்று தேடியபோது இரண்டு நல்ல சான்றுகள் கிடைத்தன: ஒன்று சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில், இன்னொன்று நம்மாழ்வார் ஈடு உரையில். 

சிலப்பதிகாரத்தில், மதுரையில் கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற கோவலனின் முன் வந்த பொற்கொல்லனை 'விலங்கு நடைச் செலவின் ... கொல்லன்' என்று இளங்கோ குறிக்கிறார் (சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை:107-108). 

'விலங்கு நடை' எனபதற்கு அடியார்க்கு நல்லார் உரை: 'இழிகுலத்தோனாதலின் உயர்ந்தோர் வந்தவிடமெங்கும் விலங்கி நடத்தல்.' உ.வே.சா உரை: 'மேன்மக்களைக் கண்டு ஒதுங்கி நடத்தல்.' 

இங்கே இந்த உரைகளில் 'குலத்தாழ்ச்சி, தீண்டாமை' என்ற கோட்பாடு ஊடுருவுவதைக் காண்கிறேன்.


நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி) இன்னும் சிறந்த எடுத்துக்காட்டு. 

குலம் தாங்கு சாதிகள் நாலினும் கீழ் இழிந்து எத்தனை
நலம்-தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று, உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே


இதன் விளக்கவுரையைக் காண்போம் (திருவாய்மொழி வியாக்யானம், ஈடு 3-7-9)


குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்துமுறைப்படி நடக்கும் விவாகத்தாலும் அநுலோம பிரதிலோம விவாகத்தாலும் உள்ள குலங்களைத் தரிப்பதான பிராஹ்மண வருணம் முதலான நான்கு பிறவிகளிலும் கீழே கீழே போய். எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்-அந்தச் சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞான ஒழுக்கங்கள் இன்றியே இருப்பாருமாய், ‘சண்டாளர்என்றால் நாம் நோக்காமல் போமாறு போன்று அந்தச் சண்டாளர்களும் விலகிச் செல்லக் கூடியவர்களாகிலும். ‘இவர்கள் உத்தேஸ்யர் ஆகைக்கு என்ன வலக்குறி உண்டு?’என்ன, விருத்தவான்கள் அன்றோ இவர்கள் என்று கைமேலே காட்டிக்கொடுக்கிறார் மேல்.
(நன்றி: Thiruvonum’s Weblog: 

மேற்காணும் உரையைப் பலமுறை படித்துப் புரிந்துகொள்ளுங்கள். 'குலம் தாங்கு சாதிகள்' என்ற குறிப்பு மிகவும் இன்றியமையாதது. வருண முறைக்கும் 'சாதி' என்பதுக்கும் உள்ள தொடர்பு விளங்கும்.  


முடிவுரை
-------

மேற்காட்டிய அடியார்க்கு நல்லார், உ.வே.சா, ஈடு உரைகளைத் தவிர, அவற்றுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் 'சாதி உயர்வு/தாழ்வு, ஒதுக்கப்பட்டவர், தீண்டாமை' போன்ற கோட்பாடுகளைக் காண என்னால் முடியவில்லை.  

(இத்தொடர் முற்றும்.)